Thursday, November 19, 2020

*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*(லூக். 1:28)

http://lrdselvam.blogspot.com/2020/11/128.html


*அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே*
(லூக். 1:28)



நாம் புத்தியுள்ள மனிதர்கள்.

 புத்தியுள்ளவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் இருக்கும்.

நமது நோக்கம் நிறைவேறுகிறதா நிறைவேறவில்லையா என்பது வேறு விஷயம்.

ஆனால் நோக்கமின்றி எதையும் செய்ய மாட்டோம்.

ஏனெனில் நாம் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.

நோக்கத்தோடு செயல்படும் குணமும் நமக்கு இறைவனிடமிருந்து கிடைத்தது தான்.

இறைவன் உலகையும் உலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும், வாழும் ஒவ்வொரு பிராணியையும் ஒரு நோக்கத்தோடுதான் படைத்தார்.

மனிதனைக் தவிர எல்லா உயிருள்ள, உயிரற்ற பொருள்களும் இறைவனது நோக்கப்படி செயல்படுகின்றன.

 அவை இறைவனின் நோக்கத்திற்கு எதிராக செயல்பட முடியாது.

 ஏனெனில் அவற்றுக்கு இறைவன் புத்தியையோ சுதந்திரத்தையோ கொடுக்கவில்லை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அவற்றை வலம் வரும் கோள்களும் இயற்கை விதிப்படி இயங்கி வருகின்றன. 

இயற்கை விதிகளுக்கு மாறாக அவற்றால் இயங்க முடியாது.

பரிபூரண சுதந்திரத்தோடு நித்திய காலமாய் வாழும் இறைவன் மனிதனை மட்டும் தன் சாயலில் படைத்தார்.

தன்னுடைய எல்லாம் பண்புகளையும் மனிதனோடு பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் மிக முக்கியமான பண்பு பரிபூரண சுதந்திரம். (Free will) 

ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் கடவுள் மனிதனைப் படைத்தார்.

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அவனுடைய பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி அடைய வேண்டும்.

மனித சுதந்திரத்திற்குள் இறைவன் குறுக்கிட மாட்டார்.

அவர் மனிதனை படைத்த நோக்கம்:

 அவரை அறிந்து,

 அவரை நேசித்து

 அவருக்காக வாழ்ந்து,

 அவரோடு நித்திய காலமாக இணைந்து வாழ வேண்டும்.

We should know Him,

 love Him,

 serve Him

and

live in union with Him for all eternity.

ஆனால் இறைவனது உதவி இன்றி அவரது நோக்கப்படி மனிதனால் வாழ முடியாது.

ஆனாலும் இறைவன் தனது உதவியைத் தாராளமாக அளித்துக் கொண்டிருக்கிறார்.

மனிதன் தன் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தவும் இறைவனது நோக்கப்படி வாழவும் இலவசமாக சகல உதவிகளையும் அளித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் அளிக்கும் உதவியை அருள் (Grace) என்கிறோம்.

இறையருளின் உதவியைக் கொண்டுதான் 

நாம் நமது சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்,

 அவரை அறிய வேண்டும்,

 அவரை நேசிக்க வேண்டும்,

 அவருக்காக வாழ வேண்டும்,

 நித்தியத்திற்கும் அவரோடு இணைந்து வாழ வேண்டும்.

இறைவன் தரும் அருளை பயன்படுத்தாதபோதுதான் நாம் பாவம் செய்ய நேர்கிறது.

இறையருளை பயன்படுத்துவோர் பாவமாசின்றி வாழ்வர்.

எந்த அளவிற்கு இறையருளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு நமது பாவ மாசற்ற தன்மையும் இருக்கும்.

இறைவன் மரியாளை படைத்ததன் நோக்கம் 

 அவர் மனித உரு எடுக்கும்போது அவள் அவரது அன்னையாகச் செயல்பட வேண்டும் என்பதுதான். 

இறைத்தூதர் மரியாளிடம் மங்கள வார்த்தை சொன்னபோது

அவள் அவளுடைய முழு சுதந்திரத்தைப் பயன்படுத்தி

 இறை மகனுக்கு மனித சுபாவத்தில் தாயாக இருக்க சம்மதம் தெரிவித்தார்.

 முழு மன சம்மதத்துடன் தன் சுதந்திரத்தையே இறைவனுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துவிட்டு அவரது அடிமையாக மாறினார்.

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 



மரியாள் சம்மதிப்பாள் என்று இறைவனுக்கு நித்திய காலமாகவே தெரியுமாகையால் 

அவள் ஜென்ம பாவமாசின்றி உற்பவித்த வேண்டும் என்றும்,

 அவள் அருள் நிறைந்தவளாய் இருக்க வேண்டும் என்றும்

 இறைவன் நித்திய காலமாகவே தீர்மானித்து விட்டார்.

ஆகவேதான் அவள் தன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே
ஜென்மப் பாவமாசின்றி, 

 அருள் நிறைந்தவளாய் உற்பவித்தாள்.

ஆகவேதான் கபிரியேல் இறைத்தூதர் மரியாளை 

"அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " 


என்று வாழ்த்தினார்.

ஆண்டவரது அருளோடு மரியாள் முழுமனதோடு ஒத்துழைத்ததால்

   அவள் வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி 

 முழுமையான பரிசுத்தத்ததனத்தோடு வாழ்ந்தாள்.

நமது அன்னை இறைவன் சித்தத்தையே தன் சித்தமாக ஏற்றுக்கொண்டு,

இறைவன் அவளுக்கு அளித்திருந்த நிறைவான அருளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வாழ்ந்தாள்.

ஆண்டவரது அன்னையாக வாழ வேண்டும் என்று அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு (vocation) ஏற்றவாறு

 தன் வாழ்நாள் முழுவதும் முழுமையான இறை அருளோடு வாழ்ந்தாள்.

ஆண்டவரது அன்னையாக வாழ்ந்ததால் மட்டுமல்ல ,

அவரது மிகச் சிறந்த சீடத்தியாக
(most perfect disciple) வாழ்ந்தாள்.



இயேசு செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒரு பெண் அவரை நோக்கி,

" உம்மைத் தாங்கிய வயிறு பேறுபெற்றது" என்று சொன்னபோது,

இயேசு,

"ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்"

என்றார்.

அன்னை மரியாள் மற்ற எல்லோரையும் விட மிகச் சிறப்பாக கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்தாள்.


அன்னை இயேசுவின் தாயாக இருக்க சம்மதித்ததே கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பதற்காகத்தான்.

மரியாள் தனது தாயாக இருந்ததை விட,

இறை சித்தப்படி வாழ்ந்ததைத்தான் பெருமையாக பேசுகிறார் இறைமகன். 


 "கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்ததால்தான் என் அன்னை பேறுபெற்றவர்கள்" என்பது இயேசுவின் கருத்து.

மரியாள் தனது தாயாக இருந்ததை இயேசு குறைத்துப் பேசவில்லை.

அவளுடைய முழுமையான சீடத்துவ வாழ்க்கையை பெருமையாக பேசுகிறார்.


இறைமகன் தனது அன்னையை நமக்கு முன்மாதிரிகையாகத் தந்திருக்கிறார்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது தனது அன்னையிடம் ஒப்படைத்தது அருளப்பரை மட்டுமல்ல,

 தன்னுடைய மற்ற சீடர்களையும் நம்மையும்தான். 

ஆகவே மரியாள் இயேசுவுக்கு மட்டுமல்ல 

அவரது ஞான உடலாகிய திருச்சபைக்கும் தாய்.


மாதா நமது தாய் மட்டுமல்ல நமது பாதுகாவலியும் முன்மாதிரியும் அவள்தான்.

தாயை போல் பிள்ளை.

அன்னை மரியாளிடம் இருந்த அத்தனை குணங்களும் நம்மிடமும் இருக்க வேண்டும். 

அவளுடைய அர்ப்பண வாழ்வு,
தாழ்ச்சி, 
இயேசுவின் மேல் அவளுக்கு இருந்த அளவுகடந்த அன்பு, சிலுவைகள் நிறைந்த வாழ்வு, இறைச்சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிதல் 
போன்ற எல்லா நற்பண்புகளும் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடமும் இருக்க வேண்டும்.

நாம் இந்த பண்புகளோடு வாழ்ந்தால்தான்,

"அருள் நிறைந்த மரியே வாழ்க." என்று வாழ்த்த நமக்குத் தகுதி இருக்கும்.

 நமது அன்னையை நாம் போற்ற வேண்டும்.

அவளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அவளைப் பிரதிபலிக்க வேண்டும்.

அன்னையைப் பிரதிபலிப்பவன் தான் அவளது பிள்ளை என்று அழைக்கப்பட தகுதி உள்ளவன்.

இறைவனுடைய படைப்புகளில் மிக மேலான படைப்பு அன்னை மரியாள்தான்.

மனிதர்களில் "அருள் நிறைந்து" வாழ்ந்தவள் அவள் ஒருவர் தான்.


"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" (மத். 5:48)

என்ற நமது ஆண்டவரின் அறிவுரைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் அன்னை மட்டுமே.

நாமும் அப்படியே வாழ வேண்டுமென்றால் அதற்காக நம் அன்னையின் ஜெப உதவியை நாட வேண்டும்.

நாம் தினமும் ஜெபமாலை சொல்வது அதற்காகத்தான்.

 அன்னையின் உதவியோடு நாம் நிறைவை நோக்கி பயணிக்க வேண்டும்.

இயேசுவையே வளர்த்தவள் அவள்தான்.

நாமும் அவளது கரங்களில் வளர்ந்தால்தான் இயேசுவைப்போல் மாற முடியும்.

நாம் யாருடன் அதிகம் பழகுகிறோமோ அவர்களின் பண்பு நம்மையும் பற்றிக் கொள்ளும்.

நமது அன்னையின் பண்புகளை தியானித்துக் கொண்டு,

 அவளோடு பிள்ளைக்கு உரிய பாசத்தோடு நெருங்கி வாழ்ந்தால் 

அவளது பண்பு நலன்கள் நம்மை அறியாமலே நம்மைப் பற்றிக்கொள்ளும்.

 பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.

அருளால் நிறைந்தவளின் பாதுகாப்பில் நாம் இருந்தால்

நமக்குள்ளும் அருள் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும்.

ஆற்றங்கரையில் உள்ள மரங்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைப்பது போல 

அருள்நிறை அன்னையின் அரவணைப்பில் நாம் இருந்தால் நமக்கும் அருள்வளம் தாராளமாக கிடைக்கும்.

நாமும் ஆன்மீகத்தில் செழித்து வளர்வோம்.

பிள்ளைகளாகிய நம்மீது அளவற்ற பாசம் கொண்டவள் நமது அன்னை.

கோழி தன் குஞ்சுகளைக் கவனித்துக் கொண்டிருப்பது போல 

நம்மை இரவும் பகலும் கவனித்துக் கொண்டிருப்பவள் நமது அன்னை.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment