Thursday, October 8, 2020

*என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்.*(லூக். 11:23)

*என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்.*
(லூக். 11:23)
*__________________________________*

அரசியலில் நடுநிலைமை (neutrality) வகிப்பவர்களுக்கு ஒரு வசதி உண்டு.

இஷ்டப்பட்ட நேரத்தில் கட்சி மாறாமலே இஷ்டப்பட்ட பக்கம் சாய்ந்து கொள்ளலாம்.

ஆனால் *ஆன்மீகத்தில் நடுநிலைமைக்கு இடம் இல்லை.*

இறைவனுக்காக வாழாதவன்

 உலகத்திற்காக, அதாவது, சாத்தானுக்காக, வாழ்கிறான்.

"எனக்கு இறைவன் மீதும் நம்பிக்கை இல்லை.

சாத்தான் மீதும் நம்பிக்கை இல்லை."

என்று கூறமுடியாது.

இறைவனை நம்பாதவன் சாத்தானை நம்புகிறானோ இல்லையோ, அவன் பக்கம்தான்.

*உலக இன்பங்களுக்காக வாழ்பவர்கள் சாத்தானுக்காகத்தான் வாழ்கிறார்கள்.*

அதேபோல எனக்கு இறைவனும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று கூற முடியாது.

*எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.*

 *ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.*

 *அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான்.*

 *கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது.*" (மத். 6:24)

ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், உலகியல்வாதியாகவும் இருக்க முடியாது.

விண்ணுலகை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவன் ஆன்மீகவாதி.

 உலக செல்வங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்பவன் உலகியல்வாதி.

ஆன்மீகவாதி உலகத்தை ஆன்மீக வாழ்விற்காக பயன்படுத்திக் கொள்வான்.

வாழும் ஒவ்வொரு விநாடியையும், செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனின் அதி மிக மகிமைக்காக ஒப்புக்கொடுப்பான்.

ஈட்டும் செல்வத்தை இறையன்பு பிறரன்பு சேவைகளுக்காகப் பயன்படுத்துவான். 

அவனது உடல் இறை சேவையில் ஆன்மாவோடு செயல் புரியும். 


உலகியல்வாதி ஆன்மாவை உலக  வாழ்விற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வான்.

ஆன்மாவின் சிந்தனை, சொல், செயல் எல்லாம் உலகைச் சார்ந்ததாகவே இருக்கும்.

வாழும் ஒவ்வொரு விநாடியையும், செய்யும் ஒவ்வொரு செயலையும் பணம் ஈட்டுவதற்காகவே 
செலவிடுவான்.

உதாரணம்: யூதாஸ்.

"அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவனும், அவருடைய சீடருள் ஒருவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து,

5 "ஏன் இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது ?" என்றான்.

6 ஏழைகள்மீது கவலையிருந்ததாலன்று அவன் இப்படிக் கூறியது: திருடனாயிருந்ததால்தான். தன்னிடம் ஒப்படைத்திருந்த பொதுப்பணத்திலிருந்து காசை அவன் எடுத்துக்கொள்வதுண்டு."
(அரு. 12:4-6)

பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவனாக இயேசுவுடனேயே மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான்.

 ஆனால் அவன் சேவை செய்தது பணத்திற்கு.


*கிறிஸ்தவன் என்ற பெயரை வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் ஆன்மீகவாதி ஆகிவிடமுடியாது,*

 *கிறிஸ்தவின் போதனைப் படி  வாழ்பவனே உண்மையான ஆன்மீகவாதி.*

 நண்பர் ஒருவர் கேட்கிறார்:

 நாம் உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் உலகில் வாழ முடியாது. 

பணம் இல்லாமல் இம்மூன்றையும் பெற முடியாது. 

வேலை ஒன்றும் செய்யாமல் பணம் பெற முடியாது .

உலகில் வாழ அத்தியாவசியமாக தேவைப்படுகிறது பணமும் அதை ஈட்டுவதற்கான வேலையும் தான்.

உலகத்தில் வாழ்வதற்காக இவையெல்லாம் தேவைப்படுகின்றன.

உலகில் வாழ்வதற்காகத்தான் பணத்தை ஈட்டுகிறான்.

உலகில் வாழ்வதற்காக தான்
வேலை செய்கிறான்.

இவ்வளவையும் செய்பவன் உலகியல்வாதியாகத்தான் இருக்க முடியும்.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் இது பொருந்தும்.

உலகில் வாழ்ந்துகொண்டுதான் இறைவனுக்கு சேவை செய்ய 
வேண்டும்.

இறைவனுக்கு சேவை செய்பவன் ஆன்மீகவாதி.

அப்படியானால் உலகியல்வாதியாக இருப்பவன் ஆன்மீகவாதியாக இருக்க முடியாது என்றால் அது எப்படி?" 


"தம்பி இங்கே வா கையில் பையுடன் எங்கே போகிறாய்?"

"பள்ளிக்கூடம் போகிறேன்."

"எதற்காக?"

"பெயருக்குப் பின்னால் ஏதாவது degree இருந்தால்தான் எவனும் வேலை தருவான்.

அந்த degree யைச் சம்பாதிக்கத்தான் பள்ளிக்கூடம் போகிறேன்."

"தம்பி, நீயும் இங்கே வா. எங்கே போகிறாய்?"

"அந்த தம்பியை போல தான் நானும் பள்ளிக்கூடம் போகிறேன்.
ஆனால், degree யைச் சம்பாதிக்க அல்ல. கல்வி அறிவு பெறுவதற்காக பள்ளிக்கூடம் போகிறேன்."

"அந்தத் தம்பி degree இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்கிறான்."

"எங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் degree இருக்கிறது.

 ஆனால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் நிர்வாகிக்கு ஒரு degreeயும் இல்லை."

இரு பையன்களும்  பள்ளிக்கூடம் தான் போகிறார்கள். அங்கே ஆசிரியர் சொல்லித் தரும் பாடத்தை தான் கற்கிறார்கள்.

ஆனால் இருவரின் நோக்கங்களும் வெவ்வேறு.

*அப்படியே உலகியல்வாதியும், ஆன்மீகவாதியும் உலகில் தான் பிறந்து வாழ்கிறார்கள்.*

*அவர்கள் உலகியல்வாதிகளா,  ஆன்மீகவாதிகளா  என்று தீர்மானிப்பது அவர்களுடைய வாழ்க்கை அல்ல,  வாழ்க்கையின் நோக்கம். (Intention)*

 அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தீர்மானிப்பது அவர்களது வாழ்வின் நோக்கம் தான், அவர்களது உணவோ, உடையோ, இருப்பிடமோ அல்ல.

ஒருவன் வீட்டிற்குள் நுழைகிறான்,

 கொஞ்சம் பொறுத்து அதே வீட்டிற்குள் இன்னொருவன் நுழைகிறான்.

முதலில் நுழைந்தவன் அந்த வீட்டின் சொந்தக்காரன். அங்கு வாழ்வதற்காக நுழைகிறான்.

இரண்டாவது நுழைந்தவன் திருடன். அங்கு திருடுவதற்காக நுழைகிறான்.

செயல் ஒன்று, நோக்கம் வெவ்வேறு.

நாம் வாழ்கின்ற இதே உலகத்தில்  தான் இயேசு  மனிதனாகப் பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார்.

நம்மைப் போல்தான் அவரும் உண்டார், உடுத்தினார், உறங்கினார், பேசினார்.

நாம் யாரையும் இரட்சிப்பதற்காகப் பிறக்கவில்லை.

அவர் நம்மை இரட்சிப்பதற்காகப் பிறந்தார்.

நாம் இறைவனுக்காக வாழ்ந்து 
மறு உலகில் நிலைவாழ்வு பெறுவதற்காக இவ்வுலகில் பிறந்தோம்.

ஆனால்  நாம் பிறந்த நோக்கத்தின் படி  நாம் வாழவில்லை.

இயேசு நம்மை மீட்டு,
 நிலை வாழ்விற்கு அழைத்துச் செல்வதற்காக பிறந்தார்.

*நம்மை ஆன்மீகவாதிகளா, உலகியல்வாதிகளா என்று தீர்மானிப்பது நமது செயல்கள் அல்ல, செயல்களின் நோக்கம்.*

மொத்தத்தில் *நமது வாழ்க்கை முழுவதையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.*

அர்ப்பண வாழ்வுக்குள் பாவம் நுழையாது.

அர்ப்பண வாழ்வு வாழ்வோர் வாழ்வது இவ்வுலகில்
,

 ஆனால் இவ்வுலகிற்காக அல்ல,

மறுவுலகிற்காக.

உலகியல் வாழ்வு வாழ்வோர் வாழ்வது இவ்வுலகிற்காக மட்டும்.

 அபூர்வமாக கோவிலுக்கு வரும் கிறிஸ்தவ நண்பர் ஒருவர் திடீரென்று ஒழுங்காக ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வர ஆரம்பித்தார்.

"சார் பரவாயில்லையே.

 இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூசைக்கு வந்து விடுகிறீர்கள்!"

"வேறு என்ன சார் செய்ய? இப்போதுதான் training முடித்தேன்.

சாமியாரிடம் வேலைக்கு விண்ணப்பம் கொடுத்தேன்.

 அவர் விண்ணப்பத்தை வாங்கும்போது என்னிடம் கேட்ட ஒரே கேள்வி,

" ஒழுங்காக ஞாயிறு பூசைக்கு வருகிறீர்களா?"
 
ஒழுங்காக பூசைக்கு வந்தால்தான் வேலை கிடைக்கும் போலிருக்கிறது.

வேலை இல்லாமல் வாழ முடியாது.

அதற்காகத்தான் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு ஒழுங்காக வாழ வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்."

இவர் என்ன வாதி?


"ஹலோ, இப்போவெல்லாம் சின்னக் குறிப்பிடமும் கையிமாய் இருக்கிறீங்க."

"வேறென்ன செய்ய! ஏழு குறிப்பிடமும் பாராமல் ஒப்பித்தால்தான் ஓலை எழுதுவேன் என்று சாமியார்  சொல்லிவிட்டார்."

"அப்போது நீ ஞான உபதேசம் படிப்பதற்காகச் சின்னக் குறிப்பிடம் படிக்கல.

 கல்யாணம் முடிப்பதற்காக படிக்கிற!

உன்னதமான நோக்கம்!"

இப்படிப் பட்டவர்களும் இருக்கிறார்கள்!

"திருவிழா முடிந்த உடன் மக்களுக்கு திருவிழா சாப்பாட்டுப் பொறுப்பை யாராவது ஏற்றுக்கொள்கிறீர்களா?"

"சாமி, சாப்பாடு என் பொறுப்பு."

"உபதேசியார் சார் கோவில் திருவிழா நோட்டீஸ் அச்சடிச்சாச்சா?"

"அச்சடிச்சாச்சி. இந்தா பாருங்க."

"திருவிழா முடிந்து பிரியாணி உணவு வழங்கப்படும் என்று போட்டு இருக்கீங்க, என் பெயரைப் போடவில்லை?"

 அசன விருந்தின் நோக்கமே அவர் பெயரை நோட்டீசில் போடுவது தான்! 

"*நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும்.*" (மத். 6:3)

உலகில் தான் வாழ்கிறோம்.

 *ஆனால், வாழ்வது*
.
 *இறைவனுக்காக,*

*இறைவனுக்காக மட்டும்தான்!*

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment