"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார்.
(லூக்கா நற்செய்தி 9:44)
இயேசு இவ்வார்த்தைகளைத் தனது சீடர்களிடம் கூறினார்.
பேய் பிடித்த ஒருவனை இயேசு குணமாக்கிய போது
மக்கள் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள். இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் இயேசு தம் சீடர்களிடம், தான் படப்போகும் பாடுகள் பற்றி கூறுகிறார்.
ஏன் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகிறார்?
இயேசு தனது புதுமைகள் மூலம் தான் வல்லமை கொண்ட மெசியா என்பதைச் சீடர்களுக்கு எண்பித்துக் கொண்டிருக்கிறார்.
அதே சமயத்தில் தான் புதுமைகள் செய்வதற்காக உலகுக்கு வரவில்லை,
மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு மரிப்பதே தான் உலகுக்கு வந்ததன் நோக்கம் என்பதைச் சீடர்களுக்குப் புரிய வைப்பதற்காக
புதுமை செய்தவுடனே சீடர்களிடம்
"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்கிறார்.
ஆனால் அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை.
காரணம் இயேசு தனி இஸ்ரேல் இராச்சியம் அமைத்து அதை ஆள்வார் என்று ஏற்கனவே அவர்கள் மனதில் பதிந்திருந்த எண்ணம்
அவர் பாடுகள் படுவார் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு தடுத்தது.
ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
சீடர்களைப் போலவே நாமும் சில சமயங்களில் இயேசுவைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம்.
இயேசு நமது அரசர், ஆனால் அவருடைய அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல, விண்ணுலகைச் சார்ந்தது.
சீடர்களைப் போலவே நாமும் இயேசு இவ்வுலகில் ஆட்சி செலுத்தப் போகிறார் என்று தவறாக எண்ணி
இவ்வுலகைச் சார்ந்த உதவிகளையே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எதைக் கேட்டாலும் அது விண்ணக வாழ்வைச் சார்ந்ததாக இருந்தால்தான் தருவார்.
இயேசு இவ்வுலகில் தான் பிறந்தார், இவ்வுலகில் தான் வாழ்ந்தார்,
ஆனால் இவ்வுலகுக்காக பிறக்கவில்லை, இவ்வுலகுக்காக வாழவில்லை.
பிறகு எந்த உலகுக்காக?
விண்ணுலகுக்காக.
அவர் நித்திய காலமும் விண்ணுலகில்தானே வாழ்ந்து வருகிறார்.
மண்ணுலகில் வாழும் நம்மை அவர் வாழும் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வதற்காக மண்ணுலகில் மனிதனாகப் பிறந்தார்.
ஆகவே நமது வாழ்வின் நோக்கம் விண்ணுலகம் தான்.
தென்காசிக்குச் செல்வதற்காக மதுரையில் Train ஏறுபவன் தென்காசிக்குத்தானே டிக்கெட் எடுக்க வேண்டும்?
மதுரையிலிருந்து மதுரைக்கே டிக்கெட் எடுப்பவனை என்ன சொல்வோம்?
முட்டாள் என்று சொல்வோம்.
நாமும் அநேக சமயங்களில் முட்டாள்களாகவே செயல்படுகிறோம்.
விண்ணக வாழ்வுக்காகப் படைக்கப்பட்ட நாம் நம்மைப் படைத்த கடவுளிடம் விண்ணகம் செல்வதற்கு வேண்டியதைக் கேட்காமல் இந்த உலகில் வாழ்வதற்கான உதவிகளை மட்டும் கேட்டால் நாமும் முட்டாள்கள் தானே.
இந்த முட்டாள்தனத்திலிருந்து நம்மை விடுவித்து விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.
அதற்காக அவரைக் கொல்லத் தேடுபவர்கள் கையில் தன்னை ஒப்படைக்க வேண்டும், அவர்கள் கையில் பாடுகள் பட்டு, நமது ஆன்மீக மீட்புக்காக மரிக்க வேண்டும் என்று தனது சீடர்களிடம் கூறினார்.
நாம் உலகில் ஈட்டுகிற பணம், சொத்து போன்றவை நமக்கு எக்காலமும் பயன்படாது.
இந்த உண்மையை உணர்ந்து இயேசு எதற்காக வந்தாரோ அதற்காக வாழ இயேசுவின் உதவியைக் கேட்டு மன்றாடுவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment