Sunday, September 6, 2020

முழு இருதயத்தோடு அன்பு செய்வோம்.

http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_6.html


முழு இருதயத்தோடு அன்பு செய்வோம்.

****************************************


Virtue Stands in the middle என்ற ஒரு பழமொழி உண்டு.


அதாவது எதிர் எதிர் இறுதி எல்கைகளுக்குப் (extreme) போகாமல், நடுவில் இருப்பதுதான் புண்ணியம்.


உதாரணத்திற்கு, 


24 மணி நேரமும் உழைக்கவும் கூடாது. 24 மணி நேரமும் தூங்கவும் கூடாது.

 

அளவோடு உழைக்க வேண்டும், 


அளவோடு ஓய்வெடுக்க வேண்டும்,


ஆனால், விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்ற புண்ணியங்கள் அளவில்லாத இறைவன் சம்பந்தப்பட்டவை.


இறைவன் நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.


ஆகவே நாம் அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் அளவே இருக்க கூடாது.


நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு (எல்கை போடக் கூடாது) அவரை விசுவசிக்க வேண்டும்,


 நம்ப வேண்டும்,


அன்பு செய்ய வேண்டும்.


நாம் எவ்வளவு நேசித்தாலும், அது முழுமை ஆகாது. இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும்.


ஒரு பலூனுக்கு எவ்வளவு காற்றடித்தாலும் பூமியிலுள்ள காற்றை முழுவதும் அடிக்க முடியாது.


ஆயினும் அது Maximum எவ்வளவு கொள்ளுமோ, அவ்வளவு அடிக்கிறோம் அல்லவா?


அதே போல நமது அளவுள்ள சக்தியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகம் நேசிக்க வேண்டும்.


கடவுள் நிறைவானவர்.


God is perfect.


நாம் நிறைவை நோக்கிப் பயணிக்கிறோம்.


எவ்வளவு பயணித்தாலும் " போதும்" என்று சொல்ல முடியாது. 


அதே போல்தான் நமது பிறரன்புக்கும். 


நமது அயலானையும் நாம் எவ்வளவு நேசித்தாலும் போதும் என்று சொல்ல முடியாது.


ஏனெனில் அவனில் பார்க்க வேண்டியது அவனை அல்ல,  அவனுள் வசிக்கும் கடவுளை.


அன்பு கடவுளுடைய பண்பு.


கடவுள் அளவற்றவர். ஆகவே அவரது பண்புகள் எல்லாம் அளவற்றவையே.


தன்னுடைய  பண்புகளைத் தான் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.


இறைவனுடைய அன்பு அளவற்றது. 


நாம் அளவு உள்ளவர்கள்.  ஆகையால் நமது அன்பு  அளவு உள்ளதுதான்.


ஆனால் தன்மையை பொறுத்தமட்டில்


 அன்பிற்கு ஒரு தனி குணம் உண்டு,


 அது முழுமையாகக் கொடுக்கும்


 முழுமையாக எதிர்பார்க்கும்.


 அன்பு மயமான கடவுளின் இயல்பான குணமும் அதுதான். 



அவர் தம்மை நமக்கு முழுவதுமாக தந்தார்,


 நம்மிடமிருந்து முழுவதுமாக எதிர்பார்க்கிறார்.


 அதாவது தன்னை முழுவதும் நமக்கு தந்தவர்,


 நாமும் நம்மை முழுவதும் அவருக்குக் கொடுக்கவேண்டும் என்று  எதிர்பார்க்கிறார்.


தன்னை முழுவதும் நமக்கு தந்ததை நமக்கு புரியும்படியாகக் காட்டவே


 நம்மைப்போல் மனிதனாக பிறந்து, தன்னுடைய உடல், பொருள், ஆவி முழுவதையும்


 நமக்காக, நம்மை மீட்பதற்காக பலியாக்கினார். 


சாத்தானின் வசமிருந்து  நம்மை முழுமையாக மீட்க,  தன்னை முழுமையாகப் பலிகொடுத்தார்.


 "அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக."

(லூக்கா நற்செய்தி 10:27) 



37 "என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர்.


 என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். "

(மத்தேயு நற்செய்தி 10:37)



 நம்மை நாம் அன்பு செய்வது போல் நமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு செய்ய வேண்டும்.


இதுவும் ஆண்டவரது கட்டளை தான்.


ஆனால் நமது பிறரன்பு ஆண்டவரில் ஆண்டவருக்காக இருக்க வேண்டும்.


பிறருக்கு நாம் செய்யும் சேவை ஆண்டவருக்கு செய்யும் சேவைதான்,


  அதை ஆண்டவருக்காக செய்ய வேண்டும்.


அன்னை தெரசா தன்னை முழுவதும் இறைவன் சேவைக்கு  அற்பணித்ததால்தான்


 அவருக்காக  அவருடைய பிள்ளைகளுக்கும்  சேவை செய்தார். 


ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த சேவை முற்றிலும் இறைவனுக்குச் செய்த சேவை.


முற்றிலும் இறை அன்பினால் ஏவப்பட்ட சேவை.


நாம் இறைவனை முழு இருதயத்தோடு நேசிக்கும் போது அதற்குள் இறைவனால் படைக்கப்பட்டவர்களும் வந்து விடுகிறார்கள்.


ஆனால் இறைவனை நேசிக்காமல் மற்றவர்களை மட்டும் நேசித்தாலும்,


 மற்றவர்களை இறைவனைவிட அதிகமாக  நேசித்தாலும்


 அது இறைவனுக்கு ஏற்றது அல்ல.


"நீங்கள் கீழ்ப்படிய வேண்டியது அரசனுக்கா அல்லது இறைவனுக்கா"


 என்ற  கேள்வி வந்தபோது


 வேத சாட்சிகள் இறைவனைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.


"என் பின்னால் வாருங்கள்" 


என்று இயேசு அழைத்தபோது அவருடைய சீடர்கள்   அவர்களுடைய உறவுகளையும், உடைமைகளையும் விட்டு தான் அவர் பின்னால் சென்றார்கள்.


நாம் இறைவனது சாயலில் படைக்கப் பட்டிருப்பதால் 


'முழுமையான எதிர்பார்ப்பு' நம்முடைய உறவுகளுக்குள்ளும் இருக்கிறது.


திருமண உறவு இறைவனால் படைக்கப்பட்டது.


தம்பதியர் தங்களை ஒருவருக்கொருவர் முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது இறைவனிடம் திட்டம். 


தங்களை ஒருவருக்கொருவர் முழுமையாகக் கொடுப்பதால்தான் அவர்களால் ஈருடல் ஓருயிராக  வாழ முடிகிறது.


குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும்,


 நண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் இத்தகையதுதான்.


நெருங்கிய நண்பர்களுள் ஒருவருக்கு கஷ்டம் வரும்போது


 அடுத்தவர் தனது அன்பை வெளிப்படையாகக் காட்ட  கொஞ்சம் தவறினாலும் அடுத்தவர் மனம் புண்படும்.


நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள அன்பை நட்பு என்று எடுத்துக்கொண்டால்,


நம்மீது இறைவனுக்கு உள்ள அன்பு எப்போதும் குறையாது.


அவர் மீது நமக்குள்ள அன்பும் எப்பொழுதும் முழுமையாக இருக்கவேண்டும்.


இறைவனுக்கு கஷ்டம் என்று ஒன்று வரப் போவதில்லை.


ஆனால் அவர் தனது பிள்ளைகளுடைய கஷ்டங்களை தன்னுடைய கஷ்டங்களாகவே கருதுகிறார்.


நாம் செய்த பாவங்களை தானே சுமந்து நமக்காகப் பரிகாரம் செய்தவர் அவர்.


 

"ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்;


 தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்;


 அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; 



36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; 


நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;


 சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார்."


மத்தேயு நற்செய்தி 25:36


நம்முடைய கஷ்டங்களை தனது கஷ்டங்களாகவே இறைவன் கருதுகிறார் என்பதற்கு அவரது இந்த வார்த்தைகளே  சான்று.


இறைவன் மீது நமக்குள்ள அன்பு எந்த அளவுக்கு வளர்கிறதோ 


அதே அளவிற்கு நம்முடைய  அயலான் மீது நமக்கு உள்ள அன்பு  வளரும்.


 ஏனெனில் இறையன்பில் தான் பிறரன்பு அடங்கி இருக்கிறது.


உலகக் கவலைகள் என்னும் கடலில் நாம் நீந்திக் கொண்டிருப்பதால்,


சிறிதுகூட உலக சார்பற்ற முழுமையான அன்பை  முழுமையாக இறைவனுக்குத் தருவது விண்ணகத்தில்தான் சாத்தியம்.


ஆனாலும் இப்போதே நாம் அதை முயன்றால் தான் விண்ணகத்திற்கு செல்ல முடியும்.


விண்ணகத்தில்  அனைத்து விண்ணக வாசிகளின் அன்பும் இறை அன்போடு இரண்டறக் கலந்துவிடும்.


அனைவரும் இறைவனோடு ஒன்றித்து விடுவதால்


 அனைவரது அன்பும் இறை அன்போடு  ஒன்றித்து விடும்.


அத்தகைய பேரின்ப  ஒன்றிப்பினை நாம் அடைய வேண்டுமானால் இப்போதே அதற்கான தயாரிப்பில் இறங்குவோம்.


இறையன்பில் எவ்வளவு வளர முடியுமோ அவ்வளவு வளர்வோம்.


இங்கே நாம் துவங்கிய வளர்ச்சி விண்ணகத்தில் முழுமை அடையும்.


நிறைவை நோக்கிய நமது ஆன்மீகப் பயணம் விண்ணகத்தில் இறைவனோடு நாம் ஒன்றிக்கும்போது நிறைவை அடையும்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment