"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."
(மத்.11:28)
**************************************
இயேசுவின் திருச்சபையைச் சேர்ந்த அனைவரும் அவரின் ஞான சரீரத்தின் உறுப்புக்கள்.
அவர் நம் தலை.
அவருடைய உறுப்புக்களாகிய நம்மைப் பார்த்து, இயேசு
"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்.
உங்களை நான் இளைப்பாற்றுவேன்"
என்கிறார்.
உறுப்புக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கவலைப் படுவது தலைதான்.
தனது அளவற்ற அன்பின் காரணமாக
நமக்காகவே பிறந்து, நமக்காகவே வாழ்ந்து, நமக்காகவே மரித்து, நமக்காகவே உயிர்த்து
நமக்காகவே தனது ஞான சரீரமாகிய கத்தோலிக்க திருச்சபையை ஏற்படுத்திய நமது இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு
நம்மீது கொண்ட இரக்கத்தின் காரணமாக
நமது ஆன்மீக சுமைகளாகிய பாவங்களையும், கவலைகளையும், சோர்வுகளையும் அவர் முன் இறக்கி வைத்து
ஆறுதல் பெற நம்மை அன்போடு அழைக்கிறார்.
நமக்கு ஆறுதல் அளிக்க அவர் விரும்புவதற்குள் அவரது மற்றொரு விருப்பமும் அடங்கி இருக்கிறது.
நாம் மீட்பு அடைய அனுசரிக்க வேண்டிய இரண்டு கட்டளைகள் மூலம் அது நமக்கு தெரிவிக்கப்படுகிறது.
1. நமது முழு இருதயத்தோடு இறைவனை நேசிக்க வேண்டும்.
2. நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.
நாம் நம் இறைவனை நேசிப்பதால் தான் நமது ஆன்மாவின் சுமைகளை அவர் முன் இறக்கி வைத்து ஆறுதல் பெறுகிறோம்.
நம்மை அளவுகடந்த விதமாக நேசிக்கும் இறைவன் நமது சுமைகளை நீக்கி நமக்கு ஆறுதல் அளிக்கின்றார்.
இயேசுவைப் பின்பற்றி நமது அயலானுடைய சுமைகளையும், கவலைகளையும் நீக்கி அவனுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இந்த கடமை நமது இறை அன்பில் இருந்து பிறக்கிறது.
இதை நாம் நிறைவேற்றினால் தான் நமது இறையன்பு முழுமை பெறும்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சுமை ஒரு கவலை இருக்கும்.
நமது சுமையை நீக்கி நமக்கு. ஆறுதல யாராவது வரமாட்டார்களா என்று ஏங்குபவர்களும் உண்டு,
அவர்களும் நம்மைப் போல கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் உறுப்புகளே.
உடலில் ஒரு உறுப்புக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு உதவி செய்ய இயங்குவது மற்ற உறுப்புக்களின் இயல்பு.
காலில் முள் தைத்தால்
உடம்பு வளைகிறது. கண் பார்க்கிறது, கை முள்ளை எடுக்கிறது. வலித்தால் கண்ணீர் வருகிறது.
கிறிஸ்துவின் ஞான சரீர உறுப்புக்களும் இவ்வாறே உணர்ந்து இயங்க வேண்டும்.
உடல் சம்பத்தப்பட்ட பிரச்சனையாய் இருக்கலாம்,
ஆன்மீகம் சம்பத்தப்பட்ட பிரச்சனையாய் இருக்கலாம்,
பணி, பொறுப்புகள் சம்பத்தப்பட்ட பிரச்சனையாய் இருக்கலாம்,
மனதையும், உடலையும் பாதிக்கும் எந்தப் பிரச்சனையாயும் இருக்கலாம்,
கிறிஸ்துவில் நம்முடைய சகோதரர்களில் யாருக்கு எந்த பிரச்சனை இருந்தாலும்
அதைச் சரி செய்து அவர்களை ஆறுதல்படுத்த நமக்குக் கடமையும் உரிமையும் நமக்கு இருக்கிறது.
நமது சுமையை தாங்க இயேசு வருவதுபோல் மற்றவர்களது சுமையை தாங்க நாம் செல்ல வேண்டும்.
அன்பு வட்டத்திற்குள் வரும் எல்லோருமே
ஒருவர் ஒருவரது உதவியை எதிர்பார்ப்பது இயல்பு.
உதவி செய்ய வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை.
"ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்."
(கலாத் 6:2)
இது இறை வாக்கு
நமது உதவிக்கரம் இறையன்பின் அடிப்படையில் நீட்டப்பட வேண்டும்.
நாம் அனைவரும் ஒரே தந்தையின் மக்கள் என்பதால்
அனைவரும் அனைவருக்குமாகவே வாழ்கிறோம்.
நாம் எல்லோரும் அன்பு என்னும் ஒரே கயிற்றால் கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருக்கிறோம்.
கிறிஸ்துவின் அன்பு எல்லோருக்கும் வருவதுபோல
எல்லோருடைய அன்பும் கிறிஸ்து வழியாக எல்லோருக்கும் செல்கிறது.
நாம் எல்லோரும் ஒரே உடலின் உறுப்புகளாக இருப்பதால்
கிறிஸ்துவின் அன்பு என்னும் ஒரே இரத்தம்தான் நம் எல்லோர் நரம்புகளிலும் பாய்கிறது.
நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே கவனித்துக்கொள்ளும் ஒரு சிறு வட்டத்திற்குள் வாழவில்லை.
அனைவரும் அனைவரையும் கவனித்துக் கொள்ளும் ஒரு பெரிய வட்டத்திற்குள் வாழ்கிறோம்.
கிறிஸ்து ஒரு திராட்சை கொடி,
நாம் எல்லோரும் அவரின் கிளைகள்..
,
எல்லா கிளைகளுக்கும் கிறிஸ்துவிடம் இருந்து தான் வாழ்க்கைக்கான சத்து வருகிறது.
நம்மில் இருந்து வெளியே வரும் திராட்சைக் குலைகள்
கிறிஸ்துவில் நம் அனைவருக்கும் சொந்தம்.
இந்த சொந்த உணர்வுதான் நாம் அனைவரையும் ஒருவருக்கொருவர் உதவி செய்யத் தூண்டுகிறது.
உடல் உறுப்புக்கள் அனைத்தும் ஒரே உணர்வினால் இணைக்கப்பட்டுள்ளன.
ஆகவேதான் ஒரு உறுப்பில் வலி ஏற்பட்டால் அந்த வலியை அனைத்து உறுப்புகளும் உணர்கின்றன, உதவிக்கு விரைகின்றன.
ஒரு குடும்ப உறுப்பினர்கள் ஒரே அன்பினால், இணைக்கப்பட்டுள்ளதால்
ஒரு உறுப்பினருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அனைத்து
உறுப்பினர்களும் அதை உணர்ந்து
உதவிக்கு விரைகின்றனர்.
ஞான சரீர உறுப்பினர்களுள் யாருக்காவது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது அனைவருக்குமான பிரச்சனைதான்.
பிரச்சனைக்கு உரியவர் உதவி கேட்க வர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.
உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்தவுடன்
நாமாகவே சென்று நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்.
அவர்கள் பதில் உதவி செய்வார்களா என்று எதிர்பார்க்கக்கூடாது.
ஒவ்வொரு பங்கும் ஒரு குட்டித் திருச்சபை.
பங்கு குரு அதன் தலைவர்.
பங்கு மக்கள் எல்லோரையும் கிறிஸ்தவ அன்பு ஒன்றாகப் பிணைக்கிறது.
அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.
ஆலயம் அவர்களது ஒற்றுமையின் மையமாக இருக்க வேண்டும்.
ஆலயத்திற்கு வருபவர்கள் ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்.
கஷ்டப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டும்.
இயேசு நமக்கு எதையெல்லாம் செய்தாரோ அதை எல்லாம் நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.
பங்குக் குரு இயேசுவின் பிரதிநிதி.
நமக்குத் தர வேண்டிய ஆன்மீக நன்மைகளை எல்லாம் இயேசு அவர் மூலமாகவே தருகிறார்.
குருவானவர் மூலமாகவே நமக்கு தனது நற்செய்தியை அறிவிப்பதோடு அதற்காக விளக்கத்தையும் கொடுக்கிறார்.
குருவானவர் மூலமாகத்தான் நமது பாவங்களை மன்னிக்கிறார்.
குருவானவர் மூலமாகத்தான் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார்.
குருவானவர் மூலமாகத்தான் நமக்கு ஆன்மீக வழி காட்டுகிறார்.
நாம் நமது பங்கு குருவில் இயேசுவை காண வேண்டும்.
இயேசுவை நேசிப்பது போல அவரையும் நேசிக்க வேண்டும்.
அவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம்தான் அவருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டும்.
அவரோடு பங்கு மக்கள் அனைவரும் கிறிஸ்தவ அன்பில் இணைந்து
ஒருவருக்கொருவர் உதவி செய்து
நமது விண்ணக பாதையில் வெற்றிநடை போட வேண்டும்.
அனைத்துலக திருச்சபையும் ஒரே குடும்பம்தான்.
கிறிஸ்து ஒருவரில்தான் அனைத்துலகும் இணைந்திருக்கிறது.
உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும்
ஜாதி, இன, நாடு வேறுபாடு இல்லாமல்
ஒரே குடும்பத்தாராய் கிறிஸ்துவின் அன்போடு ஒருவரை ஒருவர் நேசித்து
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து
வாழ வேண்டும் வந்தது இயேசுவின் ஆசை.
அவரது ஆசைப்படி, அவர் வாழ்ந்து காட்டியபடியே நாமும் வாழ்வோம்.
வளமான நித்திய வாழ்வில் அவரோடு இணைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment