http://lrdselvam.blogspot.com/2020/11/1717.html
"பத்துப்பேரும் குணமடையவில்லையா?
மற்ற ஒன்பது பேர் எங்கே?".
(லூக்.17:17)
* * * * * * * * * * * *
இயேசுவின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியில் இருந்தும்,
அவரது வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையில் இருந்தும் நாம் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்க வேண்டும். .
கற்பது மட்டுமல்ல, கற்றதை நடைமுறைப் படுத்த வேண்டும்.
இயேசு 10 தொழு நோயாளிகளை குணமாக்கினார்.
அவர்களுள் ஒரு சமாரியன் மட்டும் தன்னைக் குணப்படுத்தியமைக்கு இயேசுவுக்கு நன்றி கூற வந்தான்.
இயேசு அவனை நோக்கி,
"பத்துப்பேரும் குணமடையவில்லையா?
மற்ற ஒன்பது பேர் எங்கே?".
என்று கேட்டார்.
"நீங்கள் போய்க் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள் " என்று சொன்னவர் இயேசுதான்.
அவர்கள் குருக்களிடம் தங்களைக் காட்டுவதற்காகப் போயிருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியும்.
அவர்கள் குருக்களிடம் செல்லும்போதே அவர்கள் குணமடைந்துவிட்டனர்.
அவர்களுள் ஒருவன் தான் குணமடைந்ததைக் கண்டவுடன்
தன்மை குணப்படுத்திய அவருக்கு நன்றி சொல்வதற்காக திரும்பி வந்தான்.
குருக்களிடம் தன்னைக் காட்டினால்தான் அவனால் பொதுவாழ்க்கைக்குள் வர முடியும்.
ஆனால் அவனுக்கு பொதுவாழ்க்கைக்குள் வருவதை விடவும்,
குருக்களை விடவும்
தன்னை குணப்படுத்திய இயேசுதான் முக்கியமாக தோன்றினார்.
ஆகவே குருக்களைப் பார்ப்பதை ஒத்திவைத்துவிட்டு இயேசுவிடம் வந்து,
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான்.
அவன் ஒரு சமாரியன் என்று நற்செய்தியாளர் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே நட்புறவு இருந்ததில்லை.
இயேசு ஒரு யூதர் என்பதைவிட அவர் தன்னைக் குணமாக்கியவர் என்ற உணர்வே அவனிடம் இருந்தது.
அவனது நன்றியுணர்வு இன உணர்வையே மிஞ்சிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டவே ஒரு சமாரியன் என்று குறிப்பிட்டுள்ளார் என்று நம்பலாம்.
இயேசு அவனைப் பார்த்து, "பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
என்று இயேசு கேட்டதிலிருந்து நாம் எப்போதும் நன்றி உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும்
என்று இயேசு விரும்புகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நமது ஜெபத்தில் நிறைய விண்ணப்பங்களை இயேசுவின் முன் சமர்ப்பிக்கிறோம்.
சில விண்ணப்பங்கள் உடனே கேட்கப்படுகின்றன.
சில விண்ணப்பங்கள் காலம் தாழ்த்திக் கேட்கப்படுகின்றன.
சில விண்ணப்பங்கள் கேட்கப்படுவதில்லை
இவற்றில் எவற்றிற்கு நாம் நன்றி கூற வேண்டும்?
Suppose,
திருமணம் ஆன நாளிலிருந்து குழந்தை வரம் கேட்டு ஜெபிக்கிறோம்.
பல ஆண்டுகள் தொடர்ந்து ஜெபித்தாலும், குழந்தை
பிறக்கவேயில்லை.
வேறு வழியின்றி, வளர்ப்பதற்காக அநாதைக் குழந்தைகள் இல்லத்திலிருந்து ஒரு குழந்தையைத் தத்து எடுக்கிறோம்.
ஆனாலும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.
ஆனால், நாம் தத்து எடுத்த பையனுக்குத் திருமணம் ஆகி, அவனுக்குக் குழந்தை கிடைத்த பின்பும் நமக்குப் பிறக்கவேயில்லை.
இந்நிலையில் நாம் நமது விண்ணப்பம் கேட்கப்படாமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா?
நாம் உண்மையிலேயே விசுவாசம் உள்ளவர்களாக இருந்தால் நன்றி சொல்ல வேண்டும்.
ஏன்?
எல்லாம் நமது விருப்பம்போல் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்மையான விசுவாசியின் குணம் அல்ல.
இறைவனது விருப்பம்போல் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் உண்மையான விசுவாசியின் குணம்.
"உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக."
இது நமது அன்றாட ஜெபம்.
இறைவனது சித்தம் நம்மில் நிறைவேறியதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
நமது எல்லா விண்ணப்பங்களும் இறைவனது சித்தத்திற்கு கட்டுப்பட்டவை.
"எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்"
என்ற இயேசுவின செபமே நமது செபமாக இருக்க வேண்டும்.
"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்"
என்பது வேதவாக்கு.
நமக்கு வெற்றி கிடைத்தாலும், தோல்வி கிடைத்தாலும்,
சுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும்,
நாம் விரும்பியது நடந்தாலும், நடக்காவிட்டாலும்
இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கும், பையனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.
அதற்குப் பிறகுதான் அவர்கள் விரும்பாத செய்தி இருவருக்குமே கிடைத்தது.
பெண் pure vegetarian.
மாமிச உணவை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்.
மாப்பிள்ளை மாமிச உணவு என்றால் 'ஒரு வெட்டு வெட்டுவான்.' தாவர உணவை வேறு வழியில்லாவிட்டால் சாப்பிடுவான்.
திருமணம் முடிந்தபின்,
முதல் முதல் dining table ல் அமர்ந்திருக்கிறான்.
மனைவி உணவு பரிமாறுகிறாள்.
அளவுகடந்த ஆச்சரியத்தோடு மனைவியின் முகத்தைப் பார்க்கிறான்.
"என்னடி இது?"
"சாப்பாடு, சாப்பிட"
"அது தெரியுது. ஆனா...."
"ஆனாவும் இல்ல, ஆவன்னாவும் இல்ல. நான் இனி உங்க Side. இனி உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்."
"ஆனால் நான்தான் உன் Sideக்கு வந்துவிட்டேனே."
"என்றிலிருந்து?"
"உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்த நொடியில் இருந்து."
"நமக்குள் என்ன பொருத்தம் பார்த்தீங்களா! நானும் அதே போல் தான்."
கடவுளுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் நமக்கும் பிடிக்க வேண்டும்.
கடவுள் தனக்குப் பிடித்தமானதைத்தான் செய்வார்.
நாம் அவர் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,
ஏனென்றால் அவர் செய்வதெல்லாம் நமது நன்மைக்கே.
இந்த மனநிலை வந்து விட்டால் நாம் எப்போதும் நன்றி கூறிக் கொண்டே இருப்போம்.
எப்படி நன்றி கூற வேண்டும்?
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நன்றி கூற வேண்டும்.
அதாவது நமது வாழ்க்கையினால் நன்றி கூற வேண்டும்.
"நன்றியால் துதி பாடு,
இயேசுவை
வாழ்வாலே துதி பாடு."
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் நமது வாழ்க்கையால் இறைவனது புகழைப் பாட வேண்டும்.
இயேசு எப்படி தன்னுடைய தந்தையின் சித்தத்திற்கு ஏற்ப வாழ்ந்தாரோ
அப்படியே நாமும் இயேசுவின் சித்தத்திற்கு ஏற்ப வாழ வேண்டும்.
நமது வாழ்வைப் பார்ப்பவர்கள் அதில் இயேசுவின் வாழ்வு பிரதிபலிப்பதைக் காண வேண்டும்.
இதற்கு பெயர்தான் வாழ்வு வழி நற்செய்தி அறிவிப்பு.
ஒருமுறை புனித பிரான்சிஸ் அசிசியார் தனது சகோதரர்களை நோக்கி,
"வாருங்கள் நற்செய்தி அறிவித்து விட்டு வருவோம்" என்றார்.
அவர்களும் உடன் சென்றார்கள்.
நகரின் தெருக்களில் வழியே அமைதியாக ஜெபம் சொல்லிக் கொண்டே நடந்தார்கள்.
வழியில் யாருடனும் பேசவில்லை.
இறுதியில் இல்லத்தை அடைந்தார்கள்.
"சகோதரரே, நற்செய்தி அறிவிப்பதற்காக எங்களை அழைத்துச் சென்றீரே,
ஆனால் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்து விட்டோமே!"
"சகோதரரே, இதுதான் அமைதியான வாழ்வின் வழியாக நாம் போதிக்கும் நற்செய்தி.
சத்தமாக போதிப்பதை விட அமைதியாக போதிப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.
நமது நடை, உடை, பாவனையால் நாம் செய்யும் நற்செய்திப் போதனை தான் மிகவும் சக்தி வாய்ந்த போதனை."
போதனையை விட சாதனையே சிறந்தது என்பார்கள்.
இயேசு போதிக்கவும் செய்தார், சாதிக்கவும் செய்தார்.
நாமும் நமது நன்றி வாழ்வினால் போதிப்போம், சாதிப்போம்.
இயேசுவுக்கு ஏற்ற நமது வாழ்வே நமது போதனை.
அதுவே நமது சாதனை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment