http://lrdselvam.blogspot.com/2020/11/1418.html
"தோட்டம் வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்"
(லூக். 14:18)
****
பரிசேயர்களுக்கு இயேசுவைப் பிடிக்காது.
அவருடைய போதனையைக் கேட்பதற்காகவும், வியாதிகளிலிருந்து குணம் பெறுவதற்காகவும் மக்கள் அவர் பின்னாலேயே சென்று கொண்டிருந்ததால்
எங்கே தங்களின் மதிப்பு குறைந்து விடுமோ என்று அஞ்சி
அவர்கள் அவரை எப்படித் தொலைக்கலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் இயேசுவை தங்களுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்கள் என்றால்
அது அவர் மீது கொண்ட அன்பினால் அல்ல
அவரைப் பேச்சிலும், செயலிலும் குற்றம் காண்பதற்காகவே.
இயேசு அவர்களுக்கு பயந்தவர் அல்ல.
அவர்கள் தன்னை வெறுக்கிறார்கள் என தெரிந்தும் அவர்களுடைய வீடுகளுக்கு துணிந்து விருந்துக்கு சென்றார்.
அவருடைய போதனையைக் கேட்கவும், குணம் பெறவும் அங்கேயும் மக்கள் வந்தார்கள்.
அப்படியே ஒரு ஓய்வுநாளில் பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றார்.
அவர்கள் அவரிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்கள் முன்னிலேயே நீர்க்கோவை நோயுற்ற ஒருவனைக் குணமாக்கினார்.
அவர்களுக்காகவே விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பற்றிய உவமையைச் சொன்னார்.
யூதர்களிடையே மெசியாவின் வருகையைப் பற்றி தவறான கருத்து ஒன்று நிலவி வந்தது.
மெசியா அவர்களை ரோமையர்களின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு
தனி ஆட்சியை அமைப்பதற்காக வருவார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் மெசியா வந்திருப்பது யூதர்களின் அரசியல் விடுதலைக்காக அல்ல,
அனைத்து மக்களின் ஆன்மீக விடுதலைக்காகவே.
மெசியா தான் பிறப்பதற்கு யூத இனத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார் என்பது உண்மைதான்,
ஆனால் அவர் வந்தது அவர்களின் மீட்பிற்காக மட்டுமல்ல,
உலக மக்கள் அனைவரின் மீட்பிற்காகவே.
விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாக்குப் போக்குகள் சொல்லி வரவில்லை.
ஆகவே சாலைகளிலும் வேலியோரங்களிலும் நின்றவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இயேசு தான் சொல்ல வந்த கருத்தை வலியுறுத்துவதற்காக பரிசேயர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உவமையை அமைத்தார்.
தாங்கள் மட்டுமே விண்ணக விருந்திருக்கு அழைக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் நம்பி வந்தார்கள்.
ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கூட அவர்கள் அதற்கு ஏற்றவாறு வாழவில்லை.
அழைத்தவரையே தீர்த்துக் கட்ட வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் சாலைகளிலும் வேலியோரங்களிலும் நின்றவர்கள்,
அதாவது பிற இனத்தவர்
அவரது அழைப்பை ஏற்று விருந்தில் கலந்து கொண்டார்கள்.
எந்த இனத்தைத் தனது வருகைக்காக தேர்ந்தெடுத்திருந்தாரோ அந்த இனம் அவரை சிலுவையில் அறைந்து கொன்று போட்டது.
அவர்கள் எதிர்மறையாகச்
செயல்பட்டிருந்தாலும்,
ஒரு வகையில் நாம் இரட்சண்யம் அடைய உதவியிருக்கிறார்கள்.
இயேசுவைக் கொன்றது அவர்களுக்குப் பாவம், தீமை.
ஆனால் அந்தத் தீமையிலிருந்தும் மீட்பு என்ற நன்மையை இறைவன் வரவழைத்திருக்கிறார்.
யூதர்களிலும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய கணக்குப்படி புறவினத்தார்களுடைய எண்ணிக்கையே அதிகம்.
தன்னைப் பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளாததைச் சுட்டிக் காண்பிக்கவே அவர்கள் வீட்டில் வைத்தே இயேசு இந்த உவமையைக் கூறியிருந்தாலும்,
நாமும் அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது.
நாம் இயேசுவின் நற்செய்தியை ஏற்று கிறிஸ்தவர்களாக மாறியிருக்கிறோம்.
அதோடு கிறிஸ்தவ வாழ்வு முடிந்துவிட்டதா?
ஒரு பள்ளிக்கூட நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, அதில் படிக்க admission போட்டு விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
அதோடு எல்லாம் முடிந்துவிட்டதா?
தொடர்ந்து நிறைய அழைப்புகள் வரும், ஒவ்வொரு அழைப்பையும் ஏற்று நடக்க வேண்டும்.
காலையில் முதல் மணி - Assemblyக்குச் செல்ல அழைப்பு.
ஒவ்வொரு பிரிவு வேளை முடிந்தும் மணி - அடுத்த பாடவேளைக்கு அழைப்பு.
ஆசிரியர் வருகை - பாடத்தைக் கவனிக்க அழைப்பு.
இதேபோன்ற அழைப்புகள் ஆண்டு முழுவதும் தொடரும்,
ஒவ்வொரு அழைப்பையும் ஏற்று அதன்படி நடந்தால் தான் பள்ளிக்கூட வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.
அதே போன்று தான் கிறிஸ்தவ வாழ்வு அழைப்புகள் நிறைந்தது.
ஒவ்வொரு அழைப்பையும் ஏற்று நடக்காமல் சாக்குப் போக்கு சொல்லி கொண்டிருந்தால் கிறிஸ்தவ வாழ்வு வெற்றிகரமாக அமையாது.
"காலை ஜெபமா? நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்று வேலை அதிகம்."
"ஞாயிற்றுக்கிழமை பூசையா?
வாரம் முழுவதும் கடினமான வேலை, ஒரு நாள்தான் விடுமுறை, அன்று நன்கு தூங்கி எழ வேண்டும்.
பூசையை நேரம் கிடைக்கும்போது டிவியில் பார்த்துக் கொள்ளலாம்."
"ஏழைகளுக்கு உதவியா?
அதெல்லாம் மிச்சம் மீதியாய் வசதி படைத்தவர்கள் செய்ய வேண்டியது. என் செலவுக்கே என் சம்பாத்தியம் பத்தல."
"ஒருசந்தியா?
ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டுவிட்டு எப்படி வேலை செய்யமுடியும்?"
இறைவனுக்காக வாழ ஆரம்பித்தால் ஒவ்வொரு வினாடியும் இறைவன் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார்.
இறைவனது அழைப்பை ஏற்று செயல்பட்டால் தான் பரிசுத்தத் தனத்தில் மீட்பின் பாதையில் வழி நடக்க முடியும்.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க ஆசைப்பட்டால்
கிறிஸ்தவனாக வாழ நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்கு ஏற்றபடி வாழவில்லை என்று அர்த்தம்.
குழந்தை பிறந்தவுடன் அது வளர்ந்துவிட்டது, வாழ்ந்து விட்டது என்று அர்த்தம் அல்ல.
வாழ ஆரம்பித்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
தொடர்ந்து மூச்சு விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்,
வேளாவேளைக்கு சாப்பிடவேண்டும்,
நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,
நோய் வந்தால் உடனுக்குடன் மருத்துவம் பார்க்க வேண்டும்,
சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு வினாடியும் வாழ வேண்டும்.
அதேபோல்தான் ஆன்மீக வாழ்விலும், நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ வேண்டும் வளர வேண்டும்.
ஆண்டவர் தந்த அருள் வரத்தை ஒவ்வொரு வினாடியும் தவறாமல் காப்பாற்ற வேண்டும்.
ஒவ்வொரு வினாடியும் இறைவனுக்காக வாழ அழைப்பு விடப்பட்டு கொண்டே இருக்கிறது.
அதை ஏற்று ஒவ்வொரு வினாடியும் நமது முயற்சியுடன் இறைவனுக்காக,
இறைவனுக்காக மட்டுமே வாழவேண்டும்.
ஒரு வினாடி நாம் இறைவனை விட்டுவிட்டால் கூட
தொடர்ந்து தவறான பாதையில் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
ஆகவே ஆன்மீக வாழ்வில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
ஜெபிக்க இறைவன் விடுக்கும் அழைப்பை ஏற்று நமது வாழ்வையே ஜெப வாழ்வாக வாழ வேண்டும்.
ஒவ்வொரு வினாடியும் இறைவனுக்கு எதிரான எண்ணங்கள் வராமல் பார்த்துக் கொள்ளவும்,
இறைவனை எண்ணியே வாழவும்
நமக்கு அழைப்பு விடப்பட்டு கொண்டே இருக்கிறது.
அதை ஏற்று ஒவ்வொரு வினாடியும் இறைவனை எண்ணியே வாழ வேண்டும்.
தவறுகள் செய்யும் போதெல்லாம் அவற்றிற்காக மனம் வருந்தவும், மன்னிப்பு கேட்கவும் ,
மறுபடி தவறு செய்யாதபடி நம்மையே பாதுகாத்துக் கொள்ளவும்
அழைப்பு விடப்பட்டு கொண்டே இருக்கிறது.
அந்த அழைப்பையும் ஏற்று நடப்பதற்காகத்தான் ஒப்புரவு அருட்சாதனம் என்ற தேவ திரவிய அனுமானத்தை இயேசு தந்திருக்கிறார்.
அதை பயன்படுத்தி நமது வாழ்வை தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தெய்வீக உணவாகிய நற்கருணையை உண்டு நமது ஆன்மாவைப் பலப்படுத்த அழைப்பு விடப்படுகிறது.
அதை ஏற்று, முடிந்தால் தினமும்,
முடியாவிட்டால் வாரம் ஒரு முறையாவது தெய்வீக உணவை உண்டு
நிலை வாழ்வை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
"என்னை உண்பவன் என்றென்றும் வாழ்வான்."
இது இயேசு நமக்கு தந்த உறுதிமொழி.
நற்கருணை உணவை பெறுவதிலேயே திருப்பலியும் அடங்கியுள்ளது.
ஏனெனில் திருப்பலி இன்றி திவ்ய நற்கருணை இல்லை.
மேலும் அடிக்கடி திவ்விய நற்கருணையைச் சந்திக்கவும், ஆராதிக்கவும் அழைப்பு விடப்படுகிறது.
அந்த அழைப்பை ஏற்று இறை இயேசுவை அடிக்கடி சந்தித்து
அவரை ஆராதிக்க வேண்டும்,
அவரோடு பேச வேண்டும்,
அவர் தரும் அறிவுரைகளை ஏற்க வேண்டும்.
நமது இறுதி மூச்சுவரை இயேசு நமக்கு அவ்வப்போது விடும் அழைப்புகளை எல்லாம் ஏற்று,
அவற்றின்படி நடப்பது நம்மை நமது விண்ணக விருந்திற்கு தயார் செய்யும்.
உலக விருந்திற்கு நம்மை அழைப்பவர்கள் கூட முதல் அழைப்புக்குப் பின்னும்,
" வாருங்கள்,
அமருங்கள்,
உணவு உண்ணுங்கள்,
வெற்றிலை பாக்கு போடுங்கள்,
அடிக்கடி வாருங்கள்."
என்று தொடர்ந்து அழைப்புகளை விட்டுக் கொண்டே இருப்பது போல,
இறைமகன் இயேசுவும் நம்மை கிறிஸ்தவ வாழ்விற்கு அழைத்த பிறகும்
ஆன்மீக வாழ்வில் வளர்வதற்காக தொடர்ந்து விடுத்துக்கொண்டிருக்கும் அழைப்புகளை ஏற்று,
அவற்றின்படி நடந்து விண்ணக விருந்துக்கு நம்மையே தயார் செய்வோம்.
நிலை வாழ்வில் நித்தியமும் திருவிருந்தைச் சுவைப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment