Monday, September 14, 2020

நிறைவை நோக்கிய பயணம்.

நிறைவை நோக்கிய பயணம்.
*************************************

நாம் யாரும் நிறைவானவர்கள் அல்ல.

None of us are perfect.

நிறைவை நோக்கி பயணிக்கிறோம்.

விதையிலிருந்து பெரிய மரம் வெளிவருவதில்லை.

முதலில் இரண்டே இரண்டு இலைகள் மட்டும் எட்டிப் பார்க்கின்றன.

அவை தான் கன்றாகி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மரம் ஆகின்றன.

மனிதனும் குழந்தையாகத்தான் பிறந்து, வளர்கிறான்.

இயேசு இறைவன், ஆகவே நிறைவானவர்.

நம்மையும் நிறைவாய் இருக்க அழைக்கிறார்.

தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவிக்கும் ஒரே சித்தம் தான்.

ஆனாலும் இயேசு நமக்குத் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைக் கற்பிப்பதற்காக

."என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."

என்று  சொன்னார்.

அதேபோல் நம்மையும் நிறைவாய் இருக்க அழைக்கும் போது,

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத் 5:48)

என்றார்.

இத்தகைய தாழ்ச்சி நமது நிறைவு நோக்கிய பயணத்தில் வேகத்தைக் கொடுக்கும்.

நம் ஆண்டவர் தனது நற்செய்தியை உலகெங்கும் பரப்ப குறைவுள்ள மனிதர்களையே (Imperfect people) சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

குறைகள் நிறைந்த சீடர்கள்தான் அவரது பயிற்சியால் சிறிது சிறிதாக நிறைவை நோக்கி வளர்ந்தார்கள்.

அவர்களது ஆரம்ப கால நிலையையும்

பரிசுத்த ஆவியின் வருகைக்குப் பின்னால் அவர்கள் போதிக்க ஆரம்பிக்கும்போது இருந்த நிலையையும்

ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களுடைய வளர்ச்சி புரியும்.

இயேசு விண்ணகத்திற்கு எழுந்தருள்வதற்கு முன்னால் தனது சீடர்களுடன் வெளிப்படையாக இருந்தே அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.

விண்ணகம் சென்ற பின்,

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று அவர் கொடுத்த வாக்குறுதிக்கி ஏற்ப,

'அவர்களுக்குள் இருந்தே' செயல்பட்டார்.

இன்றும்  சீடர்களின் வாரிசுகளின் உள்ளிருந்து செயல்படுகிறார்,

என்றும் செயல்படுவார்.

ஆகவே, நாம் நிறைவாக இல்லையே  என்பதற்காக வருத்தப்பட வேண்டாம்.

எல்லா புனிதர்களின் வாழ்க்கையும் குறைகளோடுதான் ஆரம்பித்தது.

இறைவனுடைய அருளாலும் தங்களுடைய முயற்சியாலும் புனிதர்கள் நிறைவை நோக்கி வளர்ந்தார்கள்.

இறைவனுடைய அருள் இல்லாமல்  சுய முயற்சியால் மட்டும் ஒன்றும் சாதிக்க முடியாது.

ஆரம்பத்தில் நாம் கேட்காமலேயே இறைவன் அருளை நமக்கு தருவார்.

முதல் அருளைப்  பெற்ற பின், அதன் உதவியால் நாம் இறைவனை வேண்டி தொடர்ந்து அருளைப் பெற்று அதன் உதவியால் ஆன்மீகத்தில் வளற வேண்டும்.

மிதி வண்டியில் பயணிப்போர்
பெடலை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மெதுவாக மிதித்தால் வண்டி மெதுவாக நகரும். வேகமாக மிதித்தால் வேகமாக ஓடும்.

அதேபோல் தான் ஆன்மீக பயணத்தில் இறை அருளைப் பெற.

ஆண்டவரை வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும், அவர் அருள் மழையைப் பொழிந்து கொண்டே இருப்பார்.

அதுதான் ஜெபத்தின் மகத்துவம்.

இறையருளின் வாய்க்கால் ஜெபம்.

புனிதர்கள் தங்களுடைய ஜெப வாழ்வினால் தான் நிறைவை நோக்கி வேகமாகப் பயணித்தார்கள்.

எளிமையாக, எல்லோரும் சொல்லத்தக்க

மிக அதிகமான அருள் வரத்தை நம்மிடம் கொண்டு வரக்கூடிய

ஒரு ஜெபம்  இருக்கிறது.

அதை ஒரு நாளில் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.

ஒவ்வொரு முறை ஜெபிக்கும் போதும் அதன் வழியே  அருள் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்

திருச்சிலுவையின் அடையாளமிட்டு
நாம் சொல்லும்,

" தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால், ஆமென்.

என்பதுதான் அந்த ஜெபம்.

புனிதத்தில் வளர விரும்புகிறவர்கள்:

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும்  இறையன்புடனும், பிறரன்புடனும் இருப்பார்கள்.

இயேசுவின் பண்புகளோடு வாழ்வதில் உறுதியாக இருப்பார்கள்.

பாவத்தில் விழ நேர்ந்தால் உடனே எழுவார்கள். .

முற்றிலுமாக பாவத்தை விட்டு விலகி நடப்பார்கள்.

ஜெபத்திலும் புண்ணிய வாழ்விலும் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.

இறைவன் சித்தம் எதுவாக இருந்தாலும் முழுமனதோடு ஏற்று நடப்பார்கள்.

மேற்கண்ட செயல்களில் குற்றம் குறைகள் ஏற்படலாம்,

ஏனெனில் அவர்கள் நிறைவை நோக்கி பயணிப்பவர்கள்.

நிறைவானவர்களிடம் குற்றங்குறைகள் இருக்காது.

ஜென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்ததால் ஆரம்பம் முதல், பாவமாசு எதுவும் இன்றி,

நிறைவாக இருந்தவள் அன்னை மரியாள் மட்டும்தான்.

ஆகவேதான் கபிரியேல் தூதர் அவளை

" அருள் நிறைந்தவளே வாழ்க,"

என்று வாழ்த்தினார்.

மற்ற எல்லா புனிதர்களும் குறைகளோடு ஆரம்பித்து நிறைவை நோக்கிப் பயணித்தார்கள்.

பயணத்தின்போது குறைகளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே சென்றார்கள்.

ஆகவே நம்மிடம் குறைகள் உள்ளன என்பதை கண்டு கவலைப்பட வேண்டாம்.

நமது ஜெப வாழ்வினால் குறைகள் ஒவ்வொன்றாக நீங்கி விண்ணரசை அடையும் போது நிறைவான இறைவனோடு ஒன்றிணைவோம்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது பாவம் நீங்கி பரிசுத்தம் ஆனோம்.

ஆனால் காலப்போக்கில் நமது பலவீனம் காரணமாக குறைகள் உள்ளே நுழைந்தன.

இக்குறைகளை நமது ஜெபவாழ்வின் மூலம் அகற்ற வேண்டும்.

பாவத்தில் விழ  நேர்ந்தால் உடனே ஒப்புரவு அருட்சாதனம் மூலம் மன்னிப்பு பெற்று

பரிசுத்த வாழ்வைத் தொடர வேண்டும்.

இறை அன்பில் வளர்பவர்கள்தான்
பரிசுத்தர்களாக வாழ முடியும்.

நமது நற்செயல்களால் தான் இறையன்பு வளர முடியும்.

அதாவது இறை அன்பு  செயல்களில்  தன்னை வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு குடும்பப் பெண் இறை அன்பும்,
பிறர் அன்பும் நிறைந்த நல்ல மனைவியாகவும் தாயாகவும் வாழ்வதன் மூலமே
பரிசுத்தத்தனத்தில் வளர முடியும்.

ஒரு ஆண்மகன் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும், தனது பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் வாழ்வதன் மூலமே
பரிசுத்தத்தனத்தில் வளர முடியும்.

அன்பு, இரக்கம், உழைப்பு, பகிர்வு,  விட்டுக் கொடுத்தல்  போன்ற பண்புகள் மூலமே குடும்பம் பரிசுத்தத்தனத்தில் வளர முடியும்.

இறையன்புடன் பெற்றோரையும் சகோதர, சகோதரிகளையும் நேசிப்பதோடு,

கீழ்ப்படிதல், பகிர்தல்,
ஒத்துழைப்பு, திறமைகளைப் பயன்படுத்துவதில் விடாமுயற்சி போன்ற பண்புகளில் இறையன்போடு வளரும் பிள்ளைகள் பரிசுத்தத்தனத்தில் வளர்வார்கள்.

இறையன்புடன், இறைவனுக்காக தங்கள் அந்தஸ்தின் கடமைகளை ஒழுங்காகச் செய்பவர்களும் பரிசுத்தத்தனத்தில் வளர்வார்கள்.

ஆக, உலகைத் துறந்து துறவிகளாக வாழ்ந்து இறைப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமல்ல

உலகத்தினர் அனைவருமே நிறைவை நோக்கி அழைக்கப்படுகின்றனர்.

இல்லறவாசிகளாக இருந்தாலும், துறவிகளாக இருந்தாலும்,

இறையன்பும் பிறரன்பும் இருந்து, இறைவனுக்காக வாழ்ந்தால்

நிறைவை நோக்கி வேகமாக முன்னேறலாம்.

நிறைவை நோக்கிய நமது பயணம் விண்ணக வாழ்விற்குள் நம்மை இட்டுச் செல்லும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment