"என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.''
(அரு. 15:5)
"""""""""""""""""""""""""""'""""""""""""''''""""""""""""""""""""""""
பள்ளிக்கூட வயசு வராமல் விளையாடிக்கொண்டிருந்த பையன்
பள்ளியில் சேர்ந்து மாணவன் ஆனவுடன்
மாணவனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான்.
படிப்பு முடிந்தது ஏதாவது பதவி கிடைத்துவிட்டால்
பதவிக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான்.
திருமணம் ஆகிவிட்டால் கணவனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான்.
அதே போல் தான் ஒருவன் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவன் ஆகிவிட்டால்
கிறிஸ்துவுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறான்.
கிறிஸ்துவுக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல.
கிறிஸ்து மனிதனாகப் பிறந்த இறைமகன்.
கிறிஸ்து இரண்டு சுபாவங்களைக் கொண்ட ஒரு ஆள்.
தேவ சுபாவத்தையும், மனித சுபாவத்தையும் கொண்ட தேவ ஆள்.
அவர் முழுமையாக கடவுள்,
(Fully God)
முழுமையாக மனிதன். (Fully Man)
மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக மனிதனாக பிறந்தவர்.
அவர் தேவ ஆளாகையால் அவரது ஒவ்வொரு சிறு செயலுக்கும் அளவில்லாத பலன் உண்டு.
பாவம் பரிகாரமாக ஒரு சிறு கஷ்டத்தை அனுபவித்திருந்தால் போதுமானது.
அவ்வளவு பாடுகள் பட்டு, அவமானம் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால் அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு அளவற்றது என்று நமக்கு காண்பிப்பதற்காகவே
பாடுகளையும் அவமானங்கள் நிறைந்த சிலுவை மரணத்தையும் அவராகவே மனம் உவந்து ஏற்றுக் கொண்டார்.
அதற்காகவே
பாவத்தை தவிர
மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் ஏற்று மனிதனாகப் பிறந்தார்.
கடவுளான அவரது பண்புகளை முழுவதும் அப்படியே பிரதிபலிப்பது நம்மால் இயலாத காரியம்.
ஆனால் நாம் அவரோடு இருந்தால்,
அதாவது,
அவர் நம்மோடு இருந்தால்
நமக்கு எல்லாம் முடியும்.
அவரைப் பிரிந்து இருந்தால் ஒன்றுமே முடியாது.
அவர் நம்மோடு இருந்தால்
அவரைப்போல் மனமுவந்து ஏழையாக வாழ முடியும்,
அவரைப்போல் வாழ்நாள் முழுவதும் கீழ்படிந்து வாழ முடியும்.
அவரைப்போல் அனைவரையும் நேசிக்க முடியும்.
அவரைப்போல் செல்லும் இடமெல்லாம் நன்மை மட்டுமே செய்ய முடியும்.
அவரைப்போல் அவரது நற்செய்தியை உயிரைக் கொடுத்தாவது அறிவிக்க முடியும்.
தீமை செய்தவர்களுக்கெல்லாம் அவரைப்போல் நன்மை செய்ய முடியும்.
விரோதிகளையும் அவரைப்போல் நேசிக்க முடியும்.
நமக்கு விரோதமாக குற்றம் புரிந்தவர்களை அவரைப்போல் மன்னிக்க முடியும்.
அவரைப்போல் நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்க முடியும்.
அவரைப்போல் நமக்கு வரும் சிலுவையை சுமக்க முடியும்,
அவரைப்போல் மற்றவர்களுக்காக நமது உயிரையும் தியாகம் செய்யவும் முடியும்.
அவரைப்போல் செயல்கள் செய்யவும் முடியும்.
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்: ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்:"
(அரு. 14:12)
நமக்கு முன் மாதிரிகையாக இயேசுவே வாழ்ந்து காட்டினார்.
அவரைப் பின்பற்றி புனிதர்களும் வாழ்ந்து காட்டினர்.
நாமும் புனிதர்களைப் போலவே இயேசுவைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம்.
இயேசு எப்போதும் நம் இருதயத்தில் இருந்தால் அவரைப் போலவே வாழ்வது எளிது.
நமது சிந்தனையில் இயேசு இருந்தால் இயல்பாகவே வார்த்தையிலும், செயலிலும் இருப்பார்.
பெண்மணி ஒருவர் தெருவழியே ஒரு சிறு பையன் அழுதுகொண்டு போவதைப் பார்த்தாள்.
"தம்பி, இங்க வா."
"என்ன அம்மா?"
"அம்மா என்றா சொன்னாய்?"
"ஆமம்மா."
"ஏன் அழுகிறாய்?"
"என்னுடைய அம்மாவும் அப்பாவும் தொலைந்து போய் விட்டார்கள்.
அவர்களை தேடி அழுகிறேன்.''.
"எப்போது தொலைந்து போனார்கள்?"
"மூன்று நாட்களுக்கு முன்பாக,"
"எங்கே வைத்து?"
".தெரியவில்லை."
" சாப்பிட்டாயா?"
"இன்றைக்கு சாப்பிடவில்லை."
"வா, சாப்பிட்டு விட்டுப் பேசலாம்."
"ரொம்ப நன்றிம்மா."
"பரவாயில்லை. உன்னைப் பார்க்கும் போது என் மகனைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.
சிறுவயதில் உன்னைப் போலவே இருப்பான்.
இப்போ பெரிய ஆள். வெளிநாட்டில் இருக்கிறான்."
"நான் என்னுடைய அப்பா அம்மாவை கண்டு பிடிக்க வேண்டும்."
" நானே தேடிக் கண்டு பிடிக்கிறேன். அதுவரை என்னோடே இரு."
"சரிம்மா."
அந்தத் தாய்க்கு சிறுவன் அவளது மகனைப் போலவே இருந்ததால் அவன்மீது அவளை அறியாமலேயே பாசம் ஏற்பட்டது.
அவளுக்கு மட்டுமல்ல,
நமக்கும் அப்படித்தான்.
நமக்கு மிகவும் பிரியமானவர்களை ஞாபகப்படுத்தும் ஆட்கள் மீதும் பொருள்கள் மீதும் நம்மை அறியாமலேயே ஒரு வித பற்று ஏற்படும்.
நாம் கடவுளை உண்மையிலேயே அதிகமாக அன்பு செய்தால்,
இந்த உலகில் எதைப் பார்த்தாலும் அவரது ஞாபகம் வர வேண்டும்.
ஏனெனில் இந்த உலகும், அதில் உள்ள எல்லா பொருட்களும் கடவுளாலேயே படைக்கப்பட்டன.
ஒவ்வொரு பொருளும் கடவுளுடைய கைவேலைப்பாடே.
படைக்கப்பட்ட எல்லா பொருட்களும் படைத்த கடவுளுடைய வல்லமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
ஆகவே கடவுளுடைய ஞாபகம் இல்லாமல் வாழவே முடியாது.
ஞாபகம் இருந்தால் அவரைப் புகழாமல் இருக்க முடியாது.
அவரால் படைக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவோமே தவிர பாழாக்க மாட்டோம்.
அவரால் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களை நேசிக்காமல் இருக்க முடியாது.
மற்றவர்களுக்கு தீங்கு செய்ய முடியாது.
ஏனெனில் அவர்களில் கடவுளைப் பார்ப்போம்.
கடவுளின் சாயலை உடையவர்களுக்கு எதைச் செய்தாலும் அதைக் கடவுளுக்கே செய்கிறோம்.
கடவுள் நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இருந்தால் நம்மால் பாவம் செய்யவே முடியாது.
பெரிய பதவியில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டால் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது.
நாம் கடவுளையே கைக்குள் போட்டுக் கொள்வோம்.
கடவுளுக்குப் பிரியமானதை சாதிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment