Monday, September 28, 2020

*புண்ணியங்களின் அரசி.*

http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_28.html



*புண்ணியங்களின் அரசி.*
***    ***    ***    ***     ***       ***



தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி.

Humility is the Queen of all the virtues.

தாழ்மை என்ற சொல்லிலிருந்து பிறந்தது தாழ்ச்சி.

சர்வமும் ஆன கடவுளுக்கு முன் நாம் ஒன்றுமே இல்லாதவர்கள்.

கடவுள்  மேன்மையானவர்.
நாம் தாழ்மையானவர்கள்.

நமது உண்மையான  நிலையை, ஒன்றுமில்லாமையை ஏற்றுக் கொள்வதுதான் தாழ்ச்சி.

நாம் இறைவனின் படைப்பாகையால் நமது இருப்பிற்கு ( Existence) அவரையே
சார்ந்திருக்கிறோம்.

நாம் அவரையே
சார்ந்திருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொண்டால் தான்,

நாம்  தொடர்ந்து இருப்பதற்கான அருள்வரங்களைக் கேட்டுக் கொண்டேயிருப்போம்.

அதை ஏற்றுக்கொள்ளா விட்டால், 

நாம் சுயமாக இயங்கலாம் என்று எண்ணிக்கொண்டு,

 அவரிடம் உதவி ஏதும் கேட்க மாட்டோம்.

அவருடைய உதவி இல்லாமல். நமது வாழ்வின் நோக்கத்தை அடைய முடியாது.

ஆகவே நமது ஞான வாழ்வு (Spiritual life) தாழ்ச்சியில்தான் ஆரம்பிக்கிறது.

"நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்." (மத்.11:29)

அவர் சர்வ வல்லவராய் இருந்தாலும்,

இயேசு தந்தைக்கும் அவருக்கும் ஒரே சித்தமாய் இருந்தாலும்

 பேசும்போது தன் தந்தையையே முன்னிருத்தி பேசுவார்.

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்." (அரு. 6:38)

இது நமக்கு முன்மாதிரிகையாக இருப்பதற்காக.

நாமும் நமது வாழ்நாளில் எதையாவது சாதித்தால், அது இறைவன் அருளால்தான், நமது திறமையினால் அல்ல என்பதை உணரவேண்டும்.

சுயமாக நம்மால் ஒரு அணுவைக் கூட அசைக்க முடியாது.

நாம் எதைச் செய்தாலும்

நமது திறமையை வெளி காட்டுவதற்காகச் செய்யக் கூடாது.

  நமக்குச் சொந்தமான திறமை ஒன்றுகூட நம்மிடம் இல்லை.

 நம்மிடம் இருப்பதெல்லாம் இறைவன் நமக்குத் தந்த  நன் கொடையே,

 ஆகவே நாம் எதை செய்தாலும் 

 *இறைவனின் அதிமிக மகிமைக்காக*

 என்ற மகத்தான நோக்கத்திற்காகச் செய்ய வேண்டும்.

அதைச் செய்து முடித்த பின்பு,

'அது இறைவனின் அருளால் மட்டும் சாத்தியமாயிற்று'
 
என்று கூறி இறைவனுக்கு நன்றி செலுத்தி,

 அவரை மகிமைப்படுத்த வேண்டும்.

இறைவனின் அதிமிக மகிமைக்காக சாதனைகள் புரிய வேண்டுமென்றால் 

முதலில் நம்மையே முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

 அவரை நம்மில் செயலாற்ற விட்டுவிட வேண்டும்.

 நாம் அவரது கருவியாக மட்டும் பயன்பட  வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்பதற்காக தூண்டுதல்களை (inspirations)

அவரே நமது உள்ளத்தில் கொடுப்பார்.

 நாம் அவரது தூண்டுதல் படி செயல்புரிய வேண்டும்.

இப்போது செயல்படுவது நாம் அல்ல, இறைவனே நம்மில் செயல் ஆற்றுவார்.

 நாம் கொடுக்க வேண்டியதுதான் நம்முடைய ஒத்துழைப்பை மட்டும்தான்.

 சாதனையின் முடிவில் நமக்குத் தெரியும், சாதித்தது நாம் அல்ல,

  இறைவனே நம்மை கருவியாக பயன்படுத்து சாதித்துள்ளார் என்று.

 ஆகவே அதன் மகிமை முற்றிலும் அவருக்குச் சேர வேண்டும்.

 நம்மை கருவியாக பயன்படுத்திய மைக்கு அவருக்கு நன்றி கூற வேண்டும்.

நமது இயலாமையையும் ஒன்றுமில்லாமையையும் நாம் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டால்

 இறைவன் பெரிய பெரிய சாதனைகளை சாதிக்க நம்மைக் கருவியாக பயன்படுத்திக் கொள்வார்.

நாம் ஒவ்வொரு நாளையும் 
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்தால் 

நம்மில் வாழும் திரியேக தேவன் அன்றைய நாள் முழுவதும் நம்மில் செயலாற்றி கொண்டிருப்பார்.

நாளை மட்டுமல்ல,

 ஒவ்வொரு வேலையையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பரிசுத்த  தமதிரித்துவத்தின் பெயராலேயே ஆரம்பிக்க வேண்டும்.

தாழ்ச்சியால் மிக மேன்மையான காரியங்களைச் சாதிக்க முடியும்.

மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த  இறைவன் மனத் தாழ்ச்சி உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்.

மரியாளின் தாழ்ச்சிதான் அவளை இரட்சகரின் தாயாகும் தகுதியைப் பெற்றுக் கொடுத்தது.

*"தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார்.* 

இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.


 *ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர்  புனிதமாமே."*

என்ற மரியாளின் வார்த்தைகள்

*அடிமையான* அவளுக்கு வல்லமை மிக்கவர் அரும்பெரும் செயல் பல புரிந்ததை சுட்டிக் காண்பிக்கின்றன.

தாழ்ச்சி உள்ளவர்களையே இறைவன் மேன்மைப்படுத்துவார்.

13ம் நூற்றாண்டில் பொருளாசையினால் ஏற்பட்ட தீமைகளிலிருந்து திருச்சபையைக் காப்பாற்ற அசிசி நகர் *ஏழையை* இறைவன் தேர்ந்தெடுத்தார்.

ஏழ்மையின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவே அவர் பிரான்சிஸ்கன் சபையை நிருவினார்.

பிரான்சிஸ் அசிசி தாழ்ச்சி மிக்கவர். புனிதத்துவம் மிக்கவராய் இருந்தாலும்,

 குருத்துவ அந்தஸ்துக்கு தான் தகுதி இல்லை எனக் கருதி 

கடைசி வரை சகோதரராகவே வாழ்ந்தார்.

"தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி."

என்ற வாக்கியத்திலேயே தாழ்ச்சியின் பெருமை இருக்கிறது.

அரசி என்றால் ஆள்பவள். உயர்ந்தவள்.

தன்னையே தாழ்த்திக்கொள்ளும் தாழ்ச்சி மற்ற புண்ணியங்களை விட உயர்ந்தது. 

தாழ்ச்சி உள்ளவர்கள்தான் 

பொறுமை,
கற்பு,
உதாரம்,
மட்டசனம்,
பிறர் சிநேகம்.
சுறுசுறுப்பு.

ஆகிய மற்ற புண்ணியங்களையும் 
உடையவர்கள் ஆக முடியும்.


"தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்." (மத்.23:12)
என்பது இயேசுவின் வாக்கு. 

நமது ஒன்றுமில்லாமையை ஏற்றுக் கொள்வோம்.

எல்லாம் வல்ல இறைவன் நம்மை விண்ணகத்துக்குள் ஏற்றுக்கொள்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment