*நானே உலகின் ஒளி: என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்.*
(அரு. 8.12)
"நானே உலகின் ஒளி" என்ற நம் ஆண்டவர் உலகில் முதலில் படைத்தது ஒளியைத்தான்.
"ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று."
அவர் உலகைச் சார்ந்த ஒளியைப் படைத்தது சூரியனைப் படைத்த நாலாவது நாளில்தான்.
அப்படியானால் முதல் நாளில்?
வார்த்தைகளை அல்ல, செய்தியை உணர்ந்து உள்வாங்கவேண்டும்.
ஒளியான இறைவன் தன் ஒளியை உலகின் மீது படர விட்டார்.
அடுத்து அவர் படைத்த
படைப்புகளை
இறை ஒளியில்தான் பார்க்க வேண்டும்.
இறை பார்வையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனின் விஞ்ஞான பார்வையில் அல்ல.
We should interpret creation from the view point of Faith, not of science.
சிலர் வேதாகமத்தை வரலாற்றுப் பார்வையிலும், விஞ்ஞானப் பார்வையிலும் பார்த்து,
உண்மையான பொருளைக காணமுடியாமல் ஆளுக்கு ஆள் இஷ்டத்துக்குப் பொருள் கொடுத்து,
சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம் வாழ வேண்டியது இறை ஒளியில் தான் என்பதை உணர்த்தவே
இறைவன் தனது ஒளியில் உலகைப் படைத்தார்.
பைபிளைப் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் இறை ஒளியில் அமர்ந்து நம்மையே பிரகாச படுத்திக்கொள்ள வேண்டும.
பின் இறை வெளிச்சத்தில் தான் அதை வாசிக்க வேண்டும்.
இறை வெளிச்சத்தில் தான் யோசிக்க வேண்டும்.
இறை வெளிச்சத்தில் தான் விசுவசிக்க வேண்டும்.
இறை வெளிச்சத்தில் தான் வாழவேண்டும்.
அதற்காகத்தான் பைபிள் இறைவனது ஒளியில் ஆரம்பிக்கிறது.
நமது முதல் பெற்றோர் அவர்களது உள்ளத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த இறைவனது ஒளியை
தங்களது பாவத்தினால் இழந்தனர்.
இழந்த ஒளியை மீட்டுக் கொடுக்கவே ஒளியாம் இறைவன் மனிதனாகப் பிறந்தார்.
ஒளி இருக்கும் இடத்தில் இருட்டு இருக்க முடியாது.
இறை ஒளி இருக்கும் இடத்தில்.
பாவ இருட்டு இருக்க முடியாது.
நமது உள்ளத்தில் ஒளியாகிய இயேசு இருந்தால் பாவத்தால் நம் உள்ளத்தை எட்டிக்கூட பார்க்க முடியாது.
நள்ளிரவு இருட்டில் கையில் Torch light இல்லாமல் நடப்பவனுக்கு வழிதவறி போக வாய்ப்பு உண்டு.
பட்டப்பகலில் அதற்கு வாய்ப்பு இல்லை.
அவ்வாறேதான் ஆன்மீகப் பாதையில் இயேசுவாகிய ஒளியில் நடப்பவன் நெறி தவற மாட்டான்.
நமது விண்ணக பயணத்தில் நாம்
அறிந்து கொள்ள வேண்டிய உண்மையும் இயேசு தான்.
நடக்க வேண்டிய பாதையும் இயேசுதான்.
பாதைக்கு வழிகாட்டும் ஒளியும் இயேசுதான்.
நடந்து செல்லும் நமது உயிரும் இயேசுதான்.
"எல்லாம் இயேசுவே,
எனக்கு
எல்லாம் இயேசுவே."
"நானே வழியும் உண்மையும் உயிரும்."
நமது விண்ணக பயணத்தின்போது நாம் சந்திக்கும் நபர்களை அல்லது நிகழ்வுகளை இயேசுவின் ஒளியில்தான் பார்க்க வேண்டும்.
நாம் தனியாக பயணிப்பது இல்லை.
இவ்வுலகில் நம்மோடு வாழ்பவர்களும் விண்ணகப் பயணிகளே.
இயேசு அவர்களோடு எப்படி பழகுவாரோ அப்படியே நாமும் பழக வேண்டும்.
அன்புடனும், பரிவுடனும், உதவும் மனமுடனும், மன்னிக்கும் குணத்துடனும் பழக வேண்டும்.
அதேபோன்று நமது பயணத்தின் போது சந்திக்கும் நிகழ்வுகளையும் இயேசுவின் பார்வையிலேயே பார்க்க வேண்டும்.
பாவம் தவிர வேறு எந்த நிகழ்வும் பயணத்தில் இடைஞ்சலாக வராது.
சில நிகழ்வுகள் நமது பயணத்தில் தடங்கல்கள் போல் தோன்றும்.
ஆனால் இயேசுவின் ஒளியில் அவற்றை நோக்கினால் அவை நமக்கு உண்மையில் படிக்கற்களாக (Stepping stones) இருக்கும்.
புனித அந்தோனியார் பிரான்சிஸ்கன் சபையில்
சேர்ந்ததே மொரோக்கோவிற்கு வேத போதகராகச் சென்று வேத சாட்சியாக மரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் போகும்போது நோய்வாய்ப்பட்டதால் திரும்ப வேண்டியதாயிற்று.
அவருக்கு நோய் வராதிருந்திருந்தால் நமக்கு ஒரு வேதசாட்சி கிடைத்திருப்பார்,
ஆனால் கோடி அற்புதர் கிடைத்திருக்க மாட்டார்.
படைவீரரான லொயோலா இஞ்ஞாசியாருக்கு போரில் கால் ஒடிந்திருக்காவிட்டால், சேசு சபை கிடைத்திருக்காது!
நாம் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிற இவ்வுலகையும் இயேசுவின் ஒளியில் பார்க்க வேண்டும்.
இவ்வுலகம் நம்மால் வெறுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
ஏனெனில் இது அவருடைய படைப்பு.
அவர் நல்லதையே படைத்தார்.
அவர் படைத்த ஒரு பொருளை நாம் வெறுத்தால் அது அவரை வெறுப்பதற்கு சமம்.
அவர் உலகைப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகப் படைத்தார்.
நாமும் உலகைப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகத்தான் நோக்க வேண்டும்.
எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்?
நம்மை படைத்த அவருக்காக,
அவருடைய சித்தப்படி அதை பயன்படுத்த வேண்டும்.
அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பதற்கு உதவியாக உலகை நாம் பயன்படுத்த வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும், நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.
இவ்விரண்டும் தான் இயேசு நமக்குக் கொடுத்துள்ள கட்டளைகள்.
இறைவன் மேல் நாம் கொண்டுள்ள அன்பையும், அயலான் மீது நாம் கொண்டுள்ள அன்பையும் செயல்படுத்த,
அதாவது அன்புக்கு செயல்வடிவம் கொடுக்க இவ்வுலகை நாம் பயன்படுத்த வேண்டும்.
பிறர் அன்பு செயல்களுக்காக உலகையும் அதிலுள்ள பொருட்களையும் பயன்படுத்த வேண்டும்.
இறைவன் சித்தப்படி நாம் உலகைப் பயன்படுத்தும் போது அது விண்ணகத்திற்கு ஏற உதவும் படிக்கல்லாகப் பயன்படும்.
இறைவன் சித்தத்துக்கு எதிராகப் பயன்படுத்தினால் அது தடைக்கல்லாக மாறிவிடும்.
நமது முதல் பெற்றோர் சாப்பிட்ட பழம் இறைவனால் தான் படைக்கப்பட்டது.
ஆனால் அவரது கட்டளைக்கு விரோதமாக அதை அவர்கள் சாப்பிட்டதால் மனுக்குலம் விழுந்தது.
இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் மக்கள் மீது தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்த பயன்படுத்தினார்.
உமிழ் நீரையும், சேற்றையும், தண்ணீரையும் ஒரு குருடனுக்குப் பார்வை கொடுக்க பயன்படுத்தினார்.
புயலையும் கடல் அலைகளையும் தன் வல்லமையை நமக்கு வெளிப்படுத்த பயன்படுத்தினார்.
மரத்தால் செய்யப்பட்ட சிலுவையை நமது ஆன்மாவின் மீட்புக்காக பயன்படுத்தினார்.
இயேசு பயன்படுத்தும் வரை, சிலுவை
குற்றவாளிகளின் தண்டனைச் சின்னமாக இருந்தது.
இயேசுவின் மரணம் அதை மீட்பின் சின்னமாக மாற்றிவிட்டது.
நாமும் இயேசுவின் ஒளியில் உலகப் பொருள்களைப் பார்த்தால் அவற்றை நமது மீட்பிற்காகப் பயன்படுத்துவோம்.
பணம் ஒரு பொருள்.
அதை தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக பயன்படுத்தினால் அது நமக்கு மீட்பை கொண்டு வரும்.
அதே பணத்தை லஞ்சமாகக் கொடுக்க பயன்படுத்தும்போது நமக்கு அழிவைக் கொண்டு வரும்.
இயேசுவின் ஒளியால் பார்த்தால்தான் , உலகை இயேசுவின் மகிமைக்காகப் பயன்படுத்த முடியும்.
உள்ளத்தில் இயேசுவின் அன்பையும்,
உதடுகளில் இயேசுவின் வார்த்தைகளையும்,
கண்களில் இயேசுவின் ஒளியையும் கொண்டு செயல்படுவோம்.
நமது செயல்கள் எல்லாம் நற்செயல்களாக மாறும்.
நாம் செய்யும் நற்செயல்கள் நம்மை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment