"உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்"
(லூக். 1:38)
.***************************************
லூசிபெர் தன்னை இறைவனுக்கு நிகரானவன் என எண்ணி மமதை கொண்டான். சாத்தானாக மாறினான்.
"நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள்"
என்ற சாத்தானின் பொய் வார்த்தைகளை நம்பியதால் நமது முதல் பெற்றோர் பாவம் செய்தார்கள்.
ஆக "இறைவனுக்கு நிகர்" என்ற மமதை (Pride) நினைப்பினால் பாவம் நுழைந்தது.
"இதோ ஆண்டவருடைய அடிமை"
எனற மரியன்னையின் தாழ்ச்சியினால் (humility) பாவம் வெல்லப்பட்டது.
நமது முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறியதால் (Disobedience) பாவம் நுழைந்தது.
"உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று கூறி இறைவனின் சித்தத்திற்கு அடிபணிந்த மரியாளின் கீழ்ப்படிதலால் (Obedience) பாவம் வெல்லப்பட்டது.
ஆதாம், ஏவாள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தியதால்தான் பாவம் உலகிற்குள் நுழைந்தது
தனக்கு அளிக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை முழு சுதந்திரத்தோடு இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு
முற்றிலும் இறைவனின் அடிமையாக மாறின நமது அமல அன்னையின் முழுமையாக அர்ப்பணிப்பின் மூலமாக பாவம் வெல்லப்பட்டது.
இறைவன் சர்வவல்லவர்..
அவருக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை.
அவரால்தான் நாம் வாழும் பிரபஞ்சமே இயங்குகிறது.
ஆனாலும் அவரால் படைக்கப்பட்ட நமக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காக
மனிதகுலத்தை மீட்பதற்கான தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த மனிதகுலத்தின் ஒத்துழைப்பை நாடுகிறார்.
அதற்காகத்தான் கபிரியேல் தூதரை அன்னை மரியாளிடம் தூது அனுப்புகிறார்.
"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்"
என்ற தன்னுடைய வார்த்தைகளின் மூலம் மரியாள் தனது முழு ஒத்துழைப்பையும் முழுமனதோடு இறைவனுக்கு அளிக்கிறார்.
வாசித்துவிட்டு மாதாவிற்குப் புகழ் மாலை சூடி விட்டு போவதற்காக மட்டும் இவ்வசனங்கள் பைபிளில் எழுதப் படவில்லை.
பைபிள் எழுதப்பட்டு நமது கரங்களில் தரப்பட்டிருப்பது அதை வாசித்து அதை நமது வாழ்வாக்குவதற்காகத் தான்.
மாதாவின் தாழ்ச்சி, அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு
ஆகிய மூன்று குணங்களையும் நாம் முழுக்க முழுக்க நமது ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அறுசுவை உணவு நமது கையில் தரப்பட்டால்,
"ஆஹா பிரமாதம்"
என்று புகழ்ந்து விட்டு,
மேஜையில் வைத்துவிட்டு போவோமா?
அல்லது உண்போமா?
உணவை உண்டு அது நம்மில் ஜீரணித்தால் தான் உணவால் நமக்குப் பயன்.
பைபிள் நமது வாழ்வானால்தான் அதை வாசிப்பதால் நமக்கு பயன்.
"Fiat."
இது "உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்"
என்ற தமிழ் வாக்கியத்திற்கான ஒரே லத்தீன் வார்த்தை.
"தந்தையின் ஒரே வார்த்தை (மகன்)
மரியாளின் ஒரே வார்த்தை (Fiat)
வழியாக நமது இரட்சகர் ஆனார்"
என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
மரியாள் சம்மதித்த அதே வினாடியிலேயே
இறை மகன் அவளது உதரத்தில் மனு உரு எடுத்தார்.
"வார்த்தை மனுவானார்."
உண்மையில் Fiat என்ற ஒரே வார்த்தைதான் முழு பைபிளுக்கும்
மையமாயிருக்கிறது. (Centre)
மரியாள் சம்மதித்தவுடன்தான் இறைமகன் மனிதன் ஆனார்.
மாதாவின் சம்மதத்தை நோக்கியே பழைய ஏற்பாடு நகர்ந்தது.
அதாவது இயேசு மனுவுரு எடுப்பதற்காகவே பழைய ஏற்பாடு மக்களைத் தயாரித்தது.
மாதாவின் சம்மதத்தோடுதான் புதிய ஏற்பாடு ஆரம்பிக்கிறது.
சம்மத வினாடியின்போதுதான் புதிய ஏற்பாட்டின் நாயகர் இயேசு உற்பவித்தார்.
இயேசுவைக் கருத்தரித்தவள் அன்னை மரியாள்தான்.
இயேசுவைப் பெற்றவள் அன்னை மரியாள்தான்.
இயேசுவை வளர்த்தவள் அன்னை மரியாள்தான்.
இயேசுவை நமக்குத் தந்தவர் அன்னை மரியாள்தான்.
இயேசு நமது இரட்சகர்.
நமது இரட்சகரைப் பெற்று நமக்குத் தந்தவள் அன்னை மரியாள்.
தனது தாயையே நமக்கும் தாயாக தந்திருக்கிறார் நமது இரட்சகர்.
"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை" என்பார்கள்.
தாய் - மரியாள்.
நூல் - பைபிள்.
அந்தக் காலத்தில் பையனுக்கு பெண் பார்க்க போகின்றவர்கள் பெண்ணினுடைய வீட்டிற்கு போக மாட்டார்களாம்.
பெண்ணின் தாய் தண்ணீர் எடுக்க வரும் கிணற்றுக்குப் போவார்களாம்.
"தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை" என்பது அந்தக் காலத்து நம்பிக்கை.
ஏனெனில் மகள் தாயைப் போல் தான் இருப்பாள் எல்லா வகையிலும்.
3 + 4 = 7 என்றாலும்,
7 = 3 + 4 என்றாலும் ஒன்று தான்.
அதாவது பிள்ளையைப் பார்த்தாலும் தாயைத் பார்ப்பது போல் தான்.
மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அவளது நற்குணங்களை அப்படியே ஏற்று,
அவற்றை நமது வாழ்வாக்கி, நாமும் வாழும் மரியாளாக வாழவேண்டும்.
"காலை, மாலை நூலை ஓது." என்பார்கள்.
நாம் ஓத வேண்டிய நூல் பைபிள்தான்.
"நூலைப் போல சேலை" என்பதை மறந்து விடக்கூடாது.
பைபிள் - நூல்
நாம் - சேலை.
சேலை நூலால் பின்னப்பட்டது.
நூல் எப்படியோ அப்படியே சேலை.
நூல் இல்லாவிட்டால் சேலை இல்லை.
இறைவார்த்தை தான் நம்மை உருவாக்கியது.
நாம் இறை வார்த்தையால் பின்னப் பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது பைபிளால் ஆக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டும்,
நாம் நடமாடும் பைபிள்களாக மாற வேண்டும்.
பைபிள் பரிந்துரைக்கும் அத்தனை நற்குணங்களும் மாதாவில் உள்ளன.
தாயைப் போலவும், நூலை போலவும் நாம் இருக்க வேண்டுமென்றால் இயேசுவைப் போல இருக்க வேண்டும்.
தாழ்ச்சி அர்ப்பணிப்பு ஒத்துழைப்பு இந்த மூன்று குணங்களும் ஒன்றாய் சேர்ந்து இருப்பது
இயேசுவிலும்,
அவரது வாக்காகிய பைபிளிலும்,
தாயாகிய மரியாளிடமும்தான்.
இயேசு சர்வ வல்லவராகிய கடவுள்.
ஆனால் அவர் நம் நிலைக்கு தன்னைத் தாழ்த்தி
உலகில் நம்மைப்போல் மனிதனாகப் பிறந்தார்.
He came down to lift us up.
நமது மீட்பிற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்தார். நமக்காக தன்னையே பலி ஆக்கினார்.
நமது மீட்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அவர் நம்மோடு ஒத்துழைக்கிறார்.
அவருடைய ஒத்துழைப்பு இன்றி நம்மால் மீட்பு அடைய முடியாது.
பிரபஞ்சத்தையே படைத்து ஆளும் சர்வ வல்லப கடவுள்,
ஒன்றுமே இல்லாத நம்மை அழைத்து பேசுகின்றார் என்றால் அது அவருடைய தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைத்தான் காண்பிக்கிறது.
அவருடைய வார்த்தை நமக்காக முற்றிலுமாக தரப்பட்டது. நாம் பார்ப்பதற்காக மட்டுமல்ல அதை நம்மோடு நம்மாக ஆக்கிக் கொள்வதற்காகத் தரப்பட்டது. அதாவது கடவுள் தன் வார்த்தையை நமக்கே அர்ப்பணித்து விட்டார்
இறைவனுடைய வார்த்தையின் ஒத்துழைப்போடுதான் நம்மால் மீட்பு பெற முடியும்.
நமது வாழ்வில் என்ன பிரச்சனை வந்தாலும் அதன் தீர்வுக்காக பைபிளைத்தான் நாடிச் செல்கிறோம்.
பைபிள் பிரச்சனைக்கான தீர்வுக்கான வசனங்களை நமக்கு தந்து
நம்மோடு ஒத்துழைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது.
ஒரு முறை உடன்பிறந்த இரண்டு சகோதரர்களுக்கு பாகப்பிரிவினையில் பிரச்சனை ஏற்பட்டது.
இருவருக்கும் அவரவர் நினைப்பது நியாயமாக பட்டது.
அண்ணன் சொன்னான்,
"தம்பி பைபிளை எடுத்து வாசிப்போம். அங்கு தீர்வு கிடைக்கும்."
தம்பி சம்மதித்தான்.
அண்ணன் தன் மகனை அழைத்து, பைபிளை எடுத்து வரச்சொன்னான்.
"எதற்கு அப்பா பைபிள்?"
"எங்கள் இருவருக்கும் ஒரு பிரச்சனை. எங்களுக்கு தீர்வு எட்டவில்லை. பைபிளை வாசித்தால் கிடைக்கும். எடுத்துவா."
"அப்பா தினமும் பைபிள் வாசிக்கிறீர்கள். நீங்கள் இதுவரை வாசித்ததிலிருந்து ஒரு தீர்வு கிடைக்கவில்லையா?"
"நீயும் தினமும் பைபிள் வாசிக்கிறாய். நான் பிரச்சனையைச் சொல்கிறேன். பைபிளில் உள்ள தீர்வை நீயே கண்டுபிடித்துச் சொல்லேன்."
"உங்கள் பிரச்சனை எனக்குத் தெரியும். பைபிள் இறைவன் நமக்குத் தந்த நன்கொடை. எதற்காக அவர் இந்த நன்கொடையை நமக்குத் தந்தார்?"
"தனது அன்பை நமக்கு வெளிப்படுத்த."
"அப்போ பைபிளில் என்ன இருக்கிறது?"
"அன்பு."
"நீங்கள் தினமும் பைபிள் வாசிக்கிறீர்கள். அப்போ உங்களிடம் அன்பு இருக்க வேண்டுமே?"
"இருக்கிறது."
"அன்பின் குணங்கள் யாவை?."
"புனித சினைப்பருடைய நிரூபத்தில இருக்கு. நான் அவற்றை மனப்பாடம் செய்யவில்லை."
"நீங்கள் மனப்பாடம் செய்வதற்காக பைபிள் உங்களுக்கு தரப்படவில்லை. வாழ்வதற்காகத்தான் தரப்பட்டிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்திற்கு இந்த வசனம் பொருத்தமாக இருக்கும்.
' அன்பு தன்னலத்தைத் தேடாது,'
உங்களுக்குள் இருப்பது பாகப்பிரிவினை பிரச்சனை.
அப்பா, நீங்கள் சித்தப்பாவின் நலனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
சித்தப்பா அப்பாவின் நலனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்."
"அண்ணன், பையன்சொல்வதுதான் சரி.
'
ஏதாவது ஒரு அடிப்படையில் பிரிப்போம்.
உங்களுக்கு விருப்பப்பட்டதை
நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அடுத்ததை நான் எடுத்துக் கொள்கிறேன்."
"Problem solved!"
ஆக எல்லா வகையிலும் பைபிள் நம்மோடு ஒத்துழைக்கிறது.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment