Friday, September 25, 2020

"அவரைக் காண வாய்ப்புத் தேடினான்."(லூக. 9:9)

.

"அவரைக் காண வாய்ப்புத் தேடினான்."
(லூக. 9:9)
---------------------------------------------------------
1955. S.S.L.C. தேர்வு எழுதிவிட்டு, ஊருக்குப் போவதற்காக மதுரை சந்திப்பில், திருவனந்தபுரம் விரைவு வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பெரியவர் என்னிடம் வந்து,

"தம்பி, வண்டி கள்ளிக்குடி ஸ்டேசன்ல நிற்குமா?" என்றார்.

" தாத்தா, இது விரைவு வண்டி. சின்ன ஸ்டேசன்ல எல்லாம் நிற்காது " என்றேன்.

பெரியவர் Cement bench ல உட்கார்ந்து கொண்டார்.

10 நிமிடம் கழித்து train வந்தது.

நான் luggage ஐ எடுத்துக்கொண்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

என்னிடம் விசாரித்த பெரியவரும் வண்டிக்குள் ஏறி என் அருகே அமர்ந்து கொண்டார்.

" தாத்தா, வண்டி கள்ளிக்குடியில் நிற்காது என்று சொன்னேனே."

" ஆமா, சொன்னாய். நான் இறங்க வேண்டியது ராஜபாளையத்தில்,"

" பிறகு ஏன் கள்ளிகுடி பற்றி விசாரித்தீர்கள்?"


" சென்ற முறை நான் மதுரைக்கு வந்து கொண்டிருந்தபோது வண்டி அங்கு நின்றது.

பிளாட்பாரத்தில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒரு ரூபாய்க்கு முறுக்கு வாங்கினேன். காசு கொடுக்கு முன் வண்டி கிழம்பிவிட்டது.

" காசு, காசு" என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான்.

நான் பார்க்காதது மாதிரி உட்கார்ந்து கொண்டேன்.

இப்போ வண்டி அங்கே நின்றால், கட்டாயம் என்னைப் பார்ப்பான், காசு கேட்பான்.

ஒரு முன் எச்சரிக்கைக்காக விசாரித்தேன்."

வழக்கமாக ஊருக்குப் போவதற்கு வழி கேட்பார்கள்.

போகாமல் இருப்பதற்கு வழி கேட்பவர்களும் இருக்கிறார்கள். 

ஏரோது மன்னன் இயேசுவைக் காண வாய்ப்புத் தேடினான்.

எதற்கு?

நோயிலிருந்து குணம் பெறவா?
இல்லை.

நற்செய்தியை அறியும் ஆவலாலா?
இல்லை.

தன் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறவா? 
இல்லை.

வேறு எதற்கு?


   ஏரோது மனம் கலங்கினான். ஏனெனில், சிலர், "அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார்" என்றனர்.
(லூக்.9:7)


தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே

அவரைக்  காண வாய்ப்புத் தேடினான்.


அவன் தேடிய வாய்ப்பு 
வெகு நாட்களுக்குப் பிறகு அவன் தேடாமலே கிடைத்தது.

யூதர்கள் இயேசுவைக் கொல்வதற்காக கைது செய்து பிலாத்துவிடம் கொண்டுவந்த போது,

இயேசு ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்து

 அவரை அவனிடம் அனுப்பினான்.

இப்போது அவன் மனதில் இயேசு அருளப்பரா என்ற சந்தேகம் இல்லை.

 இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான்.

 ஏனெனில் அவர் செய்த புதுமைகள் பற்றிக்  கேள்விப்பட்டிருந்தான். 

ஆகவே, அவர் தன்னிடமும் புதுமை எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான்.

இது வெறும் விநோதப் பிரியம்.

ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லை.

தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அவர்மீது மும்முரமாகக் குற்றஞ்சாட்டியவண்ணம் நின்றனர்.

ஏரோது தன் படையோடு சேர்ந்து அவரை அவமானப்படுத்தி, 

எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான்.

ஆக அவரைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தவன், 

வாய்ப்புக் கிடைத்தபோது, அதை அவரை அவமானப்படுத்தவே பயன்படுத்திக் கொண்டான். 

தீமை செய்தவர்களுக்கு நன்மையே செய்யும் இயேசு 

 அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதுவையும் பிலாத்தையும்  நண்பர்களாக்கினார்.

வெறுமனே வாசித்துவிட்டுப் போவதற்காக  இந்நிகழ்ச்சிகள் பைபிளில்  பதிவு செய்யப்படவில்லை.

நாம்  வாசித்து  தியானித்து பயன் பெறவே இவை பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாமும் இயேசுவைக் தேடுகிறோம். எதற்காக?

நாம் எதற்காக குற்றாலத்திற்கு போகிறோம்?

அருவியில் குளிப்பதற்காக.

 போகும்போது பேருந்தில் பயணிக்கிறோம்.

ஆனால் பேருந்தில் பயணிப்பதற்காக குற்றாலத்திற்கு போகவில்லை.

குளித்தபின் ஹோட்டலில் சாப்பிடுகிறோம்.

 ஆனால் சாப்பிடுவதற்காக குற்றாலத்திற்குப் போகவில்லை.

நமது பிள்ளைகளை அங்கு உள்ள பூங்காவில் விளையாட விடுகிறோம்.

 ஆனால் விளையாட விடுவதற்காக குற்றாலத்திற்குப் போகவில்லை.

ஒருவன் குற்றாலத்திற்குப் போய் அருவியில் குளிக்காமல்,

 ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு,

 பூங்காவில் விளையாடிவிட்டு

 வீட்டிற்கு வந்தால் அவளைப் பற்றி என்ன நினைப்போம்?


குளிக்க வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு 

பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.


இயேசு நம்மை படைத்து உலகத்தில் வாழ விட்டிருப்பது

 பரிசுத்தமான ஆன்மீக வாழ்வு வாழ்ந்து 

வாழ்க்கையின் இறுதியில் விண்ணகத்திற்குச் செல்வதற்காகத்தான்.

இவ்வுலக சம்பந்தமான காரியங்கள்  நமது ஆன்மீக வாழ்விற்கு உதவுவதற்காகத்தான்.

நாம் இயேசுவிடம் பேசும்போது

நாம் அவரிடம் கேட்க வேண்டியது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டிய அருள் வரங்களைத்தான்.

 நமது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்காக எதுவும் கேட்காமல் 

இவ்வுலக காரியங்களுக்கு  வேண்டியது மட்டுமே கேட்டால் 
இயேசு நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

இயேசுவின் சிலுவைப் பலி நமது பாவ மன்னிப்புக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 அப்பலியை ஒப்புக்கொடுக்கவே இறைமகன் இயேசு மனிதன் ஆனார்.

ஆனால் நாம் திருப்பலியை எதற்காக ஒப்புக்கொடுக்கிறோம்?

குருவானவர் திருப்பலியை பாவ மன்னிப்பிற்காகத்தான் ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் நாம் திருப்பலிக்கான கருத்து எழுதிக்கொடுக்கும்போது

 எத்தனை பேர் "எங்களது பாவமன்னிப்பிற்காககவும், பாவப் பரிகாரமாகவும்"  என்று எழுதி கொடுக்கிறோம்?

உடல் நலம், பிள்ளைகளுடைய படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற உலகைச் சார்ந்த காரியங்கள்தான் நமது பூசைக் கருத்துக்களில் இடம் பெறுகின்றன.

அதில் தப்பே இல்லை.

எப்படி குற்றாலத்திற்கு குளிக்கப் போகின்றோமோ, 

அதேபோல

நாம் திருப்பலியில் பங்கேற்பது நம்முடையவும், உலகத்துடையவும் பாவ மன்னிற்காகவும், பாவப் பரிகாரத்திற்காவும்தான்.

மற்றக் கருத்துக்கள் இரண்டாவது பட்சம்தான்.

நாம் இறைவனிடம் வேண்டும் போதும் முதலில் பாவமன்னிப் பிற்காக வேண்டி விட்டு, விண்ணப்பங்களை அடுத்து வைக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை மூலம் அவர் நம்மிடம் வரும்போது  நாம் முதலில் அவரிடம் வேண்டவேண்டியது நமது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கத்தான்.

பாவ மன்னிப்பு பற்றி எதுவும் வேண்டாமல் திருப்பலி கண்டு வந்தால் 

அது தண்ணீரே ஊற்றாமல் குளித்துவிட்டு வந்தது மாதிரி.


வேளாங்கண்ணி, உவரி போன்ற திருத்தலங்களுக்கு திருயாத்திரை செல்கிறோம். 

எதற்காக? 

நேர்ச்சைகளை நிறைவேற்றுவதற்காக.

எதற்காக நேர்ச்சை?

திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, நோயிலிருந்து குணம் போன்ற எத்தனையோ காரியங்களுக்காக. 

தப்பே இல்லை.

புனிதர்களிடம் உதவி கேட்பதற்கு நமக்கு முழு உரிமை இருக்கின்றது.

அவர்களும் உறுதியாக நமக்கு உதவி செய்வார்கள்.

செய்த உதவிக்கு நன்றியாக எத்தனை முறை வேண்டுமானாலும் திருயாத்திரை செல்லலாம்.

ஆனால் இவற்றுக்காக வேண்டுமுன் முதலில் செய்ய வேண்டியது 

நல்ல பாவ சங்கீர்த்தனம், 

 பக்தியுடன்  திருப்பலியிலும், திரு விருந்திலும் கலந்து கொள்ளுதல்.

நம்மவர்களிடையே பாவசங்கீர்த்தனம் செய்யும் பழக்கம் கணிசமாக குறைந்துவிட்டது 

என்று எல்லோருமே ஒப்புக் கொள்கிறார்கள்.

 இது பாவங்கள் குறைந்து விட்டன என்பதை காண்பிக்கிறதா?

 அல்லது 

நமக்கு பாவத்தைப் பற்றியோ, மன்னிப்பைப் பற்றியோ, மீட்பைப் பற்றியோ அக்கரை இல்லை என்பதைக் காண்பிக்கிறதா?

  நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

அநேகர் எந்த தயாரிப்பும் இல்லாமலேயே திருவிருந்தில் கலந்து கொள்கிறார்கள்.

சாதாரண உணவு உட்கொள்ளும்போது கைகளைச் சுத்தம் செய்து விட்டு தான் உண்கிறோம்.

*திருவிருந்தை அருந்து முன் நமது ஆன்மாவை முதலில் சுத்தம் செய்ய வேண்டாமா?*

சுத்தமில்லாத ஆன்மாவோடு நற்கருணை உட்கொள்வது இயேசுவை அவமானப்படுத்துவதற்குச் சமம், ஏரோதுவைப் போலவே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment