http://lrdselvam.blogspot.com/2020/11/77.html
"நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்." (லூக்.7:7)
* * *
ரோமை வீரனாகிய நூற்றுவர் தலைவனின் ஊழியனைக் குணமாக்க
இயேசு அவனது இல்லத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது.
"நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.
ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்."
என்று அவன் சொல்லி அனுப்பினான்.
இவ்வார்த்தைகள் இயேசுவிடமிருந்து
."இஸ்ராயேல் மக்களிடையிலும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை"
என்ற வார்த்தைகளை வரவழைத்தன.
மற்ற மக்களுடைய விசுவாசத்திற்கும் நூற்றுவர் தலைவரின் விசுவாசத்திற்கும் என்ன வித்தியாசம்?
மற்றவர்கள் இயேசுவால் தங்களைக் குணமாக்க முடியும் என்று உறுதியாக விசுவசித்து அவரை தேடி வந்தார்கள்.
நூற்றுவர் தலைவன்
கடவுளாகிய இயேசு பரிசுத்தர்,
அவரைத் தன் இல்லத்தில் வரவேற்க பாவியாகிய தான் தகுதியற்றவன் என உறுதியாக விசுவசித்தான்.
அது மட்டுமல்ல இயேசு தன் சொல்லாலேயே குணமாக்கும் அளவிற்கு வல்லமை உள்ளவர் என்றும் உறுதியாக விசுவசித்தான்.
மற்றவர்கள் அவர்களுடைய குணமளிக்கும் வல்லமையை விசுவசித்தார்கள்.
நூற்றுவர் தலைவன் அதோடு தன்னுடைய தகுதி இன்மையையும் ஏற்றுக்கொண்டான்.
நற்கருணை நாதர் நம் நாவிற்கு வரும்போதும் நாமும் இதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறோம்,
'' பரிசுத்தராகிய உம்மை எங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள பாவிகளாகிய நாங்கள் தகுதி அற்றவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்."
என்று நமது தகுதி இன்மையை ஏற்றுக் கொள்கிறோம்.
இயேசுவுக்கு நாம் இவ்வாறு ஏற்றுக் கொள்வது பிடிக்கும்,
ஏனெனில் தகுதி இன்மையை ஏற்றுக் கொள்வதுதான் நம்மை தகுதி உள்ளவர்களாக ஆக்குவதற்கு முதல் படி.
தனக்கு அறிவு இல்லை என்பதை ஏற்றுக் கொள்பவன்தான் அறிவை ஈட்ட தகுதி உள்ளவன்.
தன்னிடம் நிறைய அறிவு உள்ளது என்று எண்ணிக் கொண்டு படிக்க ஆரம்பிக்கிறவன்,
புதிதாக எதையும் கற்க மாட்டான்.
தனது ஏழ்மையை ஏற்றுக் கொள்பவன்தான் பணம் ஈட்ட தகுதியானவன்.
தன்னிடம் நிறைய இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு சம்பாதிக்க ஆரம்பிக்கிறவன்
அதற்குமேல் எதையும் சம்பாதிக்க மாட்டான்.
தனக்கு தேவை இருக்கிறது என்பதை உணர்ந்தவன் தான் அதை பூர்த்தி செய்ய முயற்சிப்பான்.
தன்னிடம் நோய் இருக்கிறது என்பதை உணர்பவன்தான் மருத்துவ மனைக்குச் செல்வான்.
உணராதவன் நோயிலே மடிவான்.
நமது வாழ்க்கை ஒன்றுமில்லாமையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
ஒன்றுமில்லாமையில் இருந்துதான் நமது வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்ற உண்மையை உணர்பவன் தான்
தனக்கு உருக் கொடுத்த இறைவனை ஏற்றுக் கொள்வான்.
இல்லாமைக்கு உருக் கொடுத்தவருக்கு உள்ள வல்லமையை ஏற்றுக் கொள்வான்.
கடவுளது வல்லமையை ஏற்றுக் கொள்பவன்தான் அவர் மீது முழு நம்பிக்கை கொள்வான்.
அவர் மீது முழு நம்பிக்கை கொள்பவன்தான் அவரை முழுவதும் சார்ந்து இருப்பான்.
அவரை முழுவதும் சார்ந்து இருப்பவன்தான் அவரை நேசிப்பான்.
நேசிப்பவன்தான் அவரது சித்தப்படி நடப்பான்.
அவரது சித்தப்படி நடப்பவனிடம் பாவம் இருக்காது.
தான் ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவனால் உருப்பெற்றதை உணராதவன்
தன் மீது மட்டும் நம்பிக்கை வைப்பதால் பாவத்தில் விழுகிறான்.
பாவத்தில் விழுந்தவன் எழ வேண்டும் என்றால் அவன் பாவத்தில் விழுந்து கிடப்பதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாவத்தில் விழுந்து கிடப்பதை ஏற்றுக் கொள்வதுதான் பாவமன்னிப்பு பெறுவதற்கான முதல் படி.
பாவமன்னிப்பு பெற்றால்தான் நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்.
செய்த பாவங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு மன்னிப்பு பெறுவது அடுத்த படி.
பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதோடு ஆன்மீக வாழ்வு பூர்த்தி அடையவில்லை. அதுதான் ஆரம்ப நிலை.
நிலத்தில் பயிர் செய்யும் விவசாயி முதலில் நிலத்தைப் பண்படுத்துகிறான்.
அதாவது பயிர் செய்வதற்கு ஏற்றதாக மாற்றுகிறான்.
பயிர் செய்து பயனை அறுவடை செய்கிறான்.
அதேபோல நமது ஆன்மாவாகிய நிலத்தை பாவம் நீக்கி பயன்படுத்திய பின் அதில் புண்ணியமாகிய பயிரை ஏற்ற வேண்டும்.
இறையருள் ஆகிய நீரை ஊற்றி பயிரை வளர்க்க வேண்டும்.
ஜெபம், தவம், நற்செயல்கள் ஆகிய உரமிட்டு புண்ணியமாகிய பயிரை செழிப்பாக வளர்க்க வேண்டும்.
வளர்ப்பின் பயனை விண்ணகத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
ஆக பாவமன்னிப்பிற்கு அடுத்த படி புண்ணிய வாழ்வு.
எவ்வளவுக்கு எவ்வளவு புண்ணியங்களில் செழித்து வளர்கின்றோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு ஆன்மீக அறுவடை மிகுதியாக இருக்கும்.
இத்தனை படிகளோடு வளரவேண்டிய ஆன்மீக வாழ்வின் அடிப்படை விசுவாசம்.
விசுவாசத்தை வளர்ப்போம்.
செய்த பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
பாவ மன்னிப்புப் பெறுவோம்.
புண்ணியங்களில் வளர்வோம்.
நிலை வாழ்வை அடைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment