Saturday, September 26, 2020

*நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?*

http://lrdselvam.blogspot.com/2020/09/blog-post_26.html

*நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?*
---------------------------------------------------------
நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?

இதற்குறிய  பதில் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

சிலர் உடலையடுத்த வாழ்வையும் ஆன்மாவிற்காக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

சிலர் ஆன்மாவையடுத்த வாழ்வையும் உடலுக்காக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

கேள்வியை மாற்றிக் கேட்போம்.

நாம் இவ்வுலகில் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்வா? உடலையடுத்த வாழ்வா?

ஒருவன் கல்லூரியில் admission போடுவதற்காக admission fees சோடு சென்னைக்குப் போய்க்  கொண்டிருக்கிறான்.

" என்ன வேலையாக சென்னைக்குப் போகிறாய்?" " என்று கேட்டால்,

"கல்லூரியில் admission போடுவதற்காக"

என்று சொல்வானா, அல்லது,

"கையில்  இருக்கும் பணத்தை கல்லூரியில் கொடுத்து விட்டு வருவதற்காக."

என்று சொல்வானா?

நாம் உடலோடும், ஆன்மாவோடும் வாழ்கின்றோம்.

ஆன்மாவுக்காக உடல் வாழ்ந்தால் நாம் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

உடலுக்காக ஆன்மா வாழ்ந்தால் நாம் வாழ்வது உடலையடுத்த வாழ்வு.

ஏதாவது ஒரு வாழ்வு தான் நம்மால் வாழ முடியும்.

கிறிஸ்தவர்களாகிய நாம்இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

ஆன்மீக வாழ்விற்கான உணவு நாம் இறைவனிடமிருந்து பெறும் அருள் வரங்கள்.

நமது ஆன்மீக வாழ்விற்கான அருள் வரங்களை

இறைவனிடமிருந்து நம்மிடம் கொண்டுவரும்  வாய்க்கால்கள் ஏழு தேவத்திரவிய அனுமானங்கள்.

ஞானஸ்நானம், உறுதிப்பூசுதல், நற்கருணை, பாவசங்கீர்த்தனம்,  திருமணம், குருத்துவம், அவஸ்தைப் பூசுதல்.

இந்த ஏழில் ஞானஸ்நானம், பாவசங்கீர்த்தனம், அவஸ்தைப் பூசுதல் ஆகிய மூன்றும் பாவமன்னிப்புக்கு உரியவை.

நற்கருணை (திருப்பலி) பாவப் பரிகாரத்துக்கு உரியது.

பாவப் பரிகாரமாக திருப்பலி ஒப்புக்கொடுக்கிறோம். பலி முடிந்தவுடன் பலிப்பொருளை உண்கிறோம்.

உறுதிப்பூசுதல் மூலம் பாவம் செய்யாதிருக்கவும், ஆன்மீகத்தில் வளரவும் வேண்டிய திடனைப் பெறுகிறோம்.

திருமணம் மூலம் குடும்ப ஆன்மீக வாழ்வைத் தொடங்குகிறோம்.

குருத்துவம் கிறிஸ்துவின் பிரதிநிதிகளை உருவாக்குகிறது. அவர்கள் மூலம் கிறிஸ்து நம் பாவங்களை மன்னிக்கிறார்.

ஆக ஏழில் நான்கு தேவத்திரவிய அனுமானங்கள் பாவமன்னிப்பு, பாவப் பரிகாரம் சம்பந்தப்பட்டவை.

இதிலிருந்து நமது ஆன்மீக வாழ்வில் பாவமன்னிப்பும், பாவப் பரிகாரமும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

அவை இல்லாமல் மீட்பு இல்லை.

திருமண வாழ்வு உலகவாழ்வு அல்ல. முழுக்க முழுக்க ஆன்மீக வாழ்வு.

குழந்தைப்பேறு ஆன்மீகம் சார்ந்த நற்செயல்.

குழந்தைகளை வளர்க்கும்போது இறைவனின்  பிள்ளைகளைத்தான் வளர்க்கிறோம். அதுவும் ஆன்மீகம் சார்ந்த நற்செயலே.

திருமணத்தினால் நாம் அனுபவிக்கும் சிற்றின்பம் ஆன்மீகம் சம்பத்தப்பட்டதா?

திருமணத்தினால் நாம் அனுபவிக்கும் சிற்றின்பம் இறைவனால் தரப்பட்டது.

அதை இறைவனைக்கே  ஒப்புக் கொடுத்தால் அது ஆன்மீகம்
சம்பத்தப்பட்டது.

இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கா விட்டால் அதில் ஆன்மீகம் இருக்காது.

உண்பது, உடுத்துவது, உறங்குவது, நடப்பது, நமது அலுவக வேலை, நமது வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும்

இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்படும்போது ஆன்மீக வாழ்வாக மாறிவிடுகிறது.

*அதேபோல ஆன்மா சம்பந்தப்பட்ட செயல்களைக் கூட கடவுளுக்காகச் செய்யாமல்*

*உலக நோக்கங்களுக்காகச் செய்தால் அவை தம் ஆன்மீகத் தன்மையை இழந்து விடுகின்றன.*

இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

இயேசு,  உலகம்.

உலகத்தின் பிரதிநிதி பணம்.

பணத்தை இறை ஊழியத்துக்காக பயன்படுத்தும் போது, அது ஆன்மீகத்துக்கு உதவுகிறது.

ஆனால் இறை ஊழியத்திற்கான காரியங்களில் நமது மனது பணத்தின் பக்கம் சாய்ந்து விட்டால்,

நாம் செய்வது இறை ஊழியம் ஆகாது.

இறைவனையே பணம் ஈட்ட பயன் படுத்துவதுபோல் ஆகிவிடும்.

இதைத்தான்  யூதாஸ் செய்தான்.

30 வெளளிக்காசு சம்பாதிக்க இயேசுவை பயன்படுத்திக் கொண்டான்.

மருத்துவ சேவை செய்வது இறை ஊழியம்.

ஆனால் அளவுக்கு மிஞ்சிய பணம் ஈட்ட அதை பயன்படுத்துவது பண ஊழியம்.

கல்விப்பணி செய்வது இறை ஊழியம்.

ஆனால் அதையே பணம் ஈட்ட  பயன்படுத்துவது பண ஊழியம். 

நம்மிடம் ஒரு இயல்பு உண்டு. முதலில் பணத்தைச் 
செலவழிப்பதற்காக ஈட்டுவோம்.

காலப் போக்கில் பணத்தை
பணத்திற்காக ஈட்ட ஆரம்பிப்போம்.

முதலில் பணம் நமக்கு அடிமையாய் இருக்கும்.

அடுத்து நாம் பணத்துக்கு அடிமையாகிவிடுவோம்.

அது நமக்கு அடிமையாய் இருக்கும் போது, அதை இறை ஊழியத்துக்கு பயபடுத்த  நம்மால் முடியும்.

ஆனால் நாம் அதற்கு அடிமையாகிவிட்டால் அதை ஈட்ட எந்த எல்கைக்கும் போவோம், யூதாஸைப் போல.

நாம் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டுமென்றால்,

உடல் சம்பந்தப்பட்ட,

அதாவது உலகம் சம்பந்தப்பட்ட,

அதாவது பணம்  சம்பந்தப்பட்ட வாழ்வு,

நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவியாய் இருக்க வேண்டும்.

உதவியாக இருந்தால்

உலக சம்பந்தப்பட்ட வாழ்வும் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

உலகில் நாம் வாழ வேண்டியது ஆன்மீக வாழ்வு மட்டும்தான்.

அதுதான் விண்ணகத்திலும் தொடரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment