Wednesday, September 16, 2020

."நாம் அறிக்கையிடும் நம்பிக்கையைத் தயக்கமின்றிப் பற்றிக்கொள்வோமாக." (எபிரே. 10:23)

."நாம் அறிக்கையிடும் நம்பிக்கையைத் தயக்கமின்றிப் பற்றிக்கொள்வோமாக."
(எபிரே. 10:23)
***************************************

"ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.

32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.

33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
( மத். 6:31 - 33)

நம்மைப் படைத்து, இரட்சித்து,  ஆண்டு வரும் நம் ஆண்டவராகிய இயேசு நம் ஒவ்வொருவருக்கும் கூறும் வாழ்வு தரும் வார்த்தைகள் இவை.

நமது ஒவ்வொரு தேவையும் இறைவனுக்குத் தெரியும்.

நமது ஒவ்வொரு தேவைக்கும் நாம்
இறைவனைத்தான் சார்ந்திருக்கிறோம்.

தனது அருள் வரங்களால் ஒவ்வொரு விநாடியும் நம்மைப் பராமரித்து வருபவர் அவரே.

அவர் நம்மைப் படைத்து பராமரித்து வருவதன் நோக்கம் விண்ணரசில் அவரோடு நிலை வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

நமக்கென்று தனி ஒரு நோக்கம் கிடையாது, இறைவனது நோக்கம் எதுவோ அதுவே நமது நோக்கம்.

நம்மை முழுவதும் அவரிடம் ஒப்படைத்து விட்டால்

அவர் தன் நோக்கத்தை நிறைவேற்றி விடுவார்

அதாவது

அவர் நம்மை விண்ணகத்தில் சேர்த்து விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வேண்டும்.

எப்படி இறைவன் நம்மை படைத்தார் என்று விசுவாசிக்கிறோமோ

அதேபோல் அவர் நம்மை காப்பார் என்றும் நம்ப வேண்டும்.

எல்லா  புனிதர்களும் தங்களை வழி நடத்தும் இறைவன் எப்போதும் தங்களோடு இருப்பதை உணர்ந்தார்கள்.

அதை நம்ப இறைவனிடமிருந்து எந்த புதுமைகளையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

புனித ஒன்பதாவது லூயிஸ் பிரான்ஸ் நாட்டின் மன்னன்.

ஒரு முறை அரண்மனை சிற்றாலயத்தில் (palace chapel) நடந்த திருப்பலியின்போது எழுந்தேற்ற நேரத்தில் ஒரு புதுமை நடந்தது.

இயேசு குழந்தை வடிவில் பீடத்தில் தோன்றினார்.

அனைவரும் ஆச்சரியத்தோடு குழந்தை இயேசுவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் அரசன் அவரது அறையில் இருந்தான்.

ஒரு சேவகன் வேகமாக அரசனிடம் ஓடி சென்று

"அரசே திருப்பலியில் எழுந்தேற்ற நேரத்தில் குழந்தை இயேசு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையாகவே இருக்கிறார் என்பதை அவரே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே வாருங்கள் குழந்தை இயேசுவை பார்க்க."

"திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையாகவே இருக்கிறார் என்பதை நான் உறுதியாக விசுவசிக்கிறேன்.

விசுவாசம் குறைந்தவர்களுக்கு புதுமை தேவைப்படலாம்.

எனது விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக நான் புதுமையைப் பார்க்க வந்தால்

எனது விசுவாசத்தின் மீது எனக்கே நம்பிக்கை இல்லை என்று ஆகிவிடும்.

காணாமல் விசுவசிக்கின்றவர்களே பாக்கியவான்கள்."

கடைக்குச் சென்று "பூட்டு இருக்கிறதா?" என்று கேட்டால் கடைக்காரன் பூட்டோடு சாவியையும்  தருவான்.

"சாவி இருக்கிறதா?" என கேட்டால் நம்மை வினோதமாகப் பார்ப்பான்.

"ஆண்டவரே உமது அரசை எங்களுக்குத் தாரும்'
என்று கேட்டால்

அதோடு நமது உடல் தேவைகளையும் சேர்த்து இலவச இணைப்பாக ஆண்டவர்  தருவார்.

அவரே சொல்லியிருக்கிறார்,

"-ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும்

(உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகள்)

உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."

இப்போ ஒருவர் சொல்கிறார்,

"ஹலோ, நான் இறையரசைத் தேடவில்லை, இறைவனையும் தேடவில்லை,

எனது சொந்த முயற்சியால் தேவைகளுக்கு அதிகமாகவே சம்பாதித்து வசதிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

சொல்வது புரிகிறதா?"

"நன்றாகவே புரிகிறது.

இவ்வுலக வாழ்க்கை ஒரு நாள் முடியும்.

முடிந்தவுடன் தேவைகளும் இருக்காது, வசதிகளும் இருக்காது.

இறையரசைத் தேடியவர் நிரந்தரமாக அங்கே இறைவனோடு பேரின்ப வாழ்வில் இணைந்து இருப்பார்.

நீங்கள்? கேள்வி புரிகிறதா?"

நித்திய பேரின்ப வாழ்வு வேண்டும் என்பவர்கள் இறையரசை முதலில் தேட வேண்டும், தேவையற்ற வசதிகளை அல்ல.

இறைவனுக்காக தங்களது வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்து வாழ்ந்த புனிதர்கள் உணவைப் பற்றி கவலைப் பட்டதே இல்லை.

புனித அன்னைத் தெரெசா உணவுக்காகவும் வசதிகளுக்காகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்

அவளால் முற்றிலுமாக தன்னை இறைப்பணிக்கு  அர்ப்பணித்திருக்க முடியுமா?

எந்த அளவிற்கு நாம் இறைவனை மட்டும் நம்பி அவரது பணிக்காக நம்மை முற்றிலும் அர்ப்பணிக்கிறோமோ,

அந்த அளவிற்கு இறைவன் நமது அன்றாட தேவைகளை கவனித்துக் கொள்வார்.

தங்களது நலன்களைப் பற்றி சிறிதும்  கவலைப்படாமல்

முழுநேர பணியாளர்களாக இறைவனுக்காக மட்டும் வாழ்பவர்களுடைய நலன்களை இறைவன்,

தேவைப்பட்டால் புதுமைகள் செய்தாவது,

கவனித்துக்கொள்வார்.

ஒரு  புனிதருடைய வரலாற்றில் வாசித்தது. புனிதர் பெயர் ஞாபகத்தில் இல்லை.

அவர் ஒரு மடத்தில் (monastery) துறவியாக இருந்தார்.

அவருடைய மடத்தின் தலைவர் அவரிடம் மடத்திற்கு வாங்க வேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியல் (list) ஒன்றைக் கொடுத்து,

கொஞ்சம் பணத்தையும் கொடுத்து,

"மடத்துக்கு வாங்கவேண்டிய பொருள்களின் பட்டியல் இது அதற்கான பணம் இது.

ஆனால் பணம் பொருள்களின் பாதி அளவு கூட வாங்க போதாது.

பொருள்கள் வாங்க வேண்டும். என்ன செய்யலாம்?"

துறவி  கையிலிருந்த பணத்தை மொத்தமாக ஜன்னல் வழியே வெளியே வீசி எறிந்து விட்டார்.

"சுவாமி என்ன செய்தீர்கள்? மொத்தத்தையும் வெளியே வீசி விட்டீர்கள்!"

"வெளியே வீசவில்லை. கடவுளிடம் கொடுத்திருக்கிறேன். அவர் பார்த்துக் கொள்வார்."

தலைவர் சுவாமிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இவருடைய பக்தி அவருக்குத் தெரியும். ஆகவே வேறு எதுவும் சொல்லாமல் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் முன்பின் தெரியாத ஒருவர் வந்து ஒரு பெருந் தொகையை மடத்துக்கு நன்கொடையாக தலைவரிடம் கொடுத்தார்.

"எதற்காக இந்த பணம்?" தலைவர் கேட்டார்.

" ஒவ்வொரு ஆண்டும் வருமானத்தில்  ஒரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம்.

நேற்று இரவு தூங்கும் போது யாரோ ஒரு மடத்தின் பெயரை என் காதில் சொல்வது போல் இருந்தது.

காலையில் மடத்தின் பெயரைச் சொல்லி விசாரித்தேன்.

உங்கள் மடத்திற்கு வழி காட்டினார்கள். உடனே வந்துவிட்டேன்."

"கடவுளுக்கு நன்றி. உங்களுக்கும் நன்றி."

கடவுள் மேல் 'முழு நம்பிக்கை' உள்ளவர்கள்,

நாளை என்ன நடக்குமோ என்று பயப்பட மாட்டார்கள்,

கவலைப்படவும் மாட்டார்கள்.

இன்றுவரை காப்பாற்றியவர்

நாளையும் காப்பாற்றுவார்.

எப்போதும் காப்பாற்றுவார்

என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள்.

எந்தக் குழந்தையாவது நாளைக்கு பால் கிடைக்குமோ கிடைக்காதோ என்று கவலைப்பட்டு பார்த்திருக்கிறீர்களா?

எவ்வளவு வயதானாலும் கடவுளுக்கு நாம் குழந்தைகள்தான்.

கடவுள் மீது நாம் முழு நம்பிக்கை வைத்தால் அவரது சக்தியே
நம்மை இயக்கும்.

நமது  சக்தி அல்ல. 

நடக்கும்போது நாம் நமது வேகத்தில் போகிறோம்.

' பஸ்ஸில் ஏறி விட்டால் பஸ் வேகத்தில் போவோம்.

விமானத்தில் ஏறி விட்டால் விமானத்தின் வேகத்தில் போவோம்.

அதே போன்றுதான் நமது ஆன்மீக வாழ்விலும்.

முற்றிலுமாக இறைவனுக்குள் நுழைந்து விட்டால், வேகத்தைப் பற்றி
கவலைப்படவே வேண்டாம்.

இருட்டில் தனியாகப் போக பயப்படும் பிள்ளை தாயுடன் போகும்போது பயப்படுமா?

எப்போதும் இறைவன் நம்முடனே இருக்கும்போது நமக்கு பய உணர்ச்சி வரலாமா?

  " இறைவா உம்மை நம்புகிறோம்"

என்று  இறைவனிடம்   அறிக்கை சமர்ப்பித்தால் மட்டும் போதாது.

உண்மையிலேயே  நம்ப வேண்டும்.

உறுதியாக நம்ப வேண்டும்.

நமக்குள் இருந்து அவரே செயல்படுவார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment