"நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்."
"By your patience, you shall possess your souls."
(லூக்.21: 19)
***************************************
இது fast food யுகம்.
ஆசைப்படுவது உடனே நிறைவேற வேண்டும்.
பழைய காலங்களில்
ஒரு பழ விதையை இன்று ஊன்றி வைத்தால்
அது முளைத்து, கன்றாகி, மரமாகி பூத்து, காய்க்க பல வருடங்கள் ஆகும்.
இப்போது விதை ஊன்ற வேண்டாம்.
nursery க்குச் சென்று ஒட்டு மரக்கன்றுகள் வாங்கி நடுகின்றார்கள்.
நடும்போதே அதில் பூ இருக்கும்.
சில மாதங்களிலேயே அது காய்க்க ஆரம்பித்துவிடும்!
சப்பாத்தி செய்ய வேண்டுமென்றால் கோதுமை வாங்குவது முதல் மாவாக்கி , பிசைவது வரை ஒரு வேலையும் செய்ய வேண்டாம்.
ரெடிமேட் சப்பாத்தியைக் கடையில் வாங்கி, தோசைச் சட்டியில் எண்ணெய் தடவி, போட்டு எடுத்தால் போதும்
நிமிடக்கணக்கில் சாப்பாடு ரெடி.
இதே வேகத்தை ஆன்மீகத்திலும் புகுத்த ஆசைப்படுகிறோம்.
கடவுளிடம் கேட்டது கிடைக்க வேண்டும்,
கேட்டவுடன் கிடைக்க வேண்டும்.
சில பேர் பங்கு சாமியாரிடம் போய் தங்கள் அவசரத்தைக் காட்டுவார்கள்.
"சாமி அடுத்த வாரம் பையனுக்கு திருமணம.
ஊடே ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இருக்கிறது.
அன்றே மூன்று ஓலைகளையும் வாசித்து விடுங்கள், புதன்கிழமை கல்யாணம்."
"ஹலோ! திருமணம் ஆற அமர யோசித்து செய்யக்கூடிய ஒன்று இப்படி அவசரப்படக்கூடாது."
"எனக்குப் புரிகிறது. பெண் வீட்டார் அவசர படுத்துகிறார்களே!"
சாமியார் பொறுமையாக இருப்பார்.
அவர் பொறுமை காக்காமல் அவசரப்பட்டு
" அதெல்லாம் அவசரமாக முடிக்க முடியாது, மூன்று வாசிக்க வேண்டும். குறைந்தது மூன்று வாரம் ஆகும்"
என்று சொன்னால்,
பொண்ணும், மாப்பிள்ளையும் கல்யாணத்தை வேறெங்காவது முடித்துவிட்டுப் போய்விடுவார்கள்.
சாமியார்தான் பாரத்தை ஆண்டவரிடம் போட்டுவிட்டு, adjust பண்ணிப் போக வேண்டியிருக்கிறது.
இரண்டு ஆன்மாக்களை இழந்துவிடக்கூடாதே!
இயேசு பொறுமையை விரும்ப கிறார்.
அவர் தனது பாடுகளுக்காக கூட 'காலம் வரும்வரை' காத்திருந்தார்.
மூன்று ஆண்டுகள் நற்செய்தி போதிப்பதற்காக முப்பது ஆண்டுகள் பொறுமையாய் இருந்தார்.
ஆனாலும் அதிலும் ஒரு அதிசயம், கானாவூர் திருமணத்தின் போது அவரது அம்மாவிற்கு கீழ்ப்படிவதற்கு காலம் வரும் வரை காத்திருக்கவில்லை!
"இரசம் தீர்ந்துவிட்டது"
"எனது நேரம் இன்னும் வரவில்லை"
"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்."
"இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்.
இப்பொழுது முகந்து பந்திமேற்பார்வையாளனிடம் எடுத்துச்செல்லுங்கள்"
மாதாவின் சக்தியே சக்தி!
பொறுமை ஏழு வகை முக்கிய புண்ணியங்களுள் ஒன்று.
தாழ்ச்சிக்கு அடுத்து இடம் பெறுவது.
உண்மையில் தாழ்ச்சி உள்ளவர்கள்தான் பொறுமையாய் இருப்பார்கள்.
தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தங்களது விருப்பம் உடனே நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
கஷ்ட காலங்களில் தான் நாம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
இயேசு தன்னுடைய சீடர்கள் தன் பொருட்டு அனுபவிக்க வேண்டிய துன்பங்களையெல்லாம் சுட்டிக் காண்பித்து
அவற்றில் மனம் தளராமல் மன உறுதியோடு பொறுமையாக நிலைத்து நிற்பவர்கள் மீட்பு பெறுவார்கள் என்கிறார்.
இயேசு சீடர்களிடம் சுட்டி காண்பித்தது அவர்கள் கால அரசுகள் அவர்கள் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதற்காக கொடுக்கப்போகும் துன்பங்களை.
"என் பெயரின்பொருட்டு உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்."
(லூக்.21:12)
இன்றும் கூட சில நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே அரசின் சலுகைகள் மறுக்கப் படுகின்றன.
சலுகைகள் பெற வேண்டும் என்பதற்காக கிறிஸ்துவை மறுதலிக்காமல்
சலுகைகள் அற்ற வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை
பொறுமையுடன் ஆண்டவருக்காக இறுதிவரைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.
உடல் நலமின்மை, பொருளாதார பற்றாக்குறை போன்ற கஷ்டங்களும் நமது மன உறுதியைப் பாதிக்கும்.
கஷ்ட காலங்களில்தான் நாம் இறைவனை அதிகம் தேடுவோம்.
கஷ்டங்கள் நீங்க ஜெபிப்போம்.
ஆண்டவர் எப்போதும் நம்முடனே இருந்தாலும் நம்மை விட்டு தூரப் போய்விட்டது போல் நமக்குத் தோன்றும்.
அப்படிப்பட்ட சமயங்களில் நமது ஜெபத்தை அதிகப்படுத்த வேண்டும்.
பொறுமையுடன் இடை விடாது ஜெபிக்க வேண்டும்.
இடை விடாத ஜெபத்தை வலியுறுத்தவே , கைம்பெண், நீதிபதி உவமையை ஆண்டவர் கூறினார்.
, " என் எதிராளியைக் கண்டித்து எனக்கு நீதி வழங்கும்"
என கடவுளுக்கு கூட பயப்படாத ஒரு நீதிபதியிடம்
தனக்கு நீதி கிடைக்கும் வரை கேட்டுக்கொண்டேயிருந்த ஒரு கைம்பெண்ணின் உவமையிலிருந்து
ஆண்டவர் நமக்கு கூற விரும்புவது:
"தாம் தேர்ந்துகொண்டவர்கள்
அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது
கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ?
அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?"
கடவுள் எப்பொழுதும் நம்முடன் தான் இருக்கிறார்.
இடைவிடாமல் நாம் ஜெபம் சொல்லும்போது உறுதியாக நமது ஜெபத்தைக் கேட்பார்.
தனது மகன் அகஸ்டின் மனம் திரும்ப புனித மோனிக்கம்மாள் 30 ஆண்டுகள் இடைவிடாது ஜெபித்திருக்கிறார்.
" வழியும், உண்மையும், உயிரும் நானே"
என்று இயேசு கூறியது எல்லா வகையிலும் நாம் அவரை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.
கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஆடு எவ்வளவு அமைதியாக செல்கிறது!
நமது ஆண்டவர்
கைது செய்யப்பட்டபோது பொறுமையாக இருந்தார்.
விசாரணை செய்யப்பட்டபோது பொறுமையாக இருந்தார்.
அவர்மேல் அவரது எதிரிகள் காறி போது உமிழ்ந்த போது பொறுமையாக இருந்தார்.
கசையால் அடிக்கப்பட்டபோது பொறுமையாக இருந்தார்.
காலால் உதைக்க பட்டபோது பொறுமையாக இருந்தார்.
சிலுவையை சுமந்து சென்றபோது பொறுமையாக இருந்தார்.
சிலுவையில் அறையப்பட்ட போது பொறுமையாக இருந்தார்.
சிலுவையில் தொங்கியபோது பொறுமையாக இருந்தார்.
கஷ்ட காலத்தில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவே அனைவருக்கும் முன்மாதிரிகை.
நமது கஷ்டங்களுக்கு நமது வாழ்க்கையே காரணமாக இருக்கலாம்.
இயேசுவின் கஷ்டங்களுக்கு அவரது வாழ்க்கை காரணம் அல்ல, நமது வாழ்க்கை தான் காரணம்.
நமது பாவ வாழ்க்கைக்குப் பரிகாரம் செய்யவே இயேசு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டார்.
இதை உணர்ந்தால் நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம் பொறுமையாய் தாங்கிக் கொள்வோம்.
இயேசு நம்மீது உள்ள அன்பினால் தனது பாடுகளை பொறுமையாகத் தாங்கிகொண்டார்.
நமக்கு அவர்மேல் உண்மையாக அன்பு இருந்தால் நமது கஷ்டங்களையும் அவருக்காக பொறுமையாக தாங்கிக் கொள்வோம்.
அன்பு பொறுமையுள்ளது,
அன்பு அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்:
அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்.
இயேசுவுக்கு அடுத்து நமது முன்மாதிரிகை நமது அன்னை மரியாள்.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அன்பு மகன்,
அவ்வளவு பாடுகள் பட்டபோது அவளது மனம் எவ்வளவு துடிதுடித்திருக்கும்.
எல்லாவற்றையும் நமக்காகத் தாங்கிக் கொண்டு அவரது சிலுவைப் பாதையில் பொறுமையாக நடந்தாள்.
இயேசு சிலுவையில் தொங்கியபோது, தனது வியாகுலங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு அமைதியாக நின்றாள்.
இயேசு உலக மக்கள் அனைவரின் பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான்
பாடுபட்டார் என்று மரியாளுக்குத் தெரியும்.
நமது சார்பாக சிலுவையின் அடியில் நின்று தனது திருமகனை தந்தை இறைவனுக்கு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தாள்.
நமது பொறுமை சோதனைக்கு உள்ளாகும் போது
நமது பொறுமையை இழந்து விடாதிருக்க பொறுமைக்கு அரசியாகிய நமது அன்னை மரியாளின் முகத்தை ஏறிட்டு பார்க்க வேண்டும்.
அவளது சாந்த சொரூபம் ஆகிய முகமே நமக்கு ஆறுதலாயிருக்கும்.
சில சமயங்களில் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத போது நம் மேலேயே நமக்கு கோபம் வரும்.
நமது தன்னம்பிக்கை ஆட்டம் காணும்.
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் நற்கருணை நாதர் முன்பு அமைதியாக அமர்ந்து நம்மை முழுவதும் அவர் கைவசம் கொடுத்து,
"ஆண்டவரே இதோ என்னை முழுவதும் உம்மிடம் ஒப்படைத்துவிட்டேன்.
பொறுமையோடும் நம்பிக்கையோடும் செயல்பட உமது அருளைத் தாரும்."
என்று பிரச்சனைகளை மறந்து,
அமைதியாக நற்கருணை நாதரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாலே பிரச்சினையின் வேகம் குறைந்துவிடும்.
தையல் நூல் சிக்கிக் கொள்ளும்போது அவசரமாக சிக்கலை நீக்க முயன்றால் சிக்கல் அதிகமாகும்.
ஆற அமர மெதுவாக சிக்கலை எடுக்க முயன்றால் நேரம் அதிகமானாலும் சிக்கலை நீக்கிவிடலாம்.
வாழ்க்கையிலும் அவிழ்க்க முடியாத சிக்கல் என்று ஒன்றும் இல்லை.
நாம்தான் நமது அவசர புத்தியினால் சாதாரண சிக்கலை பெரிய சிக்கல் ஆக்கிவிடுவோம்.
மகன் நாம் சொன்ன சொல்லை கேட்க மறுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.
கோபத்தில் ஒரு அறை அடித்துவிட்டால் அது நிரந்தர பிரிவில் கூட போய் முடியும்.
ஆனால் ஆண்டவர் கையில் பாரத்தைப் போட்டுவிட்டு பையன் வரும் போதெல்லாம் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே இருப்போம்.
அவனும் திரும்பி பார்ப்பான்.
ஒரு முறை அருகில் போய் கையை பிடித்து நெற்றியில் சிலுவையில் அடையாளம் வரைந்து
கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தால் அவனுடைய மனது இழகி நம்மீது சாய்ந்து விடுவான்.
பொறுமையால் சாதிக்க முடியாது எதுவுமே இல்லை.
"By your patience, you shall possess your souls." (Luke: 21:19)
பொறுமையாய், உறுதியாய், நிலைத்து நிற்போம்.
நிலை வாழ்வு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment