Wednesday, September 2, 2020

பரிசுத்தத் தனத்தை அடைய வெகு எளிதான வழி எது?

பரிசுத்தத் தனத்தை அடைய வெகு எளிதான வழி  எது?
****************************************


வெயிலின் அருமை நிழலில் தெரியும். 

எப்போதும் நிழலிலேயே இருப்பவர்களுக்கு நிழலின் அருமையும் தெரியாது, 

வெயிலின் அருமையும் தெரியாது.

நிழலின் அருமை  தெரியாது,

ஏனெனில் அவர்கள் நிழலில்தான் இருக்கிறார்கள்.

 நிழலை விட்டு வெயிலுக்குப் போகும்போதுதான் நிழலின் அருமை தெரியும்.

வெயிலின் அருமை  தெரியாது, ஏனெனில் அவர்கள் வெயிலுக்கு போகவில்லை.

வெயிலில் வெப்பத்தை அனுபவித்துவிட்டு நிழலுக்குச் சென்றால்தான்

நிழலின் குளுமையை அனுபவிக்க முடியும்.

நிழலின் குளுமையை அனுபவிக்க வேண்டுமானால்,

முதலில் வெயிலில் வெப்பத்தை அனுபவித்திருக்க வேண்டும்.


இந்த தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் இன்பத்திற்கான ஒரே வழி துன்பம் என்பது புரியும்.

இது நம் ஆண்டவர் நமக்கு கற்பித்த பாடம்.

மரணத்திற்குப் பின்தான் உயிர்ப்பு.

இயேசு "பாடுகள் பல படவும்,

கொலையுண்டு 

மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்றார்.

நமது பேரின்ப வாழ்விற்காக 

இயேசு முதலில் கொலை செய்யப்பட்டார், 

அடுத்து 

உயிர்த்தெழுந்தார்.

இயேசுவின் மரணமும், உயிர்ப்பும்தான் நமது இரட்சண்யத்துக்கான காரணம்.

பரிசுத்தமாக இருப்பவர்கள்தான் விண்ணகத்திற்கு செல்ல முடியும்.

Only holy people Can enter Heaven.

பரிசுத்தத் தனத்தை அடைய வெகு எளிதான வழி துன்பம்தான்.

The easiest way to holiness is suffering.


"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், 

தன்னையே மறுத்துத் 

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு

 என்னைப் பின்தொடரட்டும்."

குருவின் பாதையில் நடக்க விருப்பம் இல்லாதவன் அவரின் சீடனாக இருக்க முடியாது.

இயேசுவின் பாதையில் நடக்க விருப்பம் இல்லாதவன் அவரின் சீடனாக இருக்க முடியாது.

இயேசுவின் பாதை சிலுவைப் பாதை.

நாம் நடக்க வேண்டிய பாதையும் அதுதான்.

"என்பொருட்டுத் 

தன் உயிரை இழப்பவனோ 

அதைக் கண்டடைவான்."

நித்திய ஜீவனை அடைய விரும்புகிறவன்

இயேசுவுக்காகத் 

தன் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

"நானே வழி" என்று இயேசு சொன்னார்.

இயேசுவாகிய வழிதான் விண்ணகத்திற்கான வழி.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுடன் 

நாமும் சிலுவையில் அறையப் பட்டால்தான் நாமும் அவரோடு விண்ணகத்திற்குச் செல்ல முடியும்.

இயேசு நம்மைப் படைத்த கடவுள். அவரோடு இணைந்து விண்ணக  மகிமையில் பங்கு பெறவேண்டுமென்றால்,

அவரோடு இணைந்து அவரது பாடுகளிலும் மரணத்திலும் பங்கு பெறவேண்டும்.

இயேசு கடவுள். கடவுளால் துன்பப்பட முடியாது. அவர் பேரின்பமயமானவர்,

ஆனால் அவர் நமக்காக, நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத் துன்பத்தை அவரே தேர்ந்தெடுக்கிறார்.

துன்பம் அவரைத் தேடிச் செல்லவில்லை.

அவர்தான் துன்பத்தைத் தேடிவந்தார்.

துன்பப்படுவதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.

இயேசு தேவசுபாவத்தில்  துன்பம் அனுபவிக்கவில்லை,
 அனுபவிக்க முடியாது.

துன்பத்தை அனுபவிக்க,

மார்கழி மாத குளிரின் கொடுமையை அனுபவிப்பதற்காகவே 

அவர் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து மாடு உணவு உண்ணும் தீவனத் தொட்டியைத் தன் படுக்கையாக ஏற்றுக் கொண்டார்.

ஆரம்பத்திலிருந்தே இயேசுவின் துன்பத்தில் பங்கு கொண்டவர்கள் அவரை பெற்றெடுத்த அன்னை மரியாளும் அவரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரும்தான்.

இயேசு தான் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு தச்சனை தன் வளர்ப்புத் தந்தையாக தெரிந்தெடுத்தார்.

தனக்காகத் தங்கள் உயிரை விடுவதற்காக ஆயிரக்கணக்கான மாசில்லா குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தார்.

 அடுத்து அவரது  துன்பங்களில் பங்கெடுக்க தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அவருடைய அப்போஸ்தலர்கள்.

திருச்சபைக்கான முதல் குருக்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு இயேசு குருமடம் ஒன்றும் ஏற்பாடு
செய்யவில்லை.

அவர் 'தலைசாய்க்கவே' அவருக்கு இடம் இல்லை.


"என் பின்னே வாருங்கள்" 

என்று  இயேசு அழைத்தவுடனே

 தங்களுக்கு உரியது எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர் பின் வந்தவர்கள் அவருடைய அப்போஸ்தலர்கள்.

அவர் சென்ற  இடமெல்லாம் அவர்களும் சென்றார்கள்.

அவர் சாப்பிட்ட இடங்களில் அவர்களும் சாப்பிட்டார்கள்.

அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் அவர்களும் பட்டார்கள்.

மூன்று ஆண்டுகள் பயிற்சிக்குப் பின் இயேசு பாடுகள் படுவதற்கு முந்திய நாள் தான் அவர் அவர்களுக்கு குருப் பட்டம் கொடுத்தார். (வியாழக்கிழமை இரவு உணவின்போது.)

குருப் பட்ட விழாவை அவர்கள் கொண்டாடவில்லை. ஏனெனில் மறுநாளே இயேசு சிலுவையில் அறையப்பட்டு  கொல்லப்பட்டார்.

இயேசுவைப் பின்பற்றிய ஒரே காரணத்திற்காக

 அவரது நற்செய்தியை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருந்தபோது அவர்களும் கிறிஸ்தவத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டார்கள்.

"என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்." (மத்.16:25)

என்று இயேசு அவர்களிடம் கூறியதற்கு ஏற்ப அவர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள்,

விண்ணுலகில் அவரோடு நிலைவாழ்வில் இணைந்துவிட்டார்கள்.

அன்னை மரியாள் இயேசு அவளது கருவறைக்கு வந்த நாளிலிருந்து 

கல்லறைக்குச் செல்லும் வரை அவருடன் சிலுவைப் பாதையில் நடந்தாள்.

இயேசு தனது சிலுவையையும் பாடுகளையும்,  மரணத்தையும், மரண நேரத்தையும் அவரே தேர்ந்தெடுத்தார்.

பாடுகளுக்கும் மரணத்திற்கும் அவர் தன்னையே கையளித்தார்.

நாம் துன்பத்தை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு வரும் துன்பத்தை ஆண்டவருக்காக ஏற்றுக்கொண்டால் போதுமானது.

நமக்கு துன்பம் வரும்போது அதை அனுபவிக்க வேண்டிய சக்தியையும் இறைவன் தருவார்.

வரும் துன்பத்தை நீக்கும்படி நாம் இறைவனிடம் வேண்டலாம்.

அதற்கும் இயேசுவே நமக்கு முன்மாதிரிகை காட்டியுள்ளார்.  

கெத்சேமனி  தோட்டத்தில் செபிக்கும் போது இயேசு தந்தையிடம், 

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்." என்று  செபித்தார்.

இதே செபத்தை நாமும் சொல்லலாம்.

அதேநேரம் இயேசு தந்தையிடம்,

"எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்றும் செபித்தார்.

நாமும் இப்படியும் செபிக்க வேண்டும்.

தந்தைக்கு விருப்பமிருந்தால்  துன்பம் முற்றிலும் நீங்கும்.

நாம் துன்பப்பட வேண்டும் என்பது தந்தைக்கு விருப்பமானால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள என்றும் வேண்டும்.

நாம் அனுபவிக்கும் துன்பத்தின் அளவைவிட 

பன்மடங்கு அதிகமாக விண்ணகத்தில் நமக்கு பேரின்பம் காத்துக் கொண்டிருக்கும்.

உலகத்தில் நமது துன்ப காலம் முடிவிற்கு வந்துவிடும்.

ஆனால் விண்ணுலகில் நமது பேரின்பம் என்றென்றும் நீடித்து இருக்கும்.

பேரின்பத்தின் விலை நாம் இங்கு ஏற்றுக்கொள்ளும் சிறிய துன்பம்.

உலகில் நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ப வாங்கும் பொருளின் தரமும் அதிகரிப்பது  போல,

இவ்வுலகில் நாம் படும் துன்பத்தின் அளவுக்கு ஏற்ப  விண்ணுலக பேரின்பத்தின் அளவும் அதிகமாக இருக்கும்.

எல்லா புனிதர்களும் துன்பத்தை ஆசீர்வாதமாக எண்ணி ஏற்று அனுபவித்திருக்கிறார்கள்.

இயேசுவின் வளர்ப்பு தந்தை புனித சூசையப்பர் 

வாத நோயினால் கஷ்டப்பட்டு

 இயேசுவின் மடியில் தலையை வைத்து உயிரை விட்டார்.

 ஆகவே அவர் நல் மரணத்தின் பாதுகாவலர் எனப்படுகிறார்.

கோடி அற்புதராகிய புனித அந்தோனியார் நோய்வாய் பட்டது தனது 36ஆவது வயதிலேயே இறந்தார்.

ஆயிரக் கணக்கானவர்களைத் தன் வேண்டுதலால் குணமாக்கிய அவர் தன்னைக் குணமாக்கும்படி இறைவனை வேண்டவில்லை.

புனித அவிலா தெரசம்மாள் காசநோயினால் கஷ்டப்பட்டு இறந்தார்.

புனித அல்போன்சா நிமோனியா காய்ச்சலாலும் வயிற்று வலியாலும் கஷ்டப்பட்டு,

 நெடுநாள் படுக்கையிலிருந்து 

தனது 35 ஆவது வயதில் இறந்தார்.


துன்பத்தை அனுபவித்து குறைந்த வயதிலேயே இறந்த புனிதர்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

அவர்கள் தங்களது நோய் குணமாக வேண்டும் இன்று இறைவனை வேண்டவில்லை.

 நோயினால் ஏற்பட்ட அவதிகளை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.

ஆயிரக் கணக்கானோர் நோயினால் இறந்த புனிதர்களை

 தங்கள் நோயை குணமாக்க வேண்டும் என்று வேண்டி 

குணமும் அடைந்திருக்கிறார்கள். 

இயேசுவே தன் பொது வாழ்வின் போது சென்றவிடமெல்லாம் புதுமைகள் செய்து நோய்களை குணமாக்கியிருக்கிறார்.

நாமும் குணம் பெற வேண்டுவது நல்லதுதான்.

ஆயினும் நாம் துன்பப்பட வேண்டும் என்பது இறைவனது சித்தமானால்

 அதை ஏற்று, அவருக்கே ஒப்புக் கொடுக்க வேண்டும்.

நமக்கு ஏற்படும் சிறிய சிறிய கஷ்டங்களையும் மகிழ்வோடு ஏற்று

 இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால்  நிறைய விண்ணக நன்மைகள் கிடைக்கும்.

துன்பங்களை ஏற்று அவற்றை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கும் போது நமது பாவக்கறைகள் நீங்கி பரிசுத்தமாவோம்.

நாம் படும் துன்பங்களை மட்டுமல்ல

 இயேசு அனுபவித்த பாடுகளையும் இறைத் தந்தைக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தால் தந்தை மகிழ்ச்சியோடு  நம்மை பரிசுத்தமாக்குவார்.

"தந்தையே.
உமது திருமகன் இயேசு கிறிஸ்து பட்ட பாடுகளையும், 
சிந்திய இரத்தத்தையும்,
அவரது மரணத்தையும், 
எங்கள் பாவங்களுக்கும் அனைத்துலக மக்களின் பாவங்களுக்கும்
 பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
ஆமென்."

துன்பத்தை ஏற்போம்,

பரிசுத்தம் ஆவோம்,

பரலோகம்  நமக்கே.

லூர்து செல்வம்.












.

No comments:

Post a Comment