"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
(லூக்.17:21)
******* X ****** X. ***** X *****
"கடவுளின் அரசு எப்பொழுது வரும்?" என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டார்கள்.
கொஞ்சம் உட்கார்ந்து ஆராய்ந்து பார்த்தால் இந்தக் கேள்வியே பொருள் அற்றது என்பது புரியும்.
அரசர் ஆகிய கடவுள் நித்தியர், ஆகவே அவருடைய அரசும் நித்தியமானதுதான்.
கடவுள் எங்கும் இருக்கிறார். ஆகவே அவருடைய அரசும் எங்கும் இருக்கிறது.
இறையரசு எப்போதும், எங்கும் இருக்கிறது.
இங்கு இல்லாத ஒன்று தான் இங்கு வர முடியும்.
எங்கும் இருக்கிற இறையரசு இங்கும் இருக்கிறது.
இங்கு இருக்கிற இறையரசை எப்படி
"எப்பொழுது வரும்?"
என்று கேட்க முடியும்?
ஆகவே இயேசு
"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
என்கிறார்.
ஆன்மாவைப் பற்றி கவலைப்படாத மனிதனுடைய அனுபவங்கள் உடலை சார்ந்தனவாகவே இருக்கும்.
அவன் உடலைச் சார்ந்த கண்களால் பார்க்க முடிந்தனவற்றையும்
காதுகளால் கேட்க முடிந்தனவற்றையும் மட்டுமே நம்புவான்.
உலகைச் சார்ந்த அரசை மட்டுமே அவனால் உணர முடியும்.
இறைவனை நமது ஊனக் கண்களால் பார்க்க முடியாதது போலவே
இறை அரசையும் நமது ஊனக் கண்களால் பார்க்க முடியாதது.
அது ஆன்மீக அரசு.
The kingdom of God is a spiritual kingdom.
கடவுள் நம்மை உடலோடும் ஆன்மாவோடும் படைத்தார்.
உடல் சடப் பொருள்,
ஆன்மா ஆவி.
உடல் மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது,
மண்ணுக்கே திரும்பி விடும்.
ஆன்மா சொற்ப காலம் உடலோடு வாழ்ந்தாலும் விண்ணகம் தான் அதன் நித்திய வீடு.
ஆன்மா உடலோடு வாழ்ந்தாலும் அது உலக அரசைச் சார்ந்தது அல்ல.
இறையரசைச் சேர்ந்தது.
ஆன்மா இறையரசுக்குள்
இருக்கிறது.
இறையரசு ஆன்மாவில் இருக்கிறது.
தன்னிடம் இருக்கும் இறையரசை ஆன்மா ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு இடத்தில் இருப்பதற்கும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஒரு பெற்றோருக்கு பிறந்தவன் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவன்.
ஆனாலும் தங்கள் குடும்பத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும் உலகில் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களைப் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் நேசிப்பது இல்லை.
பெற்றோருக்கு கீழ்ப்படிவதும்
இல்லை.
அதே போல்தான் இறைவனால் படைக்கப்பட்ட சிலர் இறைவனை அரசனாக ஏற்றுக்கொள்வது இல்லை.
ஏற்றுக் கொள்ளாதவரையிலும் அவர்கள் இறையரசுக்குள் இருந்தாலும் அதை சேர்ந்தவர்கள் அல்ல.
"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்று இயேசு பரிசேயரை நோக்கியே சொன்னார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லையே!
"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
என்று சொன்ன இயேசுதான் கடவுளின் அரசு.
பரிசேயர்கள் அரசராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல,
அவரைக் கொல்லத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குக் தெரியாது, ஆகவே ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், தெரிந்த நாம்
நம்முள் இருக்கும் அவரை நம்முடைய அரசராக முழுமனதுடன் நாம் ஏற்றுக் கொள்கிறோமா?
அவரை முழுமனதுடன் நமது அரசராக ஏற்றுக் கொண்டால்தான்
இறையரசிற்கு நாம் முழு உரிமையாளர் ஆகிறோம்.
அதாவது இறையரசின் சொத்துக்களான (wealth) அருள் வாழ்வும், நித்திய பேரின்பமும் நமக்கு உரியன ஆகின்றன.
அருள் வாழ்வுதான் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை வலுப்படுத்துகிறது.
இறைவன் தரும் அருள் வாழ்வை நாம் முழுமையாக வாழ வேண்டும்.
அதாவது இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வு அருள் வாழ்வாக மட்டுமே இருக்க வேண்டும்.
பொருள் வாழ்வாக இருக்கக் கூடாது.
புனிதர்கள் உலகியல் கலப்பு சிறிதும் இல்லாத முழுமையான அருள் வாழ்க்கை வாழ்ந்ததால் தான் அவர்களை நாம் புனிதர்கள் என்கிறோம்.
பசு தரும் பாலோடு நாம் தண்ணீரை கலந்தால் நீர் கலந்த, கலப்பட, பால் ஆகிறது.
வியாபார நோக்கோடு சுத்தமான மிளகுடன் பப்பாளி விதையைக் கலந்தால் அது கலப்பட உணவுப் பொருள் ஆகிறது.
நாம் உண்ணும் கலப்பட உணவுப் பொருள்கள்தான் நமது அநேக நோய்களுக்கு காரணம்.
நமது ஆன்மீகத்தையும் கலப்பட ஆன்மீகமாக மாற்றி விட கூடாது.
இறைவனுக்காக மட்டும் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு செல்வது சுத்தமான ஆன்மீகம்,
சுவாமியாரிடம் தலையைக் காண்பிப்பதற்காகப் போவது கலப்பட ஆன்மீகம்.
முழுமையாக இறைவனை அரசனாக ஏற்றுக் கொள்பவர்கள் தான் முழுமையாக இறையரசின் உறுப்பினர்கள்.
அதாவது இறைவனுக்காக மட்டும் இறையரசை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"நீ வேதத்துக்குப் போய்ட்டியாம!"
"ஆமா. வேதத்திலதான் பொண்ணு கிடைச்சுது!"
"ஏல, R.C க்குப் போய்ட்டியாம!"
"ஆமா. School ல வேலை கிடைச்சுது!"
"மாதா பக்தன் ஆய்ட்ட போலிருக்கு!"
"ஆமா, வேலைக்காக நேர்ந்திருக்கிறேன்!"
இவையெல்லாம் கலப்பட ஆன்மீகத்துக்கு சில samples!
"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்."
(மத்.10:37)
கலப்பட ஆன்மீகவாதிகள் இறைவனை விட தங்களையே அதிகம் நேசிக்கிறார்கள்!
ஆக, இறைவனை முழுமையாக தனது அரசராக ஏற்றுக் கொள்பவன்தான்
இறையரசுக்கு முழுமையான உரிமையாளன்.
இறையரசு ஆன்மீக அரசாகையால் அதை நமது ஊனக் கண்களால் பார்க்க முடியாது.
ஆனாலும் இறையரசை ஏற்றுக் கொள்பவனை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
எப்படி?
அவனது வாழ்க்கையை வைத்து.
இறையரசு இவ்வுகை சார்ந்தது அல்ல என்றாலும்
அதை சேர்ந்தவர்கள் இவ்வுலகில்தான் வாழ்கிறார்கள்.
அவர்களுடைய வாழ்க்கை முறையை வைத்து
அவர்கள் இறையரசை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இறையரசைச் சேர்ந்தவர்கள் இறைவனின் கட்டளைகளை முழுமையாக கடைப்பிடிப்பார்கள்.
அதாவது அவர்களது வாழ்க்கையே இறைவனையும் அயலானையும் நேசிப்பதாகத்தான் இருக்கும்.
அவர்களது சிந்தனையிலும், சொல்லிலும் ,செயலிலும் இறையன்பும், பிறரன்பும் மட்டும்தான் இருக்கும்.
அவர்கள் உண்பதும், உடுத்துவதும், உறங்குவதும் கூட இறைவனுக்காகத்தான் இருக்கும்.
அதாவது அவர்கள் எது செய்தாலும் இறைவனை மையப்படுத்தியே செய்வார்கள்.
இறைவனை மையப்படுத்தி செய்யப்படும் செயலில் இறைவனுக்கு பிடிக்காதது எதுவும் இருக்காது.
அதாவது பாவத்தால் அந்த செயலுக்குள் நுழைய முடியாது.
உலக சம்பத்தப்பட்ட காரியங்களைக்கூட இறைவனுக்காக செய்யும்போது
அவைகள் இறைவன் சம்பந்தப்பட்ட காரியங்களாக மாறிவிடுகின்றன.
ஒவ்வொரு நாளும் நாம் விண்ணகத் தந்தையிடம்
"உமது அரசு வருக" என்று வேண்டுகிறோம்.
இதன் பொருள்,
"தந்தையே, இவ்வுலகிலுள்ள அனைவரும் உம்மை அரசராக ஏற்றுக் கொள்ளச் செய்யும்."
"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக" என்ற நமது வேண்டுதலும் இதை ஒட்டியதே.
அரசரை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய சித்தத்தையும் கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"விண்ணுலக அரசரே, மண்ணுலகில் உம்மை ஏற்றுக் கொள்ளும் அனைவரும்
உமது விருப்பத்தை ஏற்று, அதன்படி நடக்க அனைவருக்கும் உம்முடைய அருள் வரத்தைக் தாரும்" என்று வேண்டுகிறோம்.
இந்த ஜெபத்தை நமக்குக் கற்றுத் தந்தவர் இறைமகன் இயேசு.
இறைவனாகிய அரசரை நமது தந்தையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
நமது தந்தை அரசர் என்றால் நாம் யார்?
அரசகுமாரர்கள்.
விண்ணக சாம்ராஜ்யத்தின் வாரிசுகள்.
விண்ணகத் தந்தையை அரசராக ஏற்றுக் கொள்ளும் அனைவரும் அரசகுமாரர்களாக மாறுகிறார்கள்.
விண்ணக சாம்ராஜ்யம் நம் அனைவரின் உரிமைச் சொத்தாக மாறுகிறது.
இயேசு நற்செய்தியை அறிவித்த மூன்று ஆண்டுகளும் இறை அரசைப் பற்றி (The Kingdom of God) அடிக்கடி பேசினார்.
அதை நாம் மறக்காமல் இருப்பதற்காகத்தான் அதைப்பற்றிய வேண்டுதலை நம்முடைய அன்றாட ஜெபத்தில் அமைத்து தந்திருக்கிறார்.
நாம் இறை அரசில் வாழ்வது மட்டுமல்ல,
இறையரசை பரப்புவதற்காகவும் வாழ்கிறோம்.
நாம் நற்செய்தியை அறிவிப்பதன் நோக்கமே அதுதான்.
உலகம் முழுவதும் ஒரே அரசின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் இயேசுவை அரசராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்காகவே நாம் நமது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment