அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.
(லூக்கா.8:1)
இயேசு 30 வயதுவரைத் திருக் குடும்பத்தில் வாழ்ந்தார்.
யோசேப்பும், அன்னை மரியாளும் அவரை நன்கு கவனித்துக் கொண்டார்கள்.
யோசேப்பு இறந்தவுடன் தாயின் பராமரிப்பில் வாழ்ந்தார்.
31வது வயதில் பொது வாழ்வுக்கு வந்தார்.
திருக்குடும்பத்தில் இருந்த போது தங்க வீடு இருந்தது.
பராமரிக்க அன்னை இருந்தாள்.
ஆனால் பொது வாழ்வில் தங்க சொந்த வீடு இல்லை.
ஊர் ஊராகச் சென்று நற் செய்தியை அறிவித்தார்.
பகலில் நற் செய்தியை அறிவித்துவிட்டு இரவு முழுவதும் செபித்தார்.
அவர் தாயையும் வீட்டையும் விட்டு வந்தது போலவே பெற்றோரையும், உறவினர்களையும், வீட்டையும் மற்ற உடமைகளையும் விட்டு வந்த பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.
அவர்களுடன் பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும்,
ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்,
ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும்,
சூசன்னாவும்,
தாயின் இடத்திலிருந்து தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
சென்ற இடமெல்லாம் நற் செய்தி அறிவித்ததோடு, நோயாய் இருந்தவர்களைக் குணமாக்கினார்.
அவர்களில் சிலர் அவரைப் பின் பற்றினர்.
உதாரணத்துக்கு இயேசு மகதலா என்ற மீன் பிடிக்கும் கிராமத்துக்கு நற் செய்தியை அறிவிக்கச் சென்ற போது அங்கு மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட ஒருவரின் மகள் மரியாவுக்கு ஏழு பேய்களிலிருந்து விடுதலை கொடுத்தார்.
அவள் நன்றி உணர்வோடு அவரைப் பின் சென்று அவருக்குச் சேவை செய்தார்.
இயேசு நற் செய்திப் பணியின் போது அவருடைய சீடர்கள் பிற்காலத்தில் எப்படிப் பணி புரிய வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக வாழ்ந்தார்.
இது பற்றிய வசனங்களை வாசித்தால் மட்டும் போதாது.
அவற்றைத் தியானித்து இயேசுவை நமது வாழ்வாக்க வேண்டும்.
எப்படி இயேசுவை வாழ்வது என்பது பற்றித் தியானிப்போம்
இயேசுவை வாழ்வது என்றால் இயேசுவாக வாழ்வது,
இயேசுவின் பண்புகளுடன் வாழ்வது,
இயேசுவைப் பிரதிபலித்து வாழ்வது.
30 ஆண்டுகள் தனது தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார் என்றால் இயேசு எந்த அளவுக்கு மாதாவை நேசித்தார் என்று புரிந்து கொள்ளலாம்.
ஆனால் பொது வாழ்வுக்கு வரும்போது மாதாவை விட்டு தான் வந்தார்.
அவருடைய சீடர்களும், சீடத்திகளுமே அவருடன் சென்றார்கள்.
நாம் நமது பெற்றோரை, சகோதர சகோதரிகளை மிகவும் நேசிக்கலாம்.
ஆனால் பொது வாழ்வுக்கு வரும்போது பொது நன்மைக்காக உழைக்க வேண்டியது நமது கடமை.
நமது காலத்தில் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இயேசு தன் தாயை நேசித்தது போலவே நம் அனைவரையும் நேசிக்கிறார்.
உண்மையில் நம்மைப் பார்க்க வருவதற்காகத்தான் தன் தாயையே படைத்தார்.
பாவிகளாகிய மீட்பதற்காகத்தான் இயேசு தாயிடமிருந்து பிறந்தார்.
இதிலிருந்து நாம் என்ன ஆன்மீக பாடம் கற்றுக் கொள்கிறோம்.
பாவிகள் மனம் திரும்ப விருப்பத்தோடு உழைப்பவர்கள் தான் உண்மையிலேயே மாதா பக்தர்கள்.
மங்கள வார்த்தை செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும்
"பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்களது மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்."
என்று சொல்கிறோம்.
எனக்காக என்று சொல்லவில்லை,
"எங்களுக்காக அதாவது எனக்காகவும் எனது பிறர் அனைவருக்காகவும்."
இயேசு தனது நன்மைக்காக மாதாவிடம் பிறக்கவில்லை.
பாவிகளாகிய நமக்காக பிறந்தார்.
தனக்காக அன்றி மற்றவர்களுக்காக பாடுகள் பட்ட முதல் மாதா பக்கர் (அன்னையின் மீது பாசம் உள்ளவர்) இயேசு.
நமது பாவ மன்னிப்புக்காக மட்டும் அல்லாமல், அனைத்து மக்களின் பாவ மன்னிப்புக்காகவும் வேண்டுபவர்கள் தான் உண்மையான மாதா பக்தர்கள்.
இதற்காகத்தான் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது தனது அன்னையை நமது அன்னையாக இயேசு தந்தார்.
"மாதாவின் மைந்தன் ஆகிய நான் உலக பாவிகளின் மீட்புக்காக எனது உயிரை பலியாக்குகிறேன்.
என் அன்னையை உங்களது அன்னையாக தந்து விட்டேன்.
இனி நீங்களும் மாதாவின் மைந்தர்கள்தான்.
என்னைப் போல நீங்களும் உலகில் உள்ள அத்தனை பாவிகளும் மனம் திரும்ப உங்களது உயிரையும் பலியிட தயாராக இருங்கள்."
இது இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது நமக்கு அளித்த வேண்டுகோள்.
இயேசுவின் வேண்டுகோளை நிறைவேற்றுவோம்.
இயேசுவின் நற்செய்தி பயணத்தின் போது அவரோடு சென்றவர்கள் அவருடைய சீடர்கள்.
நாமும் இயேசுவின் சீடர்கள்தான்.
சீடர்களாக செயல்படுகிறோமா அல்லது சீடர்கள் என்ற பெயரோடு மட்டும் வாழ்கிறோமா?
நமது உடைமை பொருட்களை விட்டு விட்டு அவரைப் பின்செல்கிறோமா?
அல்லது நமது உடைமைகளையும் சுமந்து கொண்டு அவரைப் பின் செல்கிறோமா?
நமது உடைமைகளையும் சுமந்து கொண்டு அவரைப் பின் சென்றால் நமது கவனம் நமது உடைமைகள் மேல் தான் இருக்கும், இயேசுவின் மேல் இருக்காது.
கோவிலில் வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது தங்களது வீட்டு பிரச்சனைகளை பற்றி அசை போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உடைமைகளை சுமந்து கொண்டு கோவிலுக்கு வந்திருப்பவர்கள்.
அப்படிப்பட்டவர்கள் எப்படி இறை வழிபாட்டில் தங்களை முழுவதும் ஈடு படுத்த முடியும்?
அன்பு, இரக்கம் போன்ற ஆன்மீக உடைமைகளோடு மட்டும் இயேசுவைப் பின்பற்றுவோம்.
சீடர்கள் தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு இயேசுவின் பின் சென்றார்கள்.
சீடத்திகள் எவ்வாறு சென்றார்கள்?
பெண்களுக்குள்ள தாய்மைக் குணத்தோடு தங்ஙள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
அவர்களிடமிருந்து நாம் கற்கும் பாடம்,
நாமும் நமது உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.
விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவுக்கு எப்படி பணிவிடை செய்வது?
நமது அயலானுக்குச் செய்யும் உதவிகளை இயேசுவுக்கே செய்கிறோம்.
நமது ஞான மேய்ப்பர்களுக்கு பணிவிடை செய்யும்போது இயேசுவைக்கே செய்கிறோம்.
இயேசுவின் திரு விருந்தில் பங்கேற்று, நம் உள்ளத்தில் வரும் இயேசுவிடம் நம்மையே பலியாக ஒப்புக் கொடுப்பதும் அவருக்கு நாம் செய்யும் சேவை தான்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment