Monday, November 30, 2020

*நமது கட்டுப்பாட்டை மீறிய* *வாழ்க்கைஅனுபவங்கள்*

*நமது கட்டுப்பாட்டை மீறிய*
*வாழ்க்கை அனுபவங்கள்*

நாம் முழுமையான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு உரிமையோடு இவ்வுலகில் பிறந்திருந்தாலும்

நம்முடைய அநேக வாழ்க்கை நிகழ்வுகளும், நமது அனுபவங்களும் நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பதுதான் உண்மை.

பத்து மாதங்கள் நமது தாயின் கருவறைச் சிறையில்

எவ்விதச் சுதந்தரமும் இன்றி அடைபட்டுக் கிடந்தோம்.

அதை விட்டு வெளியேறினால் தான் சுதந்தரக் காற்றை சுவாசிக்கலாம் என்று என்று எண்ணியபடி பத்தாவது மாதம் சிறையை விட்டு வெளியேறினோம்.

ஆனால் நம்மால் காற்றை மட்டும்தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது.

மிகக் கஷ்டப்பட்டு பெற்ற அடுத்த சுதந்தரம் அழுவதற்கு மட்டும்தான்.

எதாவது வேண்டுமென்றால் அதைக் கேட்கக்கூட நமது வாய்க்கு சுதந்திரம் இல்லை.

நல்ல வேளை அழுவதற்காவது சுதந்திரம் கிடைத்ததே என்ற என்ற திருப்தியோடு தாயின் அரவணைப்பில் வளர்ந்தோம்.

இன்று சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் முழுச் சுதந்திரம் இருப்பதாக எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்.

  என்னவெல்லாமோ சிந்திக்கிறோம்.

ஆனால் சிந்தித்ததை எல்லாம் வெளியே சொல்லவோ,

அதை செயல்படுத்தவோ 

நமக்கு சுதந்திரம் இல்லை.

ஆசைப்பட உரிமை இருக்கிறது ஆனால் உரிமையை நடைமுறை படுத்த சுதந்திரம் இல்லை.

துடுப்பு இல்லாமல் கடலில் விடப்பட்ட படகு

எப்படி கடல் அலைகளாலும் ,வீசும் காற்று களாலும் அவை இஸ்டப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதோ

அதே போல்    நமது சூழ்நிலைதான் நமது அனுபவங்களைத்  தீர்மானிக்கிறது.

இப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நமது வாழ்வில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட முக்கிய நிலையில் நின்று கொண்டு கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் நமக்கு ஒரு உண்மை புரியும்.

நமது எதிர்கால ஆன்மீக நன்மை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு,

நாம் நமது ஆன்மீகப் பாதையில் சரியாக நடப்பற்காக,

ஆங்காங்கே brake போட்டு,

சில சமயங்களில் நமது விருப்பத்திற்கு மாறக.

நம்மை left, right என்று திருப்பி
வழிநடத்துபவர் நம்மை படைத்து பராமரித்து வரும் நமது கடவுளே என்ற உண்மை புரியும்.

நமது செயல் சுதந்திரத்தில் குறுக்கிடாமலேயே,

நாம் தப்பு செய்யும் போதும் அதை திருத்தி,

நமது தவறுகளிலிருந்தும் நன்மையை வரவழைத்து,

வாத்தியார் அடிக்கிறது மாதிரி அடித்து,

அம்மா அரவணைப்பது போல் அரவணைத்து

நமக்கு உள்ளே இருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர் அவர்தான்.

இதில் பிரமிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால்,

ஒரு சூழ்நிலையில் பலர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும்,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும்.

நம்மை வழி நடத்துவது போலவே அவர்களையும் அவர்தான் வழி நடத்துகிறார்.

ஒரே சூழ்நிலையில்  பலரை
வழி நடத்தும் போது

ஒரு முக்கியமான காரண காரிய (Cause and effect) தத்துவத்தை இறைவன் பயன்படுத்துகிறார்.

ஒரே காரணம் பலருக்கும் அவரவருக்கு வேண்டிய விளைவுகளை ஏற்படுத்தும் படி கடவுள் பார்த்துக்கொள்வார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நமக்கு தோல்வியை கொடுத்து Brake போட வேண்டும் என்பது இறைவன் திட்டம் என்று வைத்துக் கொள்வோம்.

அதே காரணம் இறைவனது திட்டத்தால் இன்னொருவருக்கு வெற்றியை கொடுக்கும்.

கருத்தைப் புரிய வைக்க ஒரு கற்பனை:

மண்பாண்டம் செய்பவர் ஒருவரும், துணி வெளுப்பதையே தொழிலாகக் கொண்ட ஒருவரும் அருகருகே வசித்து வரும் நண்பர்கள்.

தொழில் வெவ்வேறாயினும்
ஆன்மீகப்பயணம் ஒன்றே.

மண்பாண்டம் செய்பவர் செய்த மண்பாண்டங்களை வெயிலில் காயவைத்திருக்கிறார்.

இறைவன் திட்டப்படி,

குயவனுக்கு ஒரு brake போடவேண்டும்.

வண்ணானுக்கு உற்சாகம் கொடுக்க வேண்டும்.

இரண்டுமே அவரவர் ஆன்மீக  நன்மைக்குதான்.

கடவுள் என்ன செய்திருப்பார்?

ஒரு கற்பனைதான்.

ஏழு நாட்கள் மழையைக் கொடுத்திருப்பார்.

குயவனது  பானைகள் உடைந்திருக்கும்.

வண்ணானுக்கு வெளுக்க தண்ணீர் கிடைத்திருக்கும்.

ஆன்மீக வாழ்வை பொருத்தமட்டில்

தோல்வியும் நன்மைக்கே, வெற்றியும் நன்மைக்கே.

ஒரே கடவுள் கோடானுகோடி

மக்களை வழிநடத்தும் போது

ஒரே காரணம் ஒவ்வொருவர் வாழ்விலும் வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தி

ஒவ்வொருவர் வாழ்விலும்

நன்மையில் முடிய வேண்டும் என்றால்

அது சர்வ வல்லவர் ஆகிய கடவுளால் மட்டுமே முடியும்.

நமது அனுபவங்கள் நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாவிட்டாலும்

அவை எல்லாம் நமது நித்திய நோக்கத்தை அடையவே இறைவனால்  தீர்மானிக்கப் படுகின்றன.

புனித அந்தோனியார் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

அவர் நிறைய புதுமைகள் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்த அவர் சபைத் தலைவர் அவரிடம்,

"சுவாமி, இனிமேல் நீங்கள் ஒரு நாளைக்கு 13 புதுமைகளுக்கு  மேல் செய்யக்கூடாது " என்றார்.

அந்தோனியாரும், "அப்படியே செய்கிறேன், சுவாமி"  என்று கூறினார்.

தங்களுக்கு விருப்பம் உண்டோ இல்லையோ, சபைத் தலைவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

இது ஒவ்வொரு துறவியின் கடமை.

ஒரு நாள் மாலையில் அந்தோனியார் தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தபோது,

ஒரு நான்கு மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஒருவன் கால் தடுமாறிக் கீழே விழுந்து சொண்டிருந்தான்.

தற்செயலாக அந்தோனியார் அதைப் பார்த்துவிட்டார்.

அவனைக் காப்பாற்ற எண்ணி கையை மேல் நோக்கி உயர்த்தினார்.

விழுந்து கொண்டிருந்தவன் அந்தரத்தில் நின்று விட்டான்.

அப்போதுதான் அந்தோனியாருக்கு ஞாபகத்திற்கு வந்தது,

அதுதான் அன்றைக்கு 13வது புதுமை.

அன்றைக்கு அவனைப் புதுமை செய்து கீழே கொண்டு வர முடியாது.

அந்தோனியாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

மக்கள் அந்தரத்தில் நின்று கொண்டிருந்தவனையும், அந்தோனியாரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தலைவரின் உத்தரவை மக்களிடம் சொல்லவும் முடியாது.

தற்செயலாக சபைத் தலைவர் அந்தப் பக்கம் வந்தார்.

மக்கள் கூட்டத்தையும், அந்தோனியாரையும் பார்த்தார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

"சுவாமி, என்ன விஷயம்?"

அந்தோனியார் மேலே கை காண்பித்து, விஷயத்தைச் சொன்னார்.

"அவர் தரையிறங்க இன்று புதுமை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்."

சபைத் தலைவருக்கு சிரிப்பு வந்தது.

"உங்கள் கீழ்ப்படிதலைப் பாராட்டுகிறேன்.

இன்றிலிருந்து  கோடி புதுமைகள் வேண்டுமானாலும் செய்யலாம்.

அதற்கு மேலேயும் செய்யலாம்.

உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்."

அந்தோணியார் முழங்கால் படியிட்டு   சபை தலைவரின்  காலை முத்தினார்.

பிறகு எழுந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து கையசைத்தார்.

அந்தரத்தில் நின்றவன் பத்திரமாகத் தரையிறங்கினான்.

அந்தோனியாருக்கு நன்றி சொன்னான்.

கூட்டத்தினர்,

"கோடி அற்புதர் வாழ்க" என்று வாழ்த்தினார்கள்.

அப்பெயர் இன்றும் தொடர்கிறது.

இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு சபைத் தலைவருக்கு கீழ்ப்படிந்தவர் புனித அந்தோனியார்.

நாம் நினைக்கிற படி  நடக்கிறதோ, இல்லையோ,

நமக்கு கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ

எல்லாவற்றையும் இறைவனது பாதத்தில் சமர்ப்பித்து விட்டு,

அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால்

நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment