வசன வாதி VS விசுவாசி
(தொடர்ச்சி)
---------------------------------------------------------
மனிதன் அவனது அனுபவ அடிப்படையில்
குற்றத்தின்
கனாகனத்தை அதற்கான தண்டனை அடிப்படையில்தான் புரிந்து கொள்வான்.
ஒரு குற்றத்திற்கானத் தண்டனை ஒரு மாதம் ஜெயில்.
மற்றொரு குற்றத்திற்கானத் தண்டனை ஒரு வருடம் ஜெயில்.
மற்றொரு குற்றத்திற்கானத் தண்டனை 26 வருடம் ஜெயில்.
26 வருடம் ஜெயில் குற்றம்தான் மிகப் பெரிய குற்றம்,
தண்டனையே இல்லாவிட்டால் அது குற்றமே அல்ல.
"என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்."
கடவுளை புறக்கணிப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே மோயீசன்
இலக்கிய யுக்தியைப் பயன்படுத்தி இறைவனுக்கு மனித உணர்வுகளைக் கொடுத்து எழுதியுள்ளார்.
"மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்."
என்று சொல்வதன் மூலம் பாவம் மிகப் பெரியது என்பதை புரிய வைக்கிறார்.
யாரையும் தண்டிப்பது இறைவனின் சுபாவம் அல்ல.
சின்னக் குறிப்பிடத்தில்
தாய்த் திருச்சபை இறைவனின் ஆறு குணங்களைக் கூறுகிறது.
அவற்றில் ஒன்று
"அளவில்லாத சகல நன்மை சு௹பியாய் இருக்கிறார்."
God is infinitely good.
அளவில்லாத சகல நன்மைகளில் அன்பு, இரக்கம், பரிவு, நீதி, ஞானம் போன்ற நன்மைகளைக் குறிக்கும்.
மனித நீதி குற்றவாளியைத் தண்டிக்கும்.
இறை நீதி மனிதர் செய்த பாவங்களுக்கு தானே பரிகாரம் செய்யும்.
மனித நீதிமன்றத்தில் அன்புக்கு இடமில்லை. தண்டனை அல்லது விடுதலை
இறைவனது நீதியும், அன்பும் சேர்ந்தே இயங்கும், மன்னிப்பதற்காக.
யாரையும் தண்டிப்பது இறைவனின் சுபாவம் அல்ல என்றால், நரகம்?
மோட்சமும், நரகமும் இரண்டும் வாழ்க்கை நிலைகள். (States of life)
உலகில் இறைவனுக்காக வாழும் மனிதன் மோட்ச நிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.
உலகில் இறைவனுக்கு எதிராக வாழும் மனிதன் நரக நிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.
.
இறைவன் மனிதனுக்கு பரிபூரண சுதந்தரைத்தைக் கொடுத்திருக்கிறார்.
தன் சுதந்தரைத்தைப் பயன்படுத்திதான்நரக நிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.
கடவுள் தண்டிப்பதில்லை.
இறந்தவுடன் ஆன்மா அது தேர்ந்தெடுத்த நிலைக்குச் சென்றுவிடுகறது.
பொதுத் தீர்வையின்போது, எல்லோரும் தங்கள், தங்கள் உடலோடு உயிர்த்தெழுந்து
அவரவர் தேர்நதெடுத்த நிலையை அடைவார்கள்.
கடவுள் மாறாதவர். அவரது அன்பும் மாறாது.
மோட்ச நிலையில் உள்ளவர்களையும்,
நரக நிலையில் உள்ளவர்களையும்
அவர் நித்தியமும் அன்பு செய்கிறார்.
மோட்ச நிலையில் உள்ளவர்கள்
அவரது அன்பை அனுபவிப்பார்கள்.
நரக நிலையில் உள்ளவர்கள் அவரது அன்பை அனுபவிக்க மாட்டார்கள்.
அப்படியானால்
."என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்." க்கு என்ன விளக்கம்?
வசனத்தில் உள்ள இறைச் செய்திதான் இதன் விளக்கம்.
என்ன செய்தி?
*என்னைப் புறக்கணிப்பது மிகப் பெரிய பாவம்.*
இந்த செய்திக்கு அழுத்தம் கொடுக்கவே வசனம் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
மற்றொரு வசனம்:
"ஆண்டவருக்குக் கோபம் தணிய, தாம் மக்களுக்கு எவ்விதக்கேடும் செய்வதாகச் சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டு விட்டார்." (யாத். 32:14)
உண்மையில் கடவுளுக்கு கோபமே வராது, அது நமது குணம்,
அவர் தனது திட்டத்தை மாற்றவும் மாட்டார்.
அப்படியானால் கோபம், கேடு,
செய்யாமல் விட்டு விட்டார் என்ற வார்த்தைகளை
வசனத்தை எழுதிய மோயீசன் பயன் படுத்துவது ஏன்?
இஸ்ரயேலர்கள் வார்ப்பு வேலையாலான கன்றுக்குட்டியை தொழுதது பாவம்.
மக்கள் செய்த பாவத்தின் கனா கனத்தை உணர்த்தவே
"நமது *கோபம்* அவர்கள் மேல் மூண்டு அவர்களை அழித் தொழிக்கும்."
என்று 10வது வசனத்தில் எழுதி
மோயீசன் மக்கள் சார்பாக மன்றாடிய பின் கோபம் தணிந்ததாக 14வது வசனத்தில் அவர் எழுதியிருக்கிறார்.
எதிர்பாராத ஒரு தவறு நடந்தால் தான் கோபம் வரும். கோபம் உணர்ச்சி வசப்படுதலின் விளைவு. (effect of emotions)
கடவுள் உணர்ச்சி வசப்படுவதற்கு அப்பாற்பட்டவர்.
God is beyond emotions.
கடவுளைப் பொறுத்தமட்டில் எதெது எப்பெப்போ நடக்கும் என்று நித்திய காலமாகவே தெரியுமே.
அவரால் எப்படிக் கோபப்பட முடியும்?
கோபம் அவரது சுபாவமே இல்லையே.
இருட்டும், ஒளியும் சேர்ந்து இருக்க முடியுமா?
பரிவும், கோபமும் சேர்ந்து இருக்க முடியுமா?
விக்கிரக ஆராதனையின் கனா கனத்தை நமக்கு உணர்த்தவே மோயீசன் கோபம் என்ற மனித உணர்வை இறைவனுக்குக்
கொடுத்து எழுதினார்.
நம்மைப் பொறுத்த மட்டில் ஒரு காரியம் நல்லதா கெட்டதா என்பதை
நமக்கு சந்தோசம் அல்லது கோபத்தின் அடிப்படையில்தான் தீர்மானிப்போம்.
மகன் ஏதோ ஒரு காரியம் செய்கிறான்.
அதைப் பார்த்து அவனது அப்பா சந்தோசப்பட்டால் அது நல்ல காரியம்.
கோபப்பட்டால் அது கெட்ட காரியம்
ரொம்ப சந்தோசப்பட்டால் அது மிக நல்ல காரியம்.
ரொம்ப கோபப்பட்டால் அது மிகக் கெட்ட காரியம்.
இறைவன் ரொம்ப கோபப்பட்டார் என்று சொன்னால்தான் மக்களுக்கு தாங்கள் செய்தது பெரிய பாவம் என்பது புரியும்,
இங்கு இலக்கிய யுக்திப்படி கடவுளுக்கு மனித உணர்ச்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
*கேடு, செய்யாமல் விட்டு விட்டார்.*
முதலாவது கடவுளால் கேடு நினைக்கவே முடியாது.
இரண்டாவது கடவுள் தனது நித்திய திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறார்.
*அவரது திட்டத்தில் 'செய்யாமல் விட்டு விடு' என்ற சொற்றொடருக்கே இடமில்லை.*
வசனத்தின் மூலம் இறைவன் தரவிருக்கும் செய்தியை மட்டுமே உள்வாங்கவேண்டுமே யொழிய, வார்த்தைகளை அல்ல.
"ஆண்டவருக்குக் கோபம் தணிய, தாம் மக்களுக்கு எவ்விதக்கேடும் செய்வதாகச் சொல்லியிருந்தாரோ அதைச் செய்யாமல் விட்டு விட்டார்"
சொல்லும் செய்தி
* கடவுள் இரக்கம் உள்ளவர். நமது பாவம் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் மன்னிக்கக் கூடியவர்.*
மற்றொரு வசனம்:
"ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.
3 நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.
4 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.
5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."
(யாத். 20: 2 - 5)
4வது வசனத்தைச் சொல்லிச் சொல்லி பிரிந்து சென்ற நம் சகோதரர்கள் நம்மை விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்கிறார்கள்.
வசனத்தின் உண்மையான பொருள் அவர்களுக்கும் தெரியும். தெரியாத அளவுக்கு அவர்கள் படியாதவர்கள் அல்ல.
ஆனால் தெரியாதது மாதிரி நடிப்பார்கள்.
ஒரு பையனுக்கு ஒரு அப்பாதான் இருக்க முடியும், அவர் அவனை பெற்றவர்.
நமக்கு ஒரு கடவுள்தான் இருக்க முடியும், அவர் நம்மை படைத்தவர்.
வேறு தேவர்கள் இருக்க முடியாது.
எகிப்தில் வாழ்ந்த அஞ்ஞானிகள் இல்லாத தேவர்களுக்கு விக்கிரகங்கள் செய்து அவற்றை ஆராதித்து வந்தார்கள்.
அவர்களோடு வெகுநாள் வாழ நேரிட்ட இஸ்ரயேலர்களுக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டது.
அவர்களுக்கு கடவுள் மோயீசன் மூலம் அறிவுரை கூறினார்.
"நானே உங்களைப் படைத்து பராமரித்து வரும் கடவுள். நீங்கள் ஆராதிக்க வேண்டியது என்னை மட்டும்தான்.
ஆராதிப்பதற்கென்று
விக்கிரகம் எதையும் நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.
அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்"
இதுதான் வசனங்களின் பொருள்.
*எகிப்தில் இருக்கும்போது அவர்கள் சிலை செய்தது*
*அவர்களைப் படைத்த உருவம் இல்லாத கடவுளுக்கு அல்ல,*
இல்லாத கடவுளுக்கு.
ஆகவே நமது நண்பர்கள் கூறுவது போல, யாரும், Pagans உட்பட, உண்மையான, உருவம் அற்ற கடவுளுக்கு சிலை வைக்கவில்லை.
"கடவுளுக்கு உருவம் இல்லையே, எப்படி சிலை வைக்கலாம்?" என்ற கேள்வி அர்த்தம் இல்லாதது.
உண்மையான கடவுளுக்கு யாரும் சிலை வைக்கவில்லை.
எகிப்தியர்
ஆராதிப்பதற்கென்றே சிலை செய்தார்கள். சிலையை கடவுள் என்று அவர்கள் கூறிக்கொண்டார்கள்.
அதை ஆராதித்தார்கள்.
ஆராதிப்பதற்கென்று செய்யப்பட்ட சிலைதான் விக்கிரகம்.
ஆராதிப்பதற்காக அல்லாமல் மற்ற பயன்பாட்டிற்காக செய்யப்படும் உருவங்கள் விக்கிரகங்கள் அல்ல.
ஆராதிப்பதற்கு என்று விக்கிரகங்கள் செய்வதுதான் பாவம்.
"பொன் தகட்டால் இரண்டு கேருபிம் செய்து மூலத்தானத்தின் இரு புறமும் வைக்கக்கடவாய்.
19 பக்கத்திற்கு ஒன்றாக அவற்றை இருபக்கமும் வைக்கக்கடவாய்.
20 அந்தக் கேருபிம்கள் தங்கள் இறக்கைகளை உயர விரித்து இரக்கத்தின் அரியணையையும் கடவுள் பேசும் மூலத்தானத்தையும் மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர் முகமுள்ளவைகளுமாய் இருப்பனவாக."
(யாத்.25:18-20)
இதையும் சொன்னவர் இறைவன் தான்.
கேருபிம்கள் ஆராதிப்பதற்காகச் செய்யப்படவில்லை.
அதே போல்தான்
கத்தோலிக்கர்கள் ஆராதிப்பதற்காக சுருபங்களைச் செய்யவில்லை.
உருவம் அற்ற கடவுளுக்கு சுருபங்களைச் செய்யவில்லை.
உருவம் அற்ற இறைமகன் மனிதனாய் பிறந்தார்.
இயேசுவுக்கு நம்மைப் போலவே உருவம் இருந்தது.
மனித உரு எடுத்த இயேசு நம்மைப் போலவே வாழ்ந்தார், கஷ்டப்பட்டார், மரித்தார்.
மனித உரு எடுத்த இயேசுவுக்கு சுரூபங்கள் செய்திருக்கிறோம்,
ஆராதிக்க அல்ல.
நற்கருணை நாதரை மட்டுமே ஆராதிக்கின்றோம்.
புனிதர்களுக்கு சுரூபங்கள் செய்திருக்கிறோம், ஆராதிக்க அல்ல.
அப்படியானால், எதற்காக?
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment