Friday, September 11, 2020

"மகனே, இன்று பகல் உன்னைப் பார்க்க வருவேன்."" இயேசுவே உம்மைத் தேடி வருகிறேன்." (தொடர்ச்சி)

"மகனே, இன்று பகல் உன்னைப் பார்க்க வருவேன்."

" இயேசுவே உம்மைத் தேடி வருகிறேன்."
(தொடர்ச்சி)
***************************************

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு

நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம்

எனக்கே செய்தீர்கள்."
(மத். 25:40)

இந்த இறைவாக்கு நமக்குப் புதியதல்ல.

எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் கூட கோவிலில் சுவாமியாருடைய பிரசங்கத்தின் மூலம் இதைத் தெரிந்திருப்பார்கள்.

நாம் தெரிந்திருப்பதை எல்லாம் செயல்படுத்துவதில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்ததை எல்லாம் பரீட்சை எழுத மட்டும் பயன்படுத்துகிறோம்

வாழ்க்கையில் யாரும் பயன்படுத்துவதில்லை.

பைபிளில் படித்ததை எல்லாம் மேற்கோள் காட்ட பயன்படுத்துகிறோம்

வாழ்க்கையில்  பயன்படுத்துவதில்லை.

ஒருநாள் வகுப்பில் English grammar நடத்திக் கொண்டிருந்தபோது மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்:

"நான் சொல்லித்தரும் grammar rules ஐ எல்லாம் வாழ்க்கையில் பயன்படுத்துவீர்களா?"

ஒரு பையன் சப்தமாக பதில் சொன்னான்,

"பயன்படுத்துவோம், சார்."

"பேசும்போதா? எழுதும்போதா?"

"Rules ஐ எல்லாம் மனப்பாடம் செய்திருக்கிறோம்.

நாங்கள் ஆசிரியர்களாக மாறி எங்கள் மாணவர்களுக்கு Grammar சொல்லிக் கொடுக்கும்போது பயன்படுத்துவோம், சார்."

அதாவது அவர்கள் பேச பயன்படுத்த மாட்டார்களாம்,

அவர்களது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க பயன்படுத்துவார்களாம்!

பைபிளில் வாசிப்பதன் முதல் நோக்கம் அதன்படி நாம் வாழ்வது,

அடுத்து,
மற்றவர்களை வாழவைப்பது.

நாம் வாழாமல் மற்றவர்களை வாழ வைக்க முடியாது.

நாம் இயேசுவின் சகோதரர்கள்.

நம்மைப் போலவே உலகில் வாழும் மற்றவர்களும் இயேசுவின் சகோதரர்கள்தான்.

இயேசுவின் சகோதரர்களுக்கு நாம் என்ன செய்தாலும் அதை இயேசுவுக்குதான் செய்கிறோம்.

மற்றவர்களிடம் கோபப்படும் போது இயேசுவிடம்தான் கோபப்படுகிறோம்.

மற்றவர்களைத் துன்புறுத்தும்போது இயேசுவைத்தான் துன்புறுத்துகிறோம்.

மற்றவர்களை நோக்கி புன்முறுவல் செய்தால் இயேசுவை நோக்கிதான்
புன்முறுவல் செய்கிறோம்.

மற்றவர்களை வாழ்த்தும்போது இயேசுவைத்தான் வாழ்த்துகிறோம்.

உடனே ஒரு மாணவன் கேட்பான்,

" சார், என்னை எத்தனை தடவை அடிச்சிருக்கீங்க!"

" நான் உன்னை அடித்தது உனது தவற்றைத் திருத்தி உன்னை நல்ல மாணவனாக மாற்ற.

இயேசு எனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறேன்.

நாம் தப்பு செய்யும்போது இயேசு கூட அப்பப்போ நம்மைக் கொஞ்சம் அடிப்பார், திருத்துவதற்காக."

தேவைகள் உள்ள நமது  அயலானுக்கு உதவுவது நமது கடமை.

அவரவர் அவரவர் தகுதிக்கு ஏற்ப கொடுத்து உதவினால் போதும்.

புனித பிரான்சிஸ் அசிசியார் இளைஞனாக இருந்த போது இடிந்து கிடந்த ஒரு கோயிலை கட்டி எழுப்ப முயற்சி எடுத்தார்.

கையில் காசில்லை.

ஆகவே வருவோர் போவோரிடம்.

" காசிருப்போர் காசு தாங்க.

பொருள் இருப்போர் பொருள் தாங்க.

கைகால் இருப்போர் உழைப்பைத் தாங்க.

வாயிருப்போர் உற்சாகம் தாங்க,

மனசிருப்போர் வாழ்த்து  தாங்க."

என்று கேட்பாராம்.

நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம்.

ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஒரு புன்முறுவலாவது கொடுப்போம்.

காலையில் எழுந்து வீட்டைவிட்டு புறப்படும்போது

" ஆண்டவரே,உம்மைப் பார்க்கவே புறப்பட்டு வருகிறேன்."

என்று சொல்லிவிட்டு கிளம்புவோம்.

நாம் யாரைப் பார்த்தாலும்  அவரில் இயேசுவை பார்ப்போம்.

அவரையே நம்பாதவர்களில் கூட  இயேசு இருக்கிறார்.

ஏனெனில் அவர்களும் அவர் சாயலிலேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

எல்லோரிடமும் இயேசுவைப் பார்த்தால்

இயேசுவிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படி நடந்துகொள்வோம்.

யாரிடமும் கோபப்பட மாட்டோம்.

அதிர்ந்து பேச மாட்டோம்.

நம்மிடம் தவறிருந்தால் மன்னிப்பு கேட்போம்.

யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டோம்.

யாரிடமும் குறை காண்பதையே குறியாக வைத்திருக்க மாட்டோம்.

யாரிடமும் யாரைப் பற்றியும் கெடுத்துப் பேச மாட்டோம்.

யார் நமக்கு என்ன செய்தாலும் அது இயேசுவின் சித்தப்படியே நடக்கிறது என்று நல்ல மனதோடு ஏற்றுக் கொள்வோம்.

அவர்களும் இயேசுவின் சகோதரர்கள் என்பதால்

இயேசு அவர்களுக்கு என்ன செய்வாரோ

அதையே நாமும் அவர்களுக்குச் செய்வோம்.

நாம் சந்திக்கும் அனைவரையும் நமது குடும்ப உறுப்பினர்களாகவே எண்ணி அவர்களோடு பழகுவோம்.

சண்டை சச்சரவுகளுக்கு   இடமில்லை.

அப்படியே சண்டை   வந்தாலும் உடனே சமாதானம் செய்து கொள்வோம்.

நாம் செல்லும் இடமெல்லாம் அன்பையே காண்பிப்போம். நமக்கும் அன்பே கிடைக்கும்.

தினமும் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போதெல்லாம்

" இயேசுவே, உம்மை தேடி வருகிறேன்."

என்று சொல்லிக்கொண்டே போனால் நாம் சென்றவிடமெல்லாம் இயேசுவை பார்ப்போம், இயேசுவை மட்டும் பார்ப்போம்.

நாம் யாரைப் பார்த்தாலும் இயேசுவின் அருள் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

நாம் யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் முடிந்தபோதெல்லாம்

இயேசுவை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அவர்களிலும் இயேசு செயல்படுவதை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்,

இது  ஊழியர்கள் என்ற முறையில் நமது கடமை.

ஒரு சிறிய உதாரணம்:

"சார், Good Morning. எப்படி இருக்கீங்க?"

"Good Morning. நல்லா இருக்கோம். தூரமா?"

"கோவிலுக்கு.
கோவிலில கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வர வேண்டும்."

"உட்கார்ந்து என்ன செய்விங்க?"

"செபம் சொல்லுவோம்."

"ஆமா, தினமும் செபம்  சொல்றீங்கள, அது கடவுளுக்குக் கேட்குமா?"

"கட்டாயம் கேட்கும்."

"அதெப்படி சார்? கடவுள் பரலோகத்தில இருக்கிறதா சொல்றீங்க,

நீங்க பூலோகத்தில இருந்து பேசறது அவருக்கு எப்படிக் கேட்கும்?"

"கடவுள் இருக்கும் இடம்தான் பரலோகம். கடவுள் எங்கும் இருக்கிறார். நமக்குள்ளேயும் இருக்கிறார்."

"நமக்குள்ளேயும் என்று சொல்லாதீங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்குள் அவர் இருக்க முடியாது."

"நீங்க ஒரு ஆசிரியர். எப்படிப்பட்ட மாணவர்கள் மீது அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள்?"

"weak Students மேல"

"கடவுளும் அப்படித்தான். அவரை நம்பாதவர்கள் மீதுதான் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார்.

உங்களுக்குள்ளும் கடவுள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்."

"செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா?
எனக்குள் அவர் செயல்பட்டால் எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்?"

"நீங்கள் இப்போது அவரைப் பற்றித் தானே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அவரைப் பற்றிய பேச்சை ஆரம்பித்ததே நீங்கள்தானே.

நான் "எப்படி இருக்கீங்க?" என்று மட்டும்தான் கேட்டேன்.

"கோவிலுக்கு" என்று என்னை சொல்ல வைத்தது நீங்கள் தானே!

கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை தன்னை நோக்கி திருப்பி கொண்டிருக்கிறார்.

ஒருநாள் நீங்கள் முற்றிலும்   அவரிடம் திரும்புவீர்கள்."

"அது மட்டும் நடக்காது."

"உண்மைதான்.
அது மட்டும் நடக்காது,
அதற்கு மேலும் நடக்கும்."

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை தெளிவாகத் தெரியும்.

கத்தோலிக்கர் அல்லாத பிரிவினை சபையை சேர்ந்தவர்கள்,

இறைநம்பிக்கை இல்லாதவர்கள்

நம்மைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களது கொள்கையை நம்மிடம் திணிப்பதற்காக அவர்களேதான் பேச்சை ஆரம்பிப்பார்கள்.

அதாவது உண்மையை நாம் சொல்ல அவர்களே உதவி செய்வார்கள்.

நாம் கிடைக்கிற சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார்கள்.

நாம் அமைதியாகப் பேச வேண்டும்.

தண்ணீரை வேகமாக ஊற்றினால் அது விழுந்த இடத்தை விட்டு வெளியே சென்றுவிடும்.

ஆனால் மெதுவாக ஊற்றினால் ஊற்றிய இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.

ஒரு நாள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த நண்பர் என் கழுத்தில் இருந்த உத்தரீயத்தைப்  பார்த்துவிட்டார்.

அவ்வளவுதான்.

"நீங்கள் கிறிஸ்தவர்தானே?"

" ஆமா."

"கிறிஸ்துவை விட ஏன் மாதாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?"

"மன்னிக்கவும். உங்களைப் பெற்ற தாயை நீங்கள் நேசிக்கிறீர்களா?"

"அதிலென்ன சந்தேகம்?"

"எனக்கு சந்தேகமில்லை. நேசிக்கிறீர்களா? இல்லையா?"

"நேசிக்கிறேன்."

"கிறிஸ்து அவருடைய தாயை நேசிகின்றாரா? இல்லையா?"

நண்பர் யோசித்தார்.

"நேசிகின்றார்."

"நான் இயேசுவின் சகோதரன் அவருடைய தாய் எனக்கும் தாய்.
என் தாயை நான் நேசிக்கிறேன்.

நீங்கள் இயேசுவின் சகோதரனா?"

(தொடரும்)

லூர்து செல்வம். 

No comments:

Post a Comment