அயலான் மீது இரங்குவோம்,
இறைவனின் இரக்கத்தை அனுபவிப்போம்.
************************************
டாக்டரைத் தேடி யார் போவார்கள்?
நோயாளிகள்.
Bank loan வாங்க யார் போவார்கள்?
பணம் இல்லாதவர்கள்.
பிச்சை எடுக்க யார் போவார்கள்?
சாப்பாட்டுக்கு வழி இல்லாதவர்கள்.
இயேசுவைத் தேடி யார் போவார்கள்?
பாவிகள்.
டாக்டர் யாரைத் தேடிப்போவார்?
டாக்டர் யாரையும் தேடிப் போக மாட்டார். நோயாளிகள் வந்தால் மருத்துவம் பார்ப்பார்.
Bank யாரை தேடி போகும்,
Bank யாரையும் தேடிப் போகாது. தேடி வந்தவர்களுக்கு loan கொடுக்கும்.
இயேசு யாரைத் தேடிப் போவார்?
பாவிகளைத் தேடிப்போவார்.
இயேசுவும் பாவிகளும்தான் ஒருவரை ஒருவர் தேடிப்போவார்கள்.
நாம் இயேசுவைத் தேடி போகின்றோமா?
டாக்டர் யாரையும் தேடி போகாவிட்டாலும் நோயாளிகள் அவரைத் தேடிப் போகின்றார்களே!
நாம் இயேசுவை தேடி எங்கும் நடந்தோ, அல்லது வாகனங்களில் பயணம் செய்தோ போக வேண்டாம்.
ஏனெனில் பாவிகளாகிய நம்மிடம் இயேசு ஏற்கனவே வந்து விட்டார்.
நமது மனதைத்தான் இயேசுவிடம் போக விட வேண்டும்.
இயேசு நம் உள்ளேயே நமது பார்வைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நாம் அவரைப் பார்க்காமல் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இயேசுவிடம் திரும்பி
"ஆண்டவரே நான் பாவி என் மேல் இரக்கமாயிரும்."
என்று ஒருமுறை அல்ல, எப்போதெல்லாம் சொல்ல முடியுமோ அப்போதெல்லாம் சொல்ல வேண்டும்.
இயேசு எப்போதும் நம்மேல் இரக்க மாகத்தான் இருக்கிறார்.
இரக்கத்தின் காரணமாகத்தான் நமக்காக அவர் மனிதனாகி பாடுபட்டு மரித்தார்.
ஆனாலும் நாம் இந்த ஜெபத்தை சொல்லும்போது
நாம் ஆண்டவர் நம் மீது கொண்டுள்ள இரக்கத்தை
நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்று அவருக்கு தெரிவிக்கிறோம்.
உலகில் அநேகர் இயேசுவைப் பற்றியோ அல்லது அவரது இரக்கத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.
காதலன், காதலி ஒருவரை ஒருவர் நேசிப்பது இருவருக்கும் தெரியும்.
ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் "I love you." என்று சொல்வதில்லை?
அப்படிப் சொல்லும்போதெல்லாம் இருவரும் மகிழ்வது இல்லை?
இயேசு அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிக்கிறார்,
அனைவர் மேலும் இரக்கமாக இருக்கிறார்.
ஆனால் எத்தனை பேர் அதை உணர்கிறார்கள்?
நாம் அதை உணர்ந்து நமது உணர்வை
நமது பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கும் நம் ஆண்டவரிடம்
எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
முற்காலங்களில் விருந்துக்கு வருவோருக்கு காபி அல்லது டீயை தம்ளரில் கொடுக்க மாட்டார்கள்.
ஒரு பெரிய பாத்திரத்தில் காபி போட்டு வைத்து
அதில் நிறைய முறுக்குகளை உடைத்து போட்டு
அருகில் தம்ளர்களை வைத்துவிடுவார்கள்.
விருந்தினர் பாத்திரத்தைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு ஆளுக்கொரு தம்ளரை எடுத்து
வேண்டியளவு காபியை மொண்டு குடித்துக் கொண்டே
மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.
எத்தனை தம்ளர் காபி வேண்டுமானாலும் குடிக்கலாம்.
ஆண்டவர் அளவற்ற இரக்கச் சமுத்திரத்தையே நம் அருகில் வைத்திருக்கிறார்.
எவ்வளவு இரக்கத்தை வேண்டுமென்றாலும் நாம் அனுபவிக்கலாம்.
ஒவ்வொரு முறை
.
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
என்று சொல்லும் போதும் நாம் ஆண்டவரின் இரக்கத்தை அள்ளிப் பருகுகிறோம்.
ஒரு சிறு இரு வார்த்தை ஜெபம்.
அளவற்ற இரக்கம் தயாராக அருகில்.
செபமாலை சொல்வது போல ஜெபத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
இரக்கக் கடலில் குளிக்கலாம்.
தொடர்ந்து சொல்லப்படும் இந்த ஜெபம் நாம் பாவத்தில் விழாதபடி காப்பாற்றும்.
மனித பலகீனத்தினால் பாவம் செய்ய நேர்ந்தால், எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும், நமக்காகவே காத்துக் கொண்டிருக்கும் இறை இரக்கத்தைப் பயன்படுத்தி,
பாவத்திற்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு நண்பர் கேட்கிறார்,
"நாம் பாவத்தோடு இருக்கும்போது நம்மைத் தேடி வரும் கடவுள்
பாவத்திற்கு மன்னிப்புப் பெற்று பரிசுத்தம் அடைந்து விட்டால் நம்மை விட்டு போய் விடுவாரா?
போக மாட்டார்.
அவர் நம்மைத் தேடி வருவதே நமது பாவத்தை நீக்கி நம்மை பரிசுத்தர் ஆக்குவதற்காகத்தான்.
பாவம் நீங்கியபின் நாம் திரும்பவும் பாவத்தில் விழாதபடி நம்மை கண்காணித்துக்கொண்டே இருப்பார்.
மிதி வண்டியில் செல்பவர்கள் தொடர்ந்து பெடலை மதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மிதிப்பதை நிறுத்தினால் வண்டியும் வேகம் குறைந்து நின்றுவிடும்.
அதே போன்றுதான் தொடர்ந்து இறை இரக்க ஜெபத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தால்தான்
நாம் பரிசுத்தத்தனத்தில் நீடிக்க முடியும்.
இறைவனின் இரக்கத்தைப் பெற ஜெபம் சொன்னால் மட்டும் போதுமா?
இரண்டு கால்களால் நடப்பதற்கும் ஒரு காலை பயன்படுத்தி நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நாம் மீட்புப் பெற வேண்டுமானால் இறையன்பும், பிறர் அன்பும் வேண்டும்.
நாம் இறைவனின் மன்னிப்பைப் பெற வேண்டுமானால் நாம் நமக்கு எதிராக குற்றம் செய்யும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்.
அதே போல் தான் இறைவனின் இரக்கத்தைப் பெற ஆசைப்படும் நாம் நமது அயலான் மீதும் இரக்கத்தைக் காட்ட வேண்டும்.
நாம் தவறுகள் செய்யும்போது யாராவது சுட்டிக் காண்பித்தால் அதற்கு சாக்கு போக்குகள் சொல்ல நாம் தவறுவது இல்லை.
அதேசமயம் நம்மைப் போலவே மற்றவர்கள் தவறு செய்யும் போது நமக்கு எரிச்சல் வருகிறது.
ஏன்?
நம்மேல் நமக்கு இரக்கம் உண்டு, ஏனெனில் நம்மை நாமே அன்பு செய்கிறோம்,
மற்றவர்கள் தவறு செய்யும் போது நமக்கு எரிச்சல் வருவற்குக் காரணம்
நாம் நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களை நேசிப்பதும் இல்லை, அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் இல்லை.
பிறனை நேசிப்பவனால்தான் கடவுளை நேசிக்க முடியும்,
பிறன்மீது இரக்கம் காட்டுபவர்களுக்குதான் கடவுளை நோக்கி, '
"ஆண்டவரே இரக்கமாயிரும்"
என்று ஜெபிக்க உரிமை இருக்கிறது.
தவறு செய்வது மனித இயல்பு என்ற கொள்கை நமக்கு போலவே மற்றவர்களுக்கும் பொருந்தும்.
ஆகவே தவறுகள் செய்வோரை எரிச்சலோடு நோக்காமல் இரக்கத்தோடு நோக்குவோம்.
நாம் நமக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது போலவே
மற்றவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்.
தவறு செய்வதிலிருந்து நாம் திருந்துவது போல
மற்றவர்கள் தவறு செய்யும் போது அவர்களைத் திருத்த இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.
மற்றவர்கள் மீது தீர்ப்பு சொல்ல நமக்கு எந்த அதிகாரமும் இல்லை,
ஆனால் மற்றவர்கள் மீது இரக்கப்பட நமக்கு கடமை இருக்கிறது.
கடமையை நிறைவேற்றினால் தான் உரிமையைக் கோற முடியும்.
நமது அயலான் மீது நமக்குள்ள கடமைகளை நிறைவேற்றிய
பின்தான்
இறைவனிடம் நமக்கு வேண்டியதை உரிமையோடு கேட்க முடியும்.
நமக்கு எதிராக குற்றம் செய்த அயலானை மன்னித்து விட்டுதான்
நமது பாவங்களை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.
அயலான் மீது இரங்குவோம்,
இறைவனின் இரக்கத்தை அனுபவிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment