http://lrdselvam.blogspot.com/2020/10/219.html
"எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்."
(எபேசி. 2:19)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நாம் அனைவரும் கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கடவுளுடைய குடும்பம் எது?
கடவுளால் படைக்கப்பட்ட அனைவரும் அவருடைய குடும்பத்தினர்தான்.
மண்ணகத்தில் வாழ்வோரும் விண்ணகத்தில் வாழ்வோரும் உத்தரிக்கிற ஆன்மாக்களும் நமது குடும்பத்தில் உறுப்பினர்கள்.
எல்லோருக்கும் தந்தை ஒருவர்.
எல்லோருக்கும் ஒருவருக்கொருவர் ஆன்மீக தொடர்பு உண்டு.
எல்லா உறுப்பினர்களின் ஆன்மாக்களில் ஓடுவது நமது மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான்.
கிறிஸ்துவின் இரத்தம் தான் நமக்கு ஆன்மீக உயிர் அளிக்கிறது.
இயேசு நமது மூத்த சகோதரர்.
அவர்தான் நமக்கு தந்தையை அறிமுகப்படுத்தியவர்.
நாம் செய்த பாவங்களினால் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியபோது
அவர் தந்தையை நமது சார்பில் சமாதானப்படுத்தி நம்மை தந்தையோடு சேர்த்து வைத்தவர்.
தந்தையோடு நம்மை சமாதானப் படுத்தி வைப்பதற்காக அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
நமக்கு தந்தையோடு சமாதானம் ஏற்பட்டு பின் அது நிலைத்து இருப்பதற்காக என்றும் நம்மோடு தங்கி
நம்மை பரிசுத்தமாக்கிக் கொண்டேயிருப்பவர் பரிசுத்த ஆவி.
நம்மிடம் உள்ள பரிசுத்தத்தனம் தொலைந்து விட்டால்
நமக்கும் தந்தைக்கும் இடையே உள்ள உறவு பழையபடி முறிந்துவிடும்.
அதற்காகவே நமது உள்ளத்திலேயே தனக்கு தங்கும் இடத்தை அமைத்துக் கொண்டு
அங்கேயே தங்கி, நம்மை பரிசுத்தத்தனத்திலும், அன்பிலும் காப்பாற்றி வருகிறார்.
நமது குடும்பத்தில் அடுத்த முக்கியமான உறுப்பினர் நம்முடைய தாய் மரியாள்.
நமது சகோதரர் இயேசுவைப் பெற்றெடுத்த தாய் மரியாளை
தாயாக ஏற்றுக்கொள்ள
கிறிஸ்தவர்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் சிலர் மறுக்கிறார்கள்.
இந்த அறிவு ஜீவிகளுக்கு தாயை தாய் என்று ஏற்றுக்கொள்ள பைபிளிலிருந்து ஆதாரம் வேண்டுமாம்.
இயேசுவை அவரது தேவ சுபாவத்தில் நித்திய காலமாகப் பெற்றவர் தந்தை இறைவன்.
அந்த வகையில் இயேசு நமது சகோதரர்.
இயேசுவை அவரது மனித சுபாவத்தில் 2020 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றெடுத்தவள் அன்னை மரியாள்.
நமது சகோதரரை பெற்ற அன்னையை நமது தாயாக ஏற்று கொள்ள வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
நமது குடும்பத்தில் நிலவுவது ஆன்மீக உறவு.
ஆன்மீக உறவில் தான் இயேசு நமது சகோதரர்.
ஆன்மீக உறவில் தான் நமது சகோதரரை பெற்றவள் நமது தாய்.
இது ஒரு சாதாரண logic!
பள்ளிக்கூடமே போகாதே சாதாரண மனிதருக்கே இந்த logic புரியும்.
கற்றுத்தேர்ந்த அறிவு ஜீவிகளுக்கு
இது ஏன் புரியவில்லை என்று நமக்குப் புரியவில்லை!
உலக ரீதியான நமது குடும்பங்களில் கூட
அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம். 'லாம்' மட்டுமல்ல 'வேண்டும்.'
எந்த அளவுக்கு பேசிக் கொள்கின்றார்களோ அந்த அளவுக்கு உறவின் நெருக்கம் இருக்கும்,
பேச்சை குறைக்க குறைக்க நெருக்கமும் குறையும்.
நமது ஆன்மீக குடும்பத்திலும்
நாம் குடும்பத்தின் உறுப்பினர்கள் எல்லோரோடும் தாராளமாக பேசிக்கொள்ளலாம், பேசிக் கொள்ள வேண்டும்.
தந்தையோடு பேசவேண்டும்.
மகனோடு, அதாவது, நமது அண்ணனோடு பேசவேண்டும்.
தாய் மரியாளோடு பேசவேண்டும்.
இயேசுவை வளர்த்த சூசையப்பரோடு பேசவேண்டும்.
விண்ணகத்தில் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளோடு பேச வேண்டும்.
நமது உத்தரிக்கிற சகோதர சகோதரிகளோடு பேச வேண்டும்.
உலகில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அனைத்து சகோதர சகோதரிகளோடு பேச வேண்டும்.
நமது ஆன்மீக குடும்பத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வேண்டும் என்பதற்கு வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை.
குடும்பத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஆதாரம் மட்டும் போதும்.
குடும்பத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இது புரியாது. புரிய வைக்கவும் முடியாது.
இயேசு ஏன் "நாம் நம்மைப் போல் நமது அயலானையும் நேசிக்க வேண்டும்" என்று சொன்னார்?
ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பதற்கா?
ஒருவருக்கொருவர் பரிந்து பேசக்கூடாது என்பதற்கா?
ஒருவருக்கொருவர் உதவி செய்யக்கூடாது என்பதற்கா?
நமது விண்ணகத் தாயிடம் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொள்ளலாம்.
விண்ணிலுள்ள நம்முடைய எல்லா சகோதர சகோதரிகளிடமும் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொள்ளலாம்.
இவ்வுலகில் வாழும் நம்முடைய சகோதர சகோதரிகளிடமும் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொள்ளலாம்.
குடும்ப உறவு வெறுமனே பேசிக் கொள்வதில் மட்டுமல்ல,
ஒருவருக்கொருவர் உதவி செய்வதிலும் இருக்கிறது.
விண்ணிலுள்ள புனிதர்களுக்கு நமது உதவி தேவையில்லை.
ஆனால் நமக்கு அவர்களுடைய உதவி தேவை.
நமக்கு வேண்டிய உதவியை அவர்களிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.
உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு நம்முடைய ஜெப உதவி தேவை.
நாம் அவர்களுக்காக இறைவனிடம் மன்றாட வேண்டும். இது நமது கடமை.
உலகில் வாழும் அனைத்து சகோதர சகோதரிகளும்
ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும்.
உதவி கேட்கவும் நமக்கு உரிமை இருக்கிறது,
பெறவும் உரிமை இருக்கிறது.
இது இறைவன் தந்த உரிமை.
உலகியல் ரீதியான நமது குடும்பங்களில் குடும்ப அங்கத்தினர்களின் சிறப்புக்களையும், சாதனைகளையும் சிறப்பிக்கும் வகையில் விழாக்கள் எடுப்பதில்லை?
அதே போன்று நமது ஆன்மீக குடும்பத்திலும் விழாக்கள் கொண்டாடலாம்.
விழாக்களின் போது யாருக்காக விழாக்கள் கொண்டாடுகிறோமோ அவர்களின் ஆன்மீகப் பண்புகளை சிறப்பிக்கிறோம்.
அப்பண்புகளை நமது வாழ்விலும் கொண்டிருக்க விழாக்கள் உதவி செய்கின்றன.
நம்மை மேலும் மேலும் பரிசுத்த படுத்த அவை உதவுகின்றன.
மாதாவுக்கு விழாக்கள் எடுக்கும்போது அவர்களுடைய தாழ்ச்சி, பணிவு, அர்ப்பணம் ஆகிய பண்புகளை சிறப்பிப்பதோடு,
நாமும் அவ்வாறே வாழ வேண்டிய வரம் தரும்படி இறைவனை வேண்டுகிறோம்.
புனித சூசையப்பருக்கு விழா எடுக்கும் போது எதிர்க்கேள்வி கேட்காமலும், விளக்கம் கேட்காமலும் இறைவன் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்த அவரது பண்பினை சிறப்பிக்கிறோம். நாமும் அவ்வாறே வாழ விழாக்கள் உதவி செய்கின்றன.
இவ்வாறே மற்ற புனிதர்களுக்கும் எடுக்கின்ற விழாக்கள் நமக்கு ஆன்மீக ரீதியாக உதவிகரமாக உள்ளன.
அவ்வாறே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற சகோதர சகோதரிகளுக்கும் அவ்வப்போது விழாக்கள் எடுக்கலாம்.
எல்லா விழாக்களும் வெறும் ஆடம்பரத்திற்காக அல்ல, ஆன்மீக பயன் கருதியே எடுக்கப்படுகின்றன.
குடும்ப உறவின் உயிர் அன்பு.
அன்பு இல்லாத இடத்தில் உறவு இருக்க முடியாது.
நமது குடும்பம் கடவுளுடைய குடும்பம். ஏனெனில் கடவுள் தான் நமது தந்தை.
கடவுள் அன்பு மயமானவர்.
கடவுளை தந்தையாக கொண்ட குடும்பமும் அன்பு மயமானதுதான்.
நமது குடும்பத்தில் செயல்திட்டமே அன்பு செய்வது மட்டும்தான்.
நமது தந்தை நம் எல்லோரையும் அளவுகடந்த விதமாய் அன்பு செய்கிறார்.
நாமும் கடவுளையும் நமது சகோதர சகோதரிகளையும் அன்பு செய்ய வேண்டும்.
நமது அன்பு சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.
நமது வாழ்க்கையே அன்பு செய்வது மட்டும்தான்.
இவ்வுலகிலும் அன்பு செய்வோம்.
தொடர்ந்து மறுவுலகிலும் அன்பு செய்வோம்.
அன்பு ஒன்றே நிரந்தரம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment