Thursday, September 3, 2020

முழு அர்ப்பணிப்பு என்றால் என்ன?What is total Surrender?

முழு அர்ப்பணிப்பு என்றால் என்ன?
What is total Surrender?
***************************************
கணவன்: அடியே, நான் உன்னை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்.  நான் முழுவதும் உனக்குத்தான் சொந்தம்,

மனைவி: உண்மையாக?

கணவன்: உண்மையாக.

மனைவி: சத்தியமாக?

கணவன்: சத்தியமாக,

மனைவி: நாளை முதல் உங்கள் வேலையிலிருந்து resign பண்ணி விட்டு எனக்கு சமையலறையில் உதவியாக இருக்க வேண்டும்.

கணவன்: அதெப்படிடீ முடியும்?

மனைவி : "நான் முழுவதும் உனக்குத்தான் சொந்தம்," ன்னு சொன்னீங்க. இப்போ உங்க உதவிய கேட்டா "அதெப்படிடீ முடியும்?" என்கிறிங்க?
             *             *             *

நாம் உணர்ச்சிவசப்பட்டு என்ன வேண்டுமானாலும் பேசுவோம்,

எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்,

யாரிடம் வேண்டுமானாலும் பேசுவோம்,

ஆனால் நாம் பேசியதன் பொருள் நமக்கே தெரியாது.

"இந்த உதவியை மட்டும் நீங்கள் எனக்கு செய்துவிட்டால்  என்னுடைய வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கடமை பட்டிருப்பேன்."

சிலர் யாரிடம் உதவி கேட்டாலும் இதே வாக்குறுதியை மறக்காமல் கொடுத்துவிடுவார்கள்.

உதவி கிடைத்த ஓரிரு நாட்களில் வாக்குறுதி கொடுத்ததையே மறந்து விடுவார்கள்.

நாம்  ஞானஸ்நானம் பெற்றபோது

சாத்தானை விட்டு விடுவதாகவும்,

இறைவனை முழுமையாக  ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்தோம்.

நாம் இறைவனுக்கு மட்டும்தான் முழுவதும் சொந்தம் என்று  வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல ஒவ்வொரு நாளும் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும்போது,

"உமது அரசு வருக"

என்று சொல்கிறோம்.

அதாவது இறைவனை நமது அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.

இதன் மூலம் நாம் நம்மை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து இருக்கிறோம்.

ஆனால் நமது அர்ப்பண வாழ்வு முழு அர்ப்பண வாழ்வாக இருக்கிறதா?

அல்லது எப்போதெல்லாம் Mood வருகிறதோ அப்போது மட்டும் அர்ப்பண வாழ்வாக இருக்கிறதா?

"நீங்கள் நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?"

என்று இயேசு கேட்டபோது,

இராயப்பர்,

"நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.

தான் பாடுபட்டு மரணமடைந்து மூன்றாவது நாள் உயிர்க்க வேண்டும் என்று இயேசு சொன்ன போது

இராயப்பர் அதை வேண்டாம் என்கிறார்.

உயிருள்ள கடவுளின் மகன்" என்றவர், அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

ஆண்டவர்மீது கொண்டுள்ள அன்பு காரணமாக "வேண்டாம்" என்று சொல்லிருக்கலாம்.

ஆனாலும் முதலில் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொண்டவர்

சிறிது நேரம் கழித்து

மெசியா செய்யவேண்டிய பணியை செய்ய வேண்டாம் என்கிறார்.

அவர் சொன்னது ஆண்டவருக்கே  பிடிக்கவில்லை.

நாம் பைபிள் வாசிக்கும்போது ஆண்டவர்,

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று சொன்னதை ஏற்றுக் கொள்கிறோம், விசுவசிக்கின்றோம்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது,

"ஆண்டவர் நம்மோடு இருப்பதால் தான் நாம் ஆசைப்படுவது எல்லாம்  கிடைக்கிறது"
என்று  எண்ணி ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம்.

ஆனால் ஏதாவது துன்பம் வரும்போது,

"இயேசு நம்முடன் தான் இருக்கின்றார். நாம் ஏன் அஞ்ச வேண்டும்?"

என்று எண்ணி  அஞ்சாமல்
இருக்கிறோமா?

'நம்மோடு, நமக்காக இருக்கும் இயேசு எதை செய்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்'

என்று  விசுவசித்து துன்பத்தை ஏற்றுக் கொள்கிறோமா?

ஆண்டவரைத் தேடுகிறோம், நமது துன்பத்தை நம்மிடமிருந்து  அகற்ற வேண்டுவதற்காக.

நமது mood மாறியவுடன் நமது அர்ப்பணம் அசைய ஆரம்பிக்கிறது.

நமது அர்ப்பணம் முழுமையாக இருந்தால் என்ன நேர்ந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

முழுமையாக இல்லாததால்தான்

நமக்கு வேண்டியது கிடைத்தால்

நாம் அர்ப்பணிக்கிறோம்.

வேண்டாதது நடந்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்து இருக்கிறோம்.

நமக்கு பிடித்தமான வேலை,

அதைப் பெற்றுத் தரும்படி இறைவனிடம் வேண்டுகிறோம்.

ஆனால் நாம் எவ்வளவோ முயன்றும் அந்தவேலை கிடைக்கவில்லை.

இப்போது நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்?

"அந்த வேலை எனக்கு ஏற்றது அல்ல என்று என் இறைவன் நினைக்கிறார்.

ஆகவே நான் அந்த வேலை கிடைக்காமைக்காக   இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

ஏனெனில் அது அவரது சித்தம்,"

என்று எண்ணி மகிழ்ந்து, நன்றி செலுத்தினால் நமது அர்ப்பணம் முழுமையான அர்ப்பணம்.

ஆனால், வேலை கிடைக்காமை நமக்கு ஏமாற்றமாக இருந்தால் நமது அர்ப்பணம் Selective  அர்ப்பணம்!

ஆண்டவரிடமிருந்து எது வந்தாலும்

அது இறைவனின் அன்பிலிருந்து வருகிறது என்று

அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதுதான் முழுமையான அர்ப்பணம்.

கபிரியேல் தூதர் மரியாளுக்கு தூது உரைத்தபோது

இறைவனின் சித்தத்தை அறிந்த மரியாள்

"இதோ ஆண்டவருடைய அடிமை"

என்று தன்னையே இறைப் பணிக்கு முழுமையாக  அர்ப்பணித்தார்.

அவளது வாழ்நாளில்  என்ன நேர்ந்தாலும் அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டாள்.

அவளது வயிற்றில் கருத்தரித்து வளர்வது சர்வ வல்லமையுள்ள இறைமகன் என்பது  அவளுக்கு நன்கு தெரியும்.

ஆனாலும் தனது பேறு காலத்திற்கு ஒரு மாட்டுத்தொழுவைதான் இறைவன் ஏற்பாடு செய்திருந்தபோது அப்படியே ஏற்றுக்கொண்டார்.

"உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்"

எங்க உண்மையை சிமியோன் வழியாக இறைவன் அறிவித்தபோது அப்படியே ஏற்றுக்கொண்டாள்.

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும்."

எந்ற கட்டளையை இறைவன் கபிரியேல் தூதர் வழியாக சூசையப்பருக்குக் கொடுத்தபோது,

மரியாள் தன் மகனிடம்,

"இறைமகனே நீர் சர்வ வல்லவர் ஆச்சே,

உம்மைக் கொல்லத் தேடும் ஏரோதுவை அழித்துவிட உமக்கு வல்லமை இருக்கிறது,

அதைப் பயன்படுத்தாமல் எங்களை ஏன்  எகிப்திற்கு ஓடச் சொல்கிறீர்"

என்று கேட்க நினைக்கக் கூட இல்லை,

இறைவன் கட்டளைக்கு உடனே  அடிபணிந்தார்.

"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும்."
என்று இறைவன் கட்டளை வந்த போது எகிப்திலிருந்து திரும்பினார்.

திரும்பிக்கொண்டிருந்தபோது  கனவில் 'கலிலேயாவுக்குச் செல்ல உத்தரவு வந்தபோது அப்படியே செய்தார்.

கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரில் குடியிருந்தார்.

நாமும் மாதாவை போல் நம்மை இறைவனின் அடிமையாக அர்ப்பணித்து விட வேண்டும்.

இயேசு கடவுள்.

கடவுள் மூன்று ஆட்களாக இருந்தாலும் மூவருக்கும் ஒரே தேவ சுபாவம், ஒரே வல்லமை, ஒரே சித்தம்.

தந்தையின் சித்தம் தான் மகனின் சித்தம், பரிசுத்த ஆவியின் சித்தம்.

ஆயினும் இயேசு நமக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காக

"ஏனெனில், என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."

"எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" 

என்று சொன்னார்.

இயேசு தனது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நமக்கு முன்மாதிரிகள் காண்பித்தார்.

நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும்,

எதை பேச வேண்டும்,

என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எல்லாம்

அவரே முன்மாதிரியாக செய்து காண்பித்தார்.


தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருப்பம் தான்.

ஆனாலும்,

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று,

என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே"

என்று அவர் சொல்வது நாமும் அப்படியே நினைக்க வேண்டும் என்று நமக்கு பாடம் கற்பிப்பதற்கே.

நாமும் இறைவனின் சித்தத்தை நமது சித்தமாக ஏற்று செயல்பட வேண்டும்.

'
'தந்தையின் சித்தமும் மகனின் சித்தமும் ஒன்றே'

என்பதற்கும்

நமது சித்தம் இறைவனின் சித்தமாக இருக்க வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இறைனைப் பொறுத்தமட்டில் மூன்று ஆட்களுக்கும் ஒரே சித்தம்.

மூவரும் ஒரே கடவுள் ஒரே சித்தம்.
One God, one will.

ஆனால் நம்மைப் பொறுத்த மட்டில் இறைவனின் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொள்கிறோம்.

கடவுள் விரும்புவதை நாம் விரும்ப வேண்டும்.

கடவுள் சிந்திப்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

கடவுள் செய்வதை  நாம் செய்ய வேண்டும்.

கடவுள் என்ன சிந்திக்கிறார்,
என்ன சொல்கிறார்,
என்ன செய்கிறார்

என்பது நமக்கு எப்படி தெரியும்?

அதை தெரிந்து கொள்வதற்குத்தான் பைபிள் வாசிக்கிறோம்.

பைபிளை வாசித்தால் நாம் அறிபவை:

கடவுள் எல்லோரையும் நேசிக்கிறார்,

கடவுள் எல்லோருக்கும் உதவி செய்கிறார்,

கடவுள் குற்றம் செய்பவரை மன்னிக்கிறார்.

நாம் அவருக்கு விரோதமாக தீமைகள் செய்தாலும் அவர் நமக்கு நன்மையே செய்கிறார்.

கடவுள் நமக்காக துன்மங்களை ஏற்றுக்கொண்டார்.

கடவுள் நமக்காக பாடுபட்டார்,

கடவுள் நமக்காக நம் உயிரைத் தியாகம் செய்தார்.

நாமும் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.,

நாமும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும்.

நாமும் நமக்கு எதிராகக் குற்றம் செய்பவரை மன்னிக்கவேண்டும்.

நாமும் நமக்கு விரோதமாக தீமைகள் செய்பவருக்கு  நன்மையே செய்ய வேண்டும்.

நாமும் பிறருக்காக துன்மங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாமும் பிறருக்காக நம் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

பைபிள் மூலமாக மட்டுமல்ல

நமது உள்ளத்தில் தோன்றும் உள் உணர்வுகள் மூலமாகவும்

இறைவன் தனது விருப்பத்தை நமக்குத் தெரிவிக்கிறார்.

அந்த விருப்பத்தை அப்படியே ஏற்று அவருக்காக செயல்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்ல, நமக்கு என்ன நேர்ந்தாலும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

நமக்கு வேறு விதமான ஆசைகள் இருந்தாலும்

அவை நிறைவேறாவிட்டாலும்,

அவற்றை இறைவனுக்காக தியாகம் செய்து

இறைவன் நமக்குச் செய்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு

அவருக்கு நன்றி கூற வேண்டும்.

உலக செல்வங்களுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள்

அவற்றை ஈட்ட உலகம் என்ன நிபந்தனை போடுகிறதோ

அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

பணத்திற்காக இறைவனையே தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள்.

அழியும் செல்வத்திற்காக அழியாத பேரின்பத்தை தியாகம் செய்ய உலகத்தின் மக்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்கும்போது,

அழியாத விண்ணகச் செல்வத்திற்காக நாம் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு
இருக்கவேண்டும்!

இறைவனுக்காக நமது உயிர் உட்பட அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

இறைவனுக்கான நமது அர்ப்பணிப்பு முழுமையானதாக இருக்க வேண்டும்.

அரைகுறையாக இருந்தால் மீதி அரைகுறையை உலகத்திற்காக வைத்திருக்கிறோம் என பொருள்படும்.

நாம் இரு தோணிகளில்  கால் வைத்து பயணிக்க முடியாது.

முழுமையாக இராயப்பர் படகில் பயணிப்போம்.

வானகத்தின் திறவுகோல்கள் அவரிடம்தான் உள்ளன.
(மத்.16:19)

இயேசுவுக்காக மட்டும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment