http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_18.html
.சமத்துவமா? அப்படீன்னா?
-------------______-----------______--------------
எனது மூத்த மகனுக்கு அப்போது நான்கு வயது.
ஒரு நாள் காலையில் ஆசையோடு என்னிடம் சொன்னான், " அப்பா, பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்கிறது."
11 மணி அளவில் சைக்கிளில் அவனை அழைத்துக்கொண்டு தென்காசிக்குச் சென்றேன்.
முன்சீப் கோர்ட்டிக்கு எதிரில் அப்போது இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று
இரண்டு கால் பிளேட் பிரியாணிக்கு order கொடுத்தேன்.
வந்தது.
பிளேட்டைப் பார்த்த என் பையன்,
" அப்பா, இது வேண்டாம். நான் கேட்டது பிரியாணி, சாப்பாடு அல்ல."
" அடே, இதற்குப் பெயர்தான் பிரியாணி."
"நான் இதைக் கேட்கவில்லை."
"பரவாயில்லை, சாப்பிடு "
எவ்வளவு கெஞ்சியும் சாப்பிட மறுத்து விட்டான்.
வேறு வழி இல்லாமல் இரண்டு பிளேட்டையும் நானே விழுங்கினேன்.
"சரிடா, நீ கேட்டதைக் காண்பி. வாங்கித் தருகிறேன்."
என்று சொல்லிக் கொண்டே bill ஐக் கட்டுவதற்காக கல்லாப் பெட்டிக்கு வந்தேன்.
" அப்பா, இந்தா இருக்கு பிரியாணி."
அவன் கை காண்பித்த இடத்தை பார்த்தேன்.
அங்கிருந்த மேஜையின் மேல் ஒரு தட்டில் பீடா அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
"அடேய் இது பிரியாணி அல்ல, பீடா. அதாவது வெற்றிலை."
"அப்பா இதுதான் பிரியாணி. இதைத் தான் கேட்டேன்."
அவன் 10 பைசா பீடா கேட்டிருக்கிறான், பிரியாணி என்ற பெயரில்!!
வாங்கிக் கொடுத்தேன்.
பையனுக்கு வயது நான்கு. ஆகவே அவன் சொன்னதைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தேன்.
ஆனால் இதையே ஒரு ஐம்பது வயதுக்காரர் சொன்னால் சிரிப்பு வராது.
நன்கு முதிர்ச்சி அடைந்தவர்களாக தோன்றுகிற மனிதர்கள் இதேபோல இடம்மாறி பயன்படுத்துகிற வார்த்தை ஒன்று இருக்கிறது.
சமத்துவம். (equality)
வார்த்தை இருப்பதால் அது குறிக்கும் கருத்து (concept) ஒன்றும் இருக்கிறது.
ஆனால் நம்மவர்கள் இல்லாத, இருக்க முடியாத ஒன்றுக்கு,
வேறு ஒன்றுக்கு இருக்கிற சமத்துவம் என்ற பெயரை இட்டு,
அதற்காகப் போராடுகிறார்கள்.
சமத்துவம் என்ற கருத்து இருக்கிறது.
சமத்துவத்தை தேட வேண்டிய இடமும் இருக்கிறது.
ஆனால் நம்மவர்கள் சமத்துவம் இருக்கவே முடியாத இடத்தில் அதைத் தேடுகிறார்கள்.
"பறவையைப் பார்த்தான், விமானம் படைத்தான்" என்ற பாடல் வரி ஒன்று உண்டு.
அதாவது மனிதன் இயற்கையைப் பார்த்து கற்றான் என்பது பாடல் வரியின் பொருள்.
ஆனால் சமத்துவத்தைப்
பொறுத்தமட்டில் மனிதன் இயற்கையைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவே இல்லை.
ஏற்ற தாழ்வு இல்லாத,
மேடு பள்ளம் இல்லாத,
மலைகள், பள்ளத்தாக்குகள் இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்.
புவியியல் ஆசிரியர் வகுப்புக்குக் கொண்டு வருவாரே, பூமி உருண்டை (Globe),
அதைப்போல்தான் இருக்கும்.
அப்படிப்பட்ட உலகைச் சுற்றி கடல் மட்டும் தான் இருக்கும்.
பூமியும் இருக்கும், கடலுக்கு அடியில்.
அப்படிப்பட்ட உலகில் நீர்ப் பிராணிகள் மட்டும்தான் வாழ முடியும்.
உயர்வும், தாழ்வும், மேடும் பள்ளமும் இருப்பதால் தான் நீர்வீழ்ச்சிகளும், ஆறுகளும் இருக்கின்றன.
வெப்பமும், குளிர்ச்சியும் இருப்பதால்தான் காற்று வீசுகிறது.
காற்று வீசுவதால்தான் மழை பெய்கிறது.
சமத்துவம் அற்ற இயற்கையில் இருந்து அதில் வாழும் மனிதன் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
'
ஏற்றதாழ்வுகள் உள்ள இயற்கையில் வாழும் மனித சமுதாயம் ஏற்றதாழ்வுகள் இல்லாமல் இயங்க முடியாது.
ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு நாள் அவர் மூத்த பையனிடம் பத்து ரூபாய் கொடுத்தார்.
இளைய பையனிடம் ஐந்து ரூபாய் கொடுத்தார்.
உடனே இளையவன்,
" அப்பா அண்ணனுக்கு பத்து ரூபாய் கொடுத்திருக்கீங்க.
எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருக்கீங்க.
இருவரும் உங்கள் பிள்ளைகள்தானே,
இருவரையும் சமமாக நடத்துங்கள்.
எனக்கும் பத்து ரூபாய் கொடுங்க."
அவன் சமத்துவம் பேசினான்.
அப்பா சொன்னார்,
" இருவரும் என் பிள்ளைகள் தான்.
ஆனால் அண்ணனுக்கு வயது பத்து. உனக்கு வயது ஐந்து.
சமவயதுள்ள பிள்ளைகளை அம்மாவால் பெற முடியுமா?
(Can a mother give birth to two children simultaneously?)
உலகில் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள்.
ஒரே இறைவன் தான் எல்லோரையும் படைத்தார்.
ஆனால் எல்லோரையும் ஒரே மாதிரி படைக்கவில்லை.
எல்லோருக்கும் ஒரே மாதிரி திறமைகளைக் கொடுக்கவில்லை.
அவரவருக்கு கொடுக்கப்பட்ட திறமைகளை அவரவர் திறம்பட பயன்படுத்த வேண்டும்.
ஏற்ற தாழ்வுகள் இருந்தால்தான் சமுதாயம் இயங்கும்.
குடும்பத்தை எடுத்து கொள்.
நானும் அம்மாவும் பெரியவர்கள். நீங்கள் இருவரும் சிறியவர்கள்.
நானும் அம்மாவும் ஒரே மாதிரியா இருக்கிறோம்?
என்னிடம் உடல் பலம் அதிகம். அம்மாவிடம் மனோபலம் அதிகம்.
என் முகத்தில் மீசை, தாடி இருப்பது போல் அம்மா முகத்தில் இல்லை.
அம்மாதான் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்தாள், நான் ஆசைப்பட்டாலும் என்னால் அது முடியாது.
சுருக்கமாகச் சொன்னால் இறைவன் எல்லோரையும் சமமாகப் படைக்கவில்லை.
புரிகிறதா"
இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும் பிரதம மந்திரிகளாக இருந்தால் எப்படி இருக்கும?
ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோரும் மேனேஜர்களாக இருந்தால் அலுவல் எப்படி நடக்கும்.?
ஏற்றதாழ்வுகள் இருந்தால்தான் சமூகம் இயங்கும்.
பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த முடியுமா?
முடியவே முடியாது.
இந்தியாவிலுள்ள மொத்த பணத்தையும் 130 கோடி பங்கு வைத்து எல்லோருக்கும் சமமாகப் பிரிந்துக் கொடுத்து,
"பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தியாகி விட்டது.
சமத்துவம் நீடிக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் அவரவரிடம் இருப்பதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
''பணம் கூடினாலும், குறைந்தாலும் ஆயுள் தண்டனை"
என்று உத்தரவு போட்டுவிட்டால் எப்படி இருக்கும்?!
சமத்துவத்துக்காகப் போராடுகின்றவர்கள் இல்லாத ஒன்றுக்காக போராடுகிறார்கள்.
கணிதத்தில் 3 + 4 = 7. சரி.
ஆனால்
3 கழுதைகள் + 4 குதிரைகள் = 7 யானைகள் கூறுவது எப்படிச் சரியாகும்?
சமூகத்திலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் சமத்துவத்தை தேடினால் கிடைக்காது,
அப்படியானால், அதை எங்கே தேட வேண்டும்?
அதற்கும் நமக்கு இயற்கைதான் பாடம் கற்று தருகிறது.
சமூகத்திலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் மனிதன் சமத்துவத்தை தேடி போராடிக் கொண்டிருக்கிறான்.
ஏனெனில் ஏற்ற தாழ்வுகள்தான் உலகின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று அவன் நினைக்கிறான்.
ஆனால் ஏற்ற, தாழ்வுகள் உள்ள இயற்கை கோடானுகோடி ஆண்டுகளாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதே, அது எப்படி?
இப்போது யாருடைய குரலோ கேட்கிறது,
" நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு எல்லாம் பிரச்சனைகள் இல்லையா?"
இல்லை. அவை இயற்கை நிகழ்வுகள்.
இயற்கையின் விதிகள் படி நடப்பவை.
மனிதன்தான் அவற்றைப் பிரச்சனைகள் என்று நினைக்கிறான்.
நமது உடல் இயற்கையின் ஒரு பகுதிதான். கோடிக்கணக்கான cell களால் ஆனது.
கோடிக்கணக்கான cell களும் தனித்தனியே இயங்கினாலும், இஷ்டம்போல் இடம் பெயர்ந்து போகாமல், அததன் இடத்தில் இருந்து மற்ற செல்களோடு ஒத்துழைத்து இயங்குவது எதனால்?
செல்களுக்குள் இருக்கும் ஈர்ப்பு சக்தியால். (magnetic power)
உலகில் வாழும் கோடானுகோடி பிராணிகளும் பூமியோடு ஒட்டி வாழ்வது எதனால்?
பிராணிகளுக்கும் பூமிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு சக்தியால்.
நட்சத்திரங்களும், கோள்களும் அததன் பாதையில் ஒழுங்காக வலம் வந்துகொண்டிருப்பது எதனால்?
அவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்பு சக்தியால்.
ஈர்ப்பு விசையின் காரணமாகத்தான் பிரபஞ்சமே கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை விதிகளின்படி இயங்கிக் கொண்டிருக்கிறது.
அணுக்களுக்கு இடையே இருக்கும் ஈர்ப்பு விசை தான் அண்டம் முழுவதும் இருக்கிறது.
ஏற்றதாழ்வுகள் உள்ள பிரபஞ்சம் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு இருக்கிறது.
மிகப் பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும், மிகச் சிறிய அணுக்களாக இருந்தாலும் ஈர்ப்பு விசையின் முன் அனைத்தும் சமம்.
மனிதர்களை மனுக்குலமாக கட்டி வைத்திருப்பது அவர்களுக்கு இடையே உள்ள ஈர்ப்புவிசையாகிய அன்பு ஒன்றுதான்.
அன்பின் முன் அனைவரும் சமம்.
நாம் நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசிக்க வேண்டும்.
நாம் நம்மையே வெறுக்க மாட்டோம்.
ஆகவே பிறர் அன்பு இருக்குமிடத்தில் வெறுப்பு இருக்காது.
நாம் நம்மையே பகைக்க மாட்டோம்.
ஆகவே பிறர் அன்பு இருக்குமிடத்தில் பகை இருக்காது.
நரம் நம்முடனே சண்டை போட மாட்டோம்.
ஆகவே பிறர் அன்பு இருக்குமிடத்தில் சண்டை இருக்காது.
சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
ஆனால் பிறர் அன்பின் அடிப்படையில்
பொருள் உள்ளவன் பொருள் இல்லாதவரோடு தன்னிடமுள்ள பொருளை பகிர்ந்து கொள்வான்.
அன்பின் முன் இருவரும் சமம் ஆகிவிடுவர்.
உடை உள்ளவன் இல்லாதவனுக்கு உடையைக் கொடுக்க வைப்பது அவனிடமுள்ள அன்பு.
அன்பு எல்லோரையும் சமமாக்கிவிடும்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
.
No comments:
Post a Comment