Monday, November 23, 2020

* குணமாக்க வேண்டியது கண்களை.*

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_23.html

* குணமாக்க வேண்டியது கண்களை.*


."இயேசு வாழ்ந்த காலத்தில் Camera இருந்ததா?"

"தெரியாதது மாதிரி கேட்கிறீங்க. ஏதாவது கேட்க வேண்டியிருந்தால் நேரடியாகவே கேளுங்க. ஏன் சுற்றி வளைக்கணும்?"

"சரி. நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன்.

நீங்க வீட்டில் வைத்திருக்கிற
இயேசுவின் படம், மாதா படம். புனிதர்களின் படம் - இவை எல்லாம் உண்மையில் அவர்களுடைய படங்கள் அல்ல.

அவர்கள் காலத்தில் Camera இருந்ததில்லை. இவை அவர்களுடைய photos அல்ல

இப்படங்களை வரைந்தவர்கள் அவர்களைப் பார்த்ததும் இல்லை.


இந்தப் படங்களில் உள்ள முகங்கள் ஒன்று கற்பனை முகங்கள். அல்லது model களுடைய முகங்கள்.

நீங்கள் இயேசு என்று நினைத்துக்கொண்டு யார் யாருக்கோ மாலை போடுகிறீர்கள், முத்தம் கொடுக்கிறீர்கள்.

இது சரியா?"


"அன்னைத் தெரசா படமும் வீட்டில் வைத்திருக்கிறேன். அதற்கும் மாலை போடுகிறேன். அதாவது சரியா?"

"மொத்தத்துக்கு படமோ, சுரூபமோ கூடாது என்கிறேன்."

"படமோ, சுரூபமோ கூடாது என்று முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியதுதானே!

எதுக்காக முகத்துக்காக பத்து நிமிடம் செலவழித்தீர்கள்."

"காலண்டர்களில் இயேசுவின் படத்தையோ, மாதாவின் படத்தையோ ஏன் போட கூடாது என்பதற்காக காரணத்தை போதகர் ஒருவர் சொன்ன வீடியோ பார்த்தேன். 

அதை வைத்து கேள்வி கேட்டேன்."

"திருமண ஆசை இல்லாதவன் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்.

 அதை விட்டுவிட்டு, இப்படிப்பட்ட பெண் வேண்டாம் அப்படிப்பட்ட பெண் வேண்டாம் என்று கதை அளந்து கொண்டு இருக்கக் கூடாது.

இப்போ ஒரே கேள்வியாக கேளுங்கள் பார்ப்போம்."

"ஏன் படங்களையும் சுரூபங்களையும் வைத்திருக்கிறீர்கள்?"

"இங்கே பாருங்கள் என் கையில் ஒரு கதைப் புத்தகம் இருக்கிறது.

அதை தரையில் போடுகிறேன். 

உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தையும் போடுங்கள்."

"ஹலோ சார், என் கையில் இருப்பது பைபிள். அதை மரியாதையோடு கையாள வேண்டும்."

"உங்கள் கையில் இருப்பது பைபிள் என்று யார் சொன்னா?"

"இதோ பாருங்கள். Holy Bible என்று எழுதியிருப்பது தெரிகிறதா?"

"எழுதியிருப்பது தெரிகிறது.

என் புத்தகத்தில் 'பிரதாப முதலியார் சரித்திரம்' என்று எழுதியிருகிறது.

உங்கள் புத்தகத்தில் Holy Bible என்று எழுதியிருகிறது.

ஆனால் இரண்டும் பேப்பரும், எழுத்துக்களும் உள்ள புத்தகங்கள்தானே."

"இப்படி மரியாதை இல்லாமல் பேசாதீர்கள். பைபிள் மரியாதைக்கு உரியது."

"பைபிள் என்றால் இறைவாக்கு.

இறைவாக்கிற்கு உருவம் கிடையாது. 

உங்கள் கையில் இருப்பது உருவத்தை உடைய புத்தகம்.

அதுவும் என் கதைப் புத்தகத்தைப் போன்றே உருவத்தை உடைய புத்தகம்!

உருவம் இல்லாத இறைவனுக்கு உருவத்தைக் கொடுப்பது தப்பு என்றால் 

உருவம் இல்லாத இறைவாக்கிற்கு உருவம் கொடுப்பது எப்படி?"

"இறை வாக்கிற்கு எழுத்துவடிவம் கொடுத்திருப்பது தப்பு என்கிறீர்களா?"

"நான் தப்பு என்று சொல்லவில்லை. சரி, மிகவும் சரி. 

சுருபம் பற்றி உங்களது நிலை தவறு என்பதை சுட்டிக் காண்பிக்கவே இதைச் சொன்னேன்."

"அது வேறு இது வேறு. 

அது ஆள் பற்றியது,

இது எண்ணம் பற்றியது
 
இரண்டையும் ஒப்பிட முடியாது."

"அது வேறு இது வேறு தான்.

ஆனால் அடிப்படை ஒன்றுதான்.

உருவம் இல்லாததற்கு உருவம் கொடுப்பது.

மனிதன் உருவம் உள்ளவன். எண்ணங்கள் உருவமற்றவை.

தன்னிடமுள்ள உருவமற்ற எண்ணத்தை மற்றவரோடு பகிர வேண்டும் என்றால் அதற்கு உருவம் கொடுத்தாக வேண்டும்.

அன்னை மரியாள் வாழும் போது அவளுக்கு உருவம் இருந்தது.

அதே போல் தான் இயேசு வாழும்போது அவருக்கு உருவம் இருந்தது.

இப்போது அவர்கள் வாழ்வது விண்ணகத்தில்.

பூமியில் அவர்களது உருவம் நடமாட வில்லை.

அவர்களைப் பற்றியே நாம் நினைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நாம் உருவம் கொடுத்தாக வேண்டும்.

மனதில் எண்ணங்களை நினைக்கலாம் ஆனால் ஆட்களை நினைக்கும் போது அவர்களது முகம் இல்லாமல் நினைக்க முடியாது.

மனிதனது identity அவனது 
முகம்தான்"

"தாராளமாக சுரூபங்களைச் செய்து கொள்ளுங்கள்."

"ஹலோ அதற்கு உங்கள் அனுமதி ஒன்றும் தேவையில்லை.

படத்தையும் உருவத்தையும் எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்துகிறோம்"

"யாருடைய முகத்தையோ இயேசுவின் முகம் என்று கூறி வணங்குவதுதான் பயன்படுத்தவேண்டிய முறையோ?"

"அதற்குறிய விளக்கத்தைக் கேளுங்கள் சொல்கிறேன்."

"சொல்லுங்கள்."

" இயேசுவின் திரு இருதயப் படம், 

நல்ல ஆயன் படம்,

சிறுவர்களை அரவணைத்துக் கொள்ளும் படம்,

இரவு உணவு (last Supper)படம்,

பாடுகளின் போது உள்ள படம்,

சிலுவையில் தொங்கும்போது உள்ள படம்

இவ்வாறு பல நிலைகளில் உள்ள இயேசுவின் படங்களில் வெவ்வேறான முகங்கள் கொடுத்து படங்கள் வரையப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு நிலையிலும் இயேசுவிடம் இருக்கும் உணர்வுகளை முகம் பிரதிபலிக்கும்.  

 திரு இருதய படத்தில் அன்பு பொங்கி வடியும்.

நல்ல ஆயன் படத்தில் ஆடு மெய்ப்பவருடைய முகபாவம் இருக்கும்.

பாடுகளின்போது உடல் வேதனைகளை முகம் பிரதிபலிக்கும்.


சிலுவையில் தொங்கும்போது உச்சக்கட்ட வேதனையை முகம் பிரதிபலிக்கும்.

  படத்தின் மூலம் நமக்கு ஏற்படும் பக்தி உணர்வு முகத்தில் தெரியும் உணர்வுகளை பொறுத்தது.

ஒரு நண்பர் அழுதார் என்ற செய்தியைக் கேட்கும்போது நமக்குள் உண்டாகும் உணர்வுகளுக்கும் 

அழுவதை நேரில் பார்க்கும்போது உண்டாகும் உணர்வுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

உறவினர் ஒருவர் மரித்தார் என்று கேள்விப்படும்போது வருத்தம் வரும் 

ஆனால் மரணப் படுக்கை அருகே நாம் நின்றால் மனம் பொங்கி, அடக்க முடியாத அழுகை வரும்.

நிறைவை அடைந்தவர்களுக்கு படங்களின் உதவி தேவைப் படாமல் இருக்கலாம்.


ஆனால் எங்களைப் போல சாதாரணமானவர்களுக்கு உணர்வுபூர்வமாக ஜெபிக்க படங்களின் உதவி தேவை.

விசுவாசிகளில் பெரும்பாலோர் சாதாரண மக்கள். Theology யில் பட்டம் பெற்று வந்தவர்கள் அல்ல.

படங்கள் மனதை ஒருநிலைப் படுத்தி செபிக்க உதவியாய் இருக்கும்.

அவர்களுக்கு தெரியும் இது இயேசுவின் படம், இயேசு அல்ல என்று.

உங்கள் cell phoneல் உங்கள் பேத்தியின் படத்தை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பதில்லை!

அது படம் தான் என்று உமக்குத் தெரியாது?

அதே போல் தான்."

"கரெக்ட். ஆனால் என் பேத்தியின் படத்தை வைத்துதான் கொஞ்சிக் கொண்டிருப்பேன்.

ஏதாவது ஒரு குழந்தையை என் பேத்தி என்று நினைத்து கொஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன்."

"கரெக்ட். இயேசுவையோ, மாதாவையோ படம் வரையவர்கள் பார்த்திருக்கவில்லை.

வரைவது கற்பனையிலிருந்து அல்லது ஏதாவது model ஐப் பார்த்துதான்.

ஆனால் படத்தைப் பார்ப்பவர்களுக்கு படம் மட்டும் தான் தெரியுமேயொழிய model ஐத் தெரியாது.

இயேசுவின் படத்தையோ, சுரூபத்தையோ பார்ப்பவன் இயேசுவைப் பற்றி மட்டும் நினைப்பானேயொழிய model ஐப் பற்றி நினைக்கமாட்டான்.

ஒரு செயலின் தன்மையைத் தீர்மானைப்பது மனம்தானேயொழிய செயல் அல்ல.

பாடுட்ட சுருபத்தில் இயேசு தொங்கும் நிலையையும் முகத்தையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால்

 நமது பாவங்களுக்காக உத்தம மனல்தாபம் பொங்கி வரும்.

பாவங்களுக்காக உத்தம மனல்தாபம் பட்டவர்களுக்கு மட்டுமே இந்த அனுபவம் புரியும்.

மற்றவர்களுக்குப் புரியாது.

ஜெபமாலை சொல்லும் போது பாடுபட்ட சுருபத்தை கையில் பிடித்திருப்பது

 இயேசுவைப்பற்றி தியானிப்பதற்காக மட்டுமே,

 அந்த முகம் யாரைப் போல் இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல.

மாதாவிற்கு அவள் காட்சி கொடுத்ததின் அடிப்படையில் நாம் பல பெயர்கள் வைத்திருக்கிறோம்.


அவள் காட்சி கொடுத்ததை நினைவூட்டும் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு முகபாவங்கள் இருக்கும்.


எத்தனை முகபாவங்கள் இருந்தாலும், நமது சிந்தனையில் இருப்பது மாதா மட்டுமே.

பக்தி உணர்வை மனதில் வைத்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.

ஆராய்ச்சி மட்டுமே செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர் களுக்கும் பாமர மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்தவர்கள்,

இதையும் புரிந்து கொள்வார்கள்.

பரிசேயர் செய்தது சட்ட ஆராய்ச்சிகளை மட்டுமே.

பாமர மக்கள் கண்டது பக்தி பரவசத்தை மட்டுமே.

பரிசேயர் பைபிளைக் கரைத்துக் குடித்தவர்கள். என்ன பயன்?

 இயேசு தான் அதன் கதா நாயகன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையே!"


"இயேசுவின் முகம் கிரேக்க கடவுளான Zeus முகத்தை ஒட்டி வரையப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே!"

"ஜெகன் தானே சொன்னார்,

நான் Zeus முகத்தைப் பார்த்தது இல்லை.

ஒரு ஆங்கில பெண்மணிக்கு தமிழ்நாட்டு சிநேகிதி ஒருத்தி ஒரு டாலர் வைத்த Chain ஒன்றை பரிசாக கொடுத்தாளாம்.


அவள் அதை கழுத்தில் எப்பொழுதும் அணிந்திருப்பாளாம்.

மற்ற ஆங்கில பெண்மணிகள் அதை பாராட்டுவார்களாம்.

மற்றொரு தமிழ் நாட்டுக்காரி இங்கிலாந்து சென்றபோது இந்த பெண்மணியின் கழுத்தில் தொங்கிய Chain ஐப் பார்த்து சிரித்தாளாம்.

ஏன் என்று கேட்ட போது இவள் சொன்னாளாம்,

"இது எங்கள் ஊர் பெண் குழந்தைகள் இடுப்பில் அணியும் அரைஞாண் கொடி" என்றாளாம்.  

அதற்கு அந்த ஆங்கில பெண்மணி,

"கழுத்தில் அணிந்தால் Chain,

இடுப்பில் அணிந்தால் அரைஞாண் .

கையில் அணிந்தால் bracelet,

காலில் அணிந்தால் கொலுசு.

எங்கே அணிந்தாலும் அது தங்கம்."

என்றாளாம்.

தமிழ் நாட்டுக் காரி வாயைப் பொத்திக் கொண்டாளாம்.


நீங்கள் என்ன செய்யப்போகிறீர்களாம்?"

"இயேசுவின் முகத்தை நினைத்து பார்த்தால் அது இயேசுவின் முகம்.

நீங்கள் இயேசுவை மனதில் தியானித்துக் கொண்டு பார்க்கும் போது இயேசுவின் படத்தில் உள்ளது இயேசுவின் முகம்தான்.

ஜெகன் zeus முகத்தை நினைத்துக் கொண்டு பார்ப்பதால் அவருக்கு அது zeus.

Understood."

 "ஒரு நாள் வகுப்பில் பாடத்தை நடத்தி முடித்தவுடன் ஒரு பையனை எழுப்பிவிட்டு, 

'Understand?' என்றேன்.

அவன் desk க்கு கீழே குனிந்து பார்த்தான்.

'என்னடே பார்க்கிற?' என்றேன்.

அவன் 'desk க்குக் கீழே எப்படி நிற்பது' என்று பார்க்கிறேன் என்றான்!

புரிகிறதா?"

".நன்றாகவே புரிகிறது."

"சிலருக்கு எதைப் பார்த்தாலும் மஞ்சளாகத் தெரியுமாம். 

அவர்கள் குணமாக்க வேண்டியது பொருளை அல்ல.
 தங்கள் கண்களை."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment