Saturday, October 31, 2020

பங்குச் சாமியார்னா யாரு?

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_31.html



   பங்குச் சாமியார்னா யாரு?
                 " * *



அனுபவசாலிகளின் பதில்.

"அம்மான்னா யாரு?"

"பால் கொடுப்பவள். பண்டம் கொடுப்பவள். பசிக்கும் போது சோறு கொடுப்பவள்."


"அப்பான்னா யாரு?"

"நேரம் கிடைக்கும்போது அடிப்பவர்."

" வாத்தியார்னா யாரு?"

"கையில ஒரு பிரம்பு இருக்கும். உள்ளங்கையில் எண்ணி எண்ணி அடிப்பார்."

"Headmaster னா யாரு?"

"வாத்தியார் அடித்து கை உளைந்து விட்டால், இவரிடம் அனுப்பி வைப்பார்."

"பங்குச் சாமியார்னா யாரு?"

"வாரம் ஒரு முறை கோவிலில் பிரசங்கம் வைப்பார். பள்ளிக்கூடமெல்லாம் நடத்துவார்.
எங்க அப்பா அவருடைய பள்ளியில் தான் வேலை பார்க்கிறார். மாதம் ஒண்ணாம் தேதி சம்பளம் கொடுப்பார். அவசரத்துக்குக் கடன் கொடுப்பார், ஆனால் அடுத்த சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்."


யாரைப் பற்றி யாரிடம் கேட்டாலும் அவரவர் அனுபவத்தில் இருந்து தான் பதில் வரும்.

பங்குச் சாமியார்னா யாரு?

பங்குச் சாமியார் என்பதை விட பங்குத் தந்தை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.

குடும்பத்தில் குடும்ப அங்கத்தினர்களின் வாழ்வுக்கு பெற்ற தந்தை பொறுப்பாய் இருப்பதுபோல,

பங்குமக்களின் ஆன்மீக வாழ்வுக்கு பொறுப்பாய் இருப்பவர்
பங்குத் தந்தை.

நமது ஆன்மீக மீட்புக்காக இயேசு தன்னையே அர்ப்பணித்தார்.

அவரது இடத்தில் இருந்துகொண்டு பங்கு மக்களின் ஆன்மீக மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்பவர் நமது பங்குத்தந்தை.

நாம் ஞானஸ்நானம் பெற்ற வினாடியிலிருந்து நமது ஆன்மீக பயணத்தில் நம்முடனே பயணித்து இறுதிநாளில் நம்மை விண்ணக வீட்டிற்கு அனுப்பி வைப்பவர் நமது பங்குத்தந்தை. 

'யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும்"

 என்று இறைவன் இயேசு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி 

இயேசுவின் பெயரால் நமது பாவங்களை மன்னித்து 

நம்மை பரிசுத்தத்தனத்தில் வழிநடத்துபவர் நமது பங்குத்தந்தை.

நமது பாவங்களை மன்னிப்பதால்
அவர் நமது ஆன்மீக மருத்துவர்.

குடும்பங்களில் உள்ளவர்கள் உலகியல் ரீதியாக ஒரு குடும்ப மருத்துவரிடம் (family doctor) மருத்துவம் பார்ப்பதுண்டு.

அக்குடும்பத்திலுள்ள அனைவரின் உடல்ரீதியான எல்லா மருத்துவ விபரங்களும் அவருக்குத் தெரியும்

இது அவர்கள் மருத்துவத்திற்காக வரும்போது நோயைக் கண்டுபிடித்து மருந்து கொடுக்க உதவியாய் இருக்கும்.

அதேபோல் பங்காகிய ஆன்மீக குடும்பத்திற்கு பங்குத் தந்தைதான் ஆன்மீக மருத்துவர்.

பாவமன்னிப்பை மட்டுமல்ல ஆன்மீக ரீதியான எந்த வகை ஆலோசனைகளையும் நாம் அவரிடம் இருந்து பெறலாம்.

ஏனெனில் அவர்தான் நமது ஆன்மீக வழிகாட்டி.(Spiritual Director)

நமது ஆன்மீக பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய சக்தியும் பங்கு தந்தைக்கு உண்டு.

அடிக்கடி பங்கு தந்தையின் ஆலோசனையை பெறுபவர்கள் பரிசுத்த வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவார்கள்.

ஆன்மீக வழிகாட்டி என்ற முறையில் பங்குத் தந்தையின் ஆன்மீக ஆலோசனைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம். 

அவர் நமது ஆன்மீகப் பயணத்தில் நம்முடனே பயணிப்பதால் 
 வழி தவறாமல் விண்ணகம் நோக்கி முன்னேறலாம். 

நம்மவர்களுக்கு பங்குத்தந்தையை ஆன்மீக ரீதியாக பயன்படுத்த தெரியவில்லை.

 காரணம் ஆன்மீகம் என்றாலே கோவிலுக்கு வருவதும்,

 வரி பிரித்துத் திருவிழா கொண்டாடுவதும்,

திருத்தலங்களுக்கு திரு யாத்திரை போவதும்,

கோவிலில்கள் கட்டுவதும்

மட்டும்தான் ஆன்மீகம் என்று அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த காரியங்களுக்காக மட்டுமே பங்குத் தந்தையை அணுகுகிறார்கள்.


உண்மையான ஆன்மீகம் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் வளர்வதுதான் என்பது அநேகருக்கு புரியவில்லை.

கோவில்கள், திருத்தலங்கள் திருவிழாக்கள் ஆகியவை இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஆன்மீக உறவை வளர்ப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

உண்மையான ஆன்மீக உறவை மறந்துவிட்டு வெளியரங்க ஆடம்பர விழாக்களில் மட்டும் கவனம் செலுத்துவது கிறிஸ்தவம் அல்ல.

இயேசு உண்மையான ஆன்மீக உறவை வளர்க்கும் நோக்கத்தோடு ஏழு தேவத்திரவிய அனுமானங்களை ஏற்படுத்தினார்.

ஆனால் நாம் ஞானஸ்நானத்தையே ஒரு விழாவாகத்தான் கருதுகிறோம்.

ஆகவேதான் ஞானஸ்நான விழாவிற்கு யார் யாரை அழைக்கலாம்,

 என்னென்ன விருந்து வைக்கலாம்,

 எப்படி ஆடம்பரமாக கொண்டாடலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்.

  விழாவிற்கு வருகின்றவர்கள் என்னென்ன பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.


குழந்தையின் ஜென்ம பாவம் மன்னிக்கப்பட்டு, ஆன்மா பரிசுத்தம் அடைந்து இருக்கிறது என்பதற்காக மகிழ்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்?

ஞானஸ்நானத்தில் குழந்தை பெற்ற பரிசுத்தத்தனத்தில் 

அதை வளர்ப்பது எப்படி என்று திட்டம் தீட்டுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?


குழந்தையின் ஞான காரியங்களில் அக்கறை காட்டும் ஞான பெற்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

அதேபோன்று பையன் புதுநன்மை வாங்குவதையும் ஒரு ஆடம்பர விழாவாகத் தான் கொண்டாடுகிறார்கள்.


இறைமகன் இயேசு கன்னி மரியின் வயிற்றில் எடுத்த அதே உடலோடும் இரத்தத்தோடும் தங்களுடைய மகனிடம் வந்தார் என்பதற்காக மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெற்றோர் எத்தனை பேர்?

திருமணத்தை ஒரு தேவக் திரவிய அனுமானம் என்பதற்காக பெறுபவர்கள் எத்தனை பேர்?

தேவத் திரவிய அனுமானம் உள்ளார்ந்த அருளின் வெளியரங்க அடையாளம்.
(Visible sign of invisible grace)
 

நாம் உள்ளார்ந்த அருளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

வெளியரங்க அடையாளத்தை மட்டும் ஆடம்பர விழாவாக மாற்றிவிடுகிறோம்.

உள்ளார்ந்த அருளைத் தரும் கிறிஸ்துவின் இடத்திலிருந்து செயல்படும் குருவை வெறுமனே விழாவிற்கு தலைமை தாங்குபவராக மட்டும் நினைக்கிறோம். 


ஆன்மீக வாழ்வு உள்ளார்ந்தது
(Spiritual life is internal.)
என்று யாரும் நினைப்பதே இல்லை.

ஆகவே உள்ளார்ந்த ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை நம்முடைய ஆன்மீக வழிகாட்டியிடம் யாரும் கேட்பதில்லை.

நமது ஆன்மீக வாழ்வு நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் உள்ளரங்கமானவை.

வெளியே உள்ளவர்களின் அனுபவத்திற்கு எட்டாதவை.

ஆன்மீக போராட்டங்களை எப்படி சமாளிப்பது,

 எப்படி வெற்றி கொள்வது என்பதைப்பற்றி நாம் பேசவேண்டியது நம்முடைய பங்குத்தந்தையிடம் மட்டும்தான்.

அவர்தான் அதற்கான பயிற்சியை பெற்றிருக்கிறார்.

அவரால் மட்டுமே அதற்கான வழிகாட்டுதலைத் தர முடியும்.

அதற்காகத்தான் பங்குத் தந்தையை நாம் பயன்படுத்த வேண்டும்.

நமது ஆன்மீக வழிகாட்டியை நமது ஆன்மீக வளர்ச்சிக்காக முழுக்க முழுக்க பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

1 comment:

  1. அருமை,மிகச் சரியான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete