Saturday, November 21, 2020

*கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.*(அரு.3:17)

http://lrdselvam.blogspot.com/2020/11/317.html


*கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.*
(அரு.3:17)



இறைவனின் எல்லா பண்புகளும் அளவற்றவை

அன்பும் அளவில்லாதது. நீதியும் அளவில்லாதது.

அன்பு நிபந்தனை இன்றி நேசிக்கின்றது.

நீதி எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கிறது.

இறை நீதி மனித நீதியைப் போன்றதன்று.

மனித நீதி மனித நியதிப்படி எது சரி, எது தவறு என்று தீர்ப்பு சொல்கிறது. 

இறை நீதிக்கு எது சரி, எது தவறு என்று தெரியும். ஆனால் தீர்ப்பிடாது.

மனித புரிதல்படி, தீர்ப்பு குற்றவாளியைத் தண்டிக்கும்.

நிரபராதியை விடுவிக்கும்.

இறைநீதி தண்டனைத் தீர்ப்பிடாது.

குற்றவாளியை பரிகாரம் செய்யச் சொல்லும்.

அன்புடன் சேர்ந்து பரிகாரம் செய்த குற்றவாளியை மன்னிக்கும்.
 
மன்னிக்கப்படும் போது குற்றத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.

விடுதலை என்ற சொல்லை ஆன்மீகத்தில் இரட்சண்யம், மீட்பு என்று சொல்கிறோம்.

இறைவனுடைய அகராதியில் தண்டனை என்ற சொல்லுக்கே இடமில்லை.

ஏனெனில் தண்டனை அன்பிற்கு எதிரானது.

எனவே தண்டனையிலிருந்து விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இறைவன் நம்மைப் பாவத்திலிருந்து மீட்கிறார்.

பாவத்தின் விளைவை நமக்குப் புரிய வைப்பதற்காகத்தான் நமது அகராதிப்படி தண்டனை என்ற சொல்லை இயேசு பயன்படுத்துகிறார்.

மனித அனுபவத்தின் படி பேசினால்தானே நமக்கு புரியும்.

'பின்னர், இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, "சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள்."

பாவத்தின் விளைவை நமக்கு புரிய வைப்பதற்காகத்தான் நமது அனுபவத்திலுள்ள தீர்ப்பு, தண்டனை என்ற சொற்களை இயேசு பயன்படுத்துகிறார்.


நிக்கொதேமு ஒரு பரிசேயர். ஆனால், நல்லவர், இயேசுவின் மேல் மரியாதை உள்ளவர்.

அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து,

 "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம்"

என்கிறார்.


இயேசு இறைமகன் என்ற உண்மை அவருக்குத் தெரியாது.

 'இறையருள் பெற்ற போதகர்' என்று மட்டும் தெரியும்.

இயேசு "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது"

என்று ஞானஸ்நானம் ஆகிய ஆன்மீகப் பிறப்பைப் பற்றி என்று கூறியது நிக்கொதேமுக்குப் புரியவில்லை.

அதனால்தான் "ஒருவன் வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும்?" என்று கேட்கிறார்.

இயேசு நீரினாலும் ஆவியினாலும் பெறக்கூடிய ஞானஸ்நானத்தைப் பற்றி கூறிய பின்,

"வானகத்திலிருந்து இறங்கி வந்தவரேயன்றி வேறெவரும் வானகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. அப்படி வந்தவர் வானகத்திலிருக்கும் மனுமகனே."

என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார்.


தன்னில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறுவர் என்பதைக் கூறிவிட்டு
..

"மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும்." என்ற வார்த்தைகளால் தான் சிலுவை மரணம் அடையவிருக்கும் உண்மையை குறிப்பிடுகிறார்.


"தம் மகனில் விசுவாசங் கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."

என்ற வார்த்தைகளால் 
தான் இறைமகன் என்ற இறை உண்மையையும் கூறுகிறார். 

பின் தான் உலகிற்கு தந்தையால் அனுப்பப்பட்டதன் நோக்கத்தை கூறுகிறார்.

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." 

அதாவது

 "தான் உலகிற்கு வந்தது

 மனுக்குலத்தை மீட்கவே,

 அதற்கு தீர்ப்பு அளிக்க அல்ல"

என்கிறார்.

நமது மொழிப்படி 

 ஒருவன் குற்றவாளியா 

அல்லது 

நிரபராதியா 

என்று நீதிபதி சொல்வதையே தீர்ப்பு என்கிறோம்.

இயேசுவுக்கு நாம் பாவிகள் என்று தெரியும்.

அதை நம்மிடம் சொல்வதற்காக மனிதன் ஆகவில்லை.

அதாவது நாம் பாவிகள் என்று தீர்ப்புக் கூற இறைமகன் மனிதன் ஆகவில்லை.

தீர்ப்புக்கு அடுத்த படி நமது அனுபவத்தில் தண்டனையே.

தண்டனை கொடுப்பதற்காக மனிதனாக பிறந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இயேசு நாம் பாவிகள் என்று தீர்ப்பு கூறவோ, தண்டிக்கவோ விண்ணிலிருந்து இறங்கி வரவில்லை.

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை தானே செய்து நமக்கு மன்னிப்பு தருவதற்காகத் தான் மனிதனாகப் பிறந்தார்.

தன்னில் விசுவாசங்கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை என்று கூறிவிட்டு,

"விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான்."

என்று சொன்னதன் பொருள்:

"விசுவாசங்கொள்ளாதவன் தனக்குத்தானே தீர்ப்பிட்டுக்
 கொள்கிறான்."

எப்படி?

"ஒளி உலகத்திற்கு வந்துள்ளது: மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்: ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.

20 பொல்லாது செய்பவன் எவனும் ஒளியை வெறுக்கிறான். தன் செயல்கள் தவறானவை என்று வெளியாகாதபடி அவன் ஒளியிடம் வருவதில்லை.

21 உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்."
(அரு. 3:19-21)

விளக்கம்:

"இறை மகனில் விசுவாசங்கொள்ளாதவர்

உலகத்திற்கு வந்த ஒளியை விரும்பாதவர், இருளையே விரும்புகின்றனர்.

அவர்கள் ஒளியிடம் வருவதில்லை."

இறைமகனை விசுவசிக்காதோர்
ஒளியிடம் வருவதில்லை.

அதாவது அவர்களே, தாங்களாகவே ஒளியிடம் வருவதில்லை.

அப்படி என்றென்றும் வராததுதான் அவர்களுக்கு நரக நிலை

நரக நிலைக்கு அவர்களை இயேசு அனுப்பவில்லை. அவர்களாக போய் விடுகிறார்கள்.

தாங்களாகவே இறைவனை பிரிந்து வாழ்வது தான் நரகம்.


விசுவசித்து உண்மைக்கேற்ப நடப்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்.

அதாவது விசுவசித்து அதன்படி நடப்பவர்கள் நித்தியத்திற்கும் இறைவனோடு வாழ்வார்கள்.
இது மோட்ச நிலை.

 இறைவன் தன்னையே "ஒளி" என்று குறிப்பிடுகிறார்.

சுருக்கமாக இயேசு தீர்ப்பிடுவதுமில்லை தண்டிப்பதும் இல்லை.

இந்த உண்மையை இயேசு 
நிக்கொதேமுவிடம் கூறுகிறார்.

அதன் மூலம் நம்மிடமும் கூறுகிறார்.

தண்டிக்கவே முடியாத அளவிற்கு நம்மை அன்பு செய்கிற இறைவனைப் புரிந்து கொண்டவர்கள் பாவமே செய்ய மாட்டார்கள்.

''மகனே, உன்னைப் படைத்த எனக்கு உன்னை அன்பு செய்யவும், மன்னிக்கவும் மட்டும்தான் தெரியும்.

தீர்ப்பிடவோ, தண்டிக்கவோ தெரியாது.

நீ பாவம் செய்யும்போது நீயாகவே என்னை விட்டு பிரிந்து செல்கிறாய்.

 நானே உனக்குத் தந்த சுதந்திரத்தில் நான் தலையிடுவது இல்லை.

பிரிந்து சென்ற உனது வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.

உனக்காக நான் விடுக்கும் அழைப்பே எனது அருள்.

எனது அருளை ஏற்று உன் பாவத்திற்காக மனம் வருந்தி என்னிடம் திரும்பி வா.

உன்னை அழைத்துச் செல்லவே உன் உருவத்தை எடுத்து, பூலோகத்திற்கு வந்திருக்கிறேன்.

 நீ செய்யவேண்டிய பாவப் பரிகாரத்தை நானே என் உயிரைக் கொடுத்து செய்திருக்கிறேன். 

வா, என்னைத்தேடி என்னிடம் வா.

நித்தியத்திற்கும் என் அரவணைப்பில் உன்னை வைத்திருப்பேன்."

 என்று நம்மை இயேசு அழைக்கிறார்.

அழைப்பை ஏற்று அவரிடம் செல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment