தொடர்ந்து நம்மோடு இருந்து நம்மைப் பாதுகாத்து வரும் ஜீவன்.
.***************************************
நாம் தாயின் வயிற்றில் உற்பவித்த விநாடி முதல் தொடர்ந்து நம்மோடு இருந்து நம்மைப் பாதுகாத்து வரும் ஒரு ஜீவன்.
நாம் சுவாசிக்கும் காற்றின் முக்கியத்துவத்தை பற்றி நாம் உணர்வதே இல்லை, ஏனென்றால் அது எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கிறது.
அதேபோல்தான் எப்போதும் நம்மோடு இருக்கும் நமது காவல் தூதர்களைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.
கடவுள் நம்மைப் படைத்தது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை அவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரை (Guardian Angel) நியமித்திருக்கிறார் என்பதும்.
இறைவன் மனிதனைப் படைக்கு முன்பு கோடிக்கணக்கான தூதர்களைப் (Angels) படைத்தார்.
அவர்களில் பல கோடிப்பேர் லூசி பெரைப் (Lucifer) பின்பற்றி கடவுளை எதிர்த்ததால் பசாசுக்களாக மாறினர்.
கடவுளுக்கு விசுவாசமாக இருக்கும் தூதர்கள் அனைவரும் விண்ணகத்தில் இறைவனோடு இருக்கிறார்கள்.
அவர்கள் இறைவனைப் போலவே ஆவிகள். எப்படி கடவுளுக்கு இருக்க இடம் (place) தேவை இல்லையோ அப்படியே அவர்களுக்கும் இடம் தேவை இல்லை.
கடவுள் எங்கும் இருக்கிறார்.
ஆனால், தூதர் எங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கு இருப்பார்.
'அங்கு எங்கு' என்பதை இடத்தைக் குறிக்க ஆம் பயன்படுத்தும் வார்த்தைகள்.
ஆனால் தூதர்களுக்கு இடம் தேவையில்லை.
அவர்கள் இருப்பது அவருடைய நினைவினால்.
நம்முடைய காவல் தூதர் நாம் எங்கு இருந்தாலும் நம்முடன்
தன் நினைவினால் இருப்பார்.
நமக்கு ஆன்மீக ரீதியாக உதவிகளை செய்து கொண்டிருப்பார்.
நமக்காக இறைவனை வேண்டுவார்.
நாம் அவரை நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவர் நம்மை நினைத்துக் கொண்டிருப்பார்.
நமது காவல் தூதர்கள் மூலமாக நமது வேண்டுதல்களை இறைவனுக்கு அனுப்பலாம்.
அவர்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்கள்.
பழைய ஏற்பாட்டில் ரபயேல் (Raphael) தூதர் எப்படி தோபித்துக்கு உதவி செய்தார் என்ற விபரம் தோபியாஸ் ஆகமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.
"நீர் கண்ணீரோடு மன்றாடி இறந்தோரைப் புதைத்து, உம் உணவை மறந்து, செத்தவர்களைப் பகலில் உம் வீட்டில் ஒளித்து வைத்திருந்து இரவில் புதைத்து வந்தீர் அல்லவா?
அப்பொழுது நான் உம் மன்றாட்டை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன்."
(தோபியாஸ். 12:12)
என்று அவர் தோபியாஸிடம் கூறினார்.
"நான் உம் மன்றாட்டை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன்"
என்ற வார்த்தைகள் ரபயேல் தூதருக்கு தோபியாஸ் மேலுள்ள அக்கரையை காட்டுகிறது.
பைபிளில் இரபயேல் தூதர் தோபித்துக்கு உதவி செய்த விபரங்களை எழுதி இருப்பது
நாம் வெறுமனே அவற்றை வாசித்து விட்டு போவதற்கு அல்ல.
நமது வாழ்விலும் இறைவன் தனது தூதர்கள் மூலமாக செயலாற்றுகிறார் என்பதை உணர்ந்து,
நமக்கு உதவிகள் தேவைப்படும் போது
அவர்கள் மூலமாக இறைவனை அணுக வேண்டும் என்று
நமக்கு பாடம் கற்பிப்பதற்காகத்தான் தோபியாஸ் ஆகமம் எழுதப்பட்டிருக்கிறது.
"ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரைச் சுற்றி, அவருடைய தூதர் பாளையம் இறங்கிக் காத்திடுவார்."
சங். 33:7
இது இறைவாக்கு.
34 ம் சங்கீதத்தை பாடியவர்,
தனக்குத் தீமை செய்ய நினைப்போரை
ஆண்டவரின் தூதர் விரட்டிச் செல்ல, அவர்கள் காற்றில் பறக்கும் பதர் போலாவார்களாக, என்று கூறுகிறார்.
சங். 34: 5
அதாவது
அவருக்கு தீமை செய்ய நினைப்பவர்களிடமிருந்து ஆண்டவருடைய தூதர் அவரைக் காப்பாற்றுவார் என்று கூறுகிறார்.
.
சிறுவர்களைப் புறக்கணிக்கக் கூடாது ஏனெனில்
"அவர்களுடைய விண்ணுலகத் தூதர் வானகத்திலுள்ள என் தந்தையின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்"
மத். 18:10
என்று ஆண்டவர் கூறுகிறார்.
இதனால் ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்பது தெரிகிறது.
அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவர் ஆகும் போதும் அதே காவல் தூதர் அவரிடம் இருப்பார்.
வானதூதர்கள் அனைவரும் ஊழியம் செய்யும் ஆவிகள்.
மீட்பை உரிமைப்பேறாகப் பெறுபவர்களுக்குப் பணிபுரிய அனுப்பப்பட்டவர்கள்.
என்பது புனித சின்னப்பருடைய கூற்று
(எபிரேயர்1:14)
காவல் தூதர்கள் நம்மிடம் என்ன, எப்படி செயலாற்றுகிறார்கள்?
ஒரு அனுபவம்:
நான் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த காலம்.
ஒரு நண்பரை பார்ப்பதற்காக தென்காசி செல்ல திட்டமிட்டு, புறப்பட்டு போய்க் கொண்டிருந்தேன்.
பாவூர்சத்திரம் வந்து தென்காசிக்கு திரும்பும்போது, கடையம் ரோட்டில் நின்று ஒருவர் அழைத்தார்.
அவர் எனக்கு தெரிந்தவர் அல்ல.
ஏதோ ஒரு விலாசத்தை கையில் தந்து, "இந்த வீடு எங்கே இருக்கிறது?" என்று கேட்டார்.
"தெரியாது" என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்.
Just 2 நிமிடங்கள்தான்.
தற்செயலாக தெற்கே பார்த்தேன்.
நான் யாரைப் பார்ப்பதற்காக தென்காசிக்குப் போய்க் கொண்டிருந்தேனோ, அதே நண்பர்.
"ஹலோ, உங்கள பார்க்க தான் தென்காசிக்குப் போய்க்கொண்டிருக்கிறேன், நீங்கள் எங்கிருந்து வர்ரீங்க?"
." ஆவுடையானூரிலிருந்து.
தென்காசி போற ஆளு கடையம் ரோட்ல நிக்கிறீங்க?"
"தென்காசிக்கு திரும்பும்போது இவர் என்னை நிறுத்தி விட்டார். தற்செயலாக.
நானும் தற்செயலாகத்தான் உங்களைப் பார்த்தேன்.
இவர் நிறுத்தி இருக்காவிட்டால் நான் தென்காசிக்குத் திரும்பி இருப்பேன். நீங்கள் என் பின்னாலே வருவீர்கள்."
"பின்னாலே வரமாட்டேன். Right ல திரும்பி நாகல்குளத்துக்குப் போய்க்கொண்டிருப்பேன்."
"அப்படியா? நல்ல வேளை இங்கே நின்றேன்."
"நிற்கவில்லை. நிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்.
நிறுத்தப்பட்டிருக்காவிட்டால் நீங்கள் தென்காசிக்கு போய்க் கொண்டிருப்பீர்கள்.
நான் நாகல்குளத்துக்குப் போய்க்கொண்டிருப்பேன்."
என்னை நிறுத்தியவர் போய்விட்டார்.
ஒரு நன்றி யாவது சொல்லி இருக்கலாம்.
இது தற்செயல் நிகழ்ச்சி என்று சொல்லுவோம்.
ஆனால் விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டும் புரியும்
தற்செயல் என்று ஒன்று கிடையாது, நமது காவல் தூதரின் உதவி என்று.
நமது வாழ்வில் நாம் திட்டமிடாமல் நடக்கும் எந்த நிகழ்ச்சியும்
தற்செயல் நிகழ்ச்சி அல்ல.
இறைவன் தனது தூதர் மூலமாக நமக்கு செய்யும் உதவி நிகழ்ச்சி.
காவல் தூதர் நமக்குள் செயல்படுவது நமக்கே தெரியாது.
பைபிள் வசனங்களை தியானித்துக் கொண்டிருப்போம், நம் மனதில் அவர் points எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பார்.
நமது மனதில் நல்ல எண்ணங்களை தூண்டுவார்.
சோதனைகளை வெல்ல உதவி செய்யவார்.
என்னுடைய கட்டுரை அனுபவத்தில்,
கட்டுரை எழுத ஆரம்பிக்கும்போது மனதில் அதிக விஷயங்கள் இருக்காது.
ஆனால் கட்டுரை நகர்ந்து கொண்டிருக்கும் போது
நான் அதுவரை கற்பனைகூட செய்து பார்த்திராத விஷயங்கள் நினைவுக்கு வரும்.
நாம் தேடிப் போகாமலே நம் வீட்டுக்கு தின்பண்டங்கள் வந்தால் நமக்கு எப்படி இருக்கும்?
இதே அனுபவம் கட்டுரை எழுதும்போதெல்லாம் ஏற்படும்.
ஒரு முறை ஒரு குருவானவர் திருப்பலியின் போது பிரசங்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால்,
" பிரசங்கத்திற்கு தயாரிக்க நேற்று நேரமே கிடைக்கவில்லை,
தயாரிப்பு இல்லாமலே
காவல் தூதரை நம்பி மைக் முன்னால் நிற்கிறேன்"
என்று சொல்லி ஆரம்பித்தார்.
அன்றைய பிரசங்கம் அவரது மற்ற பிரசங்களைவிட அதிகச் சிறப்பாக இருந்தது என்று மக்கள் கூறினார்கள்.
காவல் தூதரின் உபயம்.
ஒவ்வொருவரும் அவரவர் கடந்த கால நிகழ்வுகளை மனதிற்கு கொண்டுவந்து அசைபோட்டுப் பார்த்தால்
எந்த அளவிற்கு காவல் தூதர் அவர்கள் வாழ்வில் செயல்பட்டிருக்கிறார் என்பது புரியும்.
நம்மிடம் தன்னைப்பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளாமலேயே நமக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டிருப்பவர் நமது காவல் தூதர்.
சில காரியங்களை நாம் தான் சாதித்து விட்டதாக நினைப்போம்.
ஆனால் 90% காவல் தூதரின் தூண்டுதலால்தான் செய்தோம் என்பது தெரியாமலேயே செய்து கொண்டு இருந்திருப்போம்.
நமக்காக கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கும் காவல் தூதரை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்ற புனிதர்களிடம் வேண்டுவது போல காவல் தூதரையும் வேண்டுவோம்.
அவர் நம்முடன் இருந்து செய்து வரும் உதவிகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
அவர் மூலமாக நம்மைப் பராமரித்து வரும் இறைவனுக்கும் நன்றி கூறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment