நம்மால் விடை கூறமுடியாத கேள்வி.
************************************
கடவுள் ஒன்றுமே இல்லாதிருந்த நம்மை நாம் கேட்காமலேயே படைத்து
முன் பின் தெரியாத, ஆபத்துக்கள் நிறைந்த, துன்பங்கள் நிறைந்த இந்த உலகத்தில் விட்டிருப்பது
நாம் 'பேந்த பேந்த முழிப்பதைப்' பார்த்து வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல.
வாழ. மகிழ்ச்சியோடு வாழ. அவர் திட்டமிட்ட காலம், திட்டமிட்டபடி வாழ்ந்துவிட்டு மீண்டும் அவரிடம் செல்ல.
நாம் பிள்ளைகளாக இருந்த போது நமது பெற்றோர் நம்மைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினார்கள்.
எதற்காக?
அங்கேயே நிரந்தரமாகத் தங்கிடவா?.
இல்லை. மீண்டும் வீட்டிற்குத் திரும்பு வதற்காக.
படித்து முடித்தவுடன் வேலைக்குப் போனோமே,
எதற்கு?
நிரந்தரமாக அலுவலகத்திலேயே தங்கிடவா?
இல்லை. மீண்டும் வீட்டிற்குத் திரும்பு வதற்காக.
அடிக்கடி எதாவது காரணத்தை முன்னிட்டு வெளியூர் போகிறோமே,
எதற்கு? நிரந்தரமாக சென்றவிடத்தில் தங்கிடவா?
இல்லை. மீண்டும் வீட்டிற்குத் திரும்பு வதற்காக.
வெளிநாடுகளுக்குப் போகிறோமே.
எதற்கு? நிரந்தரமாக சென்ற நாட்டிலேயே தங்கிடவா?
இல்லை. மீண்டும் வீட்டிற்குத் திரும்பு வதற்காக.
கடவுள் நம்மை உலகிற்கு அனுப்பிவைத்திருக்கிறாரே,
எதற்கு? நிரந்தரமாக உலகிலேயே தங்கிடவா?
இல்லை. மீண்டும் அவரிடமே திரும்பு வதற்காக.
ஆம். உலகம் நாம் பயணிக்கும் இடம் தான்,
நிரந்தரமாக தங்கும் இடம் அல்ல.
பயணம் முடிந்தவுடன்
நாம் நமது தந்தையின் இல்லம் சென்று,
அதாவது நமது இல்லம் சென்று,
தந்தையுடன் நிரந்தரமாகத் தங்குவோம்.
நமது பள்ளிக்கூட நாட்களில் பாடம் கற்றுக் கொண்டிருக்கும்போதுகூட
நமது தாய் தந்தையின் ஞாபகமும் வீட்டின் நினைப்பும் நம்முள் இருக்கும்.
களைப்பாய் இருக்கும்போது அம்மாவின் மடியை நினைத்துக் கொள்வோம்.
அம்மாவின் ஞாபகம் நமது களைப்பை நீக்கி உற்சாகத்தைக் கொடுக்கும்.
ஒரு முறை வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றமைக்காக மாணவ மாணவியருக்கு கையில் அடி கொடுத்துக் கொண்டிருக்கும்போது
ஒரு மாணவி அழ ஆரம்பித்தாள்.
" ஏன் அழுகிறாய்? குறைந்த மதிப்பெண் பெற்றதற்கா? அடி வாங்கியதற்கா?" என்று கேட்டேன்.
அவளது பதில் எனக்குச் சிரிப்பைத் தந்தது.
"என்னுடைய அம்மாவை நினைத்து அழுகிறேன், சார்."
"குறைந்த மதிப்பெண் பெற்றது நீ, அடித்தது நான், ஏன் அம்மாவை நினைத்து அழுகிறாய்?"
"அம்மாவை நினைத்தால் வலியே தெரியாது, சார்"
"அழாமல் நினைக்க வேண்டியதுதானே?"
"சார், என்னால் அடிபடும்போது அழாமலும் இருக்க முடியாது,
அம்மாவை நினைக்காமலும் இருக்க முடியாது.
பிரம்பைப் பார்த்து பயமாக இருந்தாலும், அம்மாவை நினைத்தால் ஆறுதலாக இருக்கிறது."
என்று அழுதுகொண்டே சொன்னாள்.
இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போதே எனக்கு இந்த கடந்த கால நிகழ்வுதான் ஞாபகத்திற்கு வந்தது.
இன்றைய காலகட்டத்தில் நமக்கும் இதே மாதிரியான மனப்பக்குவம் இருக்க வேண்டும்.
கொரோனாவின் ஆட்சிக்காலம் இது.
இக்காலத்தில் நமது மனதில் இருக்கவேண்டிய முக்கியமான நினைவுகள்:
கொரோனாவின் ஆட்சி நிரந்தரமானது அல்ல.
இப்பூமியில் நான் வாழும் வாழ்க்கையும் நிரந்தரமானது அல்ல.
நமது உள்ளத்தில் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இறைவனின் ஆட்சி நிரந்தரமானது.
நாம் செல்லவிருக்கும் விண்ணக அரசும் நிரந்தரமானது.
இவ்வுலகம் நம்மை விட்டு கடந்து போய்விடும்.
இறை உலகம் நம்மை என்றென்றும் வாழவைக்கும்.
விண்ணக தந்தையை நினைத்தால் உலகத் துன்பங்கள் மறந்துவிடும்.
நாம் எப்போதும் இறைவன் நினைவிலேயே வாழ வேண்டும்.
நமக்கு மற்றவர்களால் சொல்லப்படும் புத்திமதி
"பத்திரமாக இருங்கள்." ('stay safe’,)
நமக்கு நாமே சொல்ல வேண்டிய புத்திமதி,
"ஜெபத்தோடு இருப்போம்"
(‘stay prayerful.’)
யாருக்கும் நோய்வாய்ப்பட ஆசை இருக்காது.
ஆகவே அதற்கு உரிய பாதுகாப்புடன் நாம் இருக்க வேண்டியது அவசியம் தான்.
ஆனால் 24 x 60 x 60 வினாடிகளும் அந்த 'கவலையிலேயே' இருந்தால் நம்மால் வேறு ஒரு வேலையும் செய்ய முடியாது.
பாதுகாப்புடன் இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.
நாம் சர்வ வல்லமை வாய்ந்த இறைவனின் பிள்ளைகள்.
இறைமகன் இயேசுவின் சீடர்கள்.
இயேசு எப்பொழுதும், ஒவ்வொரு வினாடியும் நம்முடனேயே இருக்கிறார்.
அவருக்குள் நாம் இருந்து கொண்டு பயந்துகொண்டே இருந்தால், அது அவரை அவமானப் படுத்துவதற்குச் சமம்.
ஒரு முறை கப்பலொன்று வட கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.
வட கடல் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் மத்தியில் உள்ளது.
Map ல் இடம் குறிக்க 10 வது வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, அவர்கள் ஞாபகத்தில் பதிவதற்காக நான்,
" 'பி' க்கு மேல 'இ'. (பீக்கு மேல ஈ) நடுவில் 'வட'
என்று சொல்வது வழக்கம்.
அதாவது, Map ல் பிரான்சுக்கு மேல் இங்கிலாந்து.
கப்பலில் தண்ணீர் தீர்ந்து விட்டது.
எல்லோரும் தாக மயக்கத்தில் இருந்தார்கள்.
கப்பலுக்கு மேலே SOS (Save our souls) கொடி பறக்க விடப்பட்டது.
உதவியை எதிர்பார்த்து அநேகர் கப்பலின் மேல்தட்டில் நின்று கொண்டிருந்தார்கள்.
அதைப்பார்த்த மற்றொரு கப்பல் உதவிக்கு வந்தது.
ஒருவர் கப்பலின் மேல்தட்டில் நின்று கொண்டு,
"கப்பல் தேம்ஸ் நதியில் நல்ல தண்ணீரில் பயணிக்கிறது. எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்." என்றார்.
தேம்ஸ் வட கடலில் கலக்கும் நதி. அதன் கரையில்தான் லண்டன் இருக்கிறது.
கப்பல் வடகடலைக் கடந்து தேம்ஸ் நதிக்குள் சென்று விட்ட விபரம் தெரியாமல்,
அதாவது நல்ல குடிநீரில் பயணிப்பது தெரியாமல் மக்கள் உதவிக் கொடி பறக்கவிட்டிருக்கிறார்கள்.
இப்போது நாம் செய்து கொண்டிருப்பது அதைத்தான்.
எல்லாம் வல்ல இறைவன் மடியில் அமர்ந்துகொண்டு உதவிக்கு யார் யாரையெல்லாமோ அழைக்கிறோம்.
தாயின் மடியில் அமர்ந்துகொண்டு பிள்ளை பக்கத்தில் போகும் ஒரு பெண்ணைப் பார்த்து,
"பசிக்கிறது, கொஞ்சம் பால் கொடுங்களேன்" என்று கேட்டால் தாய்க்கு எப்படி இருக்கும்?
நமது செய்கையைப் பார்க்கும் கடவுளுக்கும் அப்படித்தான் இருக்கும்.
அதுமட்டுமல்ல, கத்தோலிக்கர் என்ற முறையில் நமது குறிக்கோள் விண்ணக வாழ்வு என்பதை நாம் மறந்து செயல்படுவது
வீட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் அதை மறந்து தியேட்டருக்குச் செல்வதுபோல் இருக்கிறது.
கடவுளை அறிந்து, நேசித்து, சேவை செய்து அதன் மூலம் விண்ணகத்தை அடையவே நம்மை அவர் படைத்து இவ்வுலகில் விட்டிருக்கிறார்.
(Catechism, 1721)
என்று நாம் படித்திருக்கிறோம்.
எதற்காக? மறந்து போவதற்கா?
ஒருவன் ஒரு ஒரு பண மூட்டையை தலையில் வைத்து இறுகப் பிடித்துக் கொண்டு ஒரு மலை மேல் ஏறினான்.
அவன் ஏறிக் கொண்டிருப்பது மலை. அருகில் ஒரு பெரிய பாதாளம்.
எப்படியோ கைநழுவி பண மூட்டை பாதாளத்திற்குள் விழுந்துவிட்டது.
இப்பொழுது இவன் என்ன செய்திருக்க வேண்டும்?
அவனுக்கு உயிர் முக்கியமா? பணம் முக்கியமா?
அவனது பண ஆசையினால் எதையும் பற்றி கவலைப்படாமல் பணத்தை எடுப்பதற்காக பாதாளத்திற்குள் குதித்தான்.
பணம் போவதற்கு முன்னாலேயே அவன் போய்விட்டான்.
அநேகர் உலகத்தின் மீதுள்ள தங்களது அளவுகடந்த பற்றினால்,
ஆன்மாவின் பாதுகாப்பையும், நிரந்தர வீடாகிய விண்ணகதையும் மறந்து விடுகிறார்கள்.
உலகம் கையை விட்டுப் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.
உடல்நலம் முக்கியம்தான். ஆனால் ஆன்மாவை விலையாகக் கொடுத்து வாங்கிய உடல்நலம் நமக்கு உதவாது.
We must take care of our health,
but not at the expense of our soul.
ஜெப வாழ்வு வாழ்தல்,
அடிக்கடி திருப்பலியில் பங்கேற்றல்,
திருப்பந்தியில் பங்கேற்றல்,
பாவ சங்கீர்த்தனம் செய்தல்,
பிறருக்கு உதவுதல்,
மற்றவர்களுக்காக ஜெபித்தல்,
பைபிள் வாசித்தல்,
புனிதர்களின் வரலாறு வாசித்தல்,
பாவ சந்தர்ப்பங்களை விலக்குதல்
போன்றவை
ஆன்மீகத்தில் பத்திரமாக இருக்கவும் (to be safe)
வளரவும் (to grow) நமக்கு உதவுகின்றன.
ஏறக்குறைய ஐந்து மாதங்களாக கொரோனாவின் பாதிப்பினால் கோவில்கள் பூட்டிக் கிடந்தன.
தேவத் திரவிய அனுமானங்கள் எதையும் நம்மால் பெற இயலவில்லை.
சாப்பாடு கிடைக்காதவன் சாப்பாட்டின் படத்தைப் பார்த்து திருப்தி அடைவது போல
நாம் youtube ல் திருப்பலியைப் பார்த்து திருப்தி அடைந்து கொண்டோம், வேறு வழி இல்லாமல்.
இன்னும் கொரோனாவில் ஆட்சி முடிவுக்கு வராவிட்டாலும்
கடவுளின் சித்தத்தினால் கோவில்கள் திறந்து விட்டன.
திருப்பலியிலும், திருப்பந்தியிலும் நேரடியாகப் பங்கேற்கும் பாக்கியம் கிடைத்துவிட்டது.
முதலில் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
கடந்த ஐந்து மாதங்களாக கிடைக்காததை ஈடு செய்வதற்காக
இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.
நமது ஆன்மீக வாழ்விற்கு கேடு விளைவிக்கக்கூடிய
தொலைக்காட்சி மற்றும் இணையதள நிகழ்ச்சிகளைத் தவிர்ப்போம்.
Youtube ற்குள் துழைந்துவிட்டால்
நமது கண்ணில் நல்ல நிகழ்ச்சிகளும் படும்,
தேவையற்ற, பயனற்ற மோசமான நிகழ்ச்சிகளும் படும்.
நமது weakness நமக்கே தெரியும்.
ஆன்மீக வாழ்விற்கு ஊறு விளைவிக்கக்கூடிய நிகழ்ச்சிகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
நம்மால் விடை கூறமுடியாத கேள்வி ஒன்று நம் முன் நிற்கிறது.
"அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; "
"நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;"
என்று நம் ஆண்டவர் இறுதிநாளில் நம்மிடம் சொல்ல வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
இன்றைய உலகம் நம்மிடம் சொல்கிறது:
"அன்னியர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள், கொரோனா தொற்றிக் கொள்ள நேரிடும்.
கொரோனா நோயாளிகள் பக்கம் போகாதீர்கள், கொரோனா தொற்றிக் கொள்ள நேரிடும்."
இரண்டு அறிவுரைகளும் கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிரானவை.
இவை நமது விசுவாச வாழ்விற்கு விடப்பட்டிருக்கும் சவால்.
"நாம் என்ன செய்ய வேண்டும்? " என்ற கேள்விக்கான விடையை அன்னைத் தெரெசாவிடம் தான் கேட்க வேண்டும்.
தொழுநோயாளிகளைத் தூக்கிச் சுமந்த அவளுக்கு மட்டும்தான் நமது கேள்விக்கான விடையைக் கூற தைரியம் இருக்கும்.
சொல்லப்போனால் நமக்கும் அந்த விடை தெரியும்.
விசுவாசம் அடிப்படையிலான அந்த விடையை சொல்ல நம்மில் யாருக்கும் தைரியம் இல்லை.
"ஆண்டவரே எங்கள் விசுவாசத்தை ஆழமாக்கும்"
சுகம் இல்லாதிருக்கும் நண்பர்களுக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம்.
அவர்களது உடல் நலத்திற்காகவும், ஆன்மீக நலத்திற்காகவும் வேண்டிக்கொள்வோம்.
ஆன்மாவின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும்படியாக வேண்டிக் கொள்வோம்.
இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொள்வோம்.
பிறர் பணி செய்வதில்தான் இறைப்பணி அடங்கியுள்ளது என்பதை எல்லோரும் உணரும்படியாக இறைவனிடம் வேண்டுவோம்.
உடல் நலத்தை விட ஆன்மீக நலமே முக்கியமானது என்பதை எல்லோரும் உணரும்படி வேண்டிக்கொள்வோம்..
கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற தியாக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர்கள், செவிலியர் மற்றும் மற்றவர்களுக்காவும் இறைவனிடம் வேண்டுவோம்.
பாவ நோயிலிருந்து நம் ஆன்மாவைக் காப்பாற்ற அதைவிட பெரிய தியாகங்களைச் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.
நாம் எப்போதும் இறையுறவு நிலையில் இருக்க வேண்டும்.
அதாவது சாவான பாவமின்றி பரிசுத்த நிலையில் இருக்க வேண்டும்.
மக்களின் உடல் நலத்தைப் பேணுவதில் மற்றவர்கள் எவ்வளவு ஆர்வம் காட்டு கின்றார்களோ
அதைவிட பன்மடங்கு ஆர்வத்தை நாம் நமது ஆன்மாவைப் பேணுவதில் காட்ட வேண்டும்.
இயேசு எப்பொழுதும் நம்முடனேயே இருப்பதால் பயத்தை விட்டொழிப்போம்.
நாம் இயேசுவின் மடியில் இருக்கின்றோம், இன்று மட்டுமல்ல என்றென்றும் இருப்போம்.
இவ்வுலகில் மட்டுமல்ல,
மறு உலகிலும் நமது வாழ்வு அவரே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment