Wednesday, November 18, 2020

*இறைவன் நம்மோடு பேசுகிறார்.*

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_18.html



*இறைவன் நம்மோடு பேசுகிறார்.*



இறைவன் நம்மோடு அமைதியில் பேசுகிறார்.

அமைதியாக தியானிப்போர் இறைவனின் குரலைக் கேட்பார்கள்.

அமைதியில் நமது மனது இறைவனோடு ஒன்றித்த நிலையில் இறைவனது குரல் நமது மனதுக்கு மட்டும் தெள்ளத் தெளிவாக கேட்கும்.

கேட்கப்பட்ட குரல் மனதில் பதிவாகிவிடும்.

பதிவான குரல் நமது வாழ்க்கையை வழிநடத்தும்.

இறைவனது குரலுக்கு மொழி கிடையாது.

இறைவனோடு பேச விரும்புவோர் அமைதியாக தியானிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அமைதியில் நமது மனதை இறைவனோடு ஒரு நிலைப்படுத்த வேண்டும்.


அதாவது இறைவன் பேசுவதை கேட்க நமது மனதை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறைவனைத் தவிர வேறு யாரும், எந்த பொருளும் நமது மனதில் இருக்கக்கூடாது.

அப்படிப்பட்ட மனநிலையில்தான் இறைவனது குரல் நமது மனதுக்குக் கேட்கும்.

நமது உலக அனுபவத்தில் கூட நாம் வசிக்கும் வீட்டிற்கு நமக்குப் பிரியமானவர்கள் வருவதாக இருந்தால் 


அவர்களை முன்னிட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்போம்.

யாருமே வராத பட்சத்தில் வீடு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டோம்.

கண்ட கண்ட பொருள் கண்ட கண்ட இடத்தில் இருந்தாலும் நாம் அதை கண்டு கொள்ள மாட்டோம்.

ஆனால் நமது மனதுக்குப் பிரியமானவர்கள் வீட்டிற்கு வருவதாக இருந்தால் பொருட்களை அது அது இருக்க வேண்டிய இடத்தில் வைப்போம்.

வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்துவோம்.

ஒரு இடத்தில் கூட தூசியே அழுக்கோ இருக்க விட மாட்டோம்.

வீட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும் அலங்காரப்பொருள் ஏதாவது கிடைத்தால் அதையும் வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்.

இவையெல்லாம் நமக்காக அல்ல, நம் வீட்டுக்கு வருபவருக்காக. 


அதே போல் தான் நமது ஆன்மீகத்திலும்.

கடவுள் நம்மிடம் வர வேண்டும் என்று ஆசை இல்லாவிட்டால்

 நமது மனது எந்த நிலையில் உள்ளது என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம்.

வேண்டாத குப்பை எல்லாம் நமது உள்ளத்தில் கிடக்கும்.

ஆனால், இறைவனை நமது உள்ளத்திற்கு வரவேற்க வேண்டும் என்று நாம் தீர்மானித்து விட்டால் 

அவருக்கு வேண்டாத பொருட்கள் நமது உள்ளத்தில் இருந்தால் 

அவற்றை முதலில் அப்புறப் படுத்துவோம்.

உள்ளத்தில் இறைவனைப் பற்றிய எண்ணங்களுக்கு மட்டுமே இடம் கொடுப்போம்.

இறைவனது குரலை கேட்க தயார் நிலையில் இருப்போம்.

இந்நிலையில்தான் ஆண்டவர் நம்மோடு பேசுவது நமக்கு கேட்கும்.

"நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானமும் உண்டாகுக" என்று விண்ணகத் தூதர்கள் 
வாழ்த்தியதன் பொருள் இதுதான்:

யாருடைய மனது இறைவன் வந்து தங்குவதற்கு ஏற்ற தூய்மை உள்ளதாக இருக்கிறதோ,

 அவர்கள் இறைவன் தரும் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.

ஆகவே இறைவனோடு நாம் பேசும் முன் நம்முடைய மனதில் இறைவனுக்கு விரோதமாக எந்த அம்சமும் இருக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்.

தன்னை தியானிப்பவர்களோடு உள்ளத்தில் பேசும் இறைவன் பைபிள் வாசிப்பவர்களோடு வார்த்தைகள் மூலமாக பேசுகிறார். 

பைபிள் வசனத்தை வாசிக்கும்போது கவனிக்க வேண்டியவை:

1.வசனத்தின் மூலம் இறைவன் நமக்கு தரும் செய்தியை தியானிக்கும் நோக்கோடு வாசிக்க வேண்டும்.

2.இறைச் செய்தியை மனதில் பதித்து தியானிக்க வேண்டும்.

3. தியானிக்கும் மனது தூய்மையானதாக இருக்க வேண்டும். 

சுத்தமான தண்ணீரை அசுத்தமான பாத்திரத்தில் ஊற்றக் கூடாது.


பரிசுத்தமான இறைச்செய்தியை அசுத்தமான மனதில் பதியக்கூடாது.


 மனது தூய்மையாக இருந்தால்தான் நாம் வாசித்த செய்தி நமக்கு புரியும்.

4.இறைவன் தந்த செய்தியை. நமது வாழ்வாக்கவேண்டும்.

நாம் சொற்களை கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக சண்டை போடுவதற்கு பயன்படுத்துவது போல, 

 அநேகர் இறை செய்தியையும் வாழ்வதற்குப் பதிலாக

 வாக்குவாதம் செய்யவும் சண்டை போடவும் பயன்படுத்துவார்கள். 

இறைவன் நம்மோடு பேசுவது அவரோடு இணைந்து வாழ்வதற்காக மட்டும்தான்.

இறைச் செய்தியை வாசிக்க வேண்டிய விதமாக வாசித்து

 தியானிக்க வேண்டிய விதமாக தியானித்தால் 

நமது வாழ்க்கையில் ஏற்படும் ஆன்மீக பிரச்சனைகளுக்கு தீர்வு காண நமக்கு அது உதவும்.


திருப்பலியின் போது குருவானவர் செய்யும் பிரசங்கத்தின் மூலமாகவும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.


பிரசங்கம் செய்யும் குருவானவரை இயேசுவாகப் பாவித்து அவர் தரும் செய்திகளுக்கு செவி மடுக்க வேண்டும்.

காதில் வாங்கிய செய்தியை கருத்தில் பதித்து வாழ்வாக்க வேண்டும். 

பிரசங்கம் வைக்கும் சாமியாருக்கு மார்க் போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது.



நமது ஆன்மீக வழிகாட்டி (Spiritual Director) மூலமாகவும் இறைவன் நம்மோடு பேசுகிறார்.

உடலில் பிரச்சனை ஏற்படும் போது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது போல,

ஆன்மீக வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும் போது நம்முடைய ஆன்மீக வழிகாட்டியைப் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

ஒவ்வொரு பங்கிலும் உள்ள பங்குக் குருவானவர் அப்பங்கு மக்கள் அனைவருக்கும் முழுமையான ஆன்மீக வழிகாட்டி ஆவார்.

நம்மில் அநேகர் அவரை வெறும் நிர்வாகியாக மட்டுமே பார்கிறார்கள். நமது ஆன்மீக மருத்துவராக செயல்படுவதுதான் அவரது பணி.

அவரது பணியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது குடும்பங்களில் அநேக பிள்ளைகள் தங்களின் தந்தையிடம் செலவுக்குப் பணம் கேட்பதற்குத் தவிர வேறு எதற்காகவும் பேசுவதில்லை.
'
தாங்களாகவே சம்பாதிக்க ஆரம்பித்த பின் பேசுவதே இல்லை 

நாமும் நமது தந்தையாகிய இறைவனிடம் நமக்கு உதவி தேவைப்படும் போது பேசுவதை தவிர,

 நமது அன்பை தெரிவிப்பதற்காகவோ,

 அவரது அறிவுரையை கேட்பதற்காகவோ பேசாமல் இருந்தால் 

தந்தைக்கும், நமக்கும் இடையே நிலவும் ஆன்மீக உறவு எப்படி இருக்கும்?

நமது விண்ணகத் தந்தையிடம் பேசுவோம்.

 நமது அன்பைத் தெரிவிப்போம்.

 அவரது அருளுரையைக் கேட்போம்.

அவர் சொன்னபடி நடப்போம்.

நமது விண்ணகப் பயணம் வெற்றிகரமாக இருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment