Sunday, November 15, 2020

"ஏனெனில், உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்."(மத்.25:29)

http://lrdselvam.blogspot.com/2020/11/2529.html



"ஏனெனில், உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்."

(மத்.25:29)

---------------------------------------------------------


"புரியவில்லை."


"அதென்ன வரும் போதே புரியவில்லைன்னு சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். அது

 எனக்குப் புரியவில்லை."


"இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.


அதுதான் எப்படி? ஏன்? என்று புரியவில்லை."


"இதை வேறு யாராவது சொன்னால் நான் நம்பியிருப்பேன். 


 நீங்க சொல்வது தான் ஆச்சரியமாக இருக்கிறது!''


"ஏன்?"


"உமக்கு எத்தனை பிள்ளைகள்?" 


"மூன்று."


"என்ன செய்கிறார்கள்?"


"அந்த அநியாயத்த ஏன் கேட்கிறீங்க!"


"எந்த அநியாயத்த?"


"முதல் பையன் பல சரக்குக் கடை வைத்திருக்கிறான்.


இரண்டாவது பையன் ஹோட்டல் நடத்துகிறான். 


மூன்றாவது பையன் தெண்டம், வீட்டில படுத்து தூங்குகிறான்."


"ஏன்?"


"அத அவங்கிட்ட தான் கேட்கணும்.


என் மேல தப்பு இல்ல. மூன்று பேருக்குமே பணம் கொடுத்து சொந்தமா தொழில் செய்யச் சொன்னேன்.


முதல் இரண்டு பேரும் கொடுத்த பணத்தை இலாபகரமா முதலீடு செய்திருக்கிறார்கள்.


மூன்றாவது பையன் ஒரு தொழிலும் பார்க்காம தூங்கிக்கிட்டு இருக்கிறான்.


ஏண்டா தொழில் பார்க்கலன்னு கேட்டா, "நான் தொழில் பார்த்தா நட்டம்தான் வரும்" என்கிறான்."


"பணம்?"


"பணத்தை திரும்ப வாங்கிவிட்டேன். பெத்த பாவத்துக்கு சோறு 

போட்டுக்கிட்டிருக்கிறேன். அவனும் வெட்கமில்லாம சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்."


"இப்போதாவது புரிகிறதா?''


"அதாவது, தந்தையாகிய இறைவன் தன் பிள்ளைகளாகிய நமக்குத் தந்த திறமைகளை பயன்படுத்தாவிட்டால், அவை திரும்ப எடுத்துக் கொள்ளப்படும். அப்படித்தானே."


"இயேசு சொன்ன உவமையின்படி அப்படித்தான். ஆனால் நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்."


"எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?"


"பைபிளில் எந்த வசனத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கென்று ஒரு பொது விதி (formula) இருக்கிறது.


'கடவுள் அன்புமயமானவர். மாறாதவர்.'


இந்த மாறாத உண்மையை மனதில் வைத்துக்கொண்டுதான் பைபிள் வசனங்களுக்கு பொருள் காணவேண்டும்.


 ஆண்டவர் உவமைகளைச் சொல்லும்போது


 மனித அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டு நமக்கு புரியக்கூடிய வகையில் சொல்லுவார்.


 மனித நீதியும் இறை நீதியும் வித்தியாசமானவை.

 

மனித நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து குற்றம் இருந்தால் தண்டிப்பார், இல்லாவிட்டால் விடுவிப்பார்.


மனித நீதி விசாரணையில் அன்பிற்கோ, இரக்கத்திற்கோ கொஞ்சங்கூட இடம் இல்லை.


ஆனால் இறைநீதி அன்போடு ஒத்துப் போகக்கூடியது.


இறை அன்பு மன்னிக்கும், தண்டிக்காது. 


இயேசுவின் உவமைகளில் தண்டனை என்ற கருத்து வருகிறது என்றால் 


அது இயேசு சொல்வதன் முக்கியத்துவத்தை நமக்குப் புரிய வைப்பதற்காகத்தான்.


இறைவனின் அன்பு மாறாதது.

நாம் பாவம் செய்யும் போது இறைவனின் அன்பிற்கு எதிராக செயல் படுகிறோம்.


அதாவது இறைவன் மீது நாம் கொண்டுள்ள அன்பை முறித்துக் கொள்கிறோம்,


 ஆனால் நாம் அன்பை முறித்துக் கொண்டாலும் இறைவன் அவரது அன்பில் தொடர்கிறார்.


 ஏனெனில் அவரால் மாற முடியாது.


அதனால்தான் நாம் பாவம் செய்த போதும் அதற்கான பரிகாரத்தை அவரே செய்தார்.


அப்படியானால், நரகம்?


நரகம் அவர் கொடுக்கிற தண்டனை அல்ல.


அவரைவிட்டு நாம் நிரந்தரமாக பிரியும் போது நாம் இருக்கிற பிரிவு நிலை.


நமது பிரிவை நாம்தான் தேடிக் கொள்கிறோம்.


இறைவன் நமது சுதந்திரத்தில் குறிக்கிடுவது இல்லை.


இறையன்பு அள்ளிக்கொடுக்கும், கொடுத்ததைத் திரும்பப் பெறாது.


இந்த அடிப்படை உண்மையை மனதில் வைத்துக் கொண்டுதான் இறைவன் இயேசுவின் உவமைகளுக்குப் பொருள் காணவேண்டும்.


தாலந்துகள் உவமையில் எஜமானன் ஊழியர்களிடம் தாலந்துகளை ஒப்படைத்து விட்டு வெளியூர் போகிறார்.


அவற்றைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை.


லாபம் சம்பாதித்தவர்களுக்குப் பரிசும் சம்பாதிக்காதவனுக்கு தண்டனையும் கொடுக்கிறார்.


இது உவமை.


ஒன்றுமே இல்லாதவர்களாய் இருந்த நமக்கு உருக் கொடுத்து இவ்வுலகில் வாழ வைக்கும் போது, வாழ்வதற்கு உதவியாக திறமைகளை கொடுக்கிறார்.


இங்கே குறிப்பிடப்படுவது ஆன்மீக வாழ்வும், அதை வாழ்வதற்கான வரங்களும்தான்.


உவமையில் வரும் தாலந்து 

ஆன்மீக வாழ்வில் இறைவன் நமக்கு அளிக்கும் அழைப்புகளை (vocation) குறிக்கிறது.


அவர் அளிக்கும் அழைப்புகளை ஏற்று, அவற்றின்படி நடக்க நமக்குத் தேவையான அருளை தருகிறார்.


எல்லோருக்கும் ஒரே வகையான அழைப்புகளைக் கொடுப்பதில்லை.


சிலருக்கு குருத்துவத்திற்கான அழைப்பு கொடுக்கப்படலாம்.


சிலருக்கு குடும்ப வாழ்விற்கான அழைப்பு கொடுக்கப்படலாம்.


சிலருக்கு ஆசிரியர் பணிக்கான அழைப்பு கொடுக்கப்படலாம்.


சிலருக்கு அரசு பணிக்கான அழைப்பு கொடுக்கப்படலாம்.


இங்கு குறிப்பிடப்பட்ட அழைப்புகள் உலகியல் சம்பத்தப்பட்ட அழைப்புகள் அல்ல.


இப்பணிகள் மூலம் நாம் வாழவேண்டிய ஆன்மீக வாழ்விற்கான அழைப்புகள்.


உதாரணத்திற்கு 


நாம் குடும்ப வாழ்வுக்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.


குடும்ப வாழ்வை உடல் என்றும் ஆன்மீகத்தை உயிர் என்று வைத்துக் கொள்வோம்.


உயிரின்றி உடல் இல்லை. ஆன்மீகம் இல்லாத குடும்ப வாழ்வு குடும்ப வாழ்வு இல்லை.


அது வெறும் உலக வாழ்வு.


ஒவ்வொரு வாழ்வுக்கும் அழைக்கப்பட்டோர் அதற்காக இறைவன் தரும் அருளைப் பயன்படுத்தி,


அந்த வாழ்வின் ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைய வேண்டும்.


வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனுடைய அருள் நமக்கு தரப்பட்டுக் கொண்டே இருக்கும். 


இறைவன் தரும் அருளை பயன்படுத்தி வளர்ச்சியைக் காண்பித்தால் அடுத்த நிலைக்கு புதிதாக அருளை இறைவன் தருவார்.


அவர் தரும் அருளை நாம் பயன்படுத்தாவிட்டால் நம்மைப் பொறுத்த அளவில் அது பயனற்றதாக போகும்.


கொடுத்த அருளை இறைவன் திரும்பப் பெற மாட்டார்.


ஆனால் அதை நாம் பயன்படுத்தினால்தான் நாம் பலன் தருவோம்.


உலக வாழ்வில் ஒரு உதாரணம்:


நமது அப்பா நமது கையில் 100 ரூபாய் கொடுத்து,


 "ஓட்டலில் போய் நன்கு சாப்பிட்டு விட்டு வா"


 என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம்.


கொடுத்த பணத்தைப் பயன்படுத்தி சாப்பிட்டால் நமது வயிறு நிறையும்.


பணத்தை பையில் வைத்துக்கொண்டு ஹோட்டலுக்கும் போகாதிருந்தால் வயிறு பட்டினி.


அப்பா பணத்தை திரும்ப வாங்க மாட்டார், ஆகவே நமது பட்டினிக்கு அவர் பொறுப்பல்ல.


உவமையில் ஐந்து தாலந்து பெற்றவனும், இரண்டு தாலந்து பெற்றவனும் அதை இலாபகரமாக முதலீடு செய்தார்கள்.


ஆகவே பரிசு கிடைத்தது.


சிறிய பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியதால் பெரிய காரியங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது.



நாமும் இவ்வுலகில் ஆண்டவர் கொடுத்த அழைப்பை வெற்றிகரமாக நிறைவேற்றினால் 


நமக்கு விண்ணக வாழ்வு பரிசாக கிடைக்கும்.


ஒரு தாலந்து பெற்றவன் அதை பயன்படுத்தவே இல்லை. பரிசு பெறவில்லை.


அதேபோல்தான் இவ்வுலக வாழ்வில் ஆண்டவரது அழைப்பை நிறைவேற்றாவிட்டால் விண்ணகத்தை இழக்க வேண்டியிருக்கும்.


அதற்கு ஆண்டவர் பொறுப்பல்ல."


"ஏன் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அழைப்பை ஆண்டவர் கொடுக்கவில்லை?" 


"நீ கேட்பது 


'பேருந்தை உண்டாக்கியவன் ஏன் அதன் எல்லா பாகங்களையும் Wheel களாக

உண்டாக்கவில்லை?'


என்று கேட்பது போல் இருக்கிறது.


அழைப்பு ஆண்டவர் கொடுப்பது.

அவர் விருப்பப்படி கொடுப்பார்.


ஒரு அப்பா மகனிடம் சொன்னானாம்,


"பேசாமா சாமியாரா போயிடுடா. வாழ்நாள் முழுவதும் சாப்பாட்டுக்குக் கவலையே இல்லை. எல்லா செலவுகளையும் திருச்சபையே பார்த்துக் கொள்ளும்!"


"நல்ல அப்பன்!"


" சாமியார் சாப்பிடுகிறதை மட்டும் தான் அவன் பார்த்திருக்கான். அவர் ஆண்டவருக்கத் தாங்கிக் கொள்ளும் கஷ்டங்களை அவன் பார்த்திருக்க மாட்டான்.


ஆண்டவர் பட்ட அத்தனை கஷ்டங்களையும் அவர் பட்டாக வேண்டும்.  


மூன்று ஆண்டுகள் அவர் பின்னே சுகம் பெறுவதற்காகச் சென்றவர்களில் ஒருவன் கூட, அவரது பாடுகளின்போது கூட வரவில்லை!"



"அழைத்தல் பெரிதாகும் போது அதற்காக ஆண்டவர் அளிக்கும் அருள் வரங்களும் அதிகமாக இருக்கும் அல்லவா?"



"கட்டாயம். 


ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் பொதுதான்.


 ஆண்டவர் வழங்கும் அருள் வரங்கள் அத்தனையையும் பயன்படுத்தினால்தான்


 தொடர்ந்து அவை வந்து கொண்டேயிருக்கும்.


 பயன்படுத்தாவிட்டால் ஒரு தாலந்து கதைதான்.


யாருக்கு அதிகம் கொடுக்கிறாரோ அவரிடமிருந்து ஆண்டவர் அதிகம் எதிர்பார்ப்பார்."


" குருத்துவத்திலும் குடும்பத்திலும் இருக்கும் ஆன்மீகம் புரிகிறது.


அரசு பணியில் என்ன ஆன்மிகம் இருக்கிறது?"


"அரசு பணியில் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துப் பணிகளிலும் ஆன்மீகம் இருக்கிறது, அழைப்பும் இருக்கிறது.


பணி செய்யப்படுவது மனிதரிடையே இருக்கலாம், ஆனால் இறைவனுக்காகவே இருக்க வேண்டும்.


இறைவனுக்காக செய்யப்படும் எல்லா பணிகளும் ஆன்மிகப் பணிகள் தான்.


குருவானவர் செய்வது ஓர் ஆன்மீக பணி என்றால் 


அவரது சமையல்காரர் செய்யும் சமையல் பணியும் ஆன்மீக பணி தான்.


உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்பு இருக்கிறது.


 அந்த அழைப்பை அவரவர் ஏற்றுக்கொண்டு,


 அவரவர்க்கு கொடுக்கப்பட்டுள்ள பணியை


 இறைவன் அருளை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.


தேர்வில் மொத்த மதிப்பெண்கள் நூறு.


சில வினாத்தாள்களில் 100 கேள்விகள் இருக்கும்.


சிலவற்றில் 50 கேள்விகள் இருக்கும்.


சிலவற்றில் 10 கேள்விகள் இருக்கும்.


சிலவற்றில் ஒரு கேள்வி மட்டும். இருக்கும்.


அவரவர்க்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்களில் எத்தனை கேள்விகள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் சரியாக பதில் எழுதினால் நூறு மார்க் கிடைக்கும்.


பாப்பரசர் நூறு கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டியிருக்கும். 


அவரது வேலைக்காரன் ஒரு கேள்விக்கு பதில் எழுத வேண்டியிருக்கும். 



பாப்பரசர் நூறு கேள்விகளுக்கு பதில் எழுதி கிடைக்கும் மார்க்


 வேலைக்காரனுக்கு ஒரு கேள்வியிலேயே கிடைத்து விடும்.


இறைவன் எதிர்பார்ப்பது நமது ஒத்துழைப்பை மட்டும்தான்."


"அப்படியானால் குறைந்த அழைப்பை பெற்றவர்கள் பாக்கியவான்கள்."


"அது நமது பார்வையில்.


இறைவன் பார்வையில் அவரது சித்தத்தை நிறைவேற்றும் அனைவரும் பாக்கியவான்கள்.


இறைவன் சொன்னதை மட்டும் செய்வோம்.


 செய்வதை முழுமையாக செய்வோம்.


விண்ணக நிலையைப் பரிசாகப் பெறுவோம்."


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment