Thursday, October 1, 2020

*வசன வாதி VS விசுவாசி*(தொடர்ச்சி)---------------------------------------------------------

*வசன வாதி  VS விசுவாசி*
(தொடர்ச்சி)
---------------------------------------------------------
நாம் கோவிலில் வைத்திருப்பது சுருபங்கள்.(Statues)
சிலைகள் அல்ல. (Not Idols)

ஆராதிப்பதெற்கென்று வைத்திருக்கப்படுபவைகட்குப் பெயர்தான் சிலைகள் அல்லது விக்ரகங்கள்.

ஆராதனை இறைவனுக்கு மட்டுமே உரியது.

நாம் சுருபங்களை ஆராதிப்பதெற்கென்று வைக்கவில்லை.

எதற்காக வைத்திருக்கிறோம்?

நாம் புனிதர்கள் உறவை விசுவசிக்கிறோம்.

*மோட்சத்தில் உள்ளவர்கள், உத்தரிக்கிற ஆன்மாக்கள், உலகில் வாழும் நாம் எல்லோரும் கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்கள்.*

ஒரே உடலைச் சேர்ந்த நம் எல்லோருக்கும் ஞானஉறவும்,  ஜெப உறவும் இருக்கிறது.

ஒரே கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்களாகையால் ஞானஉறவு இருக்கிறது.

ஜெபத்தின்  மூலம் ஒருவரோடு ஒருவர் உரையாடலாம் என்பதால் ஜெப உறவு இருக்கிறது.

இறைவனிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி புனிதர்களிடம் நாம் செபிக்கலாம்.

அவர்கள் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசலாம்.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக நாம் வேண்டிக் கொள்ளலாம்.

அவர்கள் நமக்காக வேண்டிக் கொள்ளலாம்.

நமது பிரிந்த சகோதரர்களுக்கு இந்த ஞான உறவில் நம்பிக்கை இல்லை.

ஆகவே நாம் புனிதர்களின் சுரூபங்களைப் பற்றி சொல்வதை அவர்கள் *புரிய விரும்ப மாட்டார்கள்.*

நாம் இறைவனை மட்டும் ஆராதிக்கின்றோம்.

கோவிலில் *திவ்ய நற்கருணையை மட்டும்தான் ஆராதிக்கின்றோம்.*

 புனிதர்கள் விண்ணுலகில் வாழும் நமது நண்பர்கள்.

நமது  அன்றாட வாழ்வில் நண்பர்களை வணங்குவது போலவும்,

 அவர்களோடு பேசுவது போலவும்,

 அவர்களிடம் உதவி கேட்பது போலவும்,

 அவர்கள் உதவி செய்யும்போது நன்றி கூறுவது போலவும் 

நாம் புனிதர்களிடமும் நடந்து கொள்கிறோம்.


 புனிதர்களை வணங்குகிறோம்,

 அவர்களது ஜெப உதவியைக் கேட்கிறோம், 

செய்த உதவிகளுக்கு நன்றி  கூறுகிறோம்.

அவர்களைப்போல வாழ முயற்சிக்கிறோம்.

"இறைவன்தானே நம்மை படைத்தார். 

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று அவர்தானே  சொன்னார்.

 அவரிடம்  செபித்தால் போதாதா?

 எதற்காக புனிதர்களின் உதவி"

 என்று புனிதர்கள் உறவை விசுவசியாத  நண்பர்கள் கேட்பார்கள்.

உறவினர்களே வேண்டாம் என்று இருப்பவரிடம் சென்று உறவைப் பற்றி பேசினால் புரியாது. 

புனிதர்கள் வேண்டாம் என்று இருப்பவர்களிடம் சென்று எப்படி இதைப் புரிய வைக்க முடியும்?

நாம் புனிதர்களின் உறவை நம்புகிறோம்,

அவர்களோடு பேச ஆசிக்கிறோம்.

 அவர்களைப் போலவே வாழ விரும்புகிறோம்.

 அவர்களோடு விண்ணகத்தில் வாழவும் ஆசைப்படுகிறோம்.

நமது குடும்பத்தில் மரித்த உறவினர்களின் ஞாபகமாக வீட்டில் புகைப்படங்கள் வைப்பதில்லை?

அவற்றைப் பார்க்கும்போது அவர்களின் ஞாபகம் வருவதில்லை?

புகைப்படங்களுக்குப் பூமாலை போடுவதில்லை?

அதேபோல்தான் நாம் விரும்பும் புனிதர்களின் ஞாபகமாக,

 அவர்களை நமக்கு ஞாபகப்படுத்த,

 ஆலயத்தில் அவர்களது சுருபங்களை வைத்திருக்கிறோம்.

 அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுடைய சுருபங்களுக்கு மாலை அணிவிக்கிறோம்.

சுருபங்ன் முன்பு நின்று ஜெபிக்கும் போது,

 நாம் ஜெபிப்பது சுருபங்களிடம் அல்ல,

 அவை  ஞாபகப் படுத்தும் புனிதர்களிடம்.

" புனிதர்களின்  பாதங்களில் முத்தம் கொடுக்கலாமா?"

" உங்களுடைய phoneல் உங்களுடைய அம்மா Photo இருக்கிறதா?"

"இருக்கிறது."

"அதற்கு எப்போவாவது முத்தம் கொடுத்திருக்கிறீர்களா?''

"எப்போவாவதா? தினமும் கொடுப்பேன்." 

"புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்"

சுரூபத்துக்குக் கொடுக்கும் முத்தம் அது குறிக்கும் புனிதர் மேல் நமக்குள்ள அன்பைக் காட்டுகிறது.  

" திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறோம். அதில் இயேசு மெய்யாகவே இருக்கிறார்.

 இயேசுவின் சுரூபத்தை ஆராதிக்கலாமா?"

''கூடாது.  திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கிறார்,

ஆனால் இயேசுவின் சுரூபம் அடையாளம் மட்டுமே.

யாருடைய சுரூபமாக  இருந்தாலும் சுரூபத்தை ஆராதிக்கக் கூடாது.

இயேசு கடவுள். அவரை ஆராதிக்க வேண்டும்.

அவருடைய சுருபத்தை அடையாளமாக மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்." 

இப்போ ஒரு சந்தேகம் எழும்.

நற்கருணை முன்னாலும் தலை குனிகிறோம், கை கூப்புகிறோம்,

 சுருபத்தின் முன்னாலும் தலை குனிகிறோம், கை கூப்புகிறோம்.


நற்கருணை முன் செய்வதை ஆராதனை என்கிறோம்,

சுருபத்தின் முன் செய்வதை வணக்கம் என்கிறோம்.

அது எப்படி?

அதோடு இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கொளலாம்.

பெரியவர்களைப் பார்க்கும்போதும் தலை  குனிகிறோம், கை கூப்புகிறோம்.

அதை வணக்கம் என்கிறோம்.
அது எப்படி?

வணக்கமோ, ஆராதனையோ உடல் உறுப்புகளை என்ன செய்கிறோம் என்பதில் அடங்கி இருக்கவில்லை.

வார்த்தைகளிலும் அடங்கி இருக்கவில்லை.


நாம் இறைவனிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போதும்,

 அவர்  நமக்குச் செய்து வரும் உதவிகளுக்காக நன்றி சொல்லும் போதும்,

 நமது பாவங்களை மன்னிக்கும்படி அவரிடம் வேண்டும் போதும் 

நாம் நமக்காக அவரிடம் வேண்டுகிறோம்.

இந்த மூன்று வகை ஜெபங்களும் ஆராதனை அல்ல.


படைக்கப்பட்டவன் படைத்தவரை மட்டுமே ஆராதிக்க முடியும்.

ஆராதனை வார்த்தைகளில் இல்லை. முழங்காலில் இருப்பதில் இல்லை. கைகூப்புவதில் இல்லை.

அவரே நம்மை  படைத்தவர், நாம் அவருக்கு மட்டுமே சொந்தம் என்று ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது.

*ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.*

நமது உள்ளம் தன்னை மறந்து இறைவனோடு ஒன்றிப்பதில் இருக்கிறது.

 கடவுளை ஆராதிக்கும்போது நமக்காக எதையும் கேட்பதில்லை.

ஆராதனையின் போது நமது உள்ளத்தில் முழுக்க முழுக்க இறைவன் மட்டுமே இருப்பார்.

நம்மை முற்றிலுமாக  மறந்து விடுவோம்.

இறைவனை புகழ்வோம், மகிமை படுத்துவோம் 

அவரது படைப்பு என்ற முறையில் நம்மை முழுவதும் அவரிடம் கையளித்து விடுவோம்.

 நமது அன்பு அவரது   அன்புடன் கலந்து விடும். 

நம் முழுமைக்குள்ளும் அவர் மட்டுமே இருப்பதையும், 

 நாம் அவருக்குள்  இருப்பதையும் உணர்வோம்.

ஆராதனையின் போது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

 உணர்வுகள் கலக்கும்போது வார்த்தைகளுக்கு இடமில்லை.

ஆராதனை இறைவனுக்கு மட்டும் தான்.

கோவிலில் திவ்ய நற்கருணையை மட்டும்தான் ஆராதிக்கின்றோம்.

வணக்கம் நண்பர்களோடு பரிமாறிக் கொள்வது.

நண்பர்களின் நெருக்கத்துக்கு ஏற்ப  வணக்கத்தின் அளவு மாறும்.

மற்ற புனிதர்களை விட நமது அன்னையோடு நமக்கு உள்ள உறவு நெருக்கமாக இருக்க வேண்டும்.

புனிதர்களிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
நன்றி கூறலாம்.

இறைவனிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
நன்றி கூறலாம்.
பாவமன்னிப்பு கேட்கலாம். ஆராதனை செலுத்தலாம்.

ஒரு நண்பர் கேட்டார்:

 சுரூபங்கள் இல்லாமல் புனிதர்களை நினைக்க முடியாதா?

முடியும்.

Photo க்கள் இல்லாமல் உறவினர்களை நினைக்க முடியாதா?

எதற்காக Camera?

எதற்காக photo album?
விழாக்களில் எதற்காக video?
எதற்காக facebook?

நாம் உருவம் உள்ள மனிதர்கள்.
நாம் ஒருவரைப் பார்த்தவுடன் நமது மனதில் முதலில் பதிவது அவரது உருவம்தான்.

திருமணம் பேச ஆரம்பித்து விட்டால் மாப்பிள்ளை முதலில் பார்க்க ஆசைப்படுவது பெண்ணின் Photo வைத்தான்.

நமக்குத் தெரியும் Photo ஆள் இல்லை என்று.

ஆனாலும் பார்த்து இரசிக்கிறோம்.
முத்தம் கொடுக்கிறோம்.

பார்க்காத ஆளைப் பார்க்க ஆசைப்பட்டால் photo இருக்கிறதா? என்றுதான் கேட்போம்.

மாதாவை நாம் கண்ணால் பார்த்ததில்லை.

மற்ற புனிதர்களையும் நாம் பார்த்ததில்லை.

அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.

அவர்களை நோக்கி ஜெபிக்க விரும்புகிறோம்.

அவர்களுடைய சு௹பம் இருந்தால் பராக்கு இல்லாமல் அவர்களை நினைத்து ஜெபிக்க உதவியாய் இருக்கும்.

அதற்காகத்தான் கோவில்களில் சு௹பங்கள் வைத்திருக்கிறோம்.

திருச்சபையின் ஆரம்ப காலத்தில் அச்சு இயந்திரம் இல்லாததால் பைபிளை கையால் தான் பிரதிகள் எடுக்க வேண்டும்.

ஆகவே பிரதிகள் எண்ணிக்கை குறைவு.

எல்லோர் வீட்டிலிலும் வைத்திருக்க வாய்ப்பில்லை.

கோவிலில் மட்டும் ஒரு பிரதி பாதுகாப்பாக இருக்கும்.

மக்களுக்கு உதவியாய் இருப்பதற்காக பைபிள் நிகழ்ச்சிளை கோவில் சுவர்களிலும், சன்னல் கண்ணாடிகளிலும் படம் வரைந்து வைத்திருப்பார்கள்.

அவற்றைப் பார்த்துதான் சாதாரண மக்கள்  தியானிப்பார்கள்.

படங்களில் உள்ள உருவங்கள் மனதில் நன்கு பதியும்.

பைபிள் நிகழ்ச்சிகள் மனதில் தங்கும்.

புனிதர்களில் வாழ்க்கை நிகழ்வுகளும்  படங்களாக வரையப் பட்டன.

பட உருவங்கள் காலப்போக்கில் சுருபங்களாக மாறின.

மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காகவே சுருவங்கள் கோவில்களுள் நுழைந்தன,
ஆராதனைக்காக அல்ல.

புனிதர்களுடைய உறவை விரும்பாதவர்களுக்கு  இது ஒன்றுமே புரியாது.

நாம் அவர்களுடைய விமர்சனங்களைப் பற்றி கவலைப் படாமல்,

தாய்த் திருச்சபையின் போதனைப் படி நடப்போம்.

* விண்ணுலகில் இறைவனோடு நித்திய பேரின்பத்தில் இணைந்திருக்கும்  சகல புனிதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.*
 
லூர்து செல்வம்.




:

No comments:

Post a Comment