சமத்துவமா? அப்படீன்னா?
(தொடர்ச்சி)
-------------______-----------______--------------
கடவுள் அன்பு மயமானவர்.
அவர் மூன்று ஆட்களாக இருந்தாலும் மூவரும் ஒரே அன்பாய் இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.
ஒரே அன்பு,
ஒரே சித்தம்,
ஒரே வல்லமை,
ஒரே தேவ சுபாவம்,
ஒரே ஞானம்,
ஒரே கடவுள்.
கடவுள் தனது அன்பைத்தான் மனிதர்களோடு பகிர்ந்து கொண்டார்.
அன்பு ஒன்று தான் மனிதர்களை இணைக்கும் ஈர்ப்பு சக்தி.
பிரபஞ்சத்தில் உள்ள சடப் பொருள்கள் ஆன்மா அற்றவையாய் இருப்பதால்
அவை சிந்தித்து
செயலாற்றுவதில்லை.
அவற்றால் விதிகளை மீற முடியாது.
ஆனால் மனித ஆன்மாவிற்கு சுயமாக, சுதந்திரமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையை இறைவன் கொடுத்திருக்கிறார்.
கடவுள் விரும்புவதுபோல் மனிதன் தன் அன்பு என்னும் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தினால்
அவனிடமுள்ள ஏற்ற தாழ்வுகள் அப்படியே இருந்தாலும் அன்பின் முன் அவை சமமாகிவிடும்.
பிரபஞ்சத்தின் உறுப்புகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்,
ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்படுவதில் சமமாக இருப்பதுபோல,
மனிதரிடையே ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்,
அன்புக்குக் கட்டுப்படும் போது அனைவரும் சமமாகிவிடுவோம்.
ஆனால் மனிதர் தங்களிடம் உள்ள அன்பை சரியாக பயன்படுத்துவது இல்லை,
அதாவது,
மற்றவர்களை கடவுள் எதிர்பார்க்கிற படி அன்பு செய்வதில்லை.
அவன் இஷ்டத்திற்கு ஏற்ப அன்பு செய்கிறான் அல்லது அன்பு செய்ய மறுக்கிறான்.
இறைவன் நமக்கு தந்திருக்கும் கட்டளை,
" உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்."
இக்கட்டளை அனைவருக்கும் பொதுவான கட்டளை.
அரசன் தன்னை அன்பு செய்வது போல அவனது சேவகனையும் அன்பு செய்ய வேண்டும்.
அரசன், சேவகன் இந்த சமூக ஏற்றத்தாழ்வு அப்படியே இருக்கும் ஆனால் அன்பின் முன் இருவரும் சமம்.
அரசன் தன்னை அன்பு செய்வது போல, தன் சேவகனை அன்பு செய்கிறான்
அரசன் தன்மீது கொண்டுள்ள அன்பு = சேவகன் மீது கொண்டுள்ள அன்பு.
சமூகத்தில்: அரசன் > சேவகன்.
அன்புக்கு: அரசன் = சேவகன்.
எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும்.
கணவன், மனைவி:
--------------------------------
உடல் பலத்தில்: கணவன் > மனைவி
அன்பில்: கணவன் = மனைவி
ஆசிரியர், மாணவர்
-----------------------------------
பதவியில்: ஆசிரியர் > மாணவர்
அன்பில்: ஆசிரியர் = மாணவர்
சமூக அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்,
இருக்க வேண்டும்.
ஆனால் அன்பின் முன் அனைவரும் சமம்.
அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் நாம் அவர்களில் இயேசு வைத்தான் காண வேண்டும்.
இருவரிலும் நாம் அன்பு செய்வது இயேசுவைத்தான்.
நிலத்திற்கு உரிமையாளரும், நிலத்தில் வேலை செய்யும் கூலியாளும் சமூக அந்தஸ்தில் ஏற்ற தாழ்வு உள்ளவர்கள்.
முறைப்படி அன்பு செய்தால்
நில உரிமையாளர் கூலியாளில் இயேசுவைக் காண்பார்.
கூலியாள் நில உரிமையாளரில்
இயேசுவைக் காண்பார்.
இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யும்போது, இருவரும் இயேசுவைத்தான் அன்பு செய்கிறார்கள்.
இயேசுவின் மேல் உள்ள அன்பு இருவரையும் சமமாக்கிவிடுகிறது.
இறைவனை நமது முழு இருதயத்தோடும், முழு ஆற்றலோடும்
அன்பு செய்ய வேண்டும்.
கேள்வி எழலாம்.
முழு இருதயத்தையும் இறைவனுக்குக் கொடுத்த பிற்பாடு நம் அயலானுக்கு எதைக் கொடுக்க?
இறைவன் தன்னால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்கிறார்.
ஆகவே எல்லா மனிதர்களும் இறைவனுடைய அன்பிற்குள் இருக்கிறார்கள்.
ஆகவே நாம் இறைவனை அன்பு செய்யும்போது நாம் எல்லா மனிதர்களையும் அன்பு செய்கிறோம்.
இறைவனை உண்மையிலேயே நேசிப்பவர்கள், தங்கள் அயலானையும் உண்மையிலேயே
நேசிக்கிறார்கள்.
உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
சிலருடைய நேசம் உதட்டில்தான் இருக்கும்.
" எனக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை. மனிதரை நேசிக்கிறேன்."
என்று ஒருவன் சொன்னால் அவனது மனித நேயம் பொய்யானது.
இறைவன் தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இறையன்புடன், இறைவனுக்காக, பிறரை அன்பு செய்தால்தான் அது உண்மையான அன்பு.
இறைவன் எல்லா மனிதர்களையும் அளவுகடந்த விதமாய் அன்பு
செய்கிறார்.
அவரது அன்பின் முன் நாம் அனைவரும் சமம்.
நம் அனைவருக்கும் இறைவனின் அன்பை அனுபவிக்க முழு உரிமை உண்டு.
இறையன்பு ஒன்று தான் நமக்கு சம உரிமை தந்திருக்கிறது.
ஆகவே உண்மையான சமத்துவத்தை தேட வேண்டியது இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பில் மட்டும் தான்,
சமுதாய அமைப்பில் அல்ல.
நமது உடல் அமைப்பில் சமத்துவம் இல்லை.
ஆனால் நமது உடலுறுப்புக்கள் மீது நாம் காட்டும் அக்கரையில் சமத்துவம் இருக்கிறது,
தலைக்கு காட்டும் அக்கரையைத் தான் காலுக்கும் காட்டுகிறோம்.
அதேபோல்தான் சமுதாய அமைப்பில் சமத்துவம் இல்லை.
ஆனால் நாம் சமூகத்தின் மீது காட்டும் அன்பில் சமத்துவம் இருக்கிறது.
அன்பு செய்பவர்கள் ஏற்றத் தாழ்வுகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
நமது வீட்டில், அதாவது, விண்ணகத்தில் அன்பு மட்டுமே இருக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment