கிறிஸ்துவின் மீட்பு பணியில் அவரோடு ஒத்துழைப்போம்.
****************************************
நண்பன்.
நாம் மிகவும் நேசிக்கும் நண்பன்.
ஒரு ஆபத்தான பாதை வழியே போய்க்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த பாதை வழியே சென்றால் திரும்பவே முடியாத நிலை ஏற்படும் என்று வைத்துக்கொள்வோம்.
நாம் நம்மை நேசிப்பதால் நிச்சயமாக அந்த பாதை வழியே செல்ல மாட்டோம்.
நம்மை நேசிப்பது போலவே நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இறைவன் கொடுத்த கட்டளை.
அப்படியானால் ஆபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நண்பனை தடுத்து நிறுத்துவோமா?
அல்லது,
"அவன் ஆசையோடு போய்க் கொண்டிருக்கிறான். நான் தடுத்து நிறுத்தினால் வருத்தப்படுவான்.
மற்றவர்களது சொந்த விஷயங்களில் தலையிட கூடாது.
அவன் பிடிவாதமானவன். நாம் சொன்னால் கேட்பானோ என்னமோ.
அவன் விருப்பப்படுவதை செய்யும்போது தடுத்தால் நட்பு முறிந்துவிடும்."
என்றெல்லாம் எண்ணி அவனை போகிறபோக்கில் போக விடுவோமா?
சில சமயங்களில் நண்பர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டத் தயங்குவோம்.
ஏனெனில் நாமே அந்த குற்றங்களை செய்து கொண்டிருப்போம்.
நண்பர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை திருத்த வேண்டுமா?
அல்லது
நாம் குற்றவாளிகள் என்பதற்காக அவர்களையும் நம் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா?
ஒரு தாய் சொல்கிறாள்,
"என் மகன் தவறான பாதை வழியே செல்கிறான்.
நான் அவனை திருத்த முயன்றால் அவனது மனது புண்பட்டு விடுமோ,
அவனது அன்பை இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்."
அவள் சொல்வது சரியா?
பழைய நாட்டுப்புற பாடல் ஒன்று உண்டு.
ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் சில நாட்கள் வராத ஒரு மாணவனைக் கூப்பிட அவனது வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
பையனுடைய அம்மா ஆசிரியரிடம்:
"பிள்ளையும் படிக்க வேண்டாம்.
பிரம்படி படி படவும் வேண்டாம்,
சள்ளையாம் சுவடு தூக்கி
சங்கடப் படவும் வேண்டாம்.
பிள்ளையென்று இருந்தால் போதும்
பெற்றவள் நான் களிக்க என்றாள்."
'எனது மகிழ்ச்சிக்கு பிள்ளை என்று இருந்தால் போதும், படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன.'
என்ற மனப்போக்கு இன்னும் சில பெற்றோரிடம் இருக்கிறது,
சகோதர அன்புடன் கூட மற்றவர்களை நாம் திருத்த முயலாமைக்கு அடிப்படை காரணம் நமது அளவுக்கு மீறிய சுய அன்பு.
(excessive self-love)
இறைவனை நேசிப்பதை விட,
நமது அயலானை நேசிப்பதை விட
நம்மை நாமே அதிகமாக நேசிப்பதுதான் நாம் நமது சகோதரர்களை திருத்த விரும்பாமைக்குக் காரணம்.
நாமும் நமது அயலானும் இறைவனது அன்பிற்குள் அடங்க வேண்டும்.
இறையன்பிற்குள் நாம் அடங்கிவிட்டால் இறைவனை மட்டுமே அன்பு செய்வோம்.
இறைவனை மட்டுமே அன்பு செய்யும் போது அந்த அன்பிற்குள் நாமும் நமது அயலானும் அடக்கம்,
அதாவது இறைவனை அன்பு செய்யும் போது நாம் நம்மையும் அன்பு செய்கிறோம், நமது அயலானையும் அன்பு செய்கிறோம்.
இறைவனை அன்பு செய்யாவிட்டால்
நாம் அன்பு என்று நினைக்கும் மற்றவையெல்லாம் வெறும் கவர்ச்சிகளே (only attractions, not real love) உண்மையான அன்பு அல்ல.
அழகை மட்டும் காரணமாக வைத்துக்கொண்டு ஒரு பெண்ணை நேசிப்பவன்
அவளது அழகு போனவுடன் நேசிப்பதை நிறுத்தி விடுவான்.
ஒரு பெண்ணை காதலிப்பவன் இறைவனது மகிமைக்காகக் காதலித்தால் அக்காதல் நிரந்தரமாக இருக்கும்.
மற்றவர்களை திருத்த விரும்புகிறவன் அச்செயலை இறைவனின் மகிமைக்காக செய்தால் அதற்குள் சுயநலம்
குறுக்கிடாது.
ஏனெனில் தவறு செய்பவர்களை திருத்த ஆசிக்கிறவன்
"முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி: பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும்." (மத். 7:5)
என்ற இறை வாக்குக்கு ஏற்ப முதலில் தன்னை திருத்திக் கொள்வான்.
நாம் மற்றவர்களை திருத்த ஆசிப்பது நாம் குற்றமற்றவர்கள் என்று மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக அல்ல.
ஒரு டாக்டர் மற்றவர்களுக்கு வைத்தியம் பார்ப்பது தனக்கு நோயே இல்லை என்று காண்பிப்பதற்காகவா? .
மற்றவர்களைக் குணப்படுத்துவதற்காக.
நாம் மற்றவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கிறோம்.
இயேசு நிறைவானவர்.
அவரது நற்செய்தியும் நிறைவானது.
ஆனால் நிறைவான இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கும் நாம் நிறைவானவர்கள் அல்ல.
நிறைவை நோக்கி பயணிப்பவர்கள்.
நாம் யாருக்கு நற்செய்தியை அறிவிக்கின்றோமோ அவர்களும் நிறைவை நோக்கி பயணிப்பவர்கள் தான்.
நற்செய்தி அறிவிக்கப்படுவதன்
நோக்கமே மற்றவர்களுடைய துவறுகளைத் திருத்தி
அவர்களை நிலை வாழ்விற்கான வழிக்கு கொண்டு வந்து சேர்ப்பதுதான்.
ஆகவே மற்றவர்களுடைய தவறுகளை நாம் திருத்த முயல்வதும் நற்செய்திப் பணியின் ஒரு அங்கமே.
மற்றவர்களை திருத்த முயலும் போது நமது முயற்சி வெற்றி பெறுமா பெறாதா என்பது முக்கியம் அல்ல.
இறைவன் எசெக்கியேல் இறைவாக்கினரிடம்:
"சிறைப்பட்டிருக்கும் உன் இனத்தாரிடம் சென்று பேசு:
"இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு" என்று சொல்:
அதை அவர்கள் கேட்கிறார்களா, கேட்க மறுக்கிறார்களா என்பது பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்றார்."
(எசேக். 3:11)
கடவுளிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காக
தவறு செய்பவர்களை திருத்துவது நமது கடமை.
அவர்கள் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்று எண்ணி கொண்டு
நாம் செய்யத் தவறக் கூடாது.
நாம் தவறு செய்பவர்களைத் திருத்த முயற்சிக்கும் போது
முதலில் நமது தவறுகளை நாம் திருத்திக் கொள்கிறோம்.
இயேசுவின் இரட்சிப்பு பணியில் நாம் ஒத்துழைக்கிறோம்.
இரட்சிப்புப் பணி என்பது மனிதர்களை பாவத்திலிருந்து மீட்கும்பணி.
பாவத்திலிருந்து மனிதர்களை மீட்பதற்காகத்தான்
இயேசு மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக
பாடுகள் பட்டு சிலுவை மரத்தில் தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.
அவர் பட்ட பாடுகளின் பலனை உலகோர் அனைவரும் பெற வேண்டும்.
இரட்சிப்பின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்.
நற்செய்தியை அறிவிக்கும் பணியைச் செய்வதற்காகத்தான் திருச்சபையை நிறுவி, அதன் தலைவராக இராயப்பரை நியமித்தார்.
இராயப்பரின் தலைமையிலான கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த அனவரும், கிறிஸ்துவின் மீட்பு பணியில் அவரோடு ஒத்துழைக்க வேண்டும்.
அதாவது கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க வேண்டும்.
நற்செய்தியை அறிவிப்பதின் நோக்கம் மக்களிடையே கிறிஸ்துவை பற்றிய அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல.
கிறிஸ்துவைப் பற்றிய அறிவை வளர்ப்பது மட்டும் நமது நோக்கமாக இருந்தால் அறிவை கொடுப்பதோடு நமது கடமை முடிந்துவிடும்.
கிறிஸ்துவை அறிந்து கிறிஸ்துவை வாழவேண்டும்.
அதாவது கிறிஸ்துவின் பண்புகளை நமது பண்புகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
நாமும் கிறிஸ்துவை வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்.
கிறிஸ்துவை வாழ்வதன் மூலம் அவரோடு நிலை வாழ்வில் இணைய வேண்டும்.
கிறிஸ்துவப் பற்றி நம்மைவிட சாத்தானுக்கு நன்கு தெரியும்.
அது தன் அறிவை கிறிஸ்துவுக்கு விரோதமாக பயன்படுத்துகிறது.
நாங்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தவுடன் எங்களது தலைமை ஆசிரியர் சுவாமி எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
"நீங்கள் ஆசிரியர் பயிற்சி பெறுவதின் நோக்கம் என்ன?"
அநேகர் சொன்ன பதில்,
"நாங்கள் ஆசிரியர்கள் ஆக வேண்டும்."
"அதாவது ஆசிரியர்கள் ஆனவுடன் உங்கள் நோக்கம் நிறைவேறிவிடும். அப்படித்தானே?"
"இல்லை சுவாமி, வேலை கிடைக்க வேண்டும்."
"நான் நோக்கத்தை கேட்டால் நீங்கள்
உங்கள் ஆசைகளை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆசிரியராக ஆவதோ, வேலை கிடைப்பதோ, சம்பளம் வாங்குவதோ இங்கு நீங்கள் பெறும் பயிற்சியின் நோக்கம் அல்ல.
உங்களிடம் ஒப்படைக்கப்படப் போகிற மாணவர்களை
நல்ல குடிமக்களாக ஆக்குவதுதான் உங்களது பயிற்சியின் நோக்கம்."
அதேபோல்தான் நற்செய்தியை அறிவிப்பதின் நோக்கம் கிறிஸ்துவை அறிவிப்பதோடு நின்றுவிடவில்லை.
நற்செய்தியை அறிந்தவர்கள் கிறிஸ்துவாக வாழ்ந்து, அவரோடு
நிலை வாழ்வில் இணைவதுதான் அதன் நோக்கம்.
வாழ்வின்றி அறிவால் பயனில்லை.
நிலை வாழ்வை அடைய வேண்டுமானால்
மக்கள் தங்களுடைய தவறுகளிடமிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.
பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் தான் கிறிஸ்துவாக வாழ முடியும்.
தங்களது ஆன்மீக வாழ்வில்
தவறான பாதை வழியே சென்று கொண்டிருப்பவர்களைத் தடுத்து நிறுத்தி
.
சரியான பாதைக்கு,
அதாவது,
நிலைவாழ்விற்கான பாதைக்குக் கொண்டு வர
நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு.
முதலில் நாம் நற்செய்தியை வாழ்வோம்.
அடுத்து
மற்றவர்களை வாழவைப்போம்.
எல்லோரும் நிலைவாழ்வில் கிறிஸ்துவோடு இணைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment