"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.'' (மத். 5:48)
*--------------------------------------------------*
ஒரு L.K.G பையனைப் பார்த்து அவனுடைய Teacher கேட்டாங்க,
" ஹலோ! குட்டி மகேஷ், எதுக்காக நீ School க்கு வந்திருக்க?"
" அப்பா வரச் சொன்னாங்க."
" நீயா வரவில்லை!'
'ஆமா."
" மதியம் சாப்பிடுவாயா?"
"சாப்பிடுவேன்."
"ஏன்?"
" அம்மா சாப்பிடச் சொன்னாங்க."
ஒரு பத்தாவது வகுப்பு பையனிடம் அவனுடைய ஆசிரியர் கேட்டார்,
"எதற்காக பள்ளிக்கூடம் வருகிறாய்?"
"IAS படித்து Collector ஆகணும்னு ஆசை. அதற்காகத்தான் படிக்கிறேன்."
LKG பையனின் பதிலுக்கும்
பத்தாவது வகுப்பு படிக்கும் பையனின் பதிலுக்கும்
வித்தியாசம் இருக்கிறது.
சிறு பையன் அப்பா அம்மா சொல்வதைச் செய்கிறான். அவனுக்கு உலகமே அவனைப் பெற்றவர்கள்தான்.
ஆனால் வளர வளர நிலை மாறிவிடுகிறது.
வளர்ந்த பின் அவன் இஷ்டப்படி செயல்படுகிறான்.
அவனுக்கு உலகம் அவன் மட்டும் தான், அதாவது அவன் வாழ்வது அவனுக்காக மட்டும்தான்.
உலகத்தை அவன் தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்கிறான்.
ஆன்மீக வாழ்வில் நாம் சிறுவர்களைப் போல இருக்க வேண்டும்.
" நீ யாருக்காக வாழ்கிறாய்?"
"கடவுளுக்காக வாழ்கிறேன்."
"கடவுள் சொன்னபடி நடப்பாயா?'
"கடவுள் சொன்னபடிதான் நடப்பேன்."
"கடவுள் என்ன சொன்னாலும் கேட்பாயா."
" கேட்பேன்"
" நீ மோட்சத்திற்கு வரக்கூடாது என்று சொன்னால்?"
' போகமாட்டேன்."
" நரகத்துக்கு போ" என்று சொன்னால்?"
'போவேன்."
"ஹலோ! பாவம் செய்பவர்கள் மட்டும் தான் நரகத்துக்குப் போவார்கள்."
" கடவுளுக்காக வாழ்பவன் எப்படிப் பாவம் செய்வான்? பாவம் செய்ய மாட்டேன்."
பின் ஏன் " நரகத்துக்கு போ" என்று சொன்னால்?
'போவேன்." என்கிறாய்?"
"கடவுளுக்காக வாழ்பவன் கடவுள் என்ன சொன்னாலும் செய்வான்.
நான் கடவுளுக்காக வாழ்வது
வாழா விட்டால் அவர் என்னை நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்பதற்காக அல்ல,
கடவுள் என்னை படைத்தவர் என்பதற்காக மட்டுமே அவருக்காக வாழ்கிறேன்.
என்னை படைத்தவர் கடவுள்.
கடவுள் சொன்னபடி நடப்பேன்.
என்ன செய்தாலும் கடவுளுக்காக மட்டும் செய்வேன்.
கடவுள்தான் எனக்கு எல்லாம்."
இத்தகைய மன நிலையோடு வாழ்பவன் தான் உண்மையான ஆன்மீகவாதி.
கடவுள் நம்மை தன் சாயலாக படைத்தார்.
தனக்காகப் படைத்தார்.
ஆன்மீக வாழ்வின் ஒரே நோக்கம் கடவுளுக்காக வாழ்வதுதான்.
தனக்குப் பரிசு கிடைக்கும் என்ற காரணத்திற்காக ஆன்மீக வாழ்வில் முன்னேறுபவனைவிட
ஆண்டவருடைய விருப்பத்திற்காக ஆன்மீக வாழ்வில் முன்னேறுபவனே சிறந்த ஆன்மீகவாதி.
*வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்.* .
(மத்.12:50)
நாம் இயேசுவுக்கு பிடித்தமானவர்கள் ஆக வேண்டுமென்றால் வானகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
கடவுள் நிறைவானவர்.
நிறைவை நோக்கிய பயணம்தான் ஆன்மீக பயணம்.
நமது விண்ணக தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல
நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று நம் ஆண்டவர் சொல்லுகிறார்.
இயேசுவின் விருப்பம்தான் தந்தையின் விருப்பம்.
ஆகவே நாம் நிறைவுள்ளவர்களாய்
இருக்க வேண்டியது
நமது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல,
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கே.
ஒரு சிறு ஒப்புமை :
இரண்டு நண்பர்கள் ஒரு நகைக் கடையில் சந்திக்கிறார்கள்.
"எலேய், என்ன நகைக் கடைப் பக்கம்?"
"வீட்டுக்காரிக்கு நாளைக்கு பிறந்தநாள்.
பிறந்தநாள் பரிசு ஒன்று வாங்க வந்திருக்கிறேன். நீ எந்த விஷயமா வந்திருக்கிறாய்?"
"நாளைக்கு எங்களுடைய திருமண நாள்.
நானும் என் மனைவிக்கு. ஒரு பரிசு வாங்க வந்திருக்கிறேன்"
இருவரும் சேர்ந்து அவரவர் மனைவிக்கு பரிசுப்பொருள் தேர்ந்தெடுத்தார்கள்.
"நீ ஏன் இந்த நகையைத் தேர்ந்தெடுத்தாய்?"
"எனக்குப் பிடித்திருந்தது.
எனக்கு பிடித்ததை அவளுக்கு பரிசாகக் கொடுக்கப் போகிறேன்.
நீ ஏன் அந்த நகையைத் தேர்ந்தெடுத்தாய்?"
"எனது மனைவிக்கு பிடித்தமான நகை. அவளுக்கு பிடித்தமானதை அவளுக்கு பரிசாகக் கொடுக்கப் போகிறேன்."
இருவரும் அவரவர் மனைவிக்கு பரிசாக கொடுப்பதற்குத்தான் நகையை வாங்கினார்கள்.
ஆனால் ஒரு வித்தியாசம்.
ஒருவன் தனக்கு பிடித்தது என்பதற்காக வாங்குகிறான்
அடுத்தவன் மனைவிக்குப் பிடிக்கும் என்பதற்காக வாங்குகிறான்.
செயல் ஒன்று.
நோக்கம் வேறு.
இருவர் விண்ணக பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் தான் விண்ணகம் போக வேண்டும் என்ற நோக்கத்தோடு தந்தையின் சித்தத்தை நிறைவேற்றி நடக்கிறார்.
அடுத்தவர் விண்ணகத் தந்தை விருப்பம் தெரிவித்தார் என்பதற்காக,
அவரது விருப்பத்தை நிறைவேற்றி விண்ணகப் பாதையில் நடக்கிறார்.
இருவருமே விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள்.
ஒருவர் தான் விண்ணகம் செல்ல வேண்டும் என்பதற்காக விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.
அடுத்தவர் தந்தையின் விருப்பம் என்பதற்காக மட்டும் அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.
ஒருவர் பரிசைச் சம்பாதிக்கிறார். அடுத்தவருக்கு பரிசு கொடுக்கப்படுகிறது.
நாமும் நிறைவை நோக்கி பயணிப்போம்.
நமக்காக அல்ல கிறிஸ்துவுக்காக நிறைவை நோக்கி பயணிப்போம்..
நமக்கு ஆசை இருக்கிறது என்பதற்காக அல்ல
நமது தந்தையின் ஆசை இது என்பதற்காக நிறைவை நோக்கி பயணிப்போம்.
நமக்கு கிடைக்கவிருக்கும் பரிசுக்காக அல்ல
நாம் சந்திக்கவிருக்கும் தந்தைக்காக நிறைவை நோக்கி பயணிப்போம்..
* நமது திருப்திக்காக அல்ல,*
*ஆண்டவரின் அதிமிக மகிமைக்காக நிறைவை நோக்கி பயணிப்போம்.*
நமது வாழ்வின் நோக்கம் இறைவன்,
இறைவன் மட்டுமே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment