இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர். ( மத். 5:7)
*************************************
கடவுள் ஆதி காரணர்.
அவரால் படைக்கப்பட்ட நாம் வாழும் பிரபஞ்சத்தின் அனைத்து நிகழ்வுகளும் காரண காரியத் தொடர்புடையவை.
ஒவ்வொரு நிகழ்வும் ஏதாவது ஒரு காரணத்தின் விளைவு.
ஒவ்வொரு விளைவும் அதைத் தொடர்ந்து வரும் விளைவுக்கு காரணமாக இருக்கும்.
நமது ஆன்மீகப் பயணத்தின் இறுதியில் நாம் அடையப் போகும் விண்ணக அரசு இறுதி விளைவு.
நமது இறுதி விளைவிலிருந்து பின்னோக்கி சில படிகளை (Steps) எடுத்து வைத்து, நமக்கும் நமது இறுதி விளைவுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
நாம் விண்ணரசுக்குள் நுழைய எது காரணமாக இருக்கும்?
நமது பரிசுத்தத்தனம்.
நமது பரிசுத்தத்தனத்திற்கு எது காரணமாக இருக்கும்?
நாம் பெற்ற பாவமன்னிப்பு.
நாம் பெற்ற பாவமன்னிப்புக்கு எது
காரணமாக இருக்கும்?
இறைவனிடமிருந்த நாம் பெற்ற இரக்கம்.
"இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.'' (மத். 5:7)
இறைவாக்கின்படி யார் அயலான் மீது இரக்கப் படுகிறார்களோ, அவர்கள் இறைவனின் இரக்கத்தால் பயனடைவார்கள்.
அதாவது
பிறர் மீது நாம் இரங்கினால் இறைவன் நம்மீது இரங்குவார்.
நம்மீது உள்ள இறைவனின் இரக்கம் நமக்கு பாவ மன்னிப்பைத் தரும்.
பாவ மன்னிப்பு நம்மைப் பரிசுத்த மாக்கும்.
பரிசுத்தத்தனம் நமக்கு விண்ணகத்தைப் பெற்றுத்தரும்.
ஆக இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட இரக்கத்தை மற்றவர்களிடம் காண்பித்தால்தான் நமக்கு விண்ணகம் கிடைக்கும்.
நாம் மற்றவர்கள் மீது இரக்கப்பட மறுத்தால் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது.
நாமே இதைத்தான் இறைத்தந்தையிடம் தினமும் பல முறை கூறுகிறோம்.
" எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்."
அதாவது
"எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுக்காவிட்டால்
எங்கள் பாவங்களை பொறுக்க வேண்டாம்."
என்று நாம்தான் இறைத் தந்தையிடம் கூறுகிறோம்.
இறைவன் இயல்பிலேயே அளவற்ற அன்பு உள்ளவர்.
அளவற்ற அன்பு உள்ள இடத்தில் அளவற்ற இரக்கமும் இருக்கும்.
இறைவன் நம்மை அவர் சாயலாக படைத்தபோது நம்மோடு அவரது அன்பையும் இரக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அவற்றை நம் மீது மட்டுமே நாமே காண்பித்துக் கொள்வதற்காகவா நம்மோடு பகிர்ந்து கொண்டார்?
இல்லை.
நம் மீது அவர் அன்பு காட்டுவது போலவும்,
இரக்கம் காட்டுவது போலவும்
நாமும் நம்முடைய அயலான் மீது அன்பு காட்ட வேண்டும்
இரக்கம் காட்ட வேண்டும்.
இதை அவர் நமக்கு கட்டளையாகவே கொடுத்திருக்கிறார்.
அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே விண்ணக அரசு உரிமையாகும்.
கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது.
கொள்கையை நடைமுறைப் படுத்தா விட்டால் கொள்கையால் என்ன பயன்?
ஒரு பையன் தனியாக உட்கார்ந்து இனிமையாக பாடிக் கொண்டிருந்தான்.
அவன் பாடிக் கொண்டிருந்ததை அவனுக்குப் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்த நான்
அவனை பாராட்டும் நோக்கத்தோடு அவனுக்கு முன்னால் சென்றேன். அவன் பாடுவதை நிறுத்திவிட்டான்.
"ஏன் நிறுத்திவிட்டாய்? பாடு" என்றேன்.
அவன் இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
விசாரிக்கும்போது தெரிந்தது, அவன் கூச்ச 'சுபாவம்' உள்ளவனாம்.
ஒருவன் ஒரு கம்பெனியில் வேலை கேட்பதற்காக கம்பெனி முதலாளியின் வீட்டிற்குச் சென்றான்.
முதலாளியுடன் பேசினான்.
"கொஞ்சம் உட்கார். என் மனைவி வரட்டும் அவளிடம், ஆலோசித்துச் சொல்கிறேன்".
மனைவி வந்தாள்.
"என்ன தம்பி, என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?"
"நமது கம்பெனியில் உதவி மேனேஜர் வேலை காலியாக உள்ளது அல்லவா. அதற்கு விண்ணப்பிக்க வந்திருக்கிறான்."
"நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"நான் வேறொரு ஆளை மனதில் வைத்திருக்கிறேன். இவனுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்."
வந்தவனுக்கு Shock அடித்தது.
"உங்க ஆள உங்க மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள். தம்பி விண்ணப்பத்தைக் கொடு."
கொடுத்தான், வாசித்துப் பார்த்தாள்.
"சரி நாளை காலையில் வந்து வேலையில் Join பண்ணிக்கோ."
சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
"என்ன சார், அப்படி சொன்னீங்க?"
"உனக்கு என் மனைவியின் சுபாவம் தெரியாது.
நான் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மறையாய் செயல்படுவதுதான் அவளது சுபாவம். உனக்கு வேலை கிடைப்பதற்காகதான் அப்படிச் சொன்னேன்."
" நன்றி சார்."
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு சுபாவம் இருக்கும். அதன்படிதான் செயல்படுவார்கள்.
இரக்கப்பட வேண்டும் என்பது நமது கொள்கையாக இருப்பதைவிட சுபாவமாக இருந்தால்தான் நல்லது.
நமக்கு எதிராக தீமை செய்தவர்களிடம் மட்டுமல்ல
நமக்கு சம்பந்தமே இல்லாத அனைவரிடமும் இரக்கப்படுவது நமது சுபாவமாக இருக்க வேண்டும்.
சிலர் மிருகங்கள் கஷ்டப்பட்டால் கூட "ஐயோ பாவம்" என்று தங்கள் இரக்கத்தைக் காண்பிப்பார்கள்.
மனிதர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?
ஒரு நாள் ஒரு மாணவன் வகுப்பிற்கு பிந்தி வந்தான்.
''ஏண்டா late?" என்று கேட்டேன்.
" சார், வழியில் ஒரு தாத்தா நடக்கமுடியாமல் உட்கார்ந்திருந்தார். அவரைச் சைக்கிளில் ஏற்றி, வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு வருகிறேன்."
"Very good. நல்ல பையன். போய் உட்கார்" என்றேன்.
உண்மையில் யாராவது தப்பு செய்யும் போது அவர்கள் மீது நமக்கு கோபம் வரக்கூடாது. இரக்கம்தான் வரவேண்டும்.
தப்பை திருத்த முயல வேண்டும், கோபத்தோடு அல்ல, இரக்கத்தோடு.
இதை எழுதும்போது நமது பிரிவினை சபையார், பைபிள் பாஸ்டர்களின் ஞாபகம் வந்தது.
அவர்கள் மீது பாவமாக இருக்கிறது.
அவர்களோடு வாதாடி திருத்த முயல்வதும், சுருட்டை முடியை நிமிர்க்க முயல்வதும் ஒன்றுதான்.
முயலின் ஒரு காலை வெட்டி எடுத்துவிட்டு, முயலுக்கு மூன்று கால் தான் என்பார்கள்.
உண்மையான பைபிளிலிருந்து ஏழு புத்தகங்களை அகற்றி விட்டு
மீதி இருப்பதை முழு பைபிள் என்று வாதாடுவார்கள்.
ஒரு ஆள் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர் சொல்லும் எதையும் நம்ப கூடாது.
அவர்களுக்கு கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை இல்லை.
பிறகு அவர்கள் எந்த அடிப்படையில் பாரம்பரியம் தந்த பைபிளை மட்டும் நம்புகிறார்கள்?
அவர்களது போக்கே ஆரம்பம் முதல் முன்னுக்குப் பின் முரணானது.
அவர்கள் நமது விசுவாச சத்தியங்களை கேலி செய்யும் போது
" ஐயோ பாவம், தெரியாமல் பேசுகிறார்கள்"
என்று இரக்கத்தோடு, அவர்கள் மனம் திரும்ப ஜெபம் சொல்ல வேண்டுமே தவிர
அவர்களோடு வாதாடி நமது நேரத்தை வீணாக்கக்கூடாது.
அவர்களோடு வாதாடும் நேரத்தை நம்மவர்கள் அவர்கள் பக்கம் போகாதபடி பார்த்துக்கொள்வதில் செலவழிக்க வேண்டும்.
ஆடுகள் மந்தையை விட்டு வெளியே போகாதபடி மேய்ப்பன் கவனமாய் இருந்தால்
திருடனால் ஒன்றும் செய்ய முடியாது.
இரக்கம் நமது சுபாவம் ஆகிவிட்டால்
நம்மைத் திட்டுவோர் மீது,
அடிப்போர் மீது கூட கோபம் வராது, இரக்கம் மட்டுமே வரும்.
இரக்கம் சுபாவம் ஆகிவிட்டால்,
மன்னிப்பதும் நமது சுபாவமாகிவிடும்.
ஒரு நாட்டில ஒரு ராஜா இருந்தார்.
இரக்க சுபாவம் உள்ளவர்.
அவரது இரக்கத்தை இயலாமை என்று எண்ணி பக்கத்து நாட்டு அரசன் அவரது நாட்டின் மீது போர் தொடுத்தான்.
ஆனால் வலிமை வாய்ந்த ராஜாவின்
படையிடம் தோற்றான்.
அரசன் உட்பட ஆயிரக்கணக்கான வீரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசிக்க அமைச்சரவையைக் கூட்டினான்.
" மன்னா, தங்கள் இரக்கம் நம் மக்களுக்கு ஏற்றது தான்.
ஆனால் எதிரிக்கு இரக்கம் காட்டினால் அவன் நமக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பான்.
இரக்கம் காட்டாமல் எதிரிகளை அழியுங்கள் " என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
"ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன். நாளைக்கு வெற்றி விழாவிற்கு ஏற்பாடு செய்யுங்கள்."
என்று அவர்களிடம் கூறிவிட்டு படைத் தளபதியுடன் கைதிகள்
இருந்த இடத்திற்குச் சென்றான்.
மறு நாள் வெற்றி விழாவிற்கு மன்னனை எதிர்பார்த்துக்கொண்டு அமைச்சர்களும் மக்களும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
மன்னன் வெற்றி விழாவிற்கு வந்தான்,
ஆனால் தனியாக வரவில்லை. அவனோடு எல்லா கைதிகளும் வந்தார்கள். அவர்களும் வெற்றி விழாவில் கலந்து கொண்டார்கள்.
இதை அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை.
மன்னன் மக்களிடம் பேசினான்.
"அன்பு மக்களே, நேற்று அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைப்படி எல்லா எதிரிகளையும் அழித்து விட்டேன்.
இப்போது என்னோடு விழாவிற்கு வந்திருக்கும் இவர்கள் நம்முடைய நண்பர்கள்."
எதிரிகளை நண்பர்களாக மாற்றும் சக்தி இரக்கத்திற்கு மட்டுமே உண்டு.
அயலானிடம் இரங்குவோம். இறைவனின் இரக்கத்தைப் பெறுவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment