http://lrdselvam.blogspot.com/2020/11/2513.html
*எனவே விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.*
(மத்.25:13)
* * * *
"சார், நாளைக்கு விடுமுறை உண்டா?"
"விடுமுறையா? தெரியலிய."
"உங்களுக்கு எப்படி , சார், தெரியாம இருக்கும்?"
"உண்மையிலேயே எனக்குத் தெரியாது."
"சார் தெரியாதுன்னு சொன்னா 'உங்களுக்குத் தெரியக் கூடாது, Confidential matter'னு அர்த்தம். சரி தானா சார்?"
"Correct. அதை உன் friend கிட்ட எடுத்துச் சொல்லு"
சீடர்கள் இயேசுவிடம்,
"உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன ? எங்களுக்குச் சொல்லும்"
என்று கேட்டபோது, அவர்
அறிகுறிகளைக் கூறிவிட்டு,
"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது:
தந்தைக்குத் தெரியுமேயன்றி,
வானதூதருக்கும்
மகனுக்குங்கூடத் தெரியாது."
(மத். 24:36) என்றார்.
தனது வருகை குறித்து தனக்கே தெரியாது என்று ஆண்டவர் சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?
"அது உங்களுக்குத் தெரியக்கூடாது"ன்னு தான் அர்த்தம்.
இது கூட புரியாத சில அதிகப் பிரசங்கிகள்,
"உலகம் ஒரு ஆண்டில் முடிந்துவிடும்"
என்று மக்களைப் பயங்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டவருடைய உண்மையான சீடர்களாய் இருப்பவர்கள்
அவர் யாருக்குமே தெரியக் கூடாது என்று வைத்திருக்கும் விஷயம் பற்றி பேசக்கூடாது.
"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது."(42)
"இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."(44)
நாம் "ஆண்டவர் எப்போது வருவார்?" என்று கவலைப்படுவதை விட்டு விட்டு,
எப்போதும் அவரது வருகைக்காகத் தயாராக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.
பத்துக் கன்னியர் உவமையில் ஆண்டவர் இதைத்தான் வலியுறுத்துகிறார்.
*விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.*
(மத்.25:13)
புதுமணத் தம்பதியரிடம் போய்,
"உங்களுக்கு முதல் குழந்தை எப்போது பிறக்கும்?" என்று கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்?
"தெரியாது."
" அதெப்படி தெரியாமல் இருக்கும்? நீங்கள் தானே பெறப்போகிறீர்கள். உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாதா?"
"உங்களைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியுமோ?"
"எல்லாம் தெரியாது. நாளைக்கு நான் இருப்பேனா என்று கூட தெரியாது."
" எல்லார் கதையும் அப்படித்தான். பிறந்தது தெரியும், வாழ்ந்தது தெரியும். வாழ்வது தெரியும். நாளை என்ன நடக்கும், தெரியாது."
இதேபோல்தான் மனுமகன் நம்மை அழைக்க எப்போது வருவார் என்று மனிதர் யாருக்கும் தெரியாது.
ஒவ்வொருவர் வாழ்வின் இறுதிலும் மனுமகனின் வருகை உண்டு. அது அவரவருடைய மரணம்.
மரணத்தோடு மனிதனுடைய இவ்வுலக வாழ்வு முடிவுக்கு வருகிறது.
மரண நேரத்தில் அவனுடைய ஆன்மாவின் நிலை எப்படி இருக்கிறதோ
அதை வைத்துதான் அவனுடைய நித்திய வாழ்வு இருக்கும்.
மரண நேரத்தில் பாவமாசின்றி இருக்கும் ஆன்மா விண்ணக வாழ்வுக்குள் நுழையும்,
பாவ நிலையில் உள்ள ஆன்மா நித்திய நரகிற்குள் நுழையும்.
மரணம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாதாகையால்
நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் நாம் தூய ஆன்மாவுடன்
மரணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்.
நமது நன்மைக்காகத்தான் நமது மரண நேரத்தை நமக்கு ஆண்டவன் தெரியப்படுத்தாமல் இருக்கிறார்.
ஒருவனது மரண நேரத்தை
முன்பு அவனுக்கு அறிவித்துவிட்டால்,
அறிவித்த நேரத்திலேயே மரண பயம் ஆரம்பித்து விடும்.
நேரத்தை அறிந்த நாளிலிருந்து மரணம் வரை அவன் பயத்தினால் செத்துக் கொண்டே இருப்பான்!
மரணம் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் மரண நேரம் நமக்கு தெரியக் கூடாது.
அதனால்தான் ஆண்டவர் இறுதி நேரத்தை நமக்குத் தெரிவிக்காமல் இருக்கிறார்.
மரணநேரம் நமக்கு தெரியாமல் இருந்தால்தான் நாம் வாழ்நாள் முழுவதும் அதற்கு தயாராக இருப்போம்.
தெரிந்தால்,
''மரணத்திற்கு முந்திய நாள்வரை வாழ்க்கையை அனுபவிப்போம்,
கடைசி நாளில் மனந்திரும்பி ஆண்டவருக்காக வாழ்ந்து,
நல்ல கள்ளனைப் போல ஆண்டவரோடு விண்ணகம் சென்று விடலாம்"
என்ற எண்ணம் வந்து நமது ஆன்மீக வாழ்வையே கெடுத்துவிடும்.
உலகின் இறுதி நாளும் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
நாம் நினையாத நேரத்தில் வரும்.
"மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை தெரிவதுபோலவே மனுமகன் வருகையும் இருக்கும்." (மத். 24:27)
"ஒரு நொடியில், கண்ணிமைப் பொழுதில், கடைசி எக்காளம் முழங்க இது நடைபெறும்.
ஆம், எக்காளம் முழங்கும்: அப்பொழுது இறந்தோர் அழிவில்லாதவர்களாய் உயிர்த்தெழுவர்:
நாமும் வேற்றுரு பெறுவோம்."
(1 கொரிந். 15:52)
உயிர்த்தெழும்போது நமது உடல் சடப்பொருளாக இருக்காது.
Spiritual body யோடு எழுவோம்.
தனித்தீர்வையின் போது எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலைக்கு ஆன்ம சரீரத்தோடு திரும்புவோம்.
அதே நிலை நித்திய காலமும்
நீடிக்கும்.
அதாவது நல்லவர்கள் நித்திய காலமும் மோட்ச பேரின்பத்தில் வாழ்வார்கள்.
கெட்டவர்கள் நித்திய காலமும் நரக வேதனை அனுபவிப்பார்கள்.
இறுதி நாள் என்று வரும் என்று நாம் அறிந்து கொள்ள கூடாது என்பதே இயேசுவின் திட்டம்.
இயேசுவே Confidential ஆக வைத்திருக்கும் திட்டத்தைப் பற்றி அநேகர் "சோஸ்யம்" சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!
நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் ஆண்டவரின் விருப்பம்.
"இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(லூக்.12:40)
லூர்து செல்வம்
No comments:
Post a Comment