http://lrdselvam.blogspot.com/2020/11/151.html
..
"அவர் சொல்வதைக் கேட்க ஆயக்காரரும் பாவிகளும் அவரை அணுகிய வண்ணமாயிருந்தனர்."
(லூக்.15:1)
**********
அறிவு தேவைப்படுவோர் கூடுமிடம் பள்ளிக்கூடம்.(School)
நோய் நிறைந்தவர்கள் கூடுமிடம் மருத்துவமனை.(Hospital)
பசித்தவர்கள் கூடுமிடம் சாப்பாட்டு அறை.(Dining Hall)
பாவிகள் கூடுமிடம் இயேசு இருக்குமிடம்.
அறிவைத் தேடி
வருபவர்களுக்காக பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் காத்துக்கொண்டிருக்கிறார்.
சுகத்தைத் தேடி வரும் நோயாளிகளுக்காக மருத்துவர் மருத்துவமனையில் காத்துக்கொண்டிருக்கிறார்.
பசியாறிக் கொள்ள வருபவர்களுக்காக சாப்பாட்டறையில் அம்மா காத்துக்கொண்டிருக்கிறார் .
பாவமன்னிப்பைத் தேடி வருபவர்களுக்காக இறைமகன் இயேசு எங்கும், எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்.
இயேசுவின் பொது வாழ்க்கையின் போது அவர் பாவிகள் மத்தியில் தான் அதிகம் இருந்தார்.
அவர்களிடம்தான் உணவு உண்ணவும் விரும்பினார்.
"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.
சக்கேயு ஒரு பாவி. அவன் வீட்டில் தங்கவும், சாப்பிடவும் இயேசு விரும்பினார்.
அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்ததே பாவிகளை தேடித்தான்.
அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களைப் பரிசுத்தப் படுத்துவதற்காக.
ஆயன் காணாமல் போன ஆடுகளை தேடி அலைவது போல இயேசுவும் பாவிகளை தேடி வந்தார்.
பாவங்களை மன்னிக்க அவர் ஒருவருக்குத்தான் அதிகாரம் உண்டு.
தங்கள் பாவங்களுக்காக வருந்துபவர்கள் மட்டுமே பாவமன்னிப்பு முடியும்.
ஆகவே அவர் யாருடைய பாவங்களை மன்னித்தாரோ
அவர்களுக்கு முதலில் பாவங்களுக்காக வருத்தப்படக்கூடிய வரத்தை அவர் அளித்திருக்க வேண்டும்.
தாய் மகனைக் குளிப்பாட்டினாள் என்றால்
அவளிடம் தண்ணீர் இருந்தது, அதை அவன் மேல் ஊற்றினாள் என்பதை
சொல்லாமலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் பெரும்பாட்டினால் வருந்திய பெண்ணை குணமாக்கியபோது,
" உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ."
என்று சொன்னார்.
விசுவாசம், சமாதானம் என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியிருக்கும் ஆன்மீகத்தை புரிந்து கொண்டால் ஒரு உண்மை தெளிவாகும்.
ஒவ்வொரு முறை இயேசு குணமாக்கும் போதும்
வெறுமனே உடல் நோயை மட்டுமல்ல, ஆன்ம நோயையும்
சேர்த்துதான் குணமாக்கினார்.
அதாவது நோயாளியின் பாவத்தை மன்னித்து, அதன்பின் உடல் நோயையும் குணமாக்கினார்.
திமிர்வாதக்காரனைக் குணமாக்கிய நிகழ்ச்சியில் இதை வெளிப்படையாகச் சொல்லியே செய்கிறார்.
"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ"
மற்ற நோயாளிகளின் விஷயத்திலும் இதே நடைமுறையைத் தான் இயேசுவின் பின்பற்றினார் என்று நம்பலாம்.
ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் முக்கியத்துவம் கொடுப்பது விசுவாசத்திற்கு தான்.
அதாவது அவரிடம் குணம் பெற்றவர்கள்
பாவ மன்னிப்பையும், உடல் நலத்தையும் சேர்த்தே பெற்றார்கள்.
விசுவசித்தார்கள்.
பாவங்களுக்காக வருந்தினார்கள்.
பாவமன்னிப்புப் பெற்றார்கள்.
உடல் சுகமும் பெற்றார்கள்.
நமக்கு வெளிப்படையாகத் தெரிவது உடல் சுகம் மட்டும் தான்.
ஆனால் அது ஆன்மீக சுகத்தை உள்ளடக்கியது.
ஆகவே இயேசு நோயாளிகளைத் தேடும் போதெல்லாம் அவர் பாவிகளைத்தான் தேடி இருக்கிறார்.
அவரது நோக்கம் வெறும் உடல் சுகம் கொடுப்பது மட்டுமல்ல
அவர்களது பாவங்களையும் மன்னிப்பதுதான்.
பாவியான பெண் அவரது கால்களை கண்ணீரால் கழுவி கூந்தலால் துடைத்த போது
'
அவள் மனதில் இருந்த உத்தம மனஸ்தாபத்தின் அளவைப் புரிந்து கொள்ளலாம்.
இயேசு அவளை நோக்கி, " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
அந்தப் பெண் உடல் சம்பந்தமான நோயிலிருந்து குணம் பெற இயேசுவிடம் வரவில்லை.
அவளுடைய ஆன்மா பாவம் நீங்கி குணம் பெறவே அவள் இயேசுவை தேடி வந்தாள்.
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் அவளாகவே இயேசுவைத் தேடி வரவில்லை.
ஆனால் மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் அவளை பிடித்து கொண்டு வந்தார்கள்.
அவள் விபச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவள் தனது பாவத்திற்கு வருத்தப் பட்டிருக்க மாட்டாள்
ஆனால் அவள் இயேசுவைப் பார்த்தவுடன் அவரது அருள் அவளது இருதயத்தை தொட்டிருக்க வேண்டும்.
இயேசுவின் அருளை ஏற்று அவள் தனது பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டாள்.
விளைவு அவளது பாவங்களை மன்னித்தார்.
ஒரு வகையில் மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் அவள் பாவ மன்னிப்பு பெற உதவியிருக்கிறார்கள்.
பாவிகளைத் தேடி வந்த இயேசுவுக்கு அவர்களை அறியாமலேயே உதவி செய்திருக்கிறார்கள்!
அவர்களை அறியாமலேயே ஒரு ஆன்ம சேவை புரிந்திருக்கிறார்கள்.
அவர்கள் செய்ய நினைத்தது கெடுதி, விளைந்தது நன்மை.
தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க இறை மகனுக்கு தெரியும்.
மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் பாவிகள்தான்.
அவர்களாகவே இயேசுவின் பின்னால் சென்றார்கள்,
பாவ மன்னிப்பு பெற அல்ல,
அவரை கொலை செய்ய.
இறுதியில் கொலையும் செய்தார்கள்.
இயேசுவோ அவர்களது பாவத்தை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.
மகனின் வேண்டுதலை தந்தை கட்டாயம் கேட்டிருப்பார்.
இயேசுவை கொன்றவர்களுக்கு பாவத்திற்கு மனஸ்தாபப்படுவதற்கான அருளை கொடுத்திருப்பார்.
அவர்களும் அருளை ஏற்று மனஸ்தாபப்பட்டிருப்பார்கள் என்றும்,
பாவமன்னிப்பு பெற்றிருப்பார்கள் என்றும் நாம் நம்பலாம்.
இயேசுவின் மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் பாவமன்னிப்பு கிடைத்திருக்கும் என்று நாம் நம்பலாம்.
ஏனெனில் பாவிகளை தேடித்தான்,
அவர்களை மனம் திருப்பி மன்னிப்பதற்காகத்தான்
இயேசு உலகிற்கு வந்தார்.
இயேசுவின் அன்பு அளவு கடந்தது.
அவரது மன்னிக்கும் அருள் வெள்ளம் பாவிகளை நோக்கி தான் அதிகமாகப் பாயும்.
நமது குடும்பங்களில்
தாய் தன்னுடைய பிள்ளைகளில் திடகாத்திரமான பிள்ளைகளை விட
நோஞ்சான் பிள்ளையைதான் அதிகம் கவனிப்பாள்.
இறைவன் தான் நமது முதல் தாய்.
பாவ நோயால் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு தான் இறைவனின் அதிக அக்கரை தேவை.
பாவிகள் மேல் இறைவனுக்கு அதிக அக்கரை இருக்கிறது.
மனம் திரும்புவதற்கான அவர்கள்மேல் அருள் மழையை இறைவன் பொழிந்து கொண்டேயிருக்கிறார்.
ஆசிரியர் தன் மாணவர்களைப் படிக்க வைக்க பிரம்பைப் பயன்படுத்துவது போலவும்,
மருத்துவர் நோயாளியைக் குணமாக்க ஊசி, கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவது போலவும்,
அம்மா பிள்ளைக்கு உணவு ஊட்ட நிலா, கதைகள் போன்றவற்றை பயன்படுத்துவது போலவும்,
இறைவனும் பாவிகளை மனந்திருப்ப சில வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
பாவிகளின் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் அவர்களுடைய எண்ணங்களை இறைவன்பால் திருப்புவதால் அவை அவர்களுக்கு இறைவன் தரும் ஆசீர்வாதங்கள்.
துன்பங்கள் நீங்க அவர்கள் இறைவனை வேண்டும் போது தங்கள் பாவங்களை நினைத்து அவற்றிற்காக வருத்தப்பட வாய்ப்பு கிடைக்கும்.
வாய்ப்பைப் பயன்படுத்தி பாவிகள் மனம் திரும்ப வேண்டும்.
பாவங்களுக்காக மனம் வருந்த வேண்டும்.
மன்னிப்புப் பெறவேண்டும்.
அவர்கள் பொருட்டு விண்ணகத்தில் எல்லோரும் மகிழ்வார்கள்.
மனம் திரும்புவோம்.
மனம் வருந்துவோம்.
மன்னிப்புப் பெறுவோம்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment