http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_22.html
நடப்பதெல்லாம் நன்மைக்கே.
---------------------------------------------------------
ஒரு ஊருக்குச் செல்லவேண்டும். நமக்கு வழி தெரியாது.
அவ்வூருக்கு வழி தெரிந்த, நம்பகரமான, ஒருவரின் வாகனத்தை வாடகைக்கு அமர்த்துகிறோம்.
நம்பகரமான ஆளாக இருப்பதால் அவர் கையில் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, அமைதியாக இருக்கிறோம்.
அவர் வாகனத்தை எப்படிச் செலுத்தினாலும், சந்தேகப்படாமல் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
சந்தேகப்பட்டால் நம்மை அழைத்துச் செல்பவரைப் புண்படுத்துவதுபோல் ஆகி விடும்.
இதே அணுகு முறையை நமது ஆன்மீகப் பயணத்தில் கடைப்பிடிக்கிறோமா?
விண்ணகத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு வழி தெரியாது.
நம்மை கை பிடித்து அழைத்துச் செல்பவர் வாடைக்கு அமர்த்தப்பட்டவர் அல்ல.
விண்ணகத்தில் வாழ்பவரும், நம்மைப் படைத்தவருமாகிய இறை மகன் இயேசு.
அவர் நமக்கு வழிகாண்பிப்பவர் அல்ல, வழியே அவர்தான்.
நமக்கு உண்மையைச் சொல்ல வந்தவரல்ல, உண்மையே அவர்தான். உண்மையாகிய தன்னை நமக்குத் தரவே வந்தார்.
நமக்கு உயிர் தர வந்தவரல்ல, நமது உயிரே அவர் தான்.
நமது வழியும், ஒளியும், உண்மையும், உயிருமான இறைமகன் இயேசுவின் மீது
நமக்கு அசைக்கமுடியாத விசுவாசம் வேண்டும்.
விசுவாசத்தை சுருக்கமாக விபரிக்க வேண்டுமென்றால்
இயேசுவை 'முழுமையாக' ஏற்றுக் கொள்ளுதல்,
நம்மை 'முழுமையாக' அவரிடம் ஒப்படைத்துவிடல்.
இதைத்தான் நமது அன்புத்தாய் மரியாளும் செய்தாள்.
மிகமுக்கியம்: 'முழுமையாக.'
முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போது நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அவர் மட்டும்தான் இருப்பார்.
அவர் மட்டும்தான் இருப்பார் என்றால் வேறு எதைப் பற்றியும் சித்திக்க மாட்டோம் என்று அர்த்தம் அல்ல.
நமது உணவைப் பற்றி சிந்தித்தாலும்,
உடையைப் பற்றி சிந்தித்தாலும்,
வேலையைப் பற்றி சிந்தித்தாலும்,
எதைப் பற்றி சிந்தித்தாலும்
அங்கு இயேசு இருப்பார்.
நரம் சிந்திப்பது இயேசுவுக்குப் பிடிக்குமா என்ற எண்ணம் அதோடு இருக்கும்.
உண்ணும் போது இயேசுவின் நினைவு இருந்தால்,
போசனப் பிரியர் ஆக மாட்டோம்.
உடுத்தும்போது அவர் நினைவு இருந்தால்,
அசிங்கமாக (indecently) உடுத்த மாட்டோம்.
சொல்லுக்கும், செயலுக்கும் இது பொருந்தும்.
யாரோடும், எதைப்பற்றிப் பேசினாலும் நமது பேச்சு இயேசுவுக்கும் பிடிக்குமா என்ற யோசனையோடு பேசுவோம்.
அப்படிப் பேசும்போது நமது பேச்சில் கோபம் இருக்காது, புறம் பேசுதல் இருக்காது,
கனிவு இருக்கும், பரிவு இருக்கும், மற்றவர்களுக்கு ஆறுதல் இருக்கும்.
நமது செயல்கள் யாவும் அன்பைப் பிரதிபலிக்கும் நற்செயல்களாகவே இருக்கும்.
நம்மில் இயேசு முழுமையாக இருந்தால்,
இயேசுவைப் போலவே சிந்திப்போம்,
இயேசுவைப் போலவே பேசுவோம்,
இயேசுவைப் போலவே செயல்படுவோம்.
நம்மை 'முழுவதும்' அவரிடம் ஒப்படைத்து விட்டால்,
நமக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டோம்,
ஏனெனில் நாம் இருப்பது சர்வ வல்லவரின் கையில்.
நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்தி,
விண்ணக வீட்டிற் கொண்டுபோய் சேர்ப்பது உறுதி.
ஒரு மாணவன் தான் கற்கும் கல்வியின் முழுப்பயனையும் அடைய வேண்டுமென்றால்
கல்வி கற்கும் காலத்தில் தன்னை முழுவதும் ஆசிரியர்கள் கையில் ஒப்படைத்துவிட வேண்டும்.
வகுப்பிற்குள் நுழையும் முன் தனது சுதந்திரத்தை வெளியே விட்டு விட்டு உள்ளே வர வேண்டும்
அப்போது வகுப்பில் ஆசிரியர் சொல்வதற்குக் கட்டுப்பட்டு நடப்பான்.
ஆசிரியர் எதிர்பார்க்கிற result ஐ அவனால் கொடுக்க முடியும்.
அதேபோல் தான் நம்மை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்தால் தான்
கடவுள் எதிர்பார்க்கிற பலனை நம்மால் கொடுக்க முடியும்.
கடவுள் நமக்குச் சுதந்தரத்தைக் கொடுத்திருப்பது அதைப் பயன்படுத்தி நித்திய பேரின்பத்தை சம்பாதித்துக் கொள்வதற்காகத்தான்
அதை இழப்பதற்காக அல்ல.
வயதான நண்பர் ஒருவரிடம் கேட்டேன்,
" கொரோனா தொற்றிக் கொண்டால் என்ன செய்வீர்கள்?"
என்று.
" இயேசுவே எனக்கு மோட்சத்திற்கு ticket book பண்ணிவிட்டார்" என்று நினைத்து மகிழ்வேன்." என்றார்.
நம்மை 'முழுவதும்' அவரிடம் ஒப்படைத்து விட்டால், நம் சார்பாக எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வார்.
இப்படி நினைத்து மகிழ்வதற்கு நமது விசுவாசம் மிக உறுதியானதாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் நமது வீட்டிற்கு வர 20 மணி நேரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம்.
விமானத்தின் வேகம் வழக்கத்தைவிட இரு மடங்கு இருந்ததால் பத்து மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டால் மகிழ்வோமா? வருந்தோமா?
நமது விண்ணகப் பயணத்திலும் இது நிலை ஏற்பட்டால் மகிழ வேண்டுமா? வருந்த வேண்டுமா?
நாம் மகிழ்வதும் வருந்துவதும் நமது விசுவாசத்தை பொறுத்தது.
நமது விசுவாசத்தின் அடிப்படையில் நம்மை முழுவதும் இறைவனுக்கு கொடுத்துவிட்டால்
அவர் நம்மை என்ன செய்தாலும் நாம் கவலைப்படத் தேவை இல்லை,
ஏனென்றால் நமது ஆரம்பமும் அவர்தான், முடிவும் அவர்தான்.
பெரும்பாலான மக்களிடம் ஒரு தவறான கருத்து நிலவுகிறது.
உலகில் நாம் செல்வச் செழிப்போடும், நோய் நொடிகள், பிரச்சினைகள் எதுவும் இல்லாமலும் வாழ்ந்தால்
இறைவனது அருள் நம்மோடு இருக்கிறது என்றும்,
வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் நிறைந்து இருந்தால்
இறைவன் நம்மைக் கவனிக்கவில்லை என்றும்
என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
உண்மையில் அவர் ஒவ்வொரு வினாடியும் நம் நினைவோடுதான் இருக்கிறார்.
நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும்
நமது விண்ணக பயணத்தில் நமக்கு உதவியாக இருக்கும்படி அவர் கவனித்துக் கொள்கிறார்.
உலக நோக்கில் நமக்கு கஷ்டமாக தெரிபவை , ஆன்மீக நோக்கில்
ஆசீர்வாதங்களாகத் தெரியும்.
உண்மையில் அவை ஆசீர்வாதங்களே.
'நடப்பதெல்லாம் நன்மைக்கே'
என்பதில் நன்மைக்கே என்பது ஆன்மீக நன்மையைக் குறிக்கும்.
அதாவது ஒவ்வொரு நிகழ்வும், நாம் முழுமனதோடு ஏற்றுக் கொண்டால்,
நாம் விண்ணக வீட்டை நெருங்குவதற்கே அது உதவி செய்யும்.
ஆகவே என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.
இறைவன் நமது நன்மைக்கே நம்மைப் படைத்தார்.
ஆகவே என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்கே செய்வார்.
ஏற்றுக் கொள்வோம்.
இறுதி நாளில் அவரும் நம்மை ஏற்றுக் கொள்வார்.
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment