Sunday, September 27, 2020

*"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்".*

*"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்".*
***    ***    ***    ***     ***       ***

சோதனைகள் வரும்.
சோதிப்பவன் சோதித்துக் கொண்டுதான் இருப்பான். அவனை மாற்ற நம்மால் முடியாது.

ஆனால் சோதனையில் விழாமல் இருக்க நம்மால் முடியும், இறைவன் அருளோடு.

நல்ல வாழ்வு வாழ தேவையான அருளை நமக்கு இறைவன் தந்து கொண்டு இருக்கிறார்.

ஆனால்  அந்த அருளை நிராகரித்து, பாவம் செய்யும் படி சாத்தான் நம்மைத் தூண்டிக் கொண்டே யிருப்பான்.

நமது முதல் பெற்றோரை அவன் சோதித்து அவர்களைப் பாவத்தில் விழ வைத்தது நமது ஜென்மப் பாவத்திற்கான காரணம்.

ஜென்மப் பாவம் நமது ஆன்மாவைப் பலகீனப்படுத்தி விட்டது.

இந்த பலகீனம்தான் நாம் சோதனையை வெல்ல கஷ்டப் படுவதற்குக் காரணம்.

ஆனால், நமது பாவத்திற்கான முழுப்பழியையும் சாத்தான் மீது போட்டுவிட்டு நாம் தப்பிக்க முடியாது.

இதைத்தான் நமது முதல் பெற்றோர் செய்தார்கள்.

ஆதாம் ஏவாள் மீது பழியைப் போட்டான்.

போடும்போது கடவுளையும் அந்த  list ல் சேர்த்துக் கொண்டான்.

"எனக்குத் துணைவியாய் இருக்கும்படி

நீர் எனக்குத் தந்தருளிய அந்தப் பெண்ணே

அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்"

ஏவாள் சாத்தான் மீது பழியைப் போட்டாள்.

கடவுள் நம்மிடம் வந்து

"ஏன் பாவம் செய்தாய்?"

என்று கேட்டால்,

" நீர் எனக்குத் தந்த உடல் தான் தன் இச்சையைப் பூர்த்தி செய்ய என்னைத் தூண்டியது.

நீர் படைத்த எனது முதல் பெற்றோர் தங்களது பாவத்தினால் என்னைப் பலகீனப்படுத்திவிட்டார்கள்."

என்போம்.

" ஏன்  அப்படிச் சொல்கிறாய்?". என்று கேட்டால்,

" இது பரம்பரை குணம். ஆதாமின் gene தான் எங்களிடம் உள்ளது"

என்று அறிவியல் ரீதியாக பதில் சொல்வோம்.

ஆனால் இந்த மாதிரி பேசுவதால் problem solve ஆகிவிடாது. 

இறைமகன் இயேசுவின் அணுகு முறையையே நாம் பின்பற்ற வேண்டும்.

இயேசுவால் பாவம் செய்ய முடியாது.

ஆனாலும் நாம் செய்த பாவங்களை எல்லாம் தன்மேல் சுமந்து கொண்டு நாம் செய்திருக்க வேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்.

அப்படியானால் நாம் பரிகாரம் செய்ய வேண்டாமா?

இயேசு தான் செய்த பரிகாரத்தின் மூலம் பாவ மன்னிப்பிற்கான கதவைத் திறந்து வைத்துவிட்டார்.

நாம் பிறர் மீது பழி போடும் பழக்கத்தை விட்டு விட்டு,

நாம் செய்த பாவங்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொண்டு,

அவற்றிற்காக மனஸ்தாபப்பட்டு இறைவனின் மன்னிப்பைக் கோர வேண்டும்.

  சிலர்

"இயேசு நாம் செய்த பாவங்களுக்கான பரிகாரத்தைச் செய்துவிட்டார். இனி நமக்குக் கவலை இல்லை. விசுவசித்தாலே போதும், நாம் இரட்சிக்கப்பட்டு விடுவோம்."

என்று நினைப்பது போல் தெரிகிறது.

அது தவறு.

அவர் தனது சிலுவைப் பலியின் மூலம் நமது பாவமன்னிப்பிற்கான ஏற்பாட்டைச்  செய்து விட்டார்.

அவர் ஏற்பாடு செய்து விட்ட பாவமன்னிப்பைப் பெற விசுவசித்தால் மட்டும் போதாது.

நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும், பரிகாரம் செய்யவும் வேண்டும்.

பாவச் சோதனைகளுக்குள் விழாதபடி கவனமாய் இருக்க வேண்டும்

அநேக சமயங்களில் சாத்தான் வந்து நம்மைச் சோதிப்பதைவிட  நாம்தான் சோதனையைத் தேடிப் போய் மாட்டிக் கொள்வோம்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

மதுவிலிருந்து விடுபட விரும்புகிறவன் மதுக்கடை பக்கம் போகக் கூடாது.

சூதாட்டத்திலிருந்து தப்பிக்க விரும்புகிறவன் சூதாடிகளின் நட்பைக் கைவிட வேண்டும்.

பழைய அனுபவங்கள் மூலம் பாவச் சோதனைக்கான இடங்களைக் கண்டறிந்து, அங்கு போவதைத் தவிர்க்க வேண்டும்.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இக்காலத்தில், பாவச் சோதனைகளைத் தேடிப்போகாமல் அவற்றை வீட்டிற்கே கொண்டு வந்து விடுகிறோம்.

ஒழுங்காகப் பயன்படுத்துபவர்களுக்கு உதவிகரமாய் இருக்கக்கூடிய Smartphone ம், TV.யும்,

தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சாத்தான்களாக மாறிவிடுகின்றன.

ஒவ்வொரு நாளும்

" எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்"

என்று பல முறை நமது விண்ணகத் தந்தையை நோக்கி ஜெபிக்கிறோம்.

நாம் சோதனைக்குள் விழாதபடி நமக்கு உதவி செய்யப் போதுமான அருள் வரத்தைத் தந்தை தருகிறார்.

ஆனால் நமது ஒத்துழைப்பும் இருந்தால்தான் இறைவன் அருள் நமக்கு உதவியாய் இருக்கும்.

உதட்டளவில் இறைவன் அருளை வேண்டி விட்டு, செயலளவில் நாமே சோதனைக்குள் குதித்தால்

ஏற்படும் பாதிப்புக்கு நாம்தான் பொறுப்பு.

திருப்பலியைப் பார்க்க எண்ணிக் கொண்டு Youtubeற்குள் நுழைவோம்.

ஆனால் அதைத் தேடிக் கொண்டிருக்கும்போதே தேவையற்ற வீடியோக்கள் குறுக்கே பாயும்.

கண்ணை மூடிக்கொண்டு திருப்பலியை நோக்கி நகர வேண்டும்.

"கொஞ்சம் போல பார்த்து விட்டு போவோம்"  என்று நின்றால்,

"கொஞ்சம் போல  ருசி பார்த்து விட்டுப் போவோம்" என்று ஆரம்பித்துவிட்டு

முழுப்பாட்டிலுக்குள்ளும் விழுந்து விட்ட குடிகாரன் கதைதான்.

நாம் சோதனைக்கு இடம் கொடுக்கவும் கூடாது, அதற்குள் விழவும் கூடாது

அதை விட முக்கியம் ஒன்று இருக்கிறது.

நாம் மற்றவர்களுக்குச் சோதனையாக மாறிவிடக் கூடாது.

*பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாக இருக்க வேண்டும்.*

*முன்மாதிரிகையாக இல்லாத பெற்றோர் பிள்ளைகளுக்கு சோதனையாக மாறிவிடுகிறார்கள்.*

அப்பா ஞாயிற்றுக் கிழமை பூசைக்குப் போகாதவறாய் இருந்தால்,

அம்மாவுடன் பூசைக்குப் போகும் பையனுக்கு

" அப்பாவைப் போல் ஒரு நாள் இருந்தால் என்ன?" என்று சோதனை வரும்.

அப்பா மதுக்கடைக்குப் போனால் மகனுக்கும் சோதனை வரும்.

பையன் வீட்டில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது இடையிடையே போனை எடுத்து பேசிக்கொண்டிருந்தான்.

அப்பா சொன்னார்,

"ஏல, பாடம் படிக்கும்போது பாடத்தை மட்டும் படி,

இடையிடையே phoneல் பேசி நேரத்தை வீணாக்காதே."

மகன் சொன்னான்,

" நீங்க மட்டும் பூசை நேரத்தில phone பேசலாமோ?"

நான் ஆசிரியர். நானே வகுப்பிற்கு அடிக்கடி பிந்திச் சென்றால் என் மாணவர்களிடம் பிந்தி வரக்கூடாது என்று சொல்ல முடியுமா?

பொறுப்பில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.

கோவில் இறை வழிபாட்டிற்கான இடம். கோவிலுக்கு வருபவர்கள்  எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு சோதனையாக இருந்து விடக்கூடாது.

சிலருடைய indecent dress பலருடைய பராக்குக்கு காரணமாகிவிடும்.

பூசை நேரத்தில் வெளியே நின்று பேசிக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களுக்கும் சோதனையாய் இருக்கிறார்கள்.

ஞாயிற்றுக் கிழமை பூசைக்கு வராதவர்களை விட,

வந்து, வந்திருக்கும் மற்றவர்களுக்குச் சோதனையாய் இருப்பவர்கள்தான் பெரிய குற்றவாளிகள்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு.

"மேய்த மாட்டைக் கெடுக்குமாம் மெனக்கெட்ட மாடு."

விபசாயி இரண்டு மாடுகளை மேய விட்டிருப்பான்.

ஒரு மாடு மேய்ந்து கொண்டிருக்கும்.

அடுத்த மாடு அதன் பக்கத்தில் போய்ப் படுத்துக் கொள்ளும்.

அதைப் பார்த்த அடுத்த மாடும் படுத்துக் கொள்ளும்.

அண்ணன் பக்தியுடன் பைபிள் வாசித்துக் கொண்டிருப்பான்.

தம்பி அங்கு வந்து அமர்ந்து அவனுடைய phoneல் சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுவான்.

கொஞ்ச நேரத்தில் அண்ணனும் பைபிளைக் கீழே வைத்துவிட்டு தம்பியுடன் சேர்ந்து கொள்வான்.

"ஏங்க, எழுந்திருங்க, மணி ஏழாகுது, எட்டு மணிக்குப் பூசை."

"எட்டு மணிக்குத்தான. ஏழே முக்காலுக்குப் புறப்பட்டால் போதாது?"

" அதற்கு முன் பல் தேய்த்துவிட்டு, குளிக்க வேண்டாம்?"

" நீ போ. நான் எப்படியும் வந்துவிடுவேன்."

தான் போய்விட்டால் கணவன் தப்பித்து விடுவான் என்று அவளுக்குத் தெரியும்.

" அதெல்லாம் முடியாது. சேர்ந்து தான் போக வேண்டும்."

பாடா பட்டு புருசனை எழுப்பி,  தயார் செய்து, கோவிலுக்குத் தள்ளிக்கொண்டு சேர்க்கும்போது சாமியார் பிரசங்கத்தை முடித்துவிட்டார்!

வீட்டுக்கு வந்தவுடன்:

" Sorry டா!"

" எதுக்கு?"

"இன்பத்திலும், துன்பத்திலும் பங்குன்னு சொல்லி கைப் பிடித்தோம்.

ஆனால் இன்று என்னுடைய பாவத்திலும் பங்கு எடுத்துக் கொண்டாயே!

போனது போகட்டும்.

அடுத்த வாரத்திலிருந்து உனக்கு முன்னாலேயே பூசைக்கு புறப்பட்டு  நிற்பேன், போதுமா?"

" Thanks ங்க."

நாமே யாருக்கும் சோதனையாய் இருந்து விடாதபடி பார்த்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment