Monday, November 16, 2020

*இவனும் ஆபிரகாமின் மகன்தானே.*(லூக். 19:9)

http://lrdselvam.blogspot.com/2020/11/199.html 



*இவனும் ஆபிரகாமின் மகன்தானே.*
(லூக். 19:9)


  '' "ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை"

என்று சொல்லிக் கொள்ளத் துணியவேண்டாம்"

என்று ஸ்நாபக அருளப்பர் தனது அருளுரையைக் கேட்க வந்தவர்களிடம் கூறினார்.

தங்கள் விசுவாச வாழ்க்கையில் அபிரகாமைப் போல் வாழ்பவர்கள் மட்டுமே

தாங்கள் அபிரகாமின் பிள்ளைகள் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.

அபிரகாம் தனது விசுவாசத்தினாலும், கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கையாலும்தான் இன்றும் நினைவுகூரப்படுகிறார்.



  பணம் ஒன்றேயே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த சக்கேயு 

இயேசுவின் பார்வை பட்ட மாத்திரத்தில் புது ஆளாக மாறிவிட்டான். 

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா." என்ற இறை இயேசுவின் வார்த்தைகளை கேட்டதுமே பாவ வாழ்க்கையிலிருந்து இறங்கி வந்து விட்டான்.

இயேசுவின் வழி நடப்பதற்காக தன்னுடைய பணத்தை எல்லாம் தியாகம் செய்ய துணிந்து விட்டான்.

"ஆண்டவரே, இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்.

 எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று ஆண்டவரிடம் சொன்னான்.

அவனது மன மாற்றத்தை கண்ட இயேசு,

" இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று.

இவனும் ஆபிரகாமின் மகன்தானே.

என்று பெருமையாக சொன்னார்.

நாம் இங்கு ஒரு முக்கிய உண்மையை தியானிக்க வேண்டும்.

ஒரு நிகழ்வின் முடிவை மட்டும் காணும் நாம் ,

அதன் ஆரம்பத்திற்குப் பின்னால் சக்கேயுவிடம் வேலை செய்த 

இறை அருளைப் பற்றி ஒரு கணம் யோசிக்க வேண்டும்.

"இயேசு யாரென்று பார்க்க வழிதேடினான்." 

 என்று வாசிக்கிறோம்.

பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சக்கேயுவின் மனதில்

இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டியது அவனுடைய உள்ளத்துக்குள் பாய்ந்த இறை அருள்.

அந்த அருளை வேண்டாம் என்று தள்ளி விடாமல் அதோடு ஒத்துழைத்தான்.

இறைத் தூண்டுதலை ஏற்றுக்கொண்டதின் காரணமாக

"அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான்."

தான் கொடுத்த அருளை ஏற்று அவனைக் காண்பதற்காக அத்திமரத்தில் ஏறிய அவனைப் பார்த்து, இயேசு

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.

இறை அருளை ஏற்று செயல்பட்டதற்கான பரிசு

 அவனது மனமாற்றமும் அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் கிடைத்த மீட்பு.

ஒவ்வொரு பாவிக்கும் மனந்திரும்ப தேவையான இறை அருள் தாராளமாக கொடுக்கப்படுகிறது.

 அவன் செய்ய வேண்டியதெல்லாம் அதை ஏற்று அதோடு ஒத்துழைப்பதை மட்டுமே.

இயேசுவின் அருள்பணி இன்றும் தொடர்கிறது.

நாம் ஒத்துழைக்கிறோமா? 


இன்று இயேசு நம்மை பார்த்து,

"நீங்களும் என்னுடைய சீடர்கள் தானே"

 என்று பெருமையாக சொல்வாரா?

"நாங்கள் இயேசுவின் சீடர்கள்"

 என்று நம்மைப் பற்றி நாமே பெருமையாக பேசிக் கொள்கிறோம். 

நம்மைப் பற்றிய நமது கருத்துக்கு நாம் பொருத்தமானவர்கள்தானா என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்க
 வேண்டும்.

பொருத்தமானவர்களாக இல்லாவிட்டால் நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

தனது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் தனது குருவைப் போல் வாழ்பவன்தான் அவருடைய சீடன் என்ற பெயருக்கு பொருத்தமானவன்.

இயேசு எல்லோரையும் நேசித்தார், குறிப்பாக பாவிகளை அதிகமாக நேசித்தார்.

இயேசு தன்னை காட்டிக் கொடுத்தவனை, "நண்பனே" என்று அழைத்தார்.

தனது சிலுவை மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

நம்மை நேசிக்கும் இயேசுவை நேசிக்கும் நாம்

நம்மை வெறுப்பவர்களை, நமக்கு தீங்கு செய்பவர்களை, நம்மைப் பற்றி கெடுத்துப் பேசுகின்றவர்களை

நேசிக்கின்றோமா?

இயேசு ஏழ்மையை நேசித்தார்.

 நாம் ஏழையாக வாழ விரும்புகிறோமா அல்லது நிறைய பணம் ஈட்ட விரும்புகிறோமா?

இயேசு யூதாஸ் உட்பட அனைத்து சீடர்களின் கால்களையும் கழுவினார்.

நாம் எந்த அளவுக்கு நம்மை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஊழியம் செய்திருக்கிறோம்?

இயேசு உலகிற்கு வந்தது நமக்காக பாடுகள் பட்டு 

சிலுவையில் தன்னையே பலியாக்குவதற்காகத்தான்.

நாம் உண்மையிலேயே அவரது சீடர்களாக இருக்க வேண்டுமென்றால், 

துன்பத்தைக் தேடிப் போகா விட்டாலும்,

இயல்பாக வரும் துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொண்டு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவற்றை ஒப்புக் கொடுக்கவேண்டும்.

ஏற்றுக் கொள்கிறோமா?

 ஒப்புக் கொடுக்கிறோமா? 

அல்லது பயந்து ஓடுகிறோமா?

உண்மையிலேயே இயேசுவைப்போல் நாம் சிலுவையைச் சுமக்க விரும்பினால்

 அது வரும்போது மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்.

 சிலுவையை அனுப்பியவரிடமே சென்று,

"ஆண்டவரே எங்களைச் சிலுவையிலிருந்து காப்பாற்றும்" என்று,

 சிலுவை அடையாளம் போட்டுக்கொண்டே கெஞ்ச மாட்டோம்!

 மாறாக 

"அனுப்பிய சிலுவைக்கு நன்றி, ஆண்டவரே.

 சிலுவையை சுமக்க எங்களுக்கு அருள் வரம் தாரும், ஆண்டவரே.

 இன்னும் சிலுவைகளை அனுப்பும், ஆண்டவரே.

 எங்களது பாவங்களுக்குப் பரிகாரமாக அவற்றை நாங்கள் சுமக்கிறோம், ஆண்டவரே.'' என்று கூறுவோம்.

இன்று நாம் செய்யும் நேர்ச்சை களுக்குக் காரணமே துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகத்தானே!

இயேசு நமது ஆன்மீக மருத்துவர்.

 நமது ஆத்மாவை பிடித்துள்ள பாவம் என்ற நோயிலிருந்து

 நம்மை முற்றிலுமாக விடுவிப்பதற்பதற்காக அவர் கொடுக்கும் மருந்துதான் நமக்கு அவர் அனுப்பும் சிலுவைகள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாராவது

 மருத்துவரிடம் சென்று,

" டாக்டர், டாக்டர், எனக்கு மருந்து கொடுத்து வியாதியை குணமாக்கி விட வேண்டாம்." என்று கெஞ்சுவார்களா?

நாம் நமது ஆன்மீக மருத்துவரிடம் சென்று இப்படித்தான் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

இயேசு நமக்காக அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்.

நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தும் போது இயேசுவுக்காக அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?

தனது பாடுகளின் போது தன்னை விட்டு ஓடிப்போன சீடர்களை

இயேசு தான் உயிர்த்த போது அவராகவே தேடி சென்று பார்த்திருக்கிறார்.

நாம் எப்படி?

நமது கஷ்ட காலங்களில் நம்மை விட்டு பிரிந்து போனவர்களையும் மறக்காமல் தேடிப்போய் பார்த்திருக்கிறோமா?

இத்தனை கேள்விகளுக்கும் நம்மிடமிருந்து சரியான பதில் வந்தால் மட்டுமே 

நம்மை பார்த்து இயேசு
" நீங்களும் என் சீடர்கள்தானே" என்று பெருமையாகச் சொல்வார்.

சிந்திப்போம்,

 செயல்படுவோம்,

 நாமும் இயேசுவின் சீடர்கள்தான் என்பதை நிரூபிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment