*"உங்களில் ஒருவன் தன் தந்தையிடம் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லையா கொடுபபான்? "* (லூக். 11: 11)
*+++++*
"அப்பா, Super market லிருந்து ஒரு பாக்கெட் வடை வாங்கி வாங்க, அப்பா."
"அடேய், வடை வேணும்னா அம்மாட்ட கேளு, சுட்டுத் தருவா."
"Super market லிருந்து வாங்குகின்ற வடை ரொம்ப tasteஆ இருக்கும்."
"அது tasteஆ இருக்கலாம். ஆனா உடம்புக்குக் கெடுதி. எல்லா வகையான fast food களும் உடம்புக்குக் கெடுதிதான்.
அம்மாட்ட போய் கேள், போ."
நம்மைப் பெற்றவர்களுக்கு நம்மேல் நம்மை விட அக்கரை அதிகம்.
அதே போல்தான் நமது விண்ணகத் தந்தைக்கும்.
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்:"
என்று சொன்ன நம் ஆண்டவர் கேட்டதை எல்லாம் கொடுக்க மாட்டார்.
கேட்க வேண்டியதைக் கேட்டால் கொடுப்பார்.
நாம் கேட்பது வேண்டியதா, வேண்டாததா என்று நமக்குத் தெரியாது, ஆனால் ஆண்டவருக்கு தெரியும்.
"உங்களில் ஒருவன் தன் தந்தையிடம் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லையா கொடுப்பான்?'
என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
உணவின் அடிப்படை யில் அப்பம்
சாப்பிடக்கூடியது, கல் சாப்பிட பயனற்றது.
நாம் சாப்பிடக்கூடியதைக் கேட்டால் இறைவன் தருவார்.
நான் பசியாய் இருக்கும் போது இறைவன் நிச்சயமாக சாப்பிட முடியாததை தரமாட்டார்.
நாம் பசியாய் இருக்கும்போது சாப்பிடுவதற்காக கல்லை கேட்டால் இறைவன் தருவாரா?
நிச்சயமாக தரமாட்டார். நாம் கேட்ட கல்லைத் தர மாட்டார்.
மாறாக நம்மால் சாப்பிட கூடியதை மட்டும் தருவார், நாம் கேட்டிருக்கா விட்டாலும் கூட.
அப்பம் என்று சொல்லும்போது ஆண்டவர் சாப்பிடக்கூடிய பொருளை மட்டும் குறிப்பிடவில்லை. இது ஒரு உதாரணத்திற்காக மட்டும்.
நமது ஆன்மீக வாழ்க்கைக்கு எதெல்லாம் பயன்படுகிறதோ அதையெல்லாம் *அப்பம்* என்று எடுத்துக்கொள்வோம்.
நமது ஆன்மீக வாழ்க்கைக்கு எதெல்லாம் தீங்கு விளைவிக்கிறதோ அதையெல்லாம் *கல்* என்று எடுத்துக்கொள்வோம்.
*நாம் கேட்பது நமது ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாய் இருக்குமானால்*
*இறைவன் உறுதியாக அதை நமக்குத் தருவார்.*
*நாம் கேட்பது ஆன்மீக வாழ்விற்கு இடைஞ்சலாக இருக்குமானால் உறுதியாக அதை நமக்குத்
தரமாட்டார்.*
நாம் கேட்பது சரியானதா தவறானதா என்பதை இறைவன் தான் தீர்மானிக்க வேண்டும்.
இறைவனை வைத்துதான் நாம் கேட்கும் பொருளின் தன்மையை நம்மால் தீர்மானிக்க முடியும்.
நாமாகவே நாம் கேட்கும் பொருளின் தன்மையை தீர்மானித்துக் கொண்டு
அதன் அடிப்படையில் இறைவனை வற்புறுத்தக் கூடாது.
உதாரணத்திற்கு, நாம் நமது படிப்பின் அடிப்படையில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
"இறைவா, நான் விண்ணப்பித்து இருக்கும் வேலை எனக்கு கிடைக்குமானால் கணிசமான வருமானம் கிடைக்கும்.
எனது குடும்பத்தைக் காப்பாற்ற உதவியாக இருக்கும்.
ஆகவே, ஆண்டவரே, இந்த வேலை எனக்கு எப்படியாவது கிடைக்கும்படி உதவி செய்தருளும்"
என்று இறைவனிடம் விண்ணப்பிக்கிறோம்.
நாம் விண்ணப்பித்திருக்கும் வேலை நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் என்று நாமாகவே தீர்மானித்துக் கொண்டு
நமது வேண்டுதலை கேட்கும்படி இறைவனை வற்புறுத்தக்கூடாது.
*பொருளாதாரத்திற்கு உதவியாய் இருப்பதெல்லாம் அருளாதாரத்திற்கும் உதவியாய் இருக்கும் என்று கூற முடியாது.*
நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும் கம்பெனி சட்ட விரோதமாக செயல்பட்டு நிறைய பணம் ஈட்டக்கூடிய கம்பெனியாக இருக்கலாம்.
அது நமக்குத் தெரியாது.
அதனுடைய சட்டவிரோத செயல்களுக்கு உதவியாக இருக்கும் பணியாளர்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கலாம்.
நாம் நமக்கு கிடைக்கவிருக்கும் சம்பளத்தின் அடிப்படையில்தான் வேலையை மதிப்பிடுகிறோம்.
ஆனால் நமக்கு வேலை கிடைத்து கம்பெனியில் மாட்டிக் கொண்டால்
அதனுடைய சட்ட விரோத செயல்களுக்கும் நாமும் உதவிகரமாய் இருக்க நேரிடும்.
நமது ஆன்மீக வாழ்வு எதிர்மறையாக பாதிக்கப்படும்.
ஆகவே இறைவனிடம் நாம் விண்ணப்பிக்கும் போது,
"இறைவா ஒரு வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறேன்.
அது எப்படிப்பட்ட கம்பெனி என்று எனக்குத் தெரியாது.
உமக்கு சித்தம் இருந்தால் அது கிடைக்க வகை செய்யும்."
என்று வேண்ட வேண்டும்.
*நாம் கேட்பது கல்லாய் இருந்தால், அதாவது, ஆன்மீகத்திற்குப் பயனற்றதாக இருந்தால்*
*உறுதியாக இறைவன் நமக்குத் தர மாட்டார்.*
நல்ல வேலைக்கு விண்ணப்பிக்க நமக்கு வழிகாட்டுவார்.
இறைவனை நமது தந்தை என்று ஏற்றுக் கொண்டால்,
நம்மைப் பற்றிய பொறுப்பு முழுவதையும் அவரிடமே விட்டுவிட வேண்டும்.
அவருடைய வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும்.
ஒரு Choir master பாடகர்களை பார்த்து சொன்னார்,
"எனது Tuneக்கு ஏற்ப, நீங்கள் பாட வேண்டும்.
பத்து பேரும் பத்து விதமாகப் பாடினால் நான் ஒரே நேரத்தில் பத்து டியூன் போட முடியாது."
*நாம் பாடுவதற்கு ஏற்ப கடவுள் Tune போடமாட்டார்.*
*அவர் போடுகின்ற Tuneக்கு ஏற்ப நாம் பாட வேண்டும்.*
நண்பர் ஒருவர் கேட்கிறார்:
"நான் இறைவனின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் நடக்கிறேன்.
ஆனால் எனது பொருளாதார வாழ்வு தாழ்வாக இருக்கிறது.
வருமானம் செலவுகளுக்கு பற்றாக்குறையாக இருக்கிறது.
ஆனால் இறைவனது சட்டங்களுக்கு கட்டுப்படாமல் வாழ்பவர்கள் நிறைய சம்பாதித்து வசதியோடு வாழ்கிறார்கள்.
அவர்களுக்கு கொடுக்கும் கடவுள் எனக்கு ஏன் கொடுப்பதில்லை?"
இந்த சந்தேகம் அநேகருக்கு இருக்கிறது.
ஒரு அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொண்டால் இந்த சந்தேகம் வராது.
முழு மனுக் குலத்தையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
தங்களது சுதந்திரத்தைப் பயன்படுத்தி இறைவன் காட்டிய வழியே நடப்பவர்கள்.
முழு சுதந்திரத்தோடு இறைவனுக்கு எதிராக நடப்பவர்கள்.
இரண்டு வகையினரையும் படைத்தவர் இறைவனே.
அவர்கள் வாழ்கின்ற உலகையும் அவர்கள் பயன்படுத்துகின்ற பொருட்களையும் படைத்தவர் இறைவனே.
முதல் வகையினர் இறைவன் படைத்த பொருள்களைப் பயன்படுத்தி கொண்டு
அவர் படைத்த உலகில் அவர் காட்டிய வழியில் நடக்கிறார்கள்.
இரண்டாம் வகையினர் இறைவன் படைத்த பொருள்களைப் பயன்படுத்தி கொண்டு
அவர் படைத்த உலகில் அவருக்கு எதிராக நடக்கிறார்கள்.
இறைவன் வழி நடப்பவர்கள்
இறைவனது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு
தங்களுக்குக் கிடைத்ததை பயன்படுத்தி நிம்மதியாக வாழ்கின்றார்கள்,
இறைவனுக்கு எதிராக நடப்பவர்கள் இறைவனது சட்டங்களுக்கு கட்டுப்படாமல்
தங்கள் இஷ்டம் போல் சட்டவிரோதமாக ஈட்டிய பொருளைக் கொண்டு
நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள்.
"வசதியாக இருப்பவர்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று பொருளல்ல.*
அவர்களிடம் போதும் என்ற
மனதே இருக்காது.
ஆகவே எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி இருக்காது.
*திருப்தி இல்லாத இடத்தில் நிம்மதி இருக்காது.*
அவர்கள் பயணிக்கும் பாதை அழிவுக்கு இட்டுச்செல்லும் அகலமான பாதை.
அழிவை நோக்கி அவர்களாகவே முழு சுதந்திரத்தோடு பயணிக்கிறார்கள்.
ஆனால் *இறைவன் வழி நடப்பவர்கள்*
*அவரது அருளால் கிடைத்தது எவ்வளவாக இருந்தாலும்*
*திருப்தியோடு ஏற்றுக்கொண்டு,*
*அதைப் பயன்படுத்தி*
*நிம்மதியாக வாழ்வதோடு,*
*மறுஉலக நித்திய பேரின்பத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.*
இரண்டு வகையினரும் இறைவன் படைத்த உலகிலேயே, அவர் படைத்த பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வுலகில்,
*எவ்வளவு அருளோடு வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.*
*எவ்வளவு பொருளோடு வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல.*
ஆகவே இறைவன் வழி நடக்கும் நாம்
அவரிடம் வேண்டும் போது
*அருள் வளத்திற்காக வேண்ட வேண்டுமே தவிர*
*பொருள் வளத்திற்காக அல்ல.*
இறைவன் நமது விண்ணப்பத்திற்கு செவிமடுக்க காலம் தாழ்த்துவதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இறைவன் நம்மோடு எப்போதும் உரையாடிக் கொண்டே இருக்க விரும்புகிறார்.
நாம் கேட்பதைக் கேட்ட உடனே தந்து விட்டால்
மறுபடி ஏதாவது கேட்க வேண்டியதுவரும் வரை கடவுளைத் தேட மாட்டோம்.
கேட்டது உடனே கிடைக்காவிட்டால் ஓயாமல் அவரிடம் கேட்டுக் கொண்டே இருப்போம்,
இதனால் நமக்கும் கடவுளுக்கும் இடையில் ஐக்கியம் அதிகமாகும்.
இதை நாம் புரிந்து கொண்டால் *அவரிடம் கேட்டுக் கொண்டே இருப்பதைவிட*
*அவரிடம் பேசிக் கொண்டே இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவோம்.*
நமக்கு வேண்டியவற்றை கேட்டு விண்ணப்பிப்பதைவிட
ஆண்டவரை தியானிப்பதிலும் ஆராதிப்பதிலும் அதிக நேரத்தை செலவிட்டால்
நமக்கு வேண்டியவற்றை நாம் கேளாமலேயே நமக்குத் தருவார்.
*இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.*
*ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:*
*இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.*
(மத். 6:32, 33)
என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.
கொஞ்சம் யோசித்தால் புரியும். நாம் கேட்பதை விட
நமக்கு ஆண்டவரே முக்கியம்.
*அவரோடு தான் நித்திய காலம் வாழப் போகிறோம், அவரிடம் கேட்கும் பொருள்களோடு அல்ல.*
*ஒரு சிறுகுழந்தையின் ஜெபம்.*
*"இறைவா நாங்கள் உமது கையில் இருக்கிறோம்.*
*எங்களைப் பற்றி உமக்கு கவலை
வேண்டாம்.*
*உமது கையை நீர் பத்திரமாக பார்த்துக் கொண்டால் போதும்."*
*நாமும் சிறு குழந்தையாய் மாறுவோம். இறைவன் கையில் அமர்வோம்."
வேறென்ன வேண்டும்?
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment