Friday, November 20, 2020

*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*(லூக். 1:28)(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/11/128_20.html


*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*
(லூக். 1:28)
(தொடர்ச்சி).



நாம் அன்னை மரியாளின் செல்லப் பிள்ளைகள்.

நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது நம் அன்னைக்கு நன்கு தெரியும்.

நாம் நமது நோக்கத்தை அடைய நமக்கு உதவி செய்வதே நம் அன்பு அன்னையின் தலையாய பணி.

அதற்காகவே நம் அன்னை தன்னுடைய மைந்தனிடம் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.

இறைவனின் அன்னையாக தன்னுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய மரியாள்

 இன்று திருச்சபையின் அன்னையாக தன்னுடைய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆதித் திருச்சபையில் அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நம் அன்னையே.

இன்று அப்போஸ்தலர்களின் வாரிசுகளுக்கு வழிகாட்டியாக இருப்பவள் அவள்தான்.

நம்மையும் வழி நடத்துபவள் அவள்தான்.


அம்மா உணவு தயாரித்து dining table மேல் சாப்பாட்டை வைப்பதால் மட்டும்
நமது வயிறு நிறைந்துவிடாது. 

 அம்மா தயாரித்த உணவை சாப்பிட்டால்தான் நமது வயிறு நிறையும்.

ஆசிரியர் நமக்கு பாடம் நடத்துவதால் மட்டும் அறிவு வந்துவிடாது.

நாம் படித்தால் மட்டுமே நமது அறிவு வளரும்.

அது போலவே நாம் எந்த அளவுக்கு அன்னையின் வழி நடத்துதல்படி நடக்கிறோமோ அந்த அளவுக்கு அவளுடைய உதவி பயன் தரும்.

நம் மக்கள் எல்லோரிடமும் மாதா பக்தி மிகுதியாக இருக்கிறது.

பக்தி என்றால் அன்பு, பாசம்.

அம்மாவை நேசித்தால் மட்டும் போதாது 

அவளது நற்குணங்களை 
நம்மவை ஆக்கி,

அவளைப் போலவே வாழ வேண்டும்.

இறைவன் தன் அன்னைக்கு அருள் வரங்களைக் கொடுத்தது போலவே நமக்கும் தருகிறார்.

 அவை நம் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன?


தெருவழியே போகும் ஒருவரைக் கூப்பிடுகிறோம்.

அவர் திரும்பி பார்த்தால் நமது குரல் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திரும்பி நம்மிடம் வந்தால் நல்ல
மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் அவர் திரும்பியே பார்க்காவிட்டால் நமது குரலை அவர் மதிக்கவில்லை என்று அர்த்தம்.

அதேபோல்தான் இறைவன் நமக்கு அருளும் அவரது அருளை ஏற்று 

அவரிடம் சென்றால் நாம் அருளுடன் ஒத்துழைக்கிறோம்.

 அதைப் பொருட்படுத்தாமல் போன போக்கிலேயே போனால் நாம் ஒத்துழைக்கவில்லை.

இலையில் வைத்த சோற்றை உண்டபின் அடுத்து சோறு வரும்.

வைத்ததைச் சாப்பிடாமல் இருந்தால்?

வரும் அருளை பயன்படுத்தினால் அருள் வெள்ளம் தொடர்ந்து வரும்.

வந்ததையே பயன்படுத்தாவிட்டால்?

நமது அன்னை இறையருளை முழுமையாக பயன்படுத்தியது போல

 நாமும் நமது வாழ்வில் பயன்படுத்தினால்தான் நாம் அன்னையைப் போல் வாழ்கிறோம் என்று பொருள்.

அன்னையின் திருத்தலங்களுக்குச் சென்று வருவதால் மட்டும் அன்னை வழி நடக்கவில்லை.

அன்னையைப்போல இறை அருளோடு ஒத்துழைத்து வாழும் போதுதான் அன்னை வழி நடக்கிறோம்.

ஒரு தந்தைக்கு ஐந்து பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும்.

அவரவருக்கு என்ன தேவையோ அதையே தந்தை கொடுப்பார்.

கல்லூரியில் படிக்கும் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்கும் அதே புத்தகங்களை முதல் வகுப்பில் படிக்கும் பிள்ளைக்கு கொடுக்க மாட்டார்.


அதேபோல்தான் நமது விண்ணகத் தந்தையும் யார் யாருக்கு என்னென்ன வரம் வேண்டுமோ அவரவருக்கு அந்தந்த அருள் வரத்தைக் கொடுப்பார். 

இறைவன் கொடுத்த வரத்தோடு ஒத்துழைத்தால் போதுமானது,

இயேசு உடலால் பட்ட வேதனைகளை போலவே மரியாள் உள்ளத்தில் வியாகுலங்களை அனுபவித்தாள்.

அவளது வியாகுலங்களைத் தாங்கிக்கொள்ள நிறைவான அருள் தேவைப்பட்டது.

 நமது சிலுவையை சுமக்க நமக்கு எவ்வளவு அருள் வேண்டுமோ அவ்வளவு நமக்குத் தரப்படும்.

தரப்படுவதோடு ஒத்துழைத்தால் சிலுவையைச் சுமக்க இலேசாக இருக்கும்.

 ஒத்துழைக்காவிட்டால் சுமக்க முடியாத அளவிற்கு கனமாக தெரியும்.


நிறைவு (Perfection) எதில் அடங்கி இருக்கிறது?

இறைவனது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் நிறைவு அடங்கி இருக்கிறது.

இறைவன் தரும் அருளுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தால் நாம் அவரது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுகிறோம். 

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள்.
Each of us is unique.

உலகில் வாழ்ந்த, வாழ்கிற, வாழப்போகிற கோடிக்கணக்கான மக்களில் 

 ஒருவரை போல் இன்னொருவர் இருக்க முடியாது.

உலகில் உள்ள அனைவரும் இறைவனது உள்ளத்தில் நித்திய காலமாக எண்ணமாக (idea) இருந்தோம்.

ஒவ்வொருவரும் எப்போது, எங்கு, எந்த சூழ்நிலையில் பிறக்க வேண்டும் என்று நித்திய காலமாக இறைவன் திட்டமிட்டிருக்கிறார்.

அவரது திட்டப்படி தான் பிறக்கிறோம், வளர்கிறோம்.

அவருடைய மீட்புத் திட்டத்தில் மரியாளைப் போலவே நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.

நாம் நம் அன்னையைப் பின்பற்றி வாழ்ந்தால் .
.
நமது மீட்புக்காக மட்டுமல்ல, உலகு அனைத்தின் மீட்புக்காகவும் 

நாம் ஆற்ற வேண்டிய பணியை ஆற்றிய பெருமை பெறுவோம்.

இயேசுவை வளர்க்கும்போது அன்னையிடம் இருந்த அதே மனநிலை, மனோபாவம், குணங்கள் எல்லாம் நம்மிடமும் இருக்கும்.


 இவை நம்மை மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்போரையும்
இறைவனுக்கு பிடித்தபடி ஆன்மீகத்தில் வளரச் செய்யும்.    

நம் அன்னையின் குணங்கள் அதிகமதிகமாய் இறைவனது அருளை ஈட்டும் சக்தி வாய்ந்தவை.

அன்னையின் ஆன்மா இறைவன் தனது அருள் விதைகளை விதைக்கத் தகுந்த பக்குவமான, வளமான நிலம் போன்றது.

வளமான நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் ஒன்றுக்கு நூறு பலன் தருவது போல 

அன்னையின் ஆன்மாவில் விதைக்கப்பட்ட அருள் விதைகளும் ஒன்றுக்கு நூறாய் இறையருளை ஈர்த்துக் (attract) கொண்டே இருக்கும். 

அதே போல் தான் அன்னையைப் போல் வாழும் அனைவரும் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தேவையான அருள் வரங்களை இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.

இயேசுவின் மீட்புத் திட்டத்தில் மரியாளைப் போல பங்கெடுப்பவர்களாய் மாறுவார்கள்.

இயேசுவைப் போலவே பாடுபடவும், மரிக்கவும் தயாராக இருப்பார்கள்  


நாம் எல்லோரும் கிறிஸ்துவின் ஞான உடலின் உறுப்புக்கள்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளோடு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது.

ஒரு உறுப்பு பெரும் நன்மையால் அனைத்து உறுப்புகளும்
 பயன்பெறுகின்றன.

ஒரு உறுப்பு பாதிப்பு அடையும்போது எல்லா உறுப்புகளும் பாதிப்பு அடைகின்றன.

அன்னை மரியின் அருள் வரங்களாலும், அவளைப் பின்பற்றி வாழ்ந்த புனிதர்களின் அருள் வரங்களாலும் நாம் அனைவரும் பயன் பெறுகிறோம்.

 அன்னையையும் புனிதர்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு நெருங்கி வாழ்கின்றோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களிடமிருந்து நாம் பெரும் ஆன்மீக பலனும் அதிகரிக்கும். 

நாம் பெறும் அருள் வரங்களால் நம்மைச் சுற்றியிருப்போரும் பயன் பெறுவர்.

அதனால் தான் நல்லவர்களோடு நட்போடு வாழ்பவர்கள் நல்லவர்களாக மாறுகிறார்கள்.

தீயவர்களோடு நட்போடு வாழ்பவர்கள் தீயவர்களாக மாறுகிறார்கள்.

நாம் நமக்கு வரும் அருள் வரங்களைத் தேக்கி வைக்கும் குளங்கள் அல்ல,

அவற்றை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லும் வாய்க்கால்கள்.

நமக்கு இறைவன் தரும் அருள் வரங்களைப் பயன்படுத்தி

 நல்லன செய்யும்போது,

 அவற்றைப் பார்ப்போரும் இயல்பாகவே நல்லதை நினைத்து, நல்லதை செய்வார்கள்.

 நம்முள் இருக்கும் இறைவனது அருள்வரம் நம்மை சுற்றியுள்ளோருக்கும் பயன் கொடுக்கும்.

இறையருள் நம்முள் செயல் படும்போது நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் இறைவனது பிரசன்னம் இருக்கும்.

இறைவனை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அவரது பிரதிநிதிகளாகவும் கருவிகளாகவும் நாம் மாறுவோம்.

நாம் விண்ணகம் செல்லும் போது தனியாக செல்வதில்லை. நமது நல்ல செயல்களால் பயன்பெறுவோரும் நம்முடன் வருவர்.

நட்சத்திரம் தனது கோள்களுடன் விண்வெளியில் பயணிப்பது போல

 நாமும் நமது அருள் உறவினர்களோடு விண்ணகத்தில் நுழைவோம்.

நமக்குள் இருந்து பிரகாசிக்கும் இறையருள் ஒளியில் 

நமது குடும்பத்தினரும், நண்பர்களும், சமூகத்தினரும் விண்ணகம் நோக்கி நம்மோடு பயணிப்பர்.   

இயேசுவைப் பெற்றவள் மரியாள் மட்டும்தான்,

 ஆனால் அவளோடு அவளைச் சுற்றியிருந்த பெண்களும் இயேசுவின் சீடத்திகளாக மாறினர். 

அவர்கள் தான் இயேசு சிலுவையில் தொங்கும் போது அவரைப்பார்த்து அழுதுகொண்டு நின்றார்கள்.


"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

 அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்."
(மத்.27:55,56)

நாமும் நமது அன்னையைப் பின்பற்றி நம்மோடு விண்ணகம் செல்ல 

இறை அருளின் உதவியால் ஆட்களைச் சேர்ப்போம்.

நாம் வணங்கும் புனிதர்கள் யாவரும் தங்களது வாழ்நாளில் நமது அன்னையைப் பின்பற்றியவர்களே.

நாமும் நமது அன்னையைப் பின்பற்றுவோம், புனிதர்களாக மாறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment