"மகனே, இன்று பகல் உன்னைப் பார்க்க வருவேன்."
***************************************
ஒரு ஊரில் இறை அன்பர் ஒருவர் இருந்தார்.
தனக்கென்று வாழாமல் இறைவனுக்காகவும், அயலானுக்காகவும்வும் வாழ்ந்து கொண்டிருந்தார்.
செய்து கொண்டிருந்தது செருப்புத் தைக்கும் தொழில்.
செய்த தொழிலை இறைவனுக்காகச் செய்தமையால் சிறப்பாகச் செய்தார்.
தொழில் நேர்த்தியாக இருந்ததனால்,
அந்த வட்டாரத்திலுள்ள மக்களில் அனேகர்
புதுச்செருப்பு செய்வதாக இருந்தாலும்,
பழைய செருப்பு ரிப்பேர் பார்ப்பதாக இருந்தாலும்.
அவரையே தேடி வருவர்.
அவரது பணியிடம் சாலையை ஒட்டி இருந்தது.
சாலை வழியே செல்வோரின் பாதங்களைப் பார்த்தே, அவர்கள் அணிந்திருந்த செருப்புகளை வைத்தே,
அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்.
ஏனெனில் ஏறக்குறைய அநேகரது செருப்புகளும்
அவரிடமிருந்து வாங்கப்பட்டவைகளாக இருக்கும்,
அல்லது, அவர் ரிப்பேர் பார்த்தவைகளாக இருக்கும்.
அவரது தினசரி வருமானத்தில் அவரது செலவிற்கு போக மீதியை
தேவைப்படுவோருக்கு கொடுத்துவிடுவார்.
அன்றன்றைய உணவு அன்றன்று கிடைத்தால் போதும் என்ற எண்ணம் உள்ளவர்.
ஒரு நாள் இரவு அவரது தூக்கத்தில் இயேசு அவரோடு பேசினார்.
"மகனே, இன்று பகல் உன்னைப் பார்க்க வருவேன்."
அதற்கு மேல் ஆண்டவர் எதுவும் சொல்லவில்லை.
"ஆண்டவர் வருவேன் என்று சொன்னாரே தவிர
எப்போது வருவேன் என்று சொல்லவில்லையே,
பரவாயில்லை, நாளை முழுவதும் வீட்டிலிருந்து, ஆண்டவருக்கு நல்ல உணவு தயாரித்து வைத்துக்கொண்டு,
அவருக்காக காத்திருக்க வேண்டும். எப்போது வந்தாலும் அவருக்கு நல்ல உணவு கொடுத்து உபசரிக்க வேண்டும்"
என்று நினைத்துக்கொண்டார்.
காலையில் எழுந்தவுடன் அன்று தேவைப்படுவோருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்தார்.
கடைக்குச் சென்று நல்ல விருந்து தயாரிப்பதற்கான பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டிற்கு வந்தார்.
காலை உணவு உண்ணாமலே ஆண்டவருக்கு உணவு தயாரிக்க ஆரம்பித்து விட்டார்.
ஒன்பது மணிக்கெல்லாம் அறுசுவை உணவு தயார்.
"நாம் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, ஆண்டவருக்கு வயிறார உணவுகொடுக்க வேண்டும்"
என்று எண்ணிக் கொண்டு,
ஆண்டவரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்றார்.
"ஆண்டவர் பகலில் வருவேன் என்று சொன்னார், ஆனால் எந்த நேரத்தில் என்று சொல்லவில்லை.
பரவாயில்லை, வரும்வரை காத்திருப்போம்."
என்று எண்ணிக்கொண்டிருந்த போது
ஒரு தாய் கையில் குழந்தையுடன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
முன்பின் பார்த்திராக ஆள்.
அவர் முன் வந்து நின்றார்.
"வாம்மா. உட்கார்."
"தாத்தா யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது."
"ஆமாம்மா. ஒல் முக்கியமான விருந்தினருக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
நீயும் இருந்து அவருடன் விருந்து உண்டுவிட்டு போகலாம்."
சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையிலிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
குழந்தை அழுதது தாத்தாவிற்கு சங்கடமாக இருந்தது. பசியால் அழுவது போல் தோன்றியது.
உடனே சமயலறைக்கு சென்று இயேசுவுக்காக வைத்திருந்த பாலில் பாதியை எடுத்து
சிறிது நீர் சேர்த்து, கொதிக்க வைத்து, கொண்டு வந்து குழந்தைக்குக் கொடுத்தார்.
குழந்தை ஆவலோடு குடித்தது.
"அம்மா குழந்தை அழுவதைப் பார்த்தால் நீ அதற்குப் பால் ஊட்டியது போல் தெரியவில்லையே."
"உண்மைதான் தாத்தா, நானே நேற்று முழுவதும் உணவு உண்ணவில்லை. குழந்தைக்கு பால் எப்படி ஊறும்?"
தாத்தாவுக்கு அந்தத் தாயைப் பார்க்க பாவமாய் இருந்தது.
"இயேசுவிடம் சொல்லிக் கொள்ளலாம்."
என்று கூறிக்கொண்டே இயேசுவுக்காக தயாரித்து வைத்திருந்த உணவிலிருந்து கொஞ்சத்தை எடுத்து வந்து அப்பெண்ணுக்குக் கொடுத்தார்.
அவளும் உணவை உண்டு தாத்தாவிற்கு நன்றி கூறிவிட்டு சென்றாள்.
இயேசுவுக்காக வைத்திருந்த உணவில் கொஞ்சம் போய்விட்டது, பரவாயில்லை,
இருப்பதை இயேசுவுக்கு கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டு அமைதியாக தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
மணி பதினொன்று. இன்னும் இயேசு வரவில்லை.
அழுக்கான கந்தல் உடை அணிந்த ஒரு பெரியவர் உள்ளே வந்துகொண்டிருந்தார்.
அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.
"பெரியவரே, ஒரு விசேஷ விருந்தினருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
தண்ணீர் தருகிறேன், குளித்துவிட்டு வாருங்கள். வேறு உடை தருகிறேன்.
உடுத்திக் கொள்ளுங்கள். வருகின்ற விருந்தினரோடு அமர்ந்து சாப்பிடலாம்."
பெரியவரும் குளித்து விட்டு, உடை மாற்றிக் கொண்டார்.
ஆனாலும் சோர்வாகக் காணப்பட்டார்.
"பெரியவரே, சோர்வாக இருக்கிறதா?"
" பசிக்கிறது, தாத்தா."
தாத்தாவிற்குப் பாவமாக இருந்தது.
வேறு வழியில்லாமல் இயேசுவுக்காக வைத்திருந்த உணவிலிருந்து
கொஞ்சத்தை எடுத்து வந்து பெரியவருக்கு கொடுத்தார்.
பெரியவர் சாப்பிட்டார்.
"விருந்தினர் வருமட்டும் உட்காருங்கள். அவரை நீங்களும் பார்க்கவேண்டும்."
"தாத்தா, நான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து காலத்தைக் கடத்துபவன். இங்கேயே இருந்தால்
என் பிழைப்புப் போய்விடும்.
எனக்கு உடை தந்து, உணவும் தந்து உபசரித்தமைக்கு நன்றி. உங்களை மறக்க மாட்டேன். வருகிறேன்."
போய்விட்டார்.
மணி பன்னிரெண்டைத் தாண்டிவிட்டது.
அறுந்த செருப்பு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
"தாத்தா செருப்பு அறுந்துவிட்டது, நடக்க முடியவில்லை, தங்களது பணி இடம் பூட்டிக் கிடக்கிறது, அதான் உங்களைத் தேடி வீட்டிற்கே வந்துவிட்டேன்"
தாத்தா அவனிடமிருந்து செருப்பை வாங்கி, உட்கார்ந்து, நன்கு தைத்து அவனிடம் கொடுத்தார்.
" தாத்தா எவ்வளவு வேண்டும்?"
"பணம் வேண்டாம். உட்கார், சாப்பிட்டு விட்டு போகலாம்."
"சாப்பிடவா?
இன்றைக்கு என்ன விசேஷம்?
விருந்தெல்லாம் வைக்கிறீர்கள்?"
" ஆம், இன்று ஒரு விசேஷ விருந்தினர் வருகிறார். உணவு தயாரித்து அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நீயும் உட்கார், சாப்பிட்டு விட்டு போகலாம்."
"ஒன்று செய்யுங்கள், எனக்கும் பசிக்கிறது. எனக்குள்ள உணவை இப்போது சாப்பிட்டு விடுகிறேனே."
"தாத்தா உள்ளே சென்று உணவை பார்த்தார்.
இயேசுவுக்கு மட்டும் உணவு இருந்தது, அதுவும் மிச்ச மீதியாக இல்லை, போதுமானது மட்டும் இருந்தது.
இந்த இளைஞனுக்கு இதை கொடுத்துவிட்டு, இயேசுவிற்கு கடையிலிருந்து வாங்கி வந்து விடுவோம்."
என்று எண்ணிக்கொண்டே இளைஞனுக்கு உணவை பரிமாறினார்.
அவனும் திருப்தியாக சாப்பிட்டான்.
"தம்பி இங்கே உட்கார்ந்திரு. இப்போ
வந்துவிடுகிறேன். விருந்தினர் வந்தவுடன் அவரை பார்த்துவிட்டு செல்லலாம்."
"பரவாயில்லை தாத்தா, நானும் அவசரமாக ஒரு நண்பரை பார்க்க போகிறேன். உங்களது உபசரிப்புக்கு மிகவும் நன்றி." சென்று விட்டான்.
தாத்தா உடனே எழுந்து வேகமாக ஓடி கடையிலிருந்து சாப்பாடு வாங்கிவந்தார்.
அவர் பின்னாலேயே ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான்.
தாத்தா உணவை வைத்துவிட்டு உட்காரும் போது, சிறுவன் அவர் முன் வந்து நின்றான்.
"தம்பி வா. பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லையா?"
"காலையில் பள்ளிக்கூடம் சென்றேன். மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தேன். திரும்பி போக வில்லை."
"ஏன்? என்ன ஆச்சு?"
"அம்மாவிற்கு உடம்பு சரியில்லை.
மதிய உணவு தயாரிக்க வில்லை.
ஆகவே அவர்களும் சாப்பிடவில்லை, நானும் சாப்பிடவில்லை.
சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை.
அம்மாவை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
கையில் காசு இல்லை.
நீங்கள் தான் எங்களைப் போன்றோருக்கு உதவுவீர்களே, அதுதான் உங்களை நம்பிக்கையோடு தேடி வந்தேன்."
தாத்தா யோசிக்கவே இல்லை.
வீட்டிற்குள் சென்றார். அங்கு மிச்சமீதியாக இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டார்.
100 ரூபாய்தான் இருந்தது.
பணத்தை சிறுவன் கையில் கொடுத்தார். ஹோட்டலிலிருந்து வாங்கி வந்த உணவு பொட்டலத்தையும் கையில் கொடுத்தார்.
" இந்த உ ணவை அம்மாவுக்குக் கொடுத்துவிட்டு
டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போ."
பையனும் நன்றியோடு சாப்பாட்டையும் பணத்தையும் பெற்றுக் கொண்டு போய்விட்டான்.
மணி மூன்றை நெருங்குகிறது.
தாத்தா யோசித்தார்.
"வீட்டில் ஒரு பைசா கூட இல்லை. சிறிதளவுகூட உணவுமில்லை.
இயேசு எந்த நேரத்திலும் வருவார். நான் எதை கொடுத்து அவரை உபசரிப்பேன்?"
நினைத்துக் கொண்டிருக்கும்போதே இயேசு வந்து கொண்டிருந்தார்.
தாத்தா வேகமாக ஓடி இயேசுவின் காலில் விழுந்தார்.
"ஆண்டவரே உமக்குத் தர என்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லையே!"
என்று சொல்லி அழும் போது இயேசுவின் பாதங்களைப் பார்த்தார்.
எழுந்து இயேசுவின் முகத்தை பார்த்தார்.
"ஆண்டவரே! ஆண்டவரே! ஆண்டவரே!"
" இங்கே பார், இல்லையே! என்ற வார்த்தையே வரக்கூடாது."
"ஆண்டவரே! நான் என்னை முழுவதும் உமக்குத் தருகிறேன்!"
"கரெக்ட் இப்படித்தான் சொல்லணும்."
"ஆண்டவரே நான் உமக்கு அறுசுவை விருந்து படைக்க ஆசைப்பட்டேன்."
"நீ தயாரித்து வைத்திருந்த விருந்தை நான்தான் சாப்பிட்டேன்,
வயிறு நிறைய சாப்பிட்டேன்.
நீ கவனிக்கவில்லை.''
"ஆண்டவரே! உங்களுக்காக தயாரித்து வைத்திருந்த உணவுதான் நீங்கள் வருமுன்னரே காலியாகிவிட்டதே!"
"சரி வா உட்கார்கார், முதலில் சாப்பிடு. அப்புறம் பேசுவோம்."
"உட்காருகிறேன். உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதே உணவு உண்பது போல் தான் இருக்கிறது."
ஆண்டவர் ஒரு உணவு பொட்டலத்தை எடுத்தார் . திறந்தார் . கையில் உணவை அள்ளினார். .
"வாயைத் திற."
தாத்தா வாயை திறந்தார். ஆண்டவர் ஊட்டி விட்டார்."
"ஆண்டவரே என்னுடைய உள்மனசு ஏதோ சொல்கிறது. நீங்கள் காலில் அணிந்திருக்கும் செருப்பு...."
"அதே செருப்பு தான். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நீ ரிப்பேர் செய்து கொடுத்தாயே, அதே செருப்பு தான்."
"அப்போ....!"
"சந்தேகமே வேண்டாம். முதலில் அம்மாவும் நானும் வந்தோம், எனக்கு பால் பருகத் தந்தாய்.
கிழிந்த உடையுடன் அழுக்கான தேகத்துடன் வந்தேன்.
என்னை குளிக்கச் செய்து எனக்கு நல்ல உடை உடுத்தினாய்,
அப்புறம் இளைஞனாக வந்தேன். அறுந்த செருப்பைத் தைத்துக் கொடுத்தாய். சாப்பாடும் கொடுத்தாய்.
அப்புறம் சிறுவனாக வந்தேன் என்னுடைய அம்மாவிற்கு உணவும் கொடுத்து வைத்தியம் பார்க்க பணமும் கொடுத்தாய்.
நீ எனக்காக தயாரித்த உணவு வீணாகவில்லை.
உணவை நான்தான் சாப்பிட்டேன்.
உனக்கு நானே உணவு கொண்டு வந்தேன்."
தாத்தா ஆண்டவரது கால்களைகளைப் பிடித்துக்கொண்டு
" ஆண்டவரே நான் உம்மை ஆராதிக்கிறேன். நன்றி, ஆண்டவரே நன்றி.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment