Wednesday, September 3, 2025

" இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்."



"இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்."

நமது பிரிவினை சகோதரர்களுக்கு மரியாள் என்று சொன்னாலே குமட்டிக் கொண்டு வருகிறது.

அவள் உலக மீட்பரைத் பெற்றுத் தந்ததைத் தவிர வேறு என்ன பாவம் செய்தாளோ தெரியவில்லை!

அதிலும் இறைவனின் தாய் என்று சொல்லி விட்டால் அவர்களுக்கு வரும் கோபத்தை அளவிடவே முடியாது.

இயேசுவைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டால் மரியாளைக் கடவுளின் தாய் என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

மரியாளுக்கு கபிரியேல் தூதரைத் தூது அனுப்பியது யார்?

கடவுள்.

மரியாளின் வயிற்றில் மனிதனாக உரு எடுத்தவர் யார்?

கடவுள்.

மரியாளின் வயிற்றிலிருந்து மனிதக் குழந்தையாகப் பிறந்தவர் யார்?

கடவுள்.

மரியாள் கடவுளை மனிதனாகப் பெற்றதால் அவள் கடவுளின் தாய்.

இந்தியாவின் முதல் பிரதமரின் தாய் ஸ்வருப் ராணி நேரு என்று சொன்னால் எவ்வளவு சரியோ 

அவ்வளவு சரி மனிதனாகப் பிறந்த 

கடவுளின் தாய் மரியாள் என்பதும்.

மரியாள் இயேசுவின் தாய், கடவுளின் தாய் இல்லை
என்று சொல்வது 

ஸ்வருப் ராணி நேரு ஜவகர்லால் நேருவின் தாய்,

இந்தியாவின் முதல் பிரதமரின் தாய்  இல்லை,

என்று சொல்வது போலிருக்கிறது.

இந்தியாவின் முதல் பிரதமரும், ஜவகர்லால் நேருவும் ஒரே ஆள்தானே.

இயேசுவும் இறை மகனும் ஒரே ஆள் தானே, பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆள்.

ஆள் ஒன்று, சுபாவம் இரண்டு.

மரியாளின் வயிற்றில் மனிதனாக உரு எடுக்குமுன்
கடவுளுக்கு ஒரே சுபாவம், தேவசுபாவம்.

மனிதனாகப் பிறந்த பின் இரண்டு சுபாவங்கள்,
தேவ சுபாவம்,
மனித சுபாவம்.

கடவுளுக்குத் துவக்கம் உண்டா?

தேவ சுபாவத்தில் துவக்கம் இல்லை, மனித சுபாவத்தில் துவக்கம் உண்டு. கபிரியேல் தூதர் மரியாளிடம் தூது உரைத்த நாள்தான் துவக்க நாள்.

கடவுளுக்கு மரணம் உண்டா?

தேவ சுபாவத்தில் மரணம் இல்லை.

மனித சுபாவத்தில் 33 வது வயதில் மரித்தார்.

கடவுள் வளர முடியுமா?

தேவ சுபாவத்தில் வளர முடியாது,

மனித சுபாவத்தில் குழந்தையாகப் பிறந்து 33 வயது வரை வளர்ந்தார்.

கடவுள் துன்பப்பட முடியுமா?

தேவ சுபாவத்தில் துன்பப்பட முடியாது, மனித சுபாவத்தில் துன்பப் பட்டார்.

சகல விதமான நன்மைத்தனங்களையும் அளவில்லாத விதமாய்க் கொண்ட கடவுள் 

நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாகக் கடவுள் நமது பண்புகளின் சிலவற்றைத் தனதாக ஏற்றுக் கொண்டார், மனித சுபாவத்தில்.

மேடையில் நாற்காலியில் அமர வேண்டிய ஆசிரியர் மாணவர்களோடு பெஞ்சில் அமர்ந்து பாடம் கற்றுக் தருவது போல 

விண்ணகத்தில் வாழும் கடவுள் மனிதர்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக 

மனிதனாகப் பிறந்து மனிதரோடு மனிதராக வாழ்ந்து நற் செய்தியை அறிவித்தார்.

இயேசு தன் தாயை மிகவும் அதிகமாக நேசித்தார். ஏன் யோசேப்பின் மரணத்தைத் தடுக்காமல் 43 வயதாகும்போதே அவளை விதவையாக்கினார்?

தான் அதிகம் நேசிப்பவர்களுக்கு அதிகமான சிலுவைகளை அனுமதிப்பேன் என்று நமக்குச் சொல்வதற்காகத்தான்.

இறைவனின் தாய் மகிழ்ச்சியின் மாதா மட்டுமல்ல வியாகுல மாதாவும் கூட.

இயேசுவை நமக்காகத் தந்தை இறைவனுக்குப் பலி கொடுப்பதற்காகத்தானே 30 ஆண்டுகளாக வளர்த்தாள்.

33வது வயதில் அவர் பாடுகள் படும்போதும், சிலுவையில் அறையப்படும்போதும் அவள் மகனுடன் தான் இருந்தார்.

சிலுவையில் தொங்கும் போது  அவளை நமது தாயாகத் தந்தார்.

தாயைப் பின்பற்றி நாமும் சிலுவைப் பாதையில் நடக்க வேண்டும் என்பது அவர் ஆசை.

குழந்தை இயேசுவைச் சுமந்த அதே மடியில் தான் இறந்த இயேசுவையும் சுமந்தாள்.

இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தபின் மற்றவர்களைப் போல அவள் கல்லறைக்கு வரவில்லை. 

ஏனெனில் அவர் மூன்றாம் நாள் உயிர்ப்பார் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும்.

நாம் மரியாளின் வழி நடந்தால் தான் அவள் மகன் வாழும் விண்ணக வீட்டுக்குச் செல்ல முடியும்.

கடவுளின் தாயை நமது தாயாக ஏற்போம்.

கடவுளை அடைவதற்கு அவள் தான் எளிய, உறுதியான வழி.

"இறைவனின் தாயே எங்களை உம் வழி நடத்தும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment