படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.
அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.
(லூக்கா நற்செய்தி 8:23)
நாம் இன்று தியானத்துக்கு எடுத்துக் கொள்ளும் வசனம்,
"படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார்."
பைபிள் வசனங்களைத் தியானிக்கும் போது இயேசு சர்வ வல்லப கடவுள் என்ற இறை உண்மையை மையமாக வைத்துக் கொண்டு தான் தியானிக்க வேண்டும்.
படகில் ஏறியது இறை இயேசுவும் அவருடைய சீடர்களும்.
படகில் ஏறியதும், "ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்" என்று சொன்னவர் அவர்தான்.
அதாவது சீடர்களை ஏரியின் அழைத்துச் சென்றவர் இயேசு.
அழைத்துச் சென்றவர் ஏன் தூங்கினார்?
இயேசு கடவுள் என்ற கோணத்திலிருந்து சிந்தித்தால்,
கடவுள் எதையும் திட்டமிடாமல் செய்ய மாட்டார் என்ற உண்மையை மையமாக வைத்து தான் தியானிக்க வேண்டும்.
கடவுள் நித்தியர். அவருடைய திட்டங்கள் எல்லாம் நித்தியகால திட்டங்களாகவே இருக்கும்.
நாம் ஒரு நாள் காலையில் எழுந்து,
''நாம் இன்று பூசைக்கு மலைக் கோவிலுக்குப் போவோம்" என்று திட்டமிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு வினாடியில் நாம் போடும் திட்டம் கூட கடவுளின் நித்திய கால திட்டத்தின் அடிப்படையில் தான் இருக்கும்.
கோவிலுக்குப் போகும்போது ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.
நமக்கு அது எதிர்பாராத நிகழ்வு. ஆனால் அது கடவுள் நித்திய காலமாக திட்டமிட்ட நிகழ்வு.
இயேசுவும் சீடர்களும் கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது
ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.
இதைச் சீடர்கள் படகில் ஏறும்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் இறைவன் திட்டப்படி தான் நடக்கும்.
சீடர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு தூங்கினார். அவருடைய திட்டப்படி புயல் வீசியது.
என்ன பாவம் கற்பிக்க?
புயல் வீசும் போது சீடர்கள் இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார்.
உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று.
சீடர்கள் பயந்து தன்னை எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு தூங்கினார்.
இயற்கை நிகழ்வுகள் அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தன என்ற உண்மையையும்,
அவர் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற உண்மையையும்,
அவர் அவர்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் வரவிட மாட்டார் என்ற உண்மையையும்
அவர்களுக்குப் போதிப்பதற்காக ஏரிப் பயணத்தைத் இயேசு திட்டமிட்டார்.
"காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!"
என்று அவர்கள் கூறுவதிலிருந்து இயற்கை இயேசுவுக்குக் கட்டுப்பட்டது என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது.
ஆனால் அவர்கள்,
"இவர் யாரோ?" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டதிலிருந்து அவர்களுக்கு இன்னும் அவர் மீது உறுதியான விசுவாசம் ஏற்படவில்லை என்பதும் தெரிகிறது.
ஆனால் இயேசுவுக்கு இந்த உண்மையும் நித்திய காலமாக தெரியும்.
சீடர்கள் தங்கள் நிலையை உணர்வதற்காகவே இயேசு இப் பயணத்தைத் திட்டமிட்டார்.
ஏரிப் பயண நிகழ்வு சீடர்களுக்குப் போதிக்க இயேசுவால் நிகழ்ந்தது.
ஆனால் சீடர்களுக்கு மட்டுமல்ல. நமக்காகவும் தான்.
நாம் வாசித்துப் பயன் பெறவே இதைச் சீடர்கள் நற் செய்தி நூலாக எழுதினார்கள்.
ஒவ்வொருவர் வாழ்விலும் தற்செயல் நிகழ்வுகள்,
எதிர் பார்த்ததற்கு எதிரான நிகழ்வுகள்,
நோய் நொடிகள்,
விபத்துக்கள் போன்றவை நடப்பதுண்டு.
பாவம் மட்டுமே நாம் நமது விருப்பப்படி செய்வது,
மற்ற நிகழ்வுகள் எல்லாம் இறைவனது நித்திய காலத் திட்டத்துக்கு உட்பட்டவை.
நாம் எந்த நாட்டில்,
எந்த ஊரில்
யாரிடமிருந்து,
எப்போது பிறக்க வேண்டும், எவ்வளவு காலம் வாழ வேண்டும்,
எப்போது மரணிக்க வேண்டும் என்று நித்திய காலமாகத் திட்டமிடுபவர் கடவுளே.
நாம் நம்முடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவத்தை விலக்கி, நல்லவர்களாக வாழ வேண்டும்.
நல்லவர்களாக வாழ வேண்டிய சூழ்நிலைகளை கடவுள் ஏற்படுத்திக் கொடுப்பார்.
பாவ சந்தர்ப்பங்கள் சாத்தானின் வேலை.
அவற்றிலிருந்து தப்பிக்க கடவுள் வழி காட்டுவார்.
அவ்வழியே நடக்க அருளையும் தருவார். அதன்படி நடக்க வேண்டியது நமது கடமை.
நமக்கு நோய் நொடிகள் போன்ற துன்பங்களை கடவுள் அனுமதிப்பது நாம் அவரைத் தேடவும், நம்பிக்கையோடு வாழ நமக்கு உதவுவதற்காகவும் தான்.
வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி கூட வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.
ஆகவே என்ன நேர்ந்தாலும் நன்மைக்கே என ஏற்றுக் கொண்டு இறைவனுக்குப் பிரியமானவர்களாக நாம் வாழ வேண்டும்.
என்ன வாழ்க்கை நிலை நமக்குக் கிட்டுகிறதோ அது இறைவனின் திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு அன்பு செய்து நற்செயல்கள் புரிந்து வாழ்வோம்.
அதுதான் நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment