நமது சொந்த வீடு விண்ணகம்.
------------------------------------------------------------
வெளியூர்களுக்கோ, வெளி நாட்டிற்கோ உல்லாசப் பயணம் சென்றவர் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
எங்கு சென்றாலும் சொந்த ஊரையும், சொந்த நாட்டையும் மறக்க மாட்டார்கள்.
எங்கு சென்றாலும் வீட்டில் உள்ளவர்களோடு phone மூலம் பேசி மகிழ்வார்கள்.
எங்கு அழகான, பயனுள்ள பொருட்களைப் பார்த்தாலும் சொந்த வீட்டில் வைப்பதற்காக விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.
சொந்த ஊரில் உறவினர்களுக்குக் கொடுப்பதற்காகவும் நிறைய பொருட்கள் வாஙகுவார்கள்.
சொந்த ஊருக்குத் திரும்பும் நாளில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
வீட்டையும், சொந்தங்களையும் பார்க்கப் போவதை எண்ணி மகிழ்வார்கள்.
திரும்பும் வழியெல்லாம் தங்கள் பெற்றோரையும், உற்றோரையும் நினைத்து நினைத்து மகிழ்வார்கள்.
பிரயாணத்தில் ஏதாவது தடை ஏற்பட்டால் சீக்கிரமாக வீட்டிற்குப் போக முடியாமைக்காக வருந்துவார்கள்.
தடை நீங்கினால் மகிழ்வார்கள்.
வீட்டை நெருங்கும் போது மட்டற்ற மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
சொந்தங்களை பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
இந்த உலக அனுபவத்தை நமது ஆன்மீக அனுபவத்தோடு ஒப்பிடுவோம்.
இவ்வுலகில் நமது ஆன்மீகப்பயணம் எப்படி இருக்க வேண்டும்?
நமது சொந்த வீடு விண்ணகம்.
நமது விண்ணகத் தந்தையும், நமது சகோதரரும், நமது அன்புக்கு உரியவரும் ஒரே கடவுளாக வாழும் இடம்.
நமது புனித உறவினர்களும் அங்குதான் வாழ்கிறார்கள்.
உலகம் நாம் பயணம் செய்து பார்க்க வந்த இடம்.
இந்த உலகம் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அது விண்ணக அழகிற்கு ஒப்பாகாதாது.
ஆகவே இந்த உலகில் எங்கு பயணம் செய்தாலும் எவ்வளவு காலம் பயணம் செய்தாலும்
நம்முடைய மனது சொந்த வீடாகிய விண்ணகத்தில்தான் இருக்க வேண்டும்.
நமது பயண காலமெல்லாம் இறைவனோடும்,
புனித உறவினர்களோடும்
ஜெபம் மூலம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
நமது அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இவ்வுலகில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் அவையெல்லாம் ஹோட்டல் ரூம் வசதிகளை போலத்தான்.
ஹோட்டலை விட்டுப் போகும் போது அங்குள்ள வசதிகளை நம்முடன் எடுத்து செல்ல முடியாது.
இங்கு நாம் சம்பாதிக்கும் அருள் செல்வங்களை மட்டும்தான் நம்மோடு விண்ணகத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
ஆகவே நாம் நமக்கு வேண்டிய அருள் செல்வங்களை சம்பாதிப்பதில் மட்டும் தான் குறியாக இருக்க வேண்டும்.
சொந்த ஊருக்குத் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அந்த நாள் வரும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இவ்வுலக பயணத்தை முடித்துக்கொண்டு விண்ணகத்திற்கு செல்லும் நாள் வரும்போது நாம் மகிழ்ச்சியாக இருக்காவிட்டால் அதன் பொருள் என்ன?
நாம் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு பொருள், விண்ணகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத ஏதோ ஒரு பொருள் நம்மிடம் இருக்கிறது என்பதுதான் அதன் பொருள்.
அந்தப் பொருள் பாவமாகத்தான் இருக்கும்.
பாவம் நாம் விண்ணகத்திற்குள் நுழைவதற்குத் தடையாக இருக்கும்.
பாவம் இல்லாதவர்கள் மட்டும்தான்
பயண பூமியாகிய இவ்வுலகை விட்டு விண்ணகம் செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்.
அந்நாள் வந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பர்.
ஆகவே சொந்த வீட்டிற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் நாம் பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்றிருக்க வேண்டும்.
இவ்வுலக வாழ்வின் போது நாம் நமது இறுதி நாளை அடிக்கடி நினைத்து தியானித்து பார்த்தோமென்றால் பாவம் நம்மை நெருங்காது.
நோய் நம்மை நெருங்காது இருக்க தடுப்பு ஊசி போட்டுக் கொள்கிறோம்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாவத்திற்கான தடுப்புமருந்து நம் எல்லோரிடமும் இருக்கிறது,
நமது இறுதியில் நாளை பற்றிய தியானம் தான் அது.
இறுதி நாளை பற்றித் தியானிப்பது அதை கண்டு பயப்படுவதற்காக அல்ல.
நம்மை நாமே அதற்காக தயாரிப்பதற்காக.
ஒருவரோடு நமக்கு சமாதானம் இல்லை என்றால் அவரோடு உறவு இல்லை என்று அர்த்தம்.
இருவருக்கிடையே மனத்தாங்கல் ஏற்பட்டால் சமாதானம் முறியும், உறவும் கெடும்.
மனத்தாங்கலிலிருந்து விடுதலை பெற்றால்தான் உறவு மீண்டும் ஏற்படும்.
அதேபோல்தான் பாவத்திலிருந்து விடுதலை பெற்றால் தான் நாம் இழந்த இறை உறவு திரும்பும்.
இவ்விடுதலையை நமக்கு பெற்றுத் தருவது ஒப்புரவு அருட்சாதனம்.
இறைவனோடு மட்டுமல்ல நமது அயலானோடும் சமாதான உறவோடு நாம் வாழ வேண்டும்.
அயலானோடு நமக்குச் சமாதானம் இல்லாவிட்டால் நமது காணிக்கையையே இறைவன் ஏற்க மாட்டார்.
"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,
24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து." (மத். 5:23, 24)
காணிக்கையையே ஏற்காதவர் நம்மை எப்படி ஏற்பார்?
ஆகவே விண்ணக வாயிலினுள் நுழைய வேண்டுமானால் நாம் இறைவனோடும், அயலானோடும்
சமாதானமாய் இருக்க வேண்டும்.
மன்னிப்பு இருக்கும் இடத்தில்தான் சமாதானம் இருக்கும்.
இறைவன் நம்மை மன்னிக்கும் போது, இறைவனுக்கும், நமக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது.
நாம் நமது அயலானை மன்னிக்கும்போது அவனுக்கும், நடக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது.
நமது அயலானுக்கான நமது மன்னிப்பு உதட்டிலிருந்து வந்தால் போதாது, உள்ளத்திலிருந்து வரவேண்டும்.
இயேசு தனது மரணத்தால் நமது மன்னிப்புக்கும், சமாதானத்திற்கும் வழி வகுத்தார்.
நமது சமாதானத்திற்காக இயேசு கொடுத்த விலை, அவரது விலைமதிப்பற்ற உயிர்.
ஆகவே, நாம் அனுபவிக்கும் சமாதானம் விலைமதிப்பற்றது.
நமது சொத்து சுகங்களோ, வங்கியில் நமது கணக்கில் இருக்கும் பணமோ, நாம் வாழும் வீடோ, வீட்டிலுள்ள வசதிகளோ நம்முடன் விண்ணகத்திற்குள் வராது.
இறைவன் தந்த சமாதானம் மட்டும் தான் நம்முடன் வரும்.
நாம் அனுபவிக்கும் சமாதானத்தைக் காப்பாற்றுவதற்காக நமது உடைமைகள் அனைத்தையும் இழக்கலாம்.
ஆனால் அழிந்து போகும் உலக உடைமைகளைக் காப்பதற்காக இறை உறவையும், சமாதானத்தையும் இழந்தால் நித்திய பேரின்பம் கைவிட்டுப் போய்விடும்.
நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் நமது இவ்வுலக வாழ்நாளைக் கூட்டுவதில்லை,
மாறாக, நமது வாழ்நாளின் இறுதியை,
அதாவது, விண்ணக வாழ்வின் ஆரம்பத்தை நெருக்கிக் கொண்டிருக்கிறது.
ஆகவே நமது உயிரைக் காப்பாற்றுவதில் நாம் காட்டக்கூடிய அக்கரையைவிட,
நமது சமாதானத்தைக் காப்பாற்றுவதில் அதிக அக்கரை செலுத்த வேண்டும்.
நமது உயிரை காப்பாற்ற வேண்டிய கடமையை நமக்கு இருக்கிறது, மறுக்க முடியாது.
பாவத்தில் விழாதிருக்கவும், இறையுறவோடும், சமாதானத்தோடும் வாழவுமான கடமை அதை விட அதிக முக்கியமானது.
ஏனெனில் உயிர் போனால் அழியும் இவ்வுலகம் மட்டும் தான் போகும்.
ஆனால் சமாதானம் போனால் அழியாத விண்ணரசு போய்விடும்.
இன்று ஆட்டம் போடும் கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள அரசு காட்டும் வழிமுறைகளை பின்பற்றுவோம்.
அதைவிட அதிக உற்சாகமாக
நமது ஆன்மாவை காத்துக்கொள்ள தாய்த் திருச்சபை காட்டும் வழிமுறைகளை பின்பற்றுவோம்.
தாய்த்திருச்சபை காட்டும் வழியே சென்றால்தான்
நமது சொந்த வீடாகிய விண்ணகத்துக்குச் செல்லமுடியும்.
தாயின் கையைப் பிடித்துக் கொண்டு தந்தையின் வீட்டிற்கு, அதாவது, நமது வீட்டிற்குச் செல்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment